Friday, July 12, 2013

ஐடி நிறுவனங்களில் தொழிற்சங்கங்கள்

டி துறை. நமது தேசத்தின், ஏன் உலகத்திலேயே மிக இளமையான துறை இதுவாகத்தான்  இருக்கும். நமது தேசத்தில் நடந்த தொழில் நுட்ப புரட்சி காரணமாக பல்கி பெருகிய ஐடி நிறுவனங்கள் இன்று நமது தேசத்தில் பலருக்கு வேலை அளிப்பதோடு நம் நாட்டின் மீதான உலகத்தின் பார்வையையும் மாற்றி வருகின்றன. 

அதிக ஊதியம் கிடைக்கும் தொழிலாக இருந்தாலும் இந்த துறையில் உள்ளவர்கள் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாவதாகவும் பல விதமான உடலியல் பிரச்சினைகளை எதிர் கொள்வதாகவும் எதிர்மறை கருத்துகளும் இருந்து கொண்டுதான் உள்ளன, இருப்பினும் மற்ற துறை  நிறுவனங்களில் உள்ளது போல இங்கே ஏன் தொழிற்சங்கங்கள் தோன்றவில்லை.தங்கள் உரிமையை அடைய ஐடி நிறுவன ஊழியர்கள் இணையாததன் காரணம் என்ன?  இதோ எனக்கு தெரிந்த சில காரணங்கள்

அதிக ஊதியம்:

ஐடி தொழிலில் தொழிற்சங்கங்கள் இல்லாததன் முக்கிய காரணம் இங்கே கிடைக்கும் அதீத ஊதியம். இந்த துறையில் வேலை பார்க்கும் பலரும் சாதாரண  குடும்பத்தில் இருந்து வந்தவர்கள். ஐடி நிறுவனங்களில் கிடைக்கும் வசதிகளும், ஊதியமும்  அவர்களை முதலாளிகளுக்கு எதிராக  சிந்திக்க விடாமல் செய்து விடுகிறது. என்ன நடந்தால் என்ன? தமக்கு ஊதியம் வரும் வரை பிரச்சினை இல்லை என்ற மன நிலையை அடைய வைத்து விடுகிறது அவர்களின் ஊதியம். 

பொதுவாகவே அதிக வேலை செய்யாமல் தவிர்க்க வேண்டும் என நினைப்பதே மனித இயல்பு. ஆனால் ஒரு நடுத்தர குடும்பத்தில் இருந்து வந்த ஐடி துறை ஊழியனிடம் நீங்கள் பேசினால் அவனின் மன நிலை எப்படி அதிக வேலை செய்து நல்ல பெயர் வாங்குவது என்றே சிந்திப்பதை நீங்கள் உணரலாம். காரணம் அங்கே கிடைக்கும் கவர்ச்சியான ஊதியம் அவர்களை ஆசிரியரிடம் நல்ல பெயர் வாங்க துடிக்கும் ஒரு மாணவன் போல் மாற்றிவிடுகிறது. அப்புறம் எங்க இருந்து தொழிற்சங்கம்.

 பிரித்து வைக்கும் நிர்வாகம்:

மற்ற நிறுவனங்களில் எப்படியோ, ஐடி நிறுவனத்தில் உண்மையான நண்பர்கள் கிடைப்பது மிக கடினம். வெளியே சிரித்து, சிரித்து பேசினாலும் உள்ளுக்குள் ஒவ்வொருவர் மனதிலும் இருப்பது  பொறாமை  மனப்பான்மையே. மற்ற நிறுவனங்களில் ஒரே அளவு அனுபவம் கொண்ட இருவரின் ஊதியம் கிட்டத்தட்ட சமமாகவே இருக்கும். ஆனால் ஐடி துறையிலோ நிலைமை தலைகீழ். 


 ஆறு மாதத்திற்கு ஒரு முறை அப்ரைசல் என்று ஒன்று நடக்கும். இந்த அப்ரைசலுக்கு பின்  ஊழியர்களை ஒன்று, இரண்டு. மூன்று என்று எண்கள் கொடுத்து பிரித்து வைப்பார்கள். இதற்கு ரேட்டிங்  என்று பெயர் . திறமை அடிப்படையிலேயே இத்தகைய ரேட்டிங் வழங்கப்படுவதாக கூறுவார்கள். இந்த ரேட்டிங் அடிப்படையிலேயே உங்களுக்கு வழங்கப்படும் பதவி உயர்வுகளும், ஊதிய உயர்வும், வெளிநாட்டு வாய்ப்பும் இருக்கும்.இதில் என்ன பிரச்சினை என்று கேட்கிறீர்களா? இருக்கிறது. 

நீங்களும் உங்கள் நண்பர்களும் ஒரே மாதிரியான கல்வித்தகுதியும், அனுபவமும் கொண்டவர்கள் என்று வைத்து கொள்வோம். கிட்டத்தட்ட உங்கள் இருவரின்  பணித்திறனில் பெரிய வேறுபாடு ஏதும் இருக்காது. எனவே நீங்கள் உங்கள் நண்பரை விட நல்ல ரேட்டிங் பெற வேண்டுமானால் நீங்கள் உங்களை பற்றி மட்டும் சிந்தித்தால் போதாது. உங்கள் நண்பரை பற்றியும் யோசிக்க வேண்டும். அவர் செய்யும் சிறிய தவறுகளையும் நிர்வாகத்துக்கு தெரியப்படுத்தி அவரை விட நீங்கள் சிறந்தவர் என்று நிறுவ வேண்டும். இதே வேலையை உங்கள் நண்பரும் செய்து கொண்டிருப்பார். ஆக உங்களுக்குள் போட்டி மனப்பான்மையை வளர்ப்பதாக கூறி பொறாமையை வளர்த்து விட்டிருப்பார்கள். உங்களுக்கும், உங்கள் நண்பருக்கும் இருக்கும் பரஸ்பர நம்பிக்கை குறையும்.
 
ஒட்டு மொத்த நிறுவனமும் இப்படி அடுத்தவர் மேல் நம்பிக்கை இல்லாமல் இயங்கினால் எப்படி தொழிற்சங்கம் உதயமாகும்? அடுத்தவன் வேலை இழந்தால் 'தொலஞ்சாண்டா' என்ற மன நிலைதானே இருக்கும்.

ஐடி வியாபாரத்தின் அடிப்படையும் தொழிற்சங்கத்தின் தேவையும் :

தொடங்கி 20 ஆண்டுகளே ஆன ஒரு மென் பொருள் நிறுவனம், நிறுவப்பட்டு 50 ஆண்டுகள் ஆன ஒரு ஸ்டீல்  நிறுவனத்தை விட அதிக லாபம் அடைகிறது என்றால் அதற்கு காரணம் என்ன? இதற்கான விடை மிக சுலபம். ஐடி நிறுவனங்களின் மிக முக்கிய மூலதனம் அதன் ஊழியர்களின் புத்தி கூர்மை. அந்த புத்திசாலித்தனத்தை வைத்து பணம் சம்பாதிக்கும் நிறுவனங்கள் அதற்காக தங்கள் ஊழியர்களுக்கு தரும் ஊதியம் மிக குறைவு. இப்படி குறைந்த செலவில் அதிக லாபம் பெற்று  தரும் ஊழியர்களே ஐடி நிறுவனங்களின் கொழுத்த லாபத்திற்கு காரணம். 

இத்தனை லாபம் பெற்று தரும் ஊழியர்களுக்கு நிறுவனங்கள் தரும் மரியாதை என்ன? எந்த தொழிலாளர் சட்டத்திற்குள்ளும் இவர்கள் வர மாட்டார்கள். ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் தரப்படும் வேலைகள் இவர்களுக்கு  மன அழுத்தம் ஏற்படுத்தும். எல்லாவற்றையும் விட முக்கியம் பொருளாதார மந்த நிலையின்போது உடனே தூக்கி எரியப்பட்டு விடுவார்கள். இதை யாரும் கேள்வி கேட்க முடியாது. தங்கள் லாபத்தை இந்த நிறுவனங்கள் சற்று குறைத்து கொண்டால் யாரையும் வெளியேற சொல்லாமலேயே எத்தகைய பொருளாதார மந்த நிலையையும் சமாளிக்கலாம். ஆனால் அதற்கு தயாராக இல்லை ஐடி நிறுவனங்கள். 

யாரும் வியாபாரத்தை நஷ்டம் அடைய வேண்டும் என்று செய்ய மாட்டார்கள். தொழிலாளர்களின் அத்தனை கோரிக்கைகளையும் நிறைவேற்றுவது சாத்தியம் இல்லாதது. அதே நேரத்தில் தேவைப்படும்பொது பயன்படுத்தி கொண்டு தேவை இல்லை என்று நினைத்தால் தூக்கி எறிவதும், கசக்கி பிழிந்து வேலை வாங்குவதும் மனிதனை இயந்திரத்துக்கு சமமாக நினைப்பது போன்றது. ஐடி துறை ஊழியர்கள் தங்கள் உரிமையை காத்து கொள்ள அவசியம் தொழிற்சங்கங்கள் வேண்டும்.

சமீபத்தில் கர்நாடக தேர்தலின்போது கட்சிகள் ஐடி ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு சட்டங்கள் இயற்ற போவதாக வாக்குறுதி அளித்தனர்.  ஆனால் ஐடி ஊழியர்களின் மனநிலை மாறாமல் எந்த சட்டமும் அவர்களுக்கு உதவ போவது இல்லை.  தங்களால் நிறுவனம் அடையும் லாபத்திற்கு முன் அவர்கள் தமக்கு அளிக்கும் ஊதியம் அதிகமில்லை என்று உணர வேண்டும். பின்னர் சக ஊழியர்களை போட்டியாக மட்டுமே  நினைக்கும் மன நிலை மாற வேண்டும். ஆனால் இவை இரண்டுமே இப்போதைக்கு  சாத்தியம் இல்லை என்றே தோன்றுகிறது. 

3 comments:

  1. முட்டாள் தனமாக இருக்கின்றார்கள் தொழில்நுட்பத் துறை பணியாளர்கள். உழைப்பாளர் சங்கம் இல்லை எனில் உழைப்பவர் உரிமைகள் எங்ஙனம் உறுதி செய்யப்படும், ஓய்வூதியம், இன்ன பிற மருத்துவ நல உதவிகள், வேலை உத்தரவாதம் எதுவும் இல்லாமல் செக்கு மாடு போல உழைப்பதன் பின் விளைவுகளை யாரும் எண்ணாமல் இருப்பது மடமையில் மடமை . தொழிநுட்பத் துறையினர் இதுக் குறித்து சிந்திக்கத் தொடங்குவது நல்லது.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

      Delete
  2. நல்ல பதிவு !! தொழிற்சங்கம் என்பது அவசியத் தேவை. ஆனால் எப்போது வேண்டுமானாலும் பணியிலிருந்து வெளியேற்றப்படுவோம் என்று ஏற்றுக் கொண்டுதான் அதில் சேர்கின்றனர். அதிகப் படியான வருவாயும் தொழிற்சங்கம் என்றெல்லாம் சிந்திக்க விடுவதில்லை

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...