Monday, February 17, 2014

திருவள்ளுவர் என்னும் புலவரின் வாழ்வு

நான் இரண்டாம் வகுப்பு படித்த காலத்தில்  திருவள்ளுவரை பற்றி ஒரு பாடம் இருக்கும். திருவள்ளுவர் எங்கே பிறந்தார் என்று துல்லியமாக தெரியவில்லை என்று சொல்லி  ஒரு நான்கு, ஐந்து ஊர்களை சொல்லி அவைகளில் ஏதோ ஒரு ஊரில் அவர் பிறந்து இருக்க வேண்டும் என்று சொல்லி இருப்பார்கள். இப்படி திருவள்ளுவரை பற்றி துல்லியமாக எதுவும் தெரியாதது பலருக்கு வசதியாக இருக்கிறது என்று அப்போது நான் அறிந்திருக்கவில்லை. அப்போது  தொடங்கி பன்னிரண்டாம் வகுப்பு வரை திருவள்ளுவரை பற்றியும், திருக்குறளையும் கற்று கொடுக்காத வகுப்பே இல்லை.

உண்மையில் அப்போது திருக்குறளை மனனம் செய்வது கடினமான காரயமாக இருந்தது. அதிலும் ஒரு வார்த்தையை கொடுத்து அதில் தொடங்கும் குறளை எழுது என்று கேட்பார்கள். அதை கூட எழுதி விடலாம். ஆனால் ஒரு வார்த்தை கொடுத்து அதில் முடியும் குறளை எழுத சொல்லுவார்கள். அது சற்று கடினமான விஷயம். பாட புத்தகத்தில் உள்ள அனைத்து குறள்களையும் பிசிறு இன்றி படித்து இருந்தால்தான் அது சாத்தியம். அப்போதெல்லாம்   திருவள்ளுவரை பற்றி நினைத்தால் எரிச்சலாக வரும். யாருய்யா இந்த ஆள்? அவர் பாட்டுக்கு எதையோ எழுதி விட்டு போய் விட்டார், இப்போது நாம் கஷ்டப்பட வேண்டியுள்ளது என சலித்து கொள்வேன்.

அதே திருவள்ளுவரை பற்றி இப்போது நினைத்தால் பிரமிப்பாக உள்ளது. ஒரு பதிவு எழுதுவதே மிக சிரமமாக உள்ளது. அப்படியே எழுதினாலும் அதில் அத்தனை பிழைகள். ஆனால் திருவள்ளுவரை பாருங்கள். ஆயிரத்து முன்னூற்று முப்பது குறள்களை எழுதி இருக்கிறார். அதுவும் கடினமான இலக்கிய வடிவமான குறள் வெண்பா வடிவில். அத்தனை பாடல்களையும் அசை, சீர், தளை எல்லாம் தட்டாமல் இலக்கணப்படி எழுத வேண்டுமானால் எத்தனை புத்திசாலியாக இருக்க வேண்டும்? அதுவும் ஒவ்வொரு குறளிலும் இருக்கும் கருத்துகள் என்ன சாதாரணமானதா? அவற்றை எழுத எத்தனை அனுபவமும், சிந்தனையும் தேவை. அத்தனை புத்திசாலித்தனத்துக்கு ஒரு வேளை அவர் இப்போது பிறந்து இருந்தால் எளிதாக அமெரிக்க விசா பெற்று அமெரிக்காவில்  ஆராய்ச்சி செய்ய சென்று இருப்பார்.

என்னதான் புத்திசாலித்தனம் இருந்து இருந்தாலும் திருக்குறளை எழுதுவது அவருக்கு எளிதான காரியமாக இருந்து இருக்காது. புலமையும், வறுமையும் பிரிக்க முடியாதது என்பதால் வள்ளுவர் பெரும் செல்வந்தராக இருந்திருக்க  வாய்ப்பில்லை. அவர் பனை ஓலையை எடுத்து ஒவ்வொரு  எழுத்தாக செதுக்கி கொண்டிருந்தபோது வாசுகி “என்ன இவர்? பக்கத்து வீட்டு ஆண்களெல்லாம் சுறுசுறுப்பாக வேலைக்கு செல்லும்போது இவர்  மட்டும் எதையோ எழுதி கொண்டுள்ளார்?” என்று நினைத்து இருக்கலாம். திருவள்ளுவர் எழுதியதை வாசுகி வாசித்து இருந்தால் அதுவே பெரிய விசயம்தான். என்னதான் கணவன் சொல்லை மீறாமல் சொன்ன சொல்லுக்கு உடனே ஓடி வருபவராக  இருந்திருந்தாலும் வாசுகியும் ஒரு பெண்தானே? இதையும் வள்ளுவர் சமாளித்து இருக்க வேண்டும்.

அத்தனை குறள்களையும் எழுத அவருக்கு சில  ஆண்டுகள் பிடித்து இருக்கலாம். அத்தனை ஆண்டுகளுக்கும் அவரை ஸ்பான்சர் செய்ய ஏதாவது ஒரு மன்னரை பிடிக்க வேண்டி இருந்து இருக்கும். அந்த இடைப்பட்ட காலத்தில் ஸ்பான்சர் செய்த மன்னர் போரில் எதுவும் தோற்று விட்டால் வேறு மன்னரிடம் ஸ்பான்சர்ஷிப் கேட்டு செல்ல வேண்டியதாக இருந்து இருக்கும். இது அவருக்கு பெரிய பிரச்சனையாக இருந்து இருக்கும்.

வள்ளுவர் திருக்குறளை மதுரையில் அரங்கேற்றம் செய்ததாக வேறு சொல்லுவார்கள். ஒரு வேளை அவர் பிறந்தது மைலாப்பூர் என்று வைத்து கொண்டால் மதுரைக்கு செல்ல எத்தனை கஷ்டப்பட்டு இருப்பார்? இன்றைக்கே சென்னையிருந்து, மதுரைக்கு செல்வது பெரும்பாடாக உள்ளது. தேசிய நெடுஞ்சாலையும், ரயில்வே ட்ராக்கும் இல்லாத காலத்தில் அவர் மதுரை செல்ல எத்தனை பேரிடம் வழி விசாரித்து இருக்க வேண்டும். வண்டலூரை வந்து சேர்வதற்குள்ளாகவே பெரும்பாடாக இருந்து இருக்கும்.

இதென்ன அர்த்தமில்லாமல் என்னென்னவோ சொல்லி கொண்டுள்ளேன் என்கிறீர்களா? சமீபத்தில் சந்தித்த ஒரு பெரியவர் திருவள்ளுவர் ஒரு கிறிஸ்தவர்தான் என்று சாதித்தார். அதற்கு லாஜிக்கே இல்லாமல் ஒரு விளக்கம் வேறு கொடுத்தார். அவரை சொல்லி குற்றமில்லை. யாரோ சொல்லி கொடுத்ததை இவர் மற்றவர்களுக்கு சொல்கிறார். திருவள்ளுவர் சொன்ன கருத்துகளை எல்லாம் மறந்து விட்டு இப்படி சம்பந்தமில்லாமல் அவரை மதம் மாற்றுகிறார்களே? நாமும் அவர்கள்  போல திருவள்ளுவர் பற்றி ஆராய்ச்சி செய்தால் என்ன என்று முயற்சி செய்து பார்த்தேன். அவ்வளவுதான்.

3 comments:

  1. இதெல்லாம் வெட்டி பயலுகள் செய்ற வேலை நண்பரே ( நான் உங்களை சொல்லவில்லை). சில காலங்களுக்கு முன் ஒரு சிலர், திருவள்ளுவர் பிராமணர் என்றும் வேறு சிலர், அவர் ஒரு பவுத்தர் எனவும் விவாதித்து கொண்டிருந்தார்கள். இதைப் பற்றி ஆராய்வதை எல்லாம் விட்டு விட்டு அவர் ஒரு தமிழன், தமிழில் தான் இந்த உயர்ரக நீதி நூலை இயற்றினார் எனக்கொண்டு, அதை அலசி ஆராய்ந்து உலகம் முழுவதும் பரப்புவதே ஒரு தமிழனின் கடமையாகும். காட்டுமிராண்டி காலத்து கவைக்குதவாத சாதாரண மத நூல்களெல்லாம் உலகம் முழுதும் வெற்றிகரமாக பரப்பப்பட்டு வருகையில் , அனைத்து மக்களுக்கும் பயன் தரும் இந்த நன்நெறி நூல் சரியான முறையில் பரவவில்லை அல்லது நாம் பரப்பவில்லை என்பதை நாம் ஓப்புக்கொள்ளத்தான் வேண்டும் :-(

    ReplyDelete
  2. திருவள்ளுவர் எந்த மதம் எந்த ஊர் என்று எவருக்குமே தெரியாது. சும்மா அவர் அவர் நினைத்த மாத்திரம் கதை எழுதி உள்ளார்கள். மயிலாப்பூர் கோவில் மற்றும் கதை கூட இடைக்காலத்தில் உண்டாக்கப்பட்ட ஒன்று. இன்று சிலர் திருவள்ளுவர் செயிண்ட் தாமசை சந்தித்து கிறிஸ்தவராக மாறினார் எனவும், திருவள்ளுவர் ஒரு பார்ப்பன பிராமணர் என்று எல்லாம் கதை விடுகின்றார்கள்.

    பொதுவாக திருவள்ளுவரின் குறள்களில் இருக்கும் சமண சமயக் கருத்துக்களை கொண்டு மயிலை வேங்கடசாமி போன்றோர் அவர் ஒரு சமண முனிவராக இருக்கலாம் என கருதுகின்றனர். அவ்வளவு.

    அவர் எந்த ஜாதி மதம் என்பதை ஆராய்வதை விட அவர் சொன்ன நல்ல விஷயங்களை பின்பற்றினாலே போதும், இதை விட வேறு மரியாதை எதுவும் நாம் அவருக்கு கொடுக்க முடியாது.

    சிலை வைப்பதும், மணி மண்டபம் கட்டுவதும், ஓவியம் தீட்டி இவர் தான் வள்ளுவர் எனக் கூறுவது, கோவில் கட்டுவதும் உண்மையில் சுத்த பேத்தல் தனம் என்பேன். நன்றிகள்.

    ReplyDelete
  3. திருவள்ளுவர் பற்றிய ஆராய்ச்சிகள் நிறைய உள்ளன - இணையத்திலும்... அனைத்தும் வீண்...

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...