“என்னை எதற்காக இப்படி அடைத்து வைத்து இருக்கிறீர்கள். என்னை வெளியே
விடுங்கள்.” தடியாக இருந்த அந்த மனிதனிடம் கேட்டேன்.
“கொஞ்சம் பொறுமையாக இருங்கள் சார்! தலைவர் வந்து விடுவார்.” சொல்லிவிட்டு
முகத்தை திருப்பி கொண்டான். எனக்கு அடி வயிறை முட்டி கொண்டு ஒன் பாத்ரூம் வந்தது.
அவனிடம் கேட்கலாமா?
வேண்டாம். தவறாக நினைத்து கொள்வான். முன் பின் தெரியாதவர்களின்
காரில் ஏறியது எத்தனை பெரிய தவறு என்று
தெரிந்தது. கூட வந்து முகவரி காண்பிக்க சொல்லி
அவர்கள் முகவரிக்கு என்னை கடத்தி விட்டார்களே.
அந்த வீட்டை சுற்றி பார்க்க ஆரம்பித்தேன். சுவர் முழுக்க அரசியல்
தலைவர்களின் படங்கள். அது கட்சி அலுவலகம் போல தெரிந்தது. எந்த கட்சி என்பதும்
ஓரளவு அந்த படங்களை பார்த்ததும் புரிந்தது.
“தலைவர் வருகிறார்”
யார் தலைவர். ஆர்வத்தோடு பார்த்தேன். அவர் மெதுவாக மாடிப்படிகளில்
இறங்கி வந்தார். வெள்ளை சட்டை, வெள்ளை வேட்டி. பளிசென்ற முகம். இவரா? இவரை அடிக்கடி
டிவியில் காமிப்பார்கள். செய்தி சானல்களின் லைவ் நிகழ்ச்சிகளில் அடிக்கடி வருவார்.
அவர் வந்து என் முன் இருந்த நாற்காலியில் அமர்ந்தார்.
“வணக்கம்! நான் யாரென்று உனக்கு தெரிந்து இருக்கலாம்.”
“நன்றாக தெரியும்”
“அப்போது நான் எந்த கட்சியின் மாநில தலைவர் என்றும் தெரிந்து
இருக்குமே?”
“அதுவும் தெரியும்”
“நல்லது. உன்னை எதற்காக அழைத்து வந்திருக்கிறோம் தெரியுமா?”
“அழைத்து வரவில்லை. கடத்தி வந்திருக்கிறீர்கள்.”
“ஹாஹாஹா” பலமாக சிரித்தார். மொக்கை ஜோக்குக்கெல்லாம் சிரிக்கிறார். என்னால்
இவர்களுக்கு ஏதோ வேலை ஆக வேண்டியிருக்கிறது என புரிந்து கொண்டேன்.
“பாருங்கள். எங்கள் கட்சி இந்தியாவின் மிகப் பெரிய தேசிய கட்சி. ஆனால்
இங்கே தமிழ்நாட்டில் மட்டும் எங்களுக்கு செல்வாக்கு மிக குறைவு.”
“தமிழ்நாட்டில் மட்டும் இல்லை. தென் இந்தியா முழுக்கவே உங்களுக்கு
செல்வாக்கு குறைவுதான்.” சொல்லிவிட்டு நாக்கை கடித்து கொண்டேன்.
“உண்மைதான். நீங்கள் வெளிப்படையாக பேசுகிறீர்கள்.”
“எப்பொழுதுமே நான் அப்படிதான். இதற்கும் என்னை பிடித்து வந்ததற்கும்
என்ன சம்பந்தம்.”
“சம்பந்தம் இருக்கிறது. எங்கள் கட்சி ஆட்சியை பிடிக்க வேண்டுமென்றால்
தமிழகத்தில் சில தொகுதிகளாவது கிடைக்க வேண்டும். தனியாக நின்றால் எங்களால் ஒரு தொகுதியில்
கூட ஜெயிக்க முடியாது. கூட்டணி பலம் வேண்டும்.”
“அதற்கென்ன? நீங்கள் அழைத்தால் கூட்டணிக்கு வர எல்லாரும் வரிசையில்
நிற்க போகிறார்கள்.”
“அதுதான் இல்லை. நாங்கள் கூட்டணிக்கு அழைத்தாலே எல்லாரும் தூர ஓடி
போகின்றனர். நாங்கள் மதவாதிகளாம். இதை மற்ற யாரும் சொன்னால் கூட பொறுத்து கொள்வோம்.
சொல்பவர் ஒரு ஜாதி கட்சி தலைவர். ஜாதியை வைத்து அரசியல் செய்பவர்களே எங்களை மதவாதிகள்
என்றால் என்ன செய்வது? எப்படியோ ஒரே ஒரு கட்சி மட்டும் எங்களுடன் சேர ஒத்து
கொண்டது. ஆனால் அவர்களை மட்டும் வைத்து கொண்டு ஜெயிக்க முடியாது என தலைமை
நினைக்கிறது. இன்னும் கூட்டணி பலம் வேண்டுமாம்” அவர் குரலில் விரக்தி தெரிந்தது.
“புதிதாக ஒரு கட்சி வந்திருக்கிறதே. நீங்கள் அந்த கட்சி தலைமையுடன்
கூட்டணி பேச்சு வார்த்தை நடத்துவதாக பேப்பரில் படித்தேனே?”
“அந்த ஆளா? அவர் காலையில் எங்களுடன் பேசுகிறார். மாலையில் கட்சி
தனித்து போட்டியிடும் என்கிறார். மறுநாள் மீண்டும் எங்களுடன் பேசுகிறார். அவர் எப்போது
என்ன செய்வார் என்றே தெரியவில்லை நாங்கள் வெறுத்து போய் விட்டோம்”
“உங்கள் கஷ்டத்தை புரிந்து கொள்ள முடிகிறது சார். ஆனால் நான் உங்களுக்கு
எவ்வாறு உதவ முடியும்.”
“நிச்சயம் முடியும். நாங்கள் இப்போது ஒரு பரிதாபமான நிலையில்
இருக்கிறோம். இங்கே எங்களை சீண்டுவார் இல்லை. அதனால் உங்கள் கட்சியுடன் கூட்டணி
அமைக்க முடிவு செய்துள்ளோம். இப்போது உங்களுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்த
போகிறேன்.”
“சார்! நீங்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள். நான் எந்த கட்சியின்
தலைவரும் கிடையாது. நான் ஒரு சாதாரண..”
“நீங்கள் கட்சி தலைவரில்லை. ஆனால் ஒரு சங்க தலைவர்தானே?”
“ஆமாம். ஆனால்...”
“அது போதும். உங்கள் சங்கத்தில் எத்தனை பேர் இருக்கிறார்கள்?”
“தமிழகம் முழுக்க ஆயிரம் பேர் வரை இருக்கிறார்கள்”
“அது போதும் எங்களுக்கு. இந்த நிமிடம் முதல் உங்கள் சங்கம் எங்கள் கட்சியுடன் கூட்டணி வைத்து கொள்ள
போகிறது. நாளை பிரஸ் மீட் வைத்து அறிவித்து விடுவோம். நீங்கள் எங்கள் கட்சி சின்னத்திலேயே
போட்டியிட போகிறீர்கள். உங்களுக்கு பத்து தொகுதிகள். சம்மதம்தானே? ”
“ஆனால் கொள்கை ஒன்றாக இருந்தால்தானே கூட்டணி அமைக்க முடியும்?”
“எல்லா கட்சிகளின் ஒரே கொள்கை பதவிதான். அதற்காக யாரும் யாரிடமும்
கூட்டணி வைத்து கொள்ளலாம். சம்மதம் சொல்லுங்கள்”
“நீங்கள் சொல்வது சரிதான். ஆனால்...”
“தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். ஒரு கட்சியை கூட உன்னால்
கூட்டணிக்கு சேர்க்க முடியவில்லையா என்று மேலே இருந்து எனக்கு குடைச்சல் கொடுக்கிறார்கள்.
நான் இன்னும் இரண்டு நாட்களில் யாரையாவது கூட்டணிக்கு சேர்த்தே ஆக வேண்டும். என்
கஷ்டத்தை புரிந்து கொள்ளுங்கள்”
“புரிகிறது. ஆனால்...”
“என்ன தயக்கம்? தொகுதி போதாதா? இன்னும் நான்கு தொகுதிகளை தருகிறேன். தேர்தல்
செலவுக்கு முப்பது கோடி பணம் தருகிறேன். இன்னும் என்ன வேண்டும்?”
நான் பதில் பேசவில்லை.
“ராமதாஸ்! அதை கொண்டு வா”
ராமதாஸ் என்று அழைக்கப்பட்டவர் ஒரு பெட்டியை கொண்டு வந்து என்
முன்னால் வைத்தார்.
“இதில் அறுபது லட்சம் இருக்கிறது. இது உங்களுக்கு மட்டும்.”
என் கண்கள் விரிந்தன. அறுபது லட்சமா?
“இது அட்வான்ஸ்தான். தேர்தல் சமயத்தில் இன்னும் எதிர்பார்க்கலாம்”
“எனக்கு சம்மதம் சார். நாளை மறுநாள் நல்ல நாள். அன்றே நம் கூட்டணியை
அறிவித்து விடலாம்.”
“மிக்க மகிழ்ச்சி. நான் சாதித்து விட்டேன்” அவர் முகத்தில் மகிழ்ச்சி
அப்பட்டமாக தெரிந்தது. பதவி தப்பி விட்ட நிம்மதியும்.
நான் எழுந்து கொண்டேன். “சார்! ஒரு முக்கியமான விஷயம்.”
“சொல்லுங்கள்”
“நான் ஒன் பாத்ரூம் போக வேண்டும்.”
வலது பக்கம் ஒரு அறையை காட்டினார். உள்ளே சென்று வேலையை முடித்து
விட்டு கொண்டு வந்தேன்.
“நான் வருகிறேன் சார்”
“நன்றி”
அந்த வீட்டை விட்டு வெளியே வந்தேன். இது என்ன கனவா? கூட்டணி பேச்சு
வார்த்தை. கையில் அறுபது லட்சம். அரசியலில் எதுவும் நடக்கும் என்பது இதுதானா?”
பாவம் அந்த மனிதர். குழப்பத்தில் என்ன செய்வது என்றே தெரியவில்லை
அவருக்கு. நேபாளத்து கூர்க்கா சங்க தலைவரை கூப்பிட்டா கூட்டணி பேச்சு வார்த்தை
நடத்துவது? எங்கள் சங்கத்தில் யாருக்கும் இந்தியாவில் ஓட்டே கிடையாது. அவரை
நினைத்து சிரிப்பதா? அழுவதா? என்றே தெரியவில்லை.
நேபாளத்துக்கு அடுத்த விமானம் எப்போது என்று விசாரிக்க மொபைலை வெளியே எடுத்தேன்.
இப்படி வேற... ஹா.... ஹா...
ReplyDeleteஇதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
ReplyDeleteஎங்கள் கட்சியில் யாரும் தீவிரவாதிகள் இல்லை என்று சொல்லி எல்லாக் கட்சித் தலைவர்களும் கழண்டு கொண்டார்கள்.
கோபாலன்
இந்தியாவில் கூர்க்காலாந்து தனி மாநிலம் கிடைக்குதோ இல்லையோ பெட்டி நிறைய பணம் கிடைக்கும்னு சந்தோசமா விமானம் ஏறி இருப்பாரே !
ReplyDeleteத ம 2