Showing posts with label சயின்ஸ் பிஃக்சன். Show all posts
Showing posts with label சயின்ஸ் பிஃக்சன். Show all posts

Monday, April 7, 2014

பிரபஞ்சத் தேடல்

“நீங்கள் அந்த கிரகத்தில் இறங்கி விட்டீர்களா?” பூமியிலிருந்து நீண்ட இடைவெளிக்கு பின் வந்த அந்த தகவல் என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. நான் எதிர் பார்த்தது போல் பூமியுடன்   தொடர்பு துண்டிக்கப்படவில்லை.

“இன்னும் சில வினாடிகளில் இறங்கி விடுவோம்  சார்” குரலில் உற்சாகத்தை ஏற்றி சொன்னேன்.

“நல்லது. நீங்கள் செய்யப்போகும் காரியம்  மிகப் பெரியது. இதுவரை பிரபஞ்சத்தில் யாருமே செய்யாதது. மிகப் பெரிய பொருட்செலவில் இதை செயல்படுத்துகிறோம்  என்பதை உணர்ந்து கவனமாக செயல்படுங்கள்.”

“உத்தரவு சார்.”

“நியாபகம் வைத்து கொள்ளுங்கள். அதை கண்டறிய  வேண்டுமானால் நீங்கள் நம்முடைய விசேச கண்ணாடி அணிந்து கொள்ள வேண்டும்.”

“நீங்கள் அதை பார்த்து விட்டீர்கள்தானே?”

“பார்த்து விட்டோம்”

“நேரில் பார்க்க எப்படி இருக்கிறது அது?”

“வர்ணிக்க தெரியவில்லை. ஒளி போல தெரிகிறது. கருப்பா, வெள்ளையா? உயரமா, குட்டையா? சொல்லத் தெரியவில்லை. எதையுமே  வர்ணிக்கத்  தெரியவில்லை.”

“ஆனால்  அது தெரிகிறதுதானே?”

“ஆமாம் சார்”

“அப்போது உன் குழுவிற்கு ஆணை பிறப்பிக்கலாம்”

“உத்தரவு”

சொல்லி விட்டு ஏன் அணியினருக்கு கட்டளைகளை அளிக்க தொடங்கினேன்

“எல்லாரும் தயாராகுங்கள். அதை பிடித்த மறு நிமிடம் நம் விண்கலத்திற்குள் கொண்டு வந்து விட வேண்டும். நினைவில் கொள்ளுங்கள். அதன் பதில் தாக்குதல் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். எச்சரிக்கை.”

நான் கட்டளைகளை அளிக்கும் முன்னரே என்னுடைய அணியினர் தயார் நிலையில் இருந்தனர். முன்னர் வகுத்து இருந்த திட்டப்படி அதை நோக்கி முன்னேற தொடங்கினோம். அது நாங்கள் வருவதை அது கண்டுகொண்டதாகவே தெரியவில்லை

நான் என் கையில் இருந்த அந்த கதிர்வீச்சு துப்பாக்கியை தயாராக வைத்து கொண்டேன். இன்னும் சில அடிகளில் அதன் மேல் பிரயோகித்து விடலாம். அது இதற்கு கட்டுப்படுமா? கோபத்தில் எங்களையும் பூமியையும் அழித்து விடுமா? மனதில் நின்ற கேள்விகளை  தவிர்த்து வேலையில் கவனம் செலுத்த தொடங்கினேன்.

“கேப்டன்! பிரயோகித்து விடுங்கள் கேப்டன்! நாங்கள் எங்கள்  ஆயுதங்களை தயாராகவே வைத்துள்ளோம். ஏதேனும் சிக்கலென்றால் பார்த்து கொள்கிறோம்” என்னுடைய டெபுடி எனக்கு ஊக்கம் அளித்தான்.

“இதே பிரயோகித்து விடலாம்”

தயக்கத்துடன் என் துப்பாக்கியில் மாயக்கதிர் உருவாக வேண்டிய ஆரத்தை குறிப்பிட்டு ட்ரிக்கரை இழுத்தேன். எதிர்பார்த்தது போலவே கச்சிதமாக  அந்த மாய உருவத்தை எங்கள் கதிர்வீச்சு சிறை பிடித்தது. அந்த துப்பாக்கியுடன் இணைக்கப்பட்டு இருந்த  எங்கள் கம்ப்யூட்டர்கள் அந்த மாய வட்டத்தை அந்த உருவத்துடன் விண்கலத்தை நோக்கி இழுக்கத் தொடங்கின. சில நொடிகள்தான். அந்த உருவம் எங்கள் விண்கலத்தில் தனியாக வடிவமைக்கப்பட்ட அறையில் சிறைபிடிக்கப்பட்டது. நாங்கள் எதிர்பார்த்தது போலவே அதை பிடித்து விட்டோம்.


“யாஹ்ஹூ” எங்கள் அணியினர் உற்சாக கூக்குரல் எழுப்ப தொடங்கினர்.

“கேப்டன்! எங்களுக்கு ஆச்சரியமாக உள்ளது. இத்தனை சுலபமாக சாதித்து விட்டோம். அது துளி எதிர்ப்பு கூட காட்டவில்லையே?”

“எல்லாம் கடவுளின் கருணை.” என்னை அறியாமல் நான் சொன்ன பதிலை கேட்டு எங்கள் அணியினர் சத்தமாக சிரிக்கத் தொடங்கினர்
.
“என்ன கேப்டன் நீங்கள்? பிரபஞ்சத்தில் கடவுளையே தேடி கண்டுபிடித்து விட்டோம்; சிறையும் பிடித்து விட்டோம். இன்னமும் கடவுளின் கருணை என்கிறீர்களே?”

“உண்மைதான். ஆனால் இது என்னுடைய பழக்கம். ஆனால் நண்பர்களே. நான் இதை பூமிக்கு கொண்டு சென்று சேர்க்கும்வரை நம்முடைய மிசன் முடியவில்லை. பயணத்திற்கு தயாராகுங்கள்.”

சில நிமிடங்களில் பூமியை நோக்கி விண்கலத்தை செலுத்த தொடங்கினோம்.

“ஆரே!” என் பெயரை சொல்லி யாரோ கூப்பிடும் சத்தம் கேட்டு எழுந்தேன்.

விண்கலத்தில்  எல்லாரும் அயர்ந்து தூங்கி கொண்டு இருந்தனர். சத்தம் எங்கே இருந்து வந்தது. அதுவும் ஏன் பெயரை சொல்லி என்னை அழைக்கும் தைரியம் யாருக்கு வந்தது. ஒரு வேளை கடவுள்தான் பேசுகிறாரோ?

“ஆமாம்! நீ நினைப்பது சரி. கடவுள்தான் பேசுகிறேன்”

“நினைத்தேன். என்ன வேண்டும் சொல்லுங்கள்?”

“நான் உன்னுடன் பேசலாமா?”

“விதிப்படி நான் உங்களிடம் கேள்விகள் கேட்கக்  கூடாது. ஆனால் உங்களுக்கு கேள்வி கேட்க  உரிமை உண்டு. ஆனால் எங்களிடம் இருந்து விடுதலை மட்டும் பெற்று விடலாம் என்று நினைக்காதீர்கள்”

“நான் இருக்கும் இடத்தை எப்படி கண்டுபிடித்தீர்கள்?”

“அதை விளக்குவது எளிது அல்ல. பல கோடிகள் செலவு செய்து பிரபஞ்சம் முழுவதும்  அலசி உங்கள் இருப்பிடத்தை கண்டுபிடித்தோம்."

“என்னை எங்கே கொண்டு செல்கிறீர்கள்?”

“பூமிக்கு”

“அங்கே என்னை கொண்டு சென்று என்ன செய்யப் போகிறீர்கள்”

“உங்களை ஆராய்ச்சி செய்யப்போகிறோம். உங்களிடமிருந்து கடவுள் கூறு என்ன என்று ஆராய்ந்து மனிதர்களை கடவுளாக்க போகிறோம்.”

“நல்லது. அதன் பின்”

“அதன் பின் எல்லாரும் கடவுள். யாருக்கும் மரணமில்லை. ஆளுக்கு ஒரு பிரபஞ்சம் படைப்பார்கள். தனியாக ஒரு சொர்க்கம் படைத்தது அதில் வாழ்வார்கள். வாழ்க்கையின் ரகசியம் அனைத்தும் உங்களை கொண்டு அறிவோம். கவலையில்லா வாழ்வு வாழ்வோம்”

“என்னை பூமிக்கு கொண்டு சென்றால் என்ன ஆகும் என்று யோசித்தாயா? உங்கள் பூமியில் உள்ள அத்தனை மதத்தினரும் என்னை சொந்தம் கொண்டாடுவார்கள். மத மோதல்கள் அதிகமாகும். நாத்திகர்கள் நான் கடவுளே இல்லை என்பார்கள். என்ன செய்வீர்கள்?”

“அது  எங்கள் கவலை. உங்களுக்கு எதற்கு? மேலும் நீங்கள் பூமிக்கு சென்ற பின் மக்கள் உண்மையில்  மதங்களையே மறந்து விடுவார்கள்”

“மனிதா! நான் சொல்வதை கேள். நீ  என்னை பூமிக்கு கொண்டு சென்றால் பிரச்சினைகள்தான் அதிகமாகும்.”

“நான் இதை பற்றி எல்லாம் யோசிக்கத் தேவையில்லை. என்னுடைய பணி உங்களை பூமிக்கு கொண்டு செல்வது.”

கடவுளிடமிருந்து பதில் இல்லை. சில நொடி மௌனத்திற்கு பின் கடவுளிடம் கேட்டேன். 

“கடவுளே! என்னிடம் மட்டும் சொல்லுங்கள். எங்கள் மதத்தினர் வழிபாடுதானே உங்களை அடைய சரியான வழி?”

“எது சரியான வழி என்று இப்போது அறிந்து கொள்வாய்”

சொல்லிவிட்டு கடவுள் இடியென சிரித்தார்.  எங்கள் விண்கலம் கட்டுப்பாடு இழந்து  ஒரு பெரும் குலுங்கலுடன் திசை மாறியது. மிகப்பெரிய விண்கல் ஒன்று எங்கள் விண்கலத்தை  நோக்கி வந்து கொண்டிருப்பதை என்னால் விண்கலத்தின்  ஜன்னல் வழியே பார்க்க முடிந்தது.


Saturday, September 21, 2013

கணவன்-2023

 கஷ்டப்பட்டு அந்த முகவரியை தேடி கண்டு பிடித்து விட்டேன். இந்த அபார்ட்மெண்டின் மூன்றாவது மாடியில்தான் நான் தேடி வந்த நபர் இருக்கிறார். லிப்டில் ஏறி மூன்றை அழுத்தினேன். மூன்றாவது மாடியை அடைந்ததும் முகவரியில் இருந்த கதவு எண்ணை நோக்கி நடந்து அழைப்பு மணியை அழுத்தினேன். சில நொடிகளில் அருகில் இருந்த திரை ஒளி பெற்று  ஒரு அழகிய இளம் பெண்ணின் முகம்  தோன்றியது.

"யார் நீங்கள்?"

"நான் டோசிமோ கம்பெனியில் இருந்து வருகிறேன். உங்களின் ஹப்பி-2023 மாடல் ரோபோ சரியாக இயங்கவில்லை என்று நீங்கள்  புகார் அனுப்பியிருந்தீர்கள். அதை சரி செய்ய என்னை இங்கே அனுப்பி இருக்கிறார்கள்."

கதவு திறந்தது.

"உள்ளே வாருங்கள்."

"என்ன பிரச்சினை?"

"நேற்றில் இருந்து இது சரியாகவே இல்லை. அங்கே இங்கே அசையாமல் ஒரே இடத்தில் இருக்கிறது. கூப்பிட்டால் திரும்ப கூட மாட்டேன் என்கிறது" என்றாள்.

"கவலைப்படாதீர்கள். சரி செய்ய கூடிய பிரச்சினையாகவே இருக்கும்" என்றேன்.

"எப்படியாவது  சரி செய்து விடுங்கள். ஒரே மாதத்தில் என்னுடைய வாழ்க்கையை ஆக்கிரமித்து விட்டது. இது இல்லாமல் என்னால் இருக்க முடியாது." சொன்னவளின் முகத்தில் கவலை தெரிந்தது

நான் அதை சோதிக்க ஆரம்பித்தேன். சில நிமிடங்களில் என்ன பிரச்சினை என்று தெரிந்து விட்டது.

"கவலைப்பட தேவை இல்லை. வைரஸ் பிரச்சினைதான். எளிதில் சரி செய்து விடலாம்"

"வைரஸா?  கடைசியாக இரண்டு நாட்கள் முன் இதனுடன் இணைந்து  சந்தோசமாக  இருந்தேன். அந்த வைரஸ் எனக்கும் பரவி இருக்குமா?"

 
"சே சே ! நீங்கள் நினைப்பது போன்ற வைரஸ் இல்லை. மென்பொருள் வைரஸ்தான். உங்களுக்கு எந்த பாதிப்பும் வராது"

"நல்லவேளை. நான் பயந்து விட்டேன். ரோபோவை சரி செய்வது கஷ்டமா?"

"இல்லை. ஸ்கேன் ப்ரோக்ராமை  ஓட விட்டு விட்டேன். வைரஸை நீக்கி  விடும். ஆனால் இது முடிய சற்று நேரம் ஆகும்". அந்த ரோபோவை விட்டு விலகினேன்.

"எவ்வளவு நேரம்?"

"அதிக பட்சம் ஒரு மணி நேரம். அது வரை வெளியே சென்று விட்டு வருகிறேன்."

"நீங்கள் இங்கேயே வேண்டுமானாலும் காத்து இருக்கலாம். எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. உட்காருங்கள், உங்களுக்கு காப்பி எடுத்து வருகிறேன்." என்னுடைய பதிலை எதிர்பார்க்காமல் சமையலறையை நோக்கி சென்றவள் சில நிமிடங்களுக்கு பின் கையில் ஒரு கோப்பையுடன் வந்தாள்.

"எடுத்து கொள்ளுங்கள். ரோபோ இல்லாமல் நேற்றிலிருந்து நானே எல்லா வேலைகளையும் செய்ய வேண்டியாதாகி விட்டது." 

நான் கோப்பையை கையில் எடுத்து கொண்டேன்.

" சுயமாக சிந்திக்கும் ரோபோக்களை உங்கள் கம்பெனி எப்போது தயாரிக்கும்?"

"இன்னமும் ஆராய்ச்சி நிலையிலேயே இருக்கிறது. இன்னும் ஒரு சில ஆண்டுகள் ஆகலாம். அதற்கு முன் வேறு எந்த கம்பெனியாவது அப்படி ஒரு ரோபோவை தயாரிக்கவும் வாய்ப்பு இருக்கிறது. ஏன்? சிந்திக்கும் ரோபோ வந்தால் இந்த ரோபோவுக்கு பதில் அதை அப்கிரேட் செய்து கொள்ளலாம் என நினைக்கிறீர்களா?"

"இல்லை இல்லை. அதற்கு நான் நிஜ மனிதனையே திருமணம் செய்து கொண்டு விடுவேன்." சொல்லிவிட்டு சத்தமாக சிரித்தாள்.

"அப்படியென்றால் உங்களுக்கு திருமணம் செய்து கொள்ளும் திட்டமே இல்லையா? கடைசிவரை ரோபோவுடனே வாழ்ந்து விட போகிறீர்களா?"

"திருமணம் எதற்கு தேவை? என்னிடம் பணம் இருக்கிறது. நான் ப்ரோடெக்ட் என்ற ஒரு வார்த்தையை உச்சரித்து விட்டால் போதும். இதை மீறி என்னை யாரும் தொட கூட முடியாது. அந்த அளவு ஒரு ஆணால் கூட தர முடியாத அளவு பாதுகாப்பை இது எனக்கு கொடுக்கிறது.  கூடவே ஒரு ஆண் கொடுக்ககூடிய மற்ற எல்லா சந்தோசங்களையும் இந்த ரோபோ எனக்கு கொடுக்கிறது. இதற்கு மேல் என்ன வேண்டும்."

"இதனால் குழந்தை தர முடியாது."

"குழந்தை பெற்று கொள்ள கிராமப்புற பெண்கள் நிறைய பேர் இருக்கின்றனர்." அவள் குரலில் அலட்சியம் தெரிந்தது. அதற்கு மேல் அவளுடன் அதை பற்றி   பேச எனக்கு பிடிக்கவில்லை. எழுந்து ரோபோவை நோக்கி நடந்தேன். 

ஜப்பான்காரன் இந்த ரோபோவை இந்தியாவுக்கு கொண்டு வந்ததும் கொண்டு வந்தான். எவனுக்கும் திருமணம் செய்ய பெண் கிடைக்க மாட்டேன் என்கிறது. வெறும் முப்பது கட்டளைகளை மட்டும் புரிந்து கொள்ளும் இந்த ரோபோதான் ஆண்களை விட பெண்களுக்கான அத்தியாவசிய தேவையாகிவிட்டது. இந்த ரோபோவினால் ஆண்களுக்கு கிடைத்த ஒரே லாபம் என்னை போன்ற ஒரு நூறு பேருக்கு வேலை கிடைத்ததுதான்.

"வேலை  முடிந்ததா?" என்னுடைய சிந்தனையை கலைத்தாள்

"வைரஸை நீக்கி விட்டேன். சரியாக இயங்குகிறதா என சோதித்து கொள்கிறேன்." சொல்லிவிட்டு அதை பரிசோதிக்க தொடங்கினேன். கட்டளைகளை சரியாக புரிந்து கொண்டது.

"மேடம்! நான் சோதித்த அளவு இது நன்றாக வேலை செய்கிறது. மற்ற செயல்பாடுகளும் சரியாக இருக்கிறதா என நீங்கள் தனி அறையில் சென்று பரிசோத்து கொள்ளுங்கள்"

"தேவை இல்லை. நன்றாக இயங்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. நான் இன்று இரவு பரிசோதித்துவிட்டு ஒரு வேளை பிரச்சினை இருந்தால் நாளை கூப்பிடுகிறேன்"

"ஓகே"

"இது போன்ற பிரச்சினைகள் எதிர்காலத்தில் வராமல் எப்படி தடுப்பது?"

"உங்கள் ரோபோவுடன் வெளியே செல்லும்போது டேட்டா ட்ரான்ஸ்ஃபர் ஆப்சனை ஆஃப் செய்து விடுங்கள். மற்ற எலக்ட்ரானிக் சாதனங்களில் இருந்து இந்த வைரஸ் பரவுவது தடுக்கப்படும்"

"சரி அப்படியே செய்கிறேன்"

"நான் வருகிறேன். ஏதேனும் பிரச்சனை என்றால் அழையுங்கள்."

"நிச்சயம். மிக்க நன்றி"

அவளின் வீட்டை விட்டு வெளியே வந்து நடக்க தொடங்கினேன்.   எளிதில் சரி செய்ய முடியாத அளவு ஒட்டு மொத்த கணவன் ரோபோட்டுகளின் செயல்பாட்டை முடக்க போகும் வைரஸ் அவள் ரோபோவிருந்தே தன்னுடைய கணக்கை தொடங்கப் போகிறது என அவள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அப்படிப்பட்ட வைரஸை உருவாக்கி அவளின் ரோபோவில் செலுத்திய திருப்தியுடன் நடக்க தொடங்கினேன்


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...