Monday, April 7, 2014

பிரபஞ்சத் தேடல்

“நீங்கள் அந்த கிரகத்தில் இறங்கி விட்டீர்களா?” பூமியிலிருந்து நீண்ட இடைவெளிக்கு பின் வந்த அந்த தகவல் என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. நான் எதிர் பார்த்தது போல் பூமியுடன்   தொடர்பு துண்டிக்கப்படவில்லை.

“இன்னும் சில வினாடிகளில் இறங்கி விடுவோம்  சார்” குரலில் உற்சாகத்தை ஏற்றி சொன்னேன்.

“நல்லது. நீங்கள் செய்யப்போகும் காரியம்  மிகப் பெரியது. இதுவரை பிரபஞ்சத்தில் யாருமே செய்யாதது. மிகப் பெரிய பொருட்செலவில் இதை செயல்படுத்துகிறோம்  என்பதை உணர்ந்து கவனமாக செயல்படுங்கள்.”

“உத்தரவு சார்.”

“நியாபகம் வைத்து கொள்ளுங்கள். அதை கண்டறிய  வேண்டுமானால் நீங்கள் நம்முடைய விசேச கண்ணாடி அணிந்து கொள்ள வேண்டும்.”

“நீங்கள் அதை பார்த்து விட்டீர்கள்தானே?”

“பார்த்து விட்டோம்”

“நேரில் பார்க்க எப்படி இருக்கிறது அது?”

“வர்ணிக்க தெரியவில்லை. ஒளி போல தெரிகிறது. கருப்பா, வெள்ளையா? உயரமா, குட்டையா? சொல்லத் தெரியவில்லை. எதையுமே  வர்ணிக்கத்  தெரியவில்லை.”

“ஆனால்  அது தெரிகிறதுதானே?”

“ஆமாம் சார்”

“அப்போது உன் குழுவிற்கு ஆணை பிறப்பிக்கலாம்”

“உத்தரவு”

சொல்லி விட்டு ஏன் அணியினருக்கு கட்டளைகளை அளிக்க தொடங்கினேன்

“எல்லாரும் தயாராகுங்கள். அதை பிடித்த மறு நிமிடம் நம் விண்கலத்திற்குள் கொண்டு வந்து விட வேண்டும். நினைவில் கொள்ளுங்கள். அதன் பதில் தாக்குதல் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். எச்சரிக்கை.”

நான் கட்டளைகளை அளிக்கும் முன்னரே என்னுடைய அணியினர் தயார் நிலையில் இருந்தனர். முன்னர் வகுத்து இருந்த திட்டப்படி அதை நோக்கி முன்னேற தொடங்கினோம். அது நாங்கள் வருவதை அது கண்டுகொண்டதாகவே தெரியவில்லை

நான் என் கையில் இருந்த அந்த கதிர்வீச்சு துப்பாக்கியை தயாராக வைத்து கொண்டேன். இன்னும் சில அடிகளில் அதன் மேல் பிரயோகித்து விடலாம். அது இதற்கு கட்டுப்படுமா? கோபத்தில் எங்களையும் பூமியையும் அழித்து விடுமா? மனதில் நின்ற கேள்விகளை  தவிர்த்து வேலையில் கவனம் செலுத்த தொடங்கினேன்.

“கேப்டன்! பிரயோகித்து விடுங்கள் கேப்டன்! நாங்கள் எங்கள்  ஆயுதங்களை தயாராகவே வைத்துள்ளோம். ஏதேனும் சிக்கலென்றால் பார்த்து கொள்கிறோம்” என்னுடைய டெபுடி எனக்கு ஊக்கம் அளித்தான்.

“இதே பிரயோகித்து விடலாம்”

தயக்கத்துடன் என் துப்பாக்கியில் மாயக்கதிர் உருவாக வேண்டிய ஆரத்தை குறிப்பிட்டு ட்ரிக்கரை இழுத்தேன். எதிர்பார்த்தது போலவே கச்சிதமாக  அந்த மாய உருவத்தை எங்கள் கதிர்வீச்சு சிறை பிடித்தது. அந்த துப்பாக்கியுடன் இணைக்கப்பட்டு இருந்த  எங்கள் கம்ப்யூட்டர்கள் அந்த மாய வட்டத்தை அந்த உருவத்துடன் விண்கலத்தை நோக்கி இழுக்கத் தொடங்கின. சில நொடிகள்தான். அந்த உருவம் எங்கள் விண்கலத்தில் தனியாக வடிவமைக்கப்பட்ட அறையில் சிறைபிடிக்கப்பட்டது. நாங்கள் எதிர்பார்த்தது போலவே அதை பிடித்து விட்டோம்.


“யாஹ்ஹூ” எங்கள் அணியினர் உற்சாக கூக்குரல் எழுப்ப தொடங்கினர்.

“கேப்டன்! எங்களுக்கு ஆச்சரியமாக உள்ளது. இத்தனை சுலபமாக சாதித்து விட்டோம். அது துளி எதிர்ப்பு கூட காட்டவில்லையே?”

“எல்லாம் கடவுளின் கருணை.” என்னை அறியாமல் நான் சொன்ன பதிலை கேட்டு எங்கள் அணியினர் சத்தமாக சிரிக்கத் தொடங்கினர்
.
“என்ன கேப்டன் நீங்கள்? பிரபஞ்சத்தில் கடவுளையே தேடி கண்டுபிடித்து விட்டோம்; சிறையும் பிடித்து விட்டோம். இன்னமும் கடவுளின் கருணை என்கிறீர்களே?”

“உண்மைதான். ஆனால் இது என்னுடைய பழக்கம். ஆனால் நண்பர்களே. நான் இதை பூமிக்கு கொண்டு சென்று சேர்க்கும்வரை நம்முடைய மிசன் முடியவில்லை. பயணத்திற்கு தயாராகுங்கள்.”

சில நிமிடங்களில் பூமியை நோக்கி விண்கலத்தை செலுத்த தொடங்கினோம்.

“ஆரே!” என் பெயரை சொல்லி யாரோ கூப்பிடும் சத்தம் கேட்டு எழுந்தேன்.

விண்கலத்தில்  எல்லாரும் அயர்ந்து தூங்கி கொண்டு இருந்தனர். சத்தம் எங்கே இருந்து வந்தது. அதுவும் ஏன் பெயரை சொல்லி என்னை அழைக்கும் தைரியம் யாருக்கு வந்தது. ஒரு வேளை கடவுள்தான் பேசுகிறாரோ?

“ஆமாம்! நீ நினைப்பது சரி. கடவுள்தான் பேசுகிறேன்”

“நினைத்தேன். என்ன வேண்டும் சொல்லுங்கள்?”

“நான் உன்னுடன் பேசலாமா?”

“விதிப்படி நான் உங்களிடம் கேள்விகள் கேட்கக்  கூடாது. ஆனால் உங்களுக்கு கேள்வி கேட்க  உரிமை உண்டு. ஆனால் எங்களிடம் இருந்து விடுதலை மட்டும் பெற்று விடலாம் என்று நினைக்காதீர்கள்”

“நான் இருக்கும் இடத்தை எப்படி கண்டுபிடித்தீர்கள்?”

“அதை விளக்குவது எளிது அல்ல. பல கோடிகள் செலவு செய்து பிரபஞ்சம் முழுவதும்  அலசி உங்கள் இருப்பிடத்தை கண்டுபிடித்தோம்."

“என்னை எங்கே கொண்டு செல்கிறீர்கள்?”

“பூமிக்கு”

“அங்கே என்னை கொண்டு சென்று என்ன செய்யப் போகிறீர்கள்”

“உங்களை ஆராய்ச்சி செய்யப்போகிறோம். உங்களிடமிருந்து கடவுள் கூறு என்ன என்று ஆராய்ந்து மனிதர்களை கடவுளாக்க போகிறோம்.”

“நல்லது. அதன் பின்”

“அதன் பின் எல்லாரும் கடவுள். யாருக்கும் மரணமில்லை. ஆளுக்கு ஒரு பிரபஞ்சம் படைப்பார்கள். தனியாக ஒரு சொர்க்கம் படைத்தது அதில் வாழ்வார்கள். வாழ்க்கையின் ரகசியம் அனைத்தும் உங்களை கொண்டு அறிவோம். கவலையில்லா வாழ்வு வாழ்வோம்”

“என்னை பூமிக்கு கொண்டு சென்றால் என்ன ஆகும் என்று யோசித்தாயா? உங்கள் பூமியில் உள்ள அத்தனை மதத்தினரும் என்னை சொந்தம் கொண்டாடுவார்கள். மத மோதல்கள் அதிகமாகும். நாத்திகர்கள் நான் கடவுளே இல்லை என்பார்கள். என்ன செய்வீர்கள்?”

“அது  எங்கள் கவலை. உங்களுக்கு எதற்கு? மேலும் நீங்கள் பூமிக்கு சென்ற பின் மக்கள் உண்மையில்  மதங்களையே மறந்து விடுவார்கள்

“மனிதா! நான் சொல்வதை கேள். நீ  என்னை பூமிக்கு கொண்டு சென்றால் பிரச்சினைகள்தான் அதிகமாகும்.”

“நான் இதை பற்றி எல்லாம் யோசிக்கத் தேவையில்லை. என்னுடைய பணி உங்களை பூமிக்கு கொண்டு செல்வது.”

கடவுளிடமிருந்து பதில் இல்லை. சில நொடி மௌனத்திற்கு பின் கடவுளிடம் கேட்டேன். 

“கடவுளே! என்னிடம் மட்டும் சொல்லுங்கள். எங்கள் மதத்தினர் வழிபாடுதானே உங்களை அடைய சரியான வழி?”

எது சரியான வழி என்று இப்போது அறிந்து கொள்வாய்

சொல்லிவிட்டு கடவுள் இடியென சிரித்தார்.  எங்கள் விண்கலம் கட்டுப்பாடு இழந்து  ஒரு பெரும் குலுங்கலுடன் திசை மாறியது. மிகப்பெரிய விண்கல் ஒன்று எங்கள் விண்கலத்தை  நோக்கி வந்து கொண்டிருப்பதை என்னால் விண்கலத்தின்  ஜன்னல் வழியே பார்க்க முடிந்தது.


2 comments:

  1. நல்ல கற்பனை(எங்க இருந்து புடிககிறீங்க)

    ReplyDelete
    Replies
    1. எங்கே இருந்தும் பிடிக்கவில்லை. முழுக்க, முழுக்க சொந்த கற்பனை. கருத்துக்கும், வருகைக்கும் நன்றி நண்பரே

      Delete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...