வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கு
வாக்களிப்பது என்று நடுநிலை வாக்காளர்களுக்கு ஒரே குழப்பமாக உள்ளது. தமிழர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்.
இல்லையென்றால் அவர்களுக்கு இத்தனை சிறந்த அரசியல் தலைவர்கள் கிடைத்திருப்பார்களா? மாநிலத்தின்
முன்னேற்றமும் , மக்களின் நலனுமே நோக்கம் எனக் கொண்டு முதுமை, உடல் நலக்குறைவு அனைத்தையும் மறந்து
இந்த வேகாத வெயிலிலும் ஊரெல்லாம் சுற்றி பிரசாரம் செய்கிறார்களே நமது முதல்வர்
வேட்பாளர்கள். இவர்கள் மக்களின் அனைத்து பிரச்சினைகளையும் எப்படியும் தீர்த்து விடுவார்கள். .இப்போதைக்கு மக்களுக்கு இருக்கும் ஒரே பிரச்சினை இவர்களில் யாருக்கு முதல்வர் நாற்காலியை பரிசளிப்பது
என்பதுதான். அத்தனை நல்லவர்கள் நம் தலைவர்கள்.
தற்போதையை முதல்வரையே எடுத்துக்கொள்ளுங்கள். மாநில
தலைநகரமே வெள்ளம் வந்து மூழ்கும் வேளை. அப்படிப்பட்ட சிக்கலான வேளையிலும் எத்தனை
நிதானமாக செயல்பட்டார் அவர். அப்படிப்பட்ட பொறுமையான அணுகுமுறை ஒரு தலைவருக்கு எத்தனை முக்கியம். மதுவிலக்கு கேட்டு தமிழகமே
கொந்தளித்த போதும் “ஆல்கஹால் வித்டிராயல் சிண்ட்ரோம்(alcohol withdrawal syndrome)” வந்து மக்கள் பாதிக்கப்படக்கூடாது என பொறுமையாக படிப்படியாக
மதுவிலக்கை அமுல்படுத்தப்போகிறார் அவர். குடிமக்களின் உடல்நலத்தை முக்கியமாக
நினைக்கும் தலைவரால்தானே இப்படி செயல்பட முடியும். அதுமட்டுமா? மக்களுக்காகவே
உழைத்து அந்த வேலைச்சுமையால் அமைச்சர்கள் தங்கள் உடல்நலத்தை கண்டு கொள்வதில்லை
என்று உணர்ந்து அவர்களை அடிக்கடி உடலை வளைக்கும் உடற்பயிற்சி செய்ய வைத்தார். மேலும் ஊழல்வாதிகளை சட்டத்தால்
ஒன்றும் செய்ய முடியாது என்று உணர்ந்து தவறு செய்த அமைச்சர்களை நான்கு நாட்கள் வீட்டு
சிறையில் கடும் தண்டனை கொடுத்தாராம். இப்படி நீதி வழுவாமல் நடக்கும் அரசியல்வாதியை
இதுவரை வரலாறு கண்டதில்லை. அடிக்கடி கூட்டம் நடத்தி போக்குவரத்தை தடை செய்தது
எதற்காக? ஆராய்ந்து பார்த்தால் காற்று மாசுபாட்டை சற்று நேரமாவது தடுத்து மக்களுக்கு நல்ல காற்றை தருவதற்கு என்று புரியும் . இப்படி சற்று நுணுக்கமாக யோசித்தால் ஐந்து ஆண்டுகளில் இந்த அரசு செயல்படாதது போலத் தெரிந்தாலும் மக்களின்
நன்மைக்காக இது போல பல மறைமுக திட்டங்களை தீட்டி இருப்பது தெரியும்.
அடுத்து தமிழினத் தலைவரை பற்றி பார்ப்போம் . தனது உடல் பொருள் ஆவியை
மக்களுக்காகவே அர்ப்பணித்தவர் அல்லவா அவர்? அவருடையதை மட்டும் அர்ப்பணித்திருந்தால்
கூட பரவாயில்லை. தனது குடும்பத்தினர் நூறு பேரையும் அதே போல தியாகம் செய்ய
வைத்தவர் ஆயிற்றே. அரசு கொடுத்த இலவசத்
தொலைக்காட்சியை மக்கள் அதிகம் பார்த்து தங்கள் கண்களை கெடுத்துக்கொள்ளக் கூடாது
என்ற ஒரே காரணத்திற்காக பதினாறு மணி நேரம் மின்தடை செய்தார். எப்படிப்பட்ட ராஜ
தந்திரம் அது? மக்களிடம் அதிக நிலம் சேர்ந்து விட்டால் ஏழை, பணக்காரர் வேறுபாடு
அதிகரிக்கும் என்று அவரின் கட்சியினரே நில அபகரிப்பு செய்து ஒரு புதிய கம்யூனிஸ
சித்தாந்தத்தை உருவாக்கினார்களே? வேறு எந்த கட்சிக்காவது இப்படி ஒரு வரலாறு உண்டா? அது மட்டுமா, நூறு கோடிக்கு மேலே எண்களே
இல்லை என்று எண்ணிக் கொண்டிருந்த மக்களுக்கு ஒரு லட்சம் கோடியை அறிமுகம் செய்தார்களே?
அந்த லட்சம் கோடிக்கு எத்தனை பூஜ்ஜியங்கள் என்று விரல் விட்டு எண்ணி நாம் கணித
அறிவை வளர்த்தோமே . இப்படி நமது அறிவை விரிவடைய செய்தது எத்தனை பெரிய சாதனை.
இவர்களுக்கு அடுத்த இடத்தில் இருப்பவரும்
இவர்களுக்கு சற்றும் சளைத்தவர் இல்லை. பதவியை
பிடிப்பதையே கொள்கையாக கொண்டு கட்சி வைத்துள்ளாரே. இவரின் வெளிப்படைத்தன்மை வேறு
யாருக்கு உண்டு. பத்திரிக்கையாளர்களையும், கட்சியினரையும் எதைப்பற்றியும் கவலைப்படாமல்
பொது இடத்தில் அடித்தும், துப்பியும் குழந்தை மனதோடு நடந்து கொள்கிறாரே. இப்படி குழந்தை
மனம் கொண்ட ஒரு தலைவர் உலகில் எங்கேயும் உண்டோ? மனைவியையும், மச்சானிடமும் கட்சியை கொடுத்து
கட்சியை குடும்ப சொத்தாக மாற்றி புரட்சி
செய்தவர், நாளை ஆட்சியை பிடித்தால் தமிழ்நாட்டையும் தனது குடும்ப சொத்தாக எண்ணி
பத்திரமாக பார்த்துக் கொள்வார் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.
இந்தியாவில், ஏன் உலகத்திலேயே இப்படிப்பட்ட தலைவர்கள் கிடைப்பது அரிது. நடுநிலை வாக்காளர்களுக்கு இப்படிப்பட்ட
தலைவர்களுள் ஒரே ஒருவரை தேர்வு செய்வது
மிகக் கடினம் என்பதால் மத்திய அரசு சட்ட திருத்தம் செய்து இந்த மூவரையும் தமிழக
முதல்வராக பணியாற்ற அனுமதிப்பதே சிறந்த தீர்வாக இருக்க முடியும்
இப்போதைக்கு அ.தி.மு.க / தி.மு.க ஆகியவற்றுக்கு மாற்று என்பதில் களத்தில் இருப்பவர்களில் தெளிவான நபர் முதல்வர் வேட்பாளர் திரு அன்புமணி அவர்கள் மட்டுமே. மிகவும் சிந்தனை ஆற்றலுடன் தன்முனைப்புடன் தனக்கு ஒரு வாய்ப்பு அளிக்க வேண்டி நிற்கும் ஒரு படித்த முற்போக்கு இளைஞருக்கு விபரமான மக்கள் வாக்களித்து தமிழ் நாட்டு அரசியலில் ஓர் மாற்றத்தினை உருவாக்க வேண்டும்.
ReplyDeleteஒப்பீட்டு ரீதியில் களத்தில் உள்ள மற்றவர்களுடன் அன்புமணி மாறுபட்டே தெரிகிறார். ஆனால் ஜாதிக்கட்சி பின்புலமும், மத்திய அமைச்சராக இருக்கும்போது அவர் மேல் எழுந்த குற்றச்சாட்டுகளுமே யோசிக்க வைக்கிறது
Deleteஉங்களைத்தான் தேடிகிட்டு இருக்கேன். கொஞ்சம் இந்தப் பக்கம் வந்துட்டு போக முடியுமா?
ReplyDeleteநிச்சயம் வருகிறேன். உங்களிடமிருந்து சற்று இசையை பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளது
Deleteதிமுக ஆட்சியில் அதிகபட்சமாக 4 மணி நேரம் மட்டுமே மின் தடை இருந்தது அதுவும் அறிவிக்கப்பட்ட மின்வெட்டு
ReplyDeleteஎந்த ஊர் நீங்கள்? எங்கள் ஊரிலும் அறிவிக்கப்பட்ட மின்வெட்டு நான்கு மணி நேரம் மட்டுமே. அறிவிக்கப்படாத மின்தடை 12 மணி நேரம்.
Deleteகண்டிப்பாக திமுக ஆட்சியில் 4-6 மணி நேரம்தான் இருந்தது. அதிமுக ஆட்சியில் ஒரு சமயத்தில் 12 - 14 மணி நேரமாக உயர்ந்து பின் படிப்படியாக குறைந்தது. எந்த ஊரில் திமுக ஆட்சியில் 6 மணி நேரத்துக்கு மேல் மின்வெட்டு இருந்தது என ஆதாரத்துடன் கூறுங்கள்.
DeleteProof for power cut in 2011: http://www.dinamalar.com/news_detail.asp?id=228966
DeleteProof for power cut in 2012-2014:
http://www.dinamalar.com/news_detail.asp?id=671709&Print=1
http://www.dinamani.com/latest_news/article1515295.ece
http://www.dinakaran.com/News_Detail.asp?nid=27035
http://theekkathir.in/2012/10/21/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-14-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D/
வணக்கம் நண்பரே. ஏன் இவ்வளவு அடர்வண்ணப் பின்னணியில் எழுத்துகளைப் படிக்க முடியாத நிலையில் வைக்கிறீர்கள்? முதலில் இதனைப் படிக்க எளிதாக மாற்றுங்கள். நிறையப் பேர் படிக்க வருவார்கள், ஆனால் படிக்காமலே போய்விடும் ஆபத்து உள்ளது. அன்பு கூர்ந்து மாற்றுங்கள். நன்றி
ReplyDelete"ஒப்பீட்டு ரீதியில் களத்தில் உள்ள மற்றவர்களுடன் அன்புமணி மாறுபட்டே தெரிகிறார். ஆனால் ஜாதிக்கட்சி பின்புலமும், மத்திய அமைச்சராக இருக்கும்போது அவர் மேல் எழுந்த குற்றச்சாட்டுகளுமே யோசிக்க வைக்கிறது"
ReplyDeleteநடுநிலை வாக்காளர்களும் புதிய வாக்காளர்களும்தான் இந்த தேர்தலின் வெற்றியை தீர்மானிப்பவர்கள். அ.தி.மு.க / தி.மு.க ஆகியவற்றுக்கு மாற்று என்பதில் நாம் இந்த நடுநிலை வாக்காளர்களைத்தான் நம்ப வேண்டும். இந்த நடுநிலை வாக்காளர்கள் பெரும்பாலும் படித்த மற்றும் விபரம் அறிந்தவர்களாகவே இருப்பார்கள். இவர்கள் ஒருபோதும் விஜயகாந்தை முதல்வராக ஏற்க மாட்டார்கள். சமீபத்தில் அவர் அடித்த கூத்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. களத்தில் இருக்கும முதல்வர் வேட்பாளர்களில் படித்த மற்றும் விபரம் அறிந்த நடுநிலை வாக்காளர்களைத் திறமையான தன் பரப்புரைகளால் கவரக்கூடியவர் பாட்டாளி மக்கள் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் திரு அன்புமணி மட்டுமே. சமூக வலைதளங்களில் பரவலான ஆதரவு பெற்றுவரும் இவரின் பெருகிவரும் செல்வாக்கினை யாரும் புறக்கணிக்க முடியாது. பா.ஜ.க. வின் ஆர்.எஸ்.எஸ். பின்னணியை மறைத்து எப்படி மோடி முன்னிறுத்தப்பட்டாரோ அதைப்போன்றே இவரும் பா.ம.க. வின் சாதிக்கட்சி பிம்பத்தை மாற்ற முன்னிலைப் படுத்தப்படுகிறார். எது எப்படியாயினும் தமிழ் நாட்டின் தற்போதைய அவசியத்தேவை ஒரு படித்த விவரமான இளைஞர் ஒருவரின் தலைமையே. அ.தி.மு.க மற்றும் தி.மு.க. இவைகளுக்கு மாற்று வேண்டும் என்கின்ற கருத்து பரவலாக பேசப்படும் இத்தருணத்தில் இதற்குத் தகுதியான நபர் இவர் ஒருவர் மட்டுமே என்பது எனது கருத்து. இவருக்கு ஒரு வாய்ப்புக் கொடுத்துப் பார்ப்பதில் தவறேதும் இல்லை. ஒரு முறையேனும் மாற்றி வாய்ப்பளித்துக் காட்டினால்தான் ஆளுபவர்களுக்கு தவறு செய்யாதபடி நெஞ்சில் ஒரு பயம் இருக்கும்.
ஆரம்பத்தில் பொது வாழ்வில் தங்களை முன்னிலைப்படுத்த அவர்களுக்கு ஒரு சமூக அடையாளம் தேவைப்பட்டது. எனவே தாங்கள் சார்ந்திருந்த சமுகத்தின் முலம் முன்னிலைப் படுத்திக்கொண்டார்கள். இப்போது பா.ம.க. ஒரு அரசியல் கட்சியாகவே தன்னை அடையாளப்படுத்தி கொள்ளுகிறது. எப்படியும் சாதி மற்றும் மதம் சார்ந்த அரசியல் தமிழ்நாட்டில் ஒருபோதும் எடுபடாது. எனவே யாராயிருந்தாலும் நடுநிலை வகித்தே ஆகவேண்டும். அவர் தந்தை ஆரம்பித்த சாதியக் கட்சியின் சார்பாகத்தான் அன்புமணி முதலமைச்சராக முன்னிறுத்தப் படுகிறார். பாட்டாளி மக்கள் கட்சி ஒரு சாதி அமைப்பாக இருந்து அரசியல் இயக்கமாக மாறி இருந்தாலும் தற்போது சாதிக்கு அப்பாற்பட்டு செயல் படுவதாக முன்னிலைப்படுத்திக் கொள்ளுகிறது. யாராக இருந்தாலும் நாம் சொல்வதை பல்லாயிரம் மக்கள் கேட்பதற்கு ஒரு மேடை தேவை. இதை உருவாக்குவது ஒன்றும் ப்ளாக் ஆரம்பிப்பது போன்ற எளிதான வேலை அல்ல. கிடைத்த மேடையை பயன்படுத்திக்கொள்வதில் என்ன தவறு? அவர் சொல்வது நன்றாய்த்தான் உள்ளது. அது செயல் வடிவில் எவ்வாறு ஆகும் என்பது அவருக்கு ஒரு வாய்ப்பளித்தால் மட்டுமே தெரியும். தற்போது தமிழ்நாட்டை ஆண்டுகொண்டு இருக்கும் மற்றும் ஆண்ட கட்சிகளின் வண்டவாளம் நமக்குத்தெரியும். அவர் மீது உள்ள வழக்கு பற்றி அவர் சொல்வது ஏற்கும்படியாகத்தான் உள்ளது.எனவே முன்னிலைப்படுத்தப்படும் ஒருவருக்கு முதல்வராகும் வாய்ப்பைக்கொடுப்பதில் தவறில்லை என்பது என்னுடைய கருத்து. களத்தில் இருக்கும் நபர்களில் அன்புமணியை விட தகுதியானவர் யார்? குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை!!!!!
குறை ஏதும் இல்லாதவர்கள் யார்? எரியும் கொள்ளியில் எந்தக்கொள்ளி நல்ல கொள்ளி என்று தேர்ந்தெடுப்பது மட்டுமே பொது மக்களாகிய நமக்கு வழங்கப்பட்டிருக்கும் உரிமை. இருப்பதில் சிறந்ததை தேர்ந்தெடுப்போம்!!!! வாய்ப்பைத் தவறவிட்டால் ஐந்து வருடங்கள் காத்திருக்க வேண்டும். நாளை நடப்பதை யாரறிவார்?????