“தம்பி! சீக்கிரம் வாங்க. நாட்டாமை இனிமே பஞ்சாயத்துக்கு வர மாட்டேன்னு
சொல்லிட்டாராம்” பக்கத்துக்கு வீட்டுக்காரர் என்னிடம் சொல்லிவிட்டு ஓடினார்.
“என்னங்க ஆச்சு?” குரலால் அவரை விரட்டி பிடிக்க முயன்றேன்.
“நாட்டாமையை பத்தி ஒரு பொண்ணு தப்பா ஊரு முழுக்க சொல்லிட்டு திரியுதாம்.
அதனாலதான்.”
இந்த ஊருக்கு அரசாங்க வேலை கிடைத்து வந்ததிலிருந்தே இந்த ஊர் ஒரு புதுமையாக
இருக்கிறது. என்ன என்னவோ பேசி கொள்கிறார்கள். செய்கிறார்கள். இப்போது நாட்டாமையே
பஞ்சாயத்துக்கு வர மறுக்கிறார். பக்கத்துக்கு வீட்டுக்காரரை தொடர்ந்தேன்.
ஆலமரத்திற்கு கீழே ஊரே கூடி இருந்தது.
அந்த கூட்டத்தின் நடுவில் இருந்தவர்தான் நாட்டாமையாக இருக்க வேண்டும். அந்த
வெண்ணிற முறுக்கிய மீசையையும், முக
சுருக்கங்களையும் வைத்து அறுபது
மதிக்கலாம். ஆனால் உடல் மிகவும் திடகாத்திரமாக இருந்தது.
பார்த்தவுடன் மரியாதை தர தூண்டும் கம்பீரம்.
“உங்க
குடும்பம் பஞ்சாயத்து பண்றதுதான்
காலகாலமா நடக்கிறது. நீங்க இப்பிடி பஞ்சாயத்துக்கு வர மாட்டேன்ன்னு சொன்னா
எப்பிடியா?” கூட்டத்திலிருந்து ஒரு
பெரியவர் நாட்டாமையை
பார்த்து கேட்டார்.
“ஊருக்கார
பயலுக நாக்கு மேல பல்லை போட்டு என்னை
பத்தி இப்பிடி பேச ஆரம்பிச்ச பின்னாடி நான் எப்பிடிடா பஞ்சாயத்து பண்றது?” அவர் குரலில் கடுமையான கோபம் தெரிந்தது.
“ஐயா! ஏதோ
ஒரு கிறுக்கு பிடிச்ச கழுதை உங்களை பத்தி தப்பா சொன்னா நாங்க நம்பிடுவோமாயா? இப்போ பாருங்க. நான் அவளையே கூப்பிட்டு உங்க
கிட்ட மன்னிப்பு கேக்க வைக்கிறேன்.” அந்த பெரியவர் நாட்டாமைக்கு பதிலளித்த கையோடு கூட்டத்தை
நோக்கி திரும்பி “செல்வி!
எங்கடி இருக்க?
உன்னாலதாண்டி அத்தனை பிரச்சினையும். முன்னாடி வாடி” என்றார். மெதுவாக கூட்டம் பிளந்து வழிவிட
தொடங்கியது. நான் ஆர்வமாக பார்க்க தொடங்கினேன்.
பயந்து கொண்டே மெதுவாக செல்வி என அழைக்கப்பட்ட அந்த பெண் முன்னால் வர
தொடங்கினாள். அவளுக்கு பதினாறு வயது இருக்கலாம். இவள்தான் இந்த
கிராமத்தின் பேரழகி என்று
யோசிக்காமல் பட்டம் தரலாம். அப்படி ஒரு அழகு. மிரட்சி நிரம்பிய அந்த கண்கள் அவள்
மேல் எனக்கு ஒரு பரிதாபத்தை ஏற்படுத்தியது.
“சொல்லுடி!
ஐயா மேல எந்த தப்பும் இல்லன்னு சொல்லு” அந்த பெரியவர் அவளை மிரட்டினார்.
அவள் இப்போது கிட்டத்தட்ட அழுது
விட்டு இருந்தாள்.
“வாய்ல என்ன வச்சு இருக்க. பேசுடி.” அவள் பின்னால் நின்றிருந்த பெண் அவள் முதுகில்
ஒரு அடி கொடுத்தாள்.
அட பாவிகளா. ஒரு பெண்ணை இப்படியா நடத்துவது. நான் செல்வியையே பார்த்தேன்.
அவள் குனிந்து அழுது கொண்டு இருந்தாள்.
“ஐயா! என்ன மன்னிச்சிடுங்க ஐயா. நீங்க வெளிய சொல்ல கூடாதுன்னு சொல்லியும்
நான் சொல்லிட்டேன்” அவள் திடீரென பெருங்குரல் எடுத்து கத்தினாள். நான் அங்கே
இருந்த ஒவ்வொருவரின் முகத்தையும் பார்த்தேன். அதிர்ச்சி அப்பட்டமாக தெரிந்தது.
“விளையாடாம உண்மையை சொல்லுடி.” அந்த பெரியவர் அந்த பெண்ணை பார்த்து
முறைத்தார்.
“நான் உண்மையாத்தான் சொல்றேன். அன்னைக்கு எப்பவும் போல நாட்டமை வீட்டுக்கு
வேலைக்கு போய் இருந்தேன். நாட்டாமை வீட்ல எல்லாரும் வெளியூருக்கு போய் இருந்தாங்க.
நாட்டாமை மட்டும் தனியா இருந்தார்”
அவள் சொல்ல சொல்ல எனக்கு ரத்தஅழுத்தம்
ஏற ஆரம்பித்தது. இந்த நாட்டாமை நல்லவர் போல இருந்து கொண்டு என்ன வேலை
செய்து இருக்கிறார். தனியாக இருந்த பெண்ணிடம். அதுவும் சின்ன பெண்ணிடம். இவரை போலீசில் பிடித்து கொடுக்காமல் இவர் ஆடும் நாடகத்தை இந்த
ஊர்க்காரர்கள் பார்த்து கொண்டு இருக்கிறார்கள் . செல்வி! நீ கவலைபடாதே. இந்த ஊரே
எதிர்த்தாலும் உனக்கு நியாயம் வாங்கி தருவேன். நான் அரசாங்க ஊழியன். என் மனதுக்குள்ளேயே
செல்வியிடம் பேசி கொண்டிருந்தேன்.
“நிறுத்துடி!” நாட்டமையின் கோப குரல் என் சிந்தனையை கலைத்தது. நான் அவர்
பக்கம் திரும்பினேன். எழுந்து நின்றிருந்தார். கோபத்தில் மீசை துடித்து கொண்டிருந்தது.
“இனிமே என்ன நடந்ததுன்னு நான் சொல்றேன். இந்த பொண்ணு எப்பவும் வீட்டுக்கு வேலைக்கு
வர பொண்ணுதான்.. ஆனா அதை சரியா பார்த்தது கூட இல்லை அன்னைக்கு வீட்டுக்கு வந்தது.
சமையல்கட்டுக்குள்ள நின்னு சத்தமா பாட்டு பாடிகிட்டு இருந்தது. ஏதோ ஒரு ஆர்வத்துல
நான் சமையல்கட்டுக்குள்ள எட்டி பார்த்தேன். அப்போதான் முதல் தடவையா அதை பார்த்தேன்.
நல்லா பளபளன்னு மின்னிச்சு. எனக்கு அதை பார்த்ததும் ஆசையை அடக்க முடியல. ரொம்ப நாளா காஞ்சு போய் இருந்த மனசு அதை பார்த்ததும்
சபலப்பட ஆரம்பிச்சது. தப்புன்னு புத்தி சொல்லியும் மனசு கேக்கல.” நாட்டாமை
நிறுத்திவிட்டு அருகில் இருந்த செம்பில் இருந்து நீரை எடுத்து குடிக்க
ஆரம்பித்தார். ஊரே உறைந்து போய் நின்று இருந்தது.
“முதல்ல நேரா அவ கிட்ட கேட்டுடலாம்னு நெனச்சேன். ஆனா அவ மறுத்துட்டா? இந்த
வயசுல நான் இதை எங்க போய் கேப்பேன். இந்த சந்தர்ப்பம் தவறகூடதுன்னா பலவந்தம்தான்
ஒரே வழின்னு முடிவு எடுத்தேன். மெதுவா உள்ளே போனேன். கொஞ்சம் தண்ணி இருந்தா குடு
புள்ள அப்பிடின்னு கேட்டேன். சத்தம் கெட்டு அவ திரும்பினதும் அவ கைய பிடிச்சு.”
சொல்லிவிட்டு கீழே குனிந்து கொண்டார். என்னால் அதிர்ச்சியிலிருந்து மீள முடியவில்லை.
என்ன ஊர் இது? இவர்களை எல்லாம் நடுரோட்டில் நிற்க வைத்து சுட வேண்டும்.
இப்போது நாட்டாமை மீண்டும் தொடர்ந்தார். “அவ கைய பிடிச்சு அவ கைல இருந்த
லாலிபாப்பை பிடுங்கி என்னோட வாய்ல போட்டுகிட்டேன். அவ அப்பிடியே என்னை
பார்த்துகிட்டே நின்னா. நான் என்னோட பைல இருந்து நூறு ரூபாயை எடுத்து இதை வெளிய சொல்லிடாதன்னு
சொல்லி அனுப்பினேன். ஆனா இவ இதை ஊரெல்லாம் சொல்லி என்னோட மானத்தை வாங்குவான்னு
நினைக்கவே இல்லை”
நாட்டாமை முடித்ததும் எனக்கு சிரிப்பதா, அழுவதா என தெரியவில்லை. அட பாவிகளா! ஒரு லாலிபாப்புக்கா இத்தனை களேபரம். வரும்போதே சொல்லி இருந்தால் நான் கண்டதையும் கற்பனை செய்து கொண்டிருக்க மாட்டேனே.
“ஐயா! இதுக்காக எல்லாம் நீங்க பஞ்சாயத்துக்கு வராம..”
அவர்கள் பேசி கொண்டு இருந்தனர். நான் மெதுவாக நழுவ ஆரம்பித்தேன்.
களேபரமான கற்பனை தான்... ஹா... ஹா...
ReplyDeleteநன்றி சார்
Deleteகடைசியில் லாலி பாப் எங்களுக்கும் கொடுத்து விட்டீங்களே !இருந்தாலும் நல்லாத்தான் இருந்தது !
ReplyDeleteத.ம 2
நன்றி சார்
Delete