சரியான வேலை கிடைக்காமல் சுற்றி கொண்டிருந்த நாட்களில் ஒரு சிறிய
நிறுவனத்தில்(??) எனக்கு வேலை கிடைத்தது. சிறிய என்றால் மிக மிக சிறிய. நிறுவன முதலாளியின் வீட்டின் மாடியில் இருந்த அறைதான் அலுவலகம். அந்த பத்துக்கு ஆறு
அளவிலான அறையில் நான்கு கணிப்பொறிகள். அதில் ஆண்கள் இரண்டு, பெண்கள் இரண்டு என என்னையும்
சேர்த்து நான்கு ஊழியர்கள். அறையின் நடுவில் எங்கள் முதலாளி தனது மடிக்கணினியுடன்
அமர்ந்திருப்பார்.
முதலாளியின் குடும்பம் அந்த வீட்டிலேயே இருந்ததால் அவரின் குடும்ப
உறுப்பினர்கள் சில நேரங்களில் எங்கள்
அலுவலக அறைக்கு வருவார்கள். சில நேரங்களில் வீட்டில் ஏதாவது வித்தியாசமாக சமைத்து
இருந்தால் எங்களுக்கு கொண்டு வந்து தருவார்கள். இந்த பதிவின் நாயகனான எங்கள் முதலாளியின் ஏழு வயது பையனும் விடுமுறை
நாட்களில் அடிக்கடி எங்கள் அலுவலகத்துக்கு விஜயம் செய்வான். அவன் அப்போது இரண்டாம்
வகுப்பு படித்து கொண்டிருந்தான். ஆள் நன்றாக கொழுக் மொழுக்கென்று இருப்பான். ஒரே
பையன் என்பதால் வீட்டில் செல்லம் அதிகம். எங்களிடம் அதிகாரமாக பேசுவான். அவன்
வந்தால் முதலாளி தனது கணிணியை அவனுக்கு விளையாட கொடுத்து விடுவார்.
ஒரு செவ்வாய்கிழமை மாலைப் பொழுதில் அவன் அலுவலக அறைக்குள் பாய்ந்து
வந்தான். எப்போதும் விடுமுறை நாளில்தானே வருவான். இன்றைக்கு எதற்கு
வந்திருக்கிறான்? அதுவும் இத்தனை உற்சாகமாக என்று நினைத்து கொண்டேன்.
“என்னடா? ஹோம் வொர்க் செய்யலியா?” என்றார் முதலாளி.
“நாளைக்கு லீவு. நாளைக்கு செஞ்சுக்குறேன்.”
“நாளைக்கு எதுக்குடா லீவு?”
“எங்க மிஸ்சுக்கு கல்யாணம்”
“அப்பிடியா?” என்ற முதலாளி மீண்டும் வேலையை கவனிக்க தொடங்கினார்.
இப்போது நமது ஹீரோ பாவமாக முகத்தை வைத்து கொண்டான்.
“அப்பா! எங்க மிஸ்சுக்கு பாப்பாவே இல்லையாம்பா.... அதான் அவங்க கல்யாணம்
செஞ்சுக்க போறாங்கலாம்பா” என்றான்.
நாங்கள் இருந்ததால் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அவனை
பார்க்காமல் முகத்தை திருப்பி கொண்டு “ம்”
என்று சொல்லி வைத்தார் முதலாளி.
இப்போது அவன் மீண்டும் “அப்பா!
எனக்கும் ரெண்டு பாப்பா... வேணும்னு ஆ......சையா இருக்குப்பா.......” என்று
இழுத்து இழுத்து லொள்ளு சபா மனோகர் பாணியில் சொன்னானே பார்க்க வேண்டும்.
அவன் முகத்தையும், சொல்லிய விதத்தையும் பார்த்ததும் எனக்கு சிரிப்பை
அடக்க முடியவில்லை. பெண் ஊழியர்களோ எதுவுமே நடக்காதது போல முகத்தை இறுக்கமாக
வைத்து கொண்டார்கள். ஆனால் அவர்களும் அனேகமா தனியாக நினைத்து நினைத்து
சிரித்திருப்பார்கள். நான் சிரிப்பை மெல்லவும் முடியாமல், மிழுங்கவும் முடியாமல்
அறையை விட்டு வெளியேறி தனியாக சென்று பத்து நிமிடங்கள் சிரித்துவிட்டு சிரிப்பு
அடங்கிய பின்னரே அறைக்கு திரும்பினேன்.
அன்று அலுவலகம் முடிந்து வீடு திரும்பிய பின்னர் என் நண்பனிடம் இந்த விஷயத்தை
கூறி “இரண்டாம் வகுப்பு படிக்கிற பசங்க வகுப்புல எப்பிடி எல்லாம் பேசிக்கிறாங்க பாரேன். இவன்
நாலாவது படிக்கும்போது கூட படிக்கிற பொண்ணை
லவ் பண்றேன்னு இழுத்துட்டு வந்துடுவான்” என்றேன்.
“இந்த ஜெனரேஷன் ரொம்ப அட்வான்ஸ்டா. இதெல்லாம் பெருசா எடுத்துக்க கூடாது”
என்றான்.
“அதில்லடா! நானெல்லாம் மூணாம் வகுப்பு வரை குழந்தைங்களை கடைல செஞ்சுவிப்பாங்கன்னு
நெனச்சுக்கிட்டு இருந்தேன்.” என்றேன்.
“நீயாவது பரவாயில்ல! நானெல்லாம் பனிரெண்டாம் வகுப்பு படிக்கிற
வரைக்கும் பையனும், பொண்ணும் கட்டி பிடிச்சுகிட்டா உடனே குழந்தை உண்டாகிடும்
அப்பிடின்னு நெனைச்சுகிட்டு இருந்தேன்” என்றான், சீரியஸாக முகத்தை வைத்து கொண்டு.
நான் பதில் சொல்லவில்லை. அவன்தான் இந்த ஜெனரேஷன் ரொம்ப ரொம்ப
அட்வான்ஸ் என்று ஒரே பதிலில் புரிய வைத்து விட்டானே?
ஹா... ஹா... ரொம்பத் தான் விவரம்...!
ReplyDelete