அடுத்த சூப்பர் ஸ்டார் யார்? கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக விடை தெரியாத கேள்வி இது. 'சாமி' பட விழாவில் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் பட்டம் என்பது தனக்கு மட்டுமே நிரந்தரமானது இல்லை என்றதும் அனைத்து இளம் நடிகர்களுக்கு சூப்பர் ஸ்டார் கனவு காண தொடங்கினர். அந்த நடிகர்களின் ரசிகர்களும் தங்கள் தலைவர்களை சூப்பர் ஸ்டார் நாற்காலியில் அமர வைத்து அழகு பார்க்கும் நோக்கத்தில் தீவிரமாக களம் இறங்கினர்.10 ஆண்டுகளுக்கு பின் அவர்களின் கனவு எந்த அளவு நிறைவேறியுள்ளது என பார்க்கலாம்.
முதலில் யாரை சூப்பர் ஸ்டார் எனலாம்? அதை இப்படி வரையறுத்து கொள்வோம். இப்படி எடுத்து அனைத்து தரப்பு மக்களையும் வயது வித்தியாசமின்றி கவர வேண்டும். இவர் படங்கள் வரும்போது தமிழ்நாட்டில் 75% மக்கள் ஒரு முறையாவது படத்தை பார்க்க என்ன வேண்டும். தயாரிப்பாளர் முதல் தியேட்டரில் முறுக்கு விற்பவர் வரை இவர் படம் அனைவருக்கும் லாபத்தையும் மகிழ்ச்சியையும் கொடுப்பதாக இருக்க வேண்டும்.இதுவே நாம் எடுத்து கொள்ள போகும் சூப்பர் ஸ்டாருக்கான எளிய வரைமுறை.
'சூப்பர் ஸ்டார் நாற்காலி எனக்கு வேண்டும்' என்று முதல்முதலில் முழங்கியவர் அஜித். தான் நடிக்க போகும் 'ஆஞ்சநேயா' படம் சூப்பர் ஸ்டார் பட்டத்தை நோக்கி தான் வைக்கும் முதல் அடி என்று பேட்டி கொடுத்தார். ஆனால் அந்த படமோ படு தோல்வி. தொடர்ந்து நடித்த படங்களும் சரியாக போகவில்லை. மிக பெரிய ஓபனிங்,உயிரை கொடுக்கும் ரசிகர்கள் இருந்தும் கதை தேர்வில் தவற விட்டதாலும், பெண்களையும் குழந்தைகளையும் அதிகம் கவர முடியாமல் போனதாலும் 'சூப்பர் ஸ்டார்' என்ற இடத்தை இன்னும் நெருங்க முடியவில்லை. கால போக்கில் 'அல்டிமேட் ஸ்டார்' என்ற பட்டமே தனக்கு வேண்டாம் என்று கூறி விட்டார் அஜித்.
விஜய்- முதலில் சூப்பர் ஸ்டாராக ஆசைபட்டவர் இப்போது புரட்சி தலைவராக முயற்சி எடுக்கிறார். ஆனால் இன்னும் தான் ஆசைப்பட்டதை அடைய முடியவில்லை. ஆரம்பத்தில் இவர் சூப்பர் ஸ்டார் கனவுடன் நடித்த சில படங்கள் ஹிட். ஆனால் பின்னர் வந்த படங்கள் படு தோல்வி.இவரின் அதிரடி ஆக்சன் படங்களை காமெடி படங்களாக மாற்றி SMS, Facebook என வாய்ப்பு கிடைத்த இடங்களில் எல்லாம் ஊரே கேலி செய்து கை கொட்டி சிரிக்க தொடங்கியதும் தற்போது பாதையை சிறிது மாற்றி விட்டார். குழந்தைகள் விரும்பும் நடிகராக இருப்பதும், 'C' சென்டர் ரசிகர்களை அதிகம் கொண்டிருப்பதும் இவரின் பலம். ஆனால் இவரின் முந்தைய படங்களால் படித்தவர்களிடமும், மேல் தட்டு மக்களிடமும் இவரை பற்றி நல்ல விதமான அபிப்பிராயம் ஏதும் இல்லை. அந்த எண்ணத்தை மாற்றுவதே இப்போது இவருக்குள்ள சவால். ஆழம் தெரியாமல் அரசியலில் வேறு காலை விட்டு விட்டார். அதனால் ஏற்படும் பிரச்சனைகளையும் சமாளிக்க வேண்டும். ஆக இவர் சூப்பர் ஸ்டார் பட்டத்தை அடைய இன்னும் சில ஆண்டுகளாவது வேண்டும்.
விக்ரமை பற்றி இங்கு கூறாமல் இருக்க முடியாது. ரஜினி 'சாமி' விழாவில் பேசியபோது 'தூள்', 'சாமி' என அடுத்தடுத்த ஹிட்டுகள் கொடுத்து உச்சத்தில் இருந்தார். ஆனால் பின் இவர் நடித்த படங்கள் பெரிய பலன் ஏதும் தராமல் இவரின் உழைப்பையும், காலத்தையும் அதிகம் சாப்பிட்டு விட்டன. இப்போது வயது அதிகம் ஆகி விட்டதால் இவர் 'சூப்பர் ஸ்டார்' ஆவது இனி கிட்டத்தட்ட சாத்தியம் இல்லை. அந்த இடத்தின் மேலும் இவர் ஆர்வம் காட்டுவது போல் தெரியவில்லை.
ஆரம்பத்தில் விஜய், விக்ரம், அஜித்திடம் மட்டுமே போட்டி இருந்தது. பின்னர் அதிரடியாக களத்தில் குதித்தவர் சூர்யா. வெற்றி படங்கள் , பெண்கள், குழந்தைகளிடம் நல்ல பெயர் என்று மெதுவாக முன்னேறி கொண்டுள்ளார். இருப்பினும் மற்ற நடிகர்களிடம் ஒப்பிடும்போது தீவிர ரசிகர்கள் இவருக்கு குறைவே. அத்தகைய தீவிர ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் சில ஆண்டுகளில் இவர் சூப்பர் ஸ்டார் பட்டத்தை அடையலாம்.
மேலே கூறிய நடிகர்கள் அனைவரும் நடிக்க வந்து ஏறத்தாழ 20 ஆண்டுகள் ஆகி விட்டது. இன்னும் 'சூப்பர் ஸ்டார்' பட்டத்தை நெருங்க முடியவில்லை. ஆனால் ரஜினியோ அவர் நடிக்க வந்த 20 ஆண்டுகளுக்கு பின் அசைக்க முடியாத சூப்பர் ஸ்டார். முதல்வர் பதவியையே அவருக்கு கொடுக்க தயாராக இருந்தனர் மக்கள். ஆனால் அடுத்த தலை முறை நடிகர்கள் இன்னும் அந்த உயரத்தில் பாதி கூட அடையவில்லை. இப்போது அதர்வா, விக்ரம் பிரபு என மூன்றாம் தலை முறை நடிகர்களும் நடிக்க வந்து விட்டனர்.
ஆரம்பத்தில் இருந்தே சூப்பர் சூப்பர் ஸ்டார் ஆக முயன்று வரும் விஜயும், அஜித்தும் எங்கே தவற விட்டனர்? கால மாற்றம், ரஜினிக்கு இருந்த வசீகரம் என அனைத்தையும் விட்டு விடலாம். இவற்றை மீறி அவர்கள் செய்த தவறு ரஜினி போல் பறந்து பறந்து அடித்து பஞ்ச் வசனம் பேசினால் சூப்பர் ஸ்டார் ஆகி விடலாம் என கணித்தது. இவற்றை செய்தால் மக்கள் சூப்பர் ஸ்டார் ஆக்கி விடுவார்கள் எனில் விஜயகாந்த் தானே பெரிய சூப்பர் ஸ்டாராக இருந்திருக்க வேண்டும்? ரஜினி போல் அனைவருக்கும் ஏற்ற கதைகளில் நடிக்காமல் அதிரடி நாயகர்களாவே நடித்தால் சூப்பர் ஸ்டார் ஆகி விடலாம் என்று எண்ணியதே அவர்கள் செய்த தவறு. எது எப்படியோ இன்னும் சில ஆண்டுகள் பொறுத்து பார்க்கலாம். யார்தான் சூப்பர் ஸ்டார் ஆகிறார்கள் என்று.
மிகவும் சரியான அலசல்...
ReplyDeleteநன்றி நண்பரே..
Delete