Showing posts with label விஜய். Show all posts
Showing posts with label விஜய். Show all posts

Wednesday, September 18, 2013

விஜய்-அஜீத் ரசிகர்கள் மோதல் ஏன்?

மீப காலமாக சமூக வலைதளங்களில் நடந்து வரும் விஜய்- அஜித் ரசிகர்களின் சண்டையை கவனித்து வருகிறேன். எதற்காக அந்த இரு நடிகர்களின் ரசிகர்களும் இப்படி அடித்து கொள்கிறார்கள் என்றே புரியவில்லை. விஜய் ரசிகர்கள் அஜித்தை மோசமான வார்த்தைகளால் அர்ச்சிக்கின்றனர். பதிலுக்கு அவர்கள் மிக கேவலமாக  விஜயை கேலி செய்கின்றனர். 

தமிழ் சினிமாவில் நடிகர்களுக்கு இடையேயான போட்டி ஒன்றும் புதியதல்ல. MGR-சிவாஜி ரசிகர்கள் செய்யாததையோ, ரஜினி-கமல் ரசிகர்கள் செய்யாததையோ இவர்கள் செய்யவில்லைதான். ஆனால் நான் ஆச்சரியப்படும் விஷயம் விஜய்- அஜித் இடையேயான போட்டி எங்கிருந்து உருவானது? அது இயற்கையாக உருவானதா அல்லது உருவாக்கப்பட்டதா என்பதுதான்.

MGR-சிவாஜி இவர்களுக்கு இடையேயான போட்டியை எடுத்து கொண்டால் இவர்கள் திரை வாழ்விலும் சரி, அரசியல் வாழ்விலும் சரி இவர்கள் இரு துருவங்கள். ஒருவர் படத்தில் பணியாற்றும் கலைஞர்கள் மற்றவர் படத்தில் பணியாற்ற முடியாத அளவு இவர்களுக்கு இடையேயான போட்டி இருந்தது. இவர்கள் ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த நடிகர்கள் மேல் கொண்ட அபிமானத்தால் மற்ற நடிகர்கள் மேல் வெறுப்பு கொள்வது மிக இயல்பானது. 

ரஜினி-கமல் ரசிகர்களுக்கு இடையேயான மோதல்களை பற்றி சொல்லி தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. சில வருடங்கள் இவர்களில் ஒருவரின் படம் வெளி வந்தால் போதும். இன்னொருவரின் ரசிகர்கள் மாட்டு சாணமும் கையுமாக கிளம்பி விடுவார்கள். எங்கெல்லாம் அந்த படத்தின் போஸ்டர்கள் ஒட்டபட்டுள்ளதோ அங்கெல்லாம் சென்று சாணி அடித்து விட்டு வந்து விடுவார்கள். இதை காரணமாக வைத்து மறுநாள் இரு தரப்பு ரசிகர்களுக்கும் மோதல் மூளும். மோதல் என்றால் இப்போது நடப்பது போல பேஸ்புக் மோதல்கள் இல்லை. ரத்தம் வர அடித்து கொள்ளும் சண்டை அது. இந்த மோதல்கள் முற்றும்போது ரஜினியும் கமலும் சேர்ந்து புகைப்படம் எடுத்து கொண்டு நாங்கள் நண்பர்கள்தான் என்று அறிக்கை கொடுப்பார்கள். இருந்தாலும் ரசிகர்கள் ஓய மாட்டார்கள். 

ரஜினியும், கமலும் நண்பர்கள்தானே? அவர்களின் ரசிகர்கள் ஏன் மோதி கொள்ள வேண்டும்? என்று யோசித்தால் நமக்கு கிடைக்கும் விடை இவர்கள் ரசிகர்கள் இவர்கள் மேல் கொண்ட பேரபிமானம். தாங்கள் விரும்பும் நடிகரே மற்றவரை விட பெருந்திறமை கொண்டவர் என்று இவர்கள் நம்பியதும் அதை மற்றவர்களும் நம்ப வேண்டும் என்று இன்னொரு நடிகரை மட்டம் தட்ட எடுத்த முயற்சிகளுமே இத்தகைய மோதல்களுக்கு காரணம். சம காலத்தில் தமிழ் திரையுலகில் இவர்களுக்கு இணையான  திறமை கொண்ட நடிகர்கள் எவரும் இல்லாததால் தங்கள் அபிமான நடிகர்களை உயர்த்தி பிடிக்க முயற்சித்த இவர்களின் முயற்சி புரிந்து கொள்ள கூடியதே.


இப்போது  விஜய்-அஜித் போட்டிக்கு வருவோம். ரஜினி படம் நடிப்பதை குறைத்து கொண்டிருந்த சமயம். கமலோ ஆளவந்தான், மருதநாயகம்  போன்ற படங்களில் அதிக நேரத்தை செலவழித்து கொண்டிருந்தார். விஜயகாந்த் ஒரே மாதிரியான கதைகளில் நடித்து கொண்டிருந்தார். அது போன்ற சூழ்நிலையில் தமிழ் சினிமாவில் ஏற்பட்டு இருந்த வெற்றிடத்தை நிரப்புவது போல் விஜய், அஜீத், பிரசாந்த், அருண் விஜய் போன்றவர்களின் படங்கள் வெளி வந்து கொண்டிருந்தன. விஜய் அவருடைய தந்தையின் வழி காட்டுதலால் சிலவெற்றி படங்களை கொடுத்து படிப்படியாக முன்னேறி கொண்டிருந்தார்.  அஜீத்தும் சில வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்களை சம்பாதித்து வைத்திருந்தார். அப்போதே விஜய்க்கு காதல் பற்றி வசனம் மட்டுமே பேச தெரியும், நடிக்க தெரியாது என அஜீத் ரசிகர்களும், அஜீத்துக்கு விஜய் அளவு நடனம் ஆட தெரியாது,  பாட தெரியாது என விஜய் ரசிகர்களும் விவாதம் செய்ய ஆரம்பித்து இருந்தனர்.

இது போன்ற விவாதங்கள் சிறிது காலத்தில் திறமையான  புது நடிகர்கள் வரவின்போது முடிந்து போய் இருக்கும்.  ஆனால் அப்படி முடிய விடாமல் அதை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றார் விஜய். சில வருடங்கள் முன் அஜீத்தின் தீனா படம் வெளி வந்தது. அஜீத்துக்கு  தல  என்று பேர் சூட்டிய படம் அது. அந்த படத்திற்கு அடுத்து வந்த தன்னுடைய படத்தில்(தமிழன்??)  விஜய் 'உன்னோட தலை, வாலு எல்லாத்தையும் வர சொல்லு' என்று வசனம் பேசுவார். அடுத்தடுத்து வந்த படங்களிலும் இதே போன்ற தாக்குதலை தொடர்ந்தார். ஒரு கட்டத்தில் அஜீத்தும் தன்னுடைய படங்களில் பதில் தாக்குதலை ஆரம்பிக்க ஆட்டம் சூடு பிடித்தது. உண்மையிலேயே விஜயும், அஜீத்தும் ஜென்ம விரோதிகள் என்று எண்ணி கொண்டு அவர்களின் ரசிகர்கள் மோதி கொண்டார்கள்.  பின்னாளில் சில காரணங்களுக்காக விஜய்  அஜீத்தை  தன்னுடைய நண்பராக காட்டி கொள்ள முயன்ற போதும் ரசிகர்கள் தங்களுக்கு இடையிலான மோதலை விடவில்லை. அதன் காரணம் இவர்களின் மோதல் தங்களுக்கு பிடித்த நடிகர்கள் மீதான அபிமானத்தால் உருவானதில்லை. மாறாக மற்ற நடிகர் மேலான வெறுப்பினால் உருவானது.

அது சரி, விஜய் ஏன் அஜீத்தை தாக்கி வசனம் வைக்க வேண்டும்? அவர் கூட வாய்க்கால் தகராறா? இல்லை, இவரின் பட  வாய்ப்புகளை அஜீத் கைப்பற்றி எடுத்து கொண்டாரா?   இரண்டுமே இல்லை. அது விஜய் பின் பற்றிய ஒரு யுக்தி. அருமையாக திட்டமிடப்பட்டு கட்டமைக்கப்பட்ட தன் திரை  வாழ்க்கையில் தன்னுடைய முன்னேற்ற திட்டத்தின் ஒரு பகுதியாக அஜீத்தை தன்னுடைய எதிரியாக விஜய் சித்தரித்து கொண்டார். இதனால் அஜீத்தும் ஓரளவு பயனடைந்தார். கடைசியில் திரைக்கு வெளியே நடந்த நாடகத்தை உண்மை என நம்பி இன்றும் மோதி கொண்டிருப்பவர்கள் ரசிகர்கள்தான்.

நினைவுகளில் இருந்து எழுதப்பட்டது. விஜயும், அஜீத்தும் எப்போது தங்களை எதிரிகளாக காட்டி கொண்டனர் என்று தரப்பட தகவலில்  ஏதேனும் தவறு இருப்பதாக யாரேனும் நிறுவினால் இந்த பதிவை எடுத்து விடுகிறேன்.




Wednesday, August 7, 2013

தலைவ்வ்வா

ரு திரைப்படத்துக்கு பிரச்சனைகள் வருவதும், படத்தை வெளிவிட முடியாமல் போவதும் புதிதல்ல. 'சூப்பர் ஸ்டார்' முதல் 'சோலார் ஸ்டார்' வரை அனைவரும் ஏதாவது ஒரு கட்டத்தில் இது போன்ற பிரச்சனைகளை சந்தித்தே இருப்பார்கள். ஆனால் இப்போது தலைவாவுக்கு வந்திருக்கும் பிரச்சினை மிக விசித்திரமானது. ஆட்சியாளர்களே ஒரு படத்தை எதிர்க்கிறார்கள் என கூறப்படுகிறது. இத்தனைக்கும் அவர்களுக்கு படத்தின் கதையை பற்றியோ, காட்சி அமைப்புகளை பற்றியோ ஒன்றும் தெரியாது. அவர்களுக்கு தெரிந்தது படத்தின் தலைப்பு மட்டும்தான்.

தேசம் கெட்டு விட்டது , கருத்து சுதந்திரம்  பறி போய் விட்டது என்றெல்லாம் பேச வேண்டாம்.   இந்த படத்தை அவர்கள் எதிர்ப்பது எத்தனை அர்த்தமற்றது என்று பார்க்கலாம். விஜய் ஒரு அரசியல் படத்தில் நடித்தால் மக்கள் அவரை உடனே முதல்வராக்கி விடுவார்கள் என்று நினைக்கிறார்களா?  இன்றைய நிலைமையில் விஜய் கட்சி ஆரம்பித்து தேர்தலில் நின்றால் ஒரு வேளை ஓட்டுகளை சற்று பிரிக்கலாம்.  ஆனால் ஒன்றிரண்டு தொகுதிகளை கை பற்றினாலே அது மிகப் பெரிய விஷயம். அதற்கு காரணமாக நான் கருதுபவை.


1. விஜய் நடிக்க வந்து 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால்  ஒரு முறை கூட அவர் மேடைகளில் திணறாமல் சிறப்பாக பேசியதாக நினைவில்லை. பெரும்பாலும் பேசுவதை தவிர்த்து ஏதேனும் ஒரு பாடலை பாடிவிட்டு சென்றுவிடுவார் . தமிழ்நாட்டிலோ பேசி பேசி ஆட்சியை பிடித்தவர்கள்தான் அதிகம். ஒரு வேளை விஜய் அரசியலுக்கு வந்து அரசியல் மேடைகளில் 'தொட்டபெட்ட ரோட்டு மேல' என பாடினால் மக்கள் எந்த நம்பிக்கையில் அவருக்கு ஓட்டு அளிப்பார்கள்?

2. விஜய் ரசிகர்களை தவிர்த்து மற்ற நடிகர்களின் ரசிகர்களுக்கு எப்போதுமே விஜய் மேல் ஒரு கொலை வெறி உண்டு. சில ஆண்டுகளுக்கு முன் விஜயை கலாய்த்து அவரை கிட்டத்தட்ட ஒரு காமெடியன் நிலைக்கு தள்ளினார்கள். இவர்கள் எந்த சூழ்நிலையிலும் விஜய்க்கு வாக்கு அளிக்க போவதில்லை.

3. தமிழக மக்கள் நடிகர்களை முதல்வராக்கி பார்க்கும் மன நிலையை எல்லாம் எப்போதே கடந்து விட்டனர். கருப்பு எம்.ஜி.ஆர், பச்சை எம்.ஜி.ஆர் என்று சொல்லி எல்லாம் முதல்வராக முடியாது. 

4. ஒரு வேளை மக்கள்  விஜயை நம்பி, ஒரு மாற்று சக்தியாக அவரை ஆட்சியில் அமர்த்த எண்ணினாலும் விஜய் ஆரம்பிக்கபோகும் கட்சியின் முக்கிய தலைவர்களான இருக்க போகும் 'கில்லி' பாண்டி, 'குருவி'  வாசு போன்றவர்களின் செயல்பாடுகள் அவர்களை விஜயை தேர்ந்தெடுக்க விடாமல் செய்து விடும். 

5. ஒரு பேச்சுக்கு விஜய் புதிய கட்சி ஆரம்பிக்காமல்  ஜெயலலிதா, கருணாநிதி  காலத்துக்குப் பின் அதிமுகவிலேயோ, திமுகவிலேயோ  இணைந்து அதன் தலைவராக முயல்கிறார் என்று வைத்து கொள்வோம். அந்த நிலை வந்தால் திமுகவின் குடும்ப அரசியலில் சிக்கி சின்னாபின்னமாகி போவார். 

சரி, மேலே கூறிய அனைத்து காரணங்களையும் மீறி, விஜய் ஆட்சிக்கு வர வாய்ப்பு உள்ளதா? இருக்கிறது. என்னதான் நம் மக்கள் புத்திசாலிகளாக இருந்தாலும் ஒருவர் மேல் பரிதாப்பட்டு விட்டால் தங்கள்  புத்திசாலித்தனத்தை எல்லாம் மூட்டை கட்டி வைத்து விடுவார்கள். இப்போது 'தலைவா' படத்துக்கு வந்திருக்கும் எதிர்ப்புகள் விஜய் மேல் அந்த பரிதாபத்தையே உருவாக்கபோகிறது  . இந்த படம் வெளிவரும்போது 'விஸ்வரூபம்' போல மிக பெரிய வெற்றி அடைய வாய்ப்பு உள்ளது. 

இது மட்டுமில்லாமல் 'மாணவர் புரட்சி படை' என்ற அமைப்பு இந்த படத்தை எதிர்ப்பது போல ஒரு செய்தியை வேறு உலவ விட்டுள்ளனர்.  இந்த அமைப்பின் பெயரை பார்க்கும்போது விஜய் ஏதோ ஒரு புதிய அரசியல்  சித்தாந்தத்தை உருவாக்கிவிட்ட போராளி போலவும் அதனால் அந்த அமைப்பு  அவரை எதிர்ப்பது போலவும் தெரிகிறது. பிற்காலத்தில் விஜயின் அரசியல் வாழ்க்கைக்கு இது உதவி செய்யலாம்.

ஆக காரணமே இல்லாமல் ஒரு படத்தை எதிர்த்து படத்துக்கும், விஜய்க்கும் ஒரு விளம்பரம் தேடி தந்துள்ளனர். அடுத்த சில நாட்களில் நடக்கப் போகும் நிகழ்வுகள் விஜயின் எதிர்காலத்தை தீர்மானிக்க போகிறது. அது அவரை அரசியலை நோக்கி நகர்த்த போகிறதா அல்லது அரசியலை விட்டு தூரமாக நகர்த்த போகிறதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Sunday, July 7, 2013

அடுத்த சூப்பர் ஸ்டார் யார்?

அடுத்த சூப்பர் ஸ்டார் யார்? கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக விடை தெரியாத கேள்வி இது. 'சாமி' பட விழாவில் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் பட்டம் என்பது தனக்கு மட்டுமே நிரந்தரமானது இல்லை என்றதும் அனைத்து இளம் நடிகர்களுக்கு சூப்பர் ஸ்டார் கனவு காண தொடங்கினர். அந்த நடிகர்களின் ரசிகர்களும் தங்கள் தலைவர்களை சூப்பர் ஸ்டார் நாற்காலியில் அமர வைத்து அழகு பார்க்கும் நோக்கத்தில் தீவிரமாக களம் இறங்கினர்.10 ஆண்டுகளுக்கு பின் அவர்களின் கனவு எந்த அளவு நிறைவேறியுள்ளது என பார்க்கலாம்.

முதலில் யாரை சூப்பர் ஸ்டார் எனலாம்?  அதை இப்படி வரையறுத்து கொள்வோம்.  இப்படி எடுத்து அனைத்து தரப்பு மக்களையும் வயது வித்தியாசமின்றி கவர வேண்டும். இவர் படங்கள் வரும்போது தமிழ்நாட்டில்   75% மக்கள் ஒரு முறையாவது படத்தை பார்க்க என்ன வேண்டும். தயாரிப்பாளர் முதல் தியேட்டரில் முறுக்கு விற்பவர் வரை இவர் படம் அனைவருக்கும் லாபத்தையும் மகிழ்ச்சியையும் கொடுப்பதாக இருக்க வேண்டும்.இதுவே நாம் எடுத்து கொள்ள போகும் சூப்பர் ஸ்டாருக்கான எளிய வரைமுறை.

 'சூப்பர் ஸ்டார் நாற்காலி எனக்கு வேண்டும்' என்று முதல்முதலில் முழங்கியவர் அஜித். தான் நடிக்க போகும் 'ஆஞ்சநேயா' படம் சூப்பர் ஸ்டார் பட்டத்தை நோக்கி தான் வைக்கும் முதல் அடி என்று பேட்டி கொடுத்தார். ஆனால் அந்த படமோ படு தோல்வி. தொடர்ந்து நடித்த படங்களும் சரியாக போகவில்லை. மிக பெரிய ஓபனிங்,உயிரை கொடுக்கும் ரசிகர்கள் இருந்தும் கதை தேர்வில் தவற விட்டதாலும், பெண்களையும் குழந்தைகளையும் அதிகம் கவர முடியாமல் போனதாலும் 'சூப்பர் ஸ்டார்' என்ற இடத்தை இன்னும் நெருங்க முடியவில்லை. கால போக்கில் 'அல்டிமேட் ஸ்டார்' என்ற பட்டமே தனக்கு வேண்டாம் என்று கூறி விட்டார் அஜித். 

விஜய்- முதலில் சூப்பர் ஸ்டாராக ஆசைபட்டவர் இப்போது புரட்சி தலைவராக முயற்சி எடுக்கிறார். ஆனால் இன்னும் தான் ஆசைப்பட்டதை அடைய முடியவில்லை. ஆரம்பத்தில் இவர் சூப்பர் ஸ்டார் கனவுடன் நடித்த சில படங்கள் ஹிட். ஆனால் பின்னர் வந்த படங்கள் படு தோல்வி.இவரின் அதிரடி ஆக்சன் படங்களை காமெடி படங்களாக மாற்றி   SMS, Facebook என வாய்ப்பு கிடைத்த இடங்களில் எல்லாம்  ஊரே கேலி செய்து கை கொட்டி சிரிக்க தொடங்கியதும் தற்போது பாதையை சிறிது மாற்றி விட்டார். குழந்தைகள் விரும்பும் நடிகராக இருப்பதும், 'C' சென்டர் ரசிகர்களை அதிகம் கொண்டிருப்பதும் இவரின் பலம். ஆனால் இவரின் முந்தைய படங்களால் படித்தவர்களிடமும், மேல் தட்டு மக்களிடமும் இவரை பற்றி நல்ல விதமான அபிப்பிராயம் ஏதும் இல்லை. அந்த எண்ணத்தை மாற்றுவதே இப்போது  இவருக்குள்ள சவால். ஆழம் தெரியாமல் அரசியலில் வேறு காலை விட்டு விட்டார். அதனால் ஏற்படும் பிரச்சனைகளையும் சமாளிக்க வேண்டும். ஆக இவர் சூப்பர் ஸ்டார் பட்டத்தை அடைய இன்னும் சில ஆண்டுகளாவது வேண்டும்.

 விக்ரமை பற்றி இங்கு கூறாமல் இருக்க முடியாது. ரஜினி 'சாமி' விழாவில் பேசியபோது 'தூள்', 'சாமி' என அடுத்தடுத்த ஹிட்டுகள் கொடுத்து உச்சத்தில் இருந்தார். ஆனால் பின் இவர் நடித்த படங்கள் பெரிய பலன் ஏதும் தராமல் இவரின் உழைப்பையும், காலத்தையும் அதிகம் சாப்பிட்டு விட்டன. இப்போது வயது அதிகம் ஆகி விட்டதால் இவர் 'சூப்பர் ஸ்டார்' ஆவது இனி கிட்டத்தட்ட சாத்தியம்  இல்லை. அந்த இடத்தின் மேலும் இவர் ஆர்வம் காட்டுவது போல் தெரியவில்லை.

ஆரம்பத்தில் விஜய், விக்ரம், அஜித்திடம் மட்டுமே போட்டி இருந்தது. பின்னர் அதிரடியாக களத்தில் குதித்தவர் சூர்யா.  வெற்றி படங்கள் , பெண்கள், குழந்தைகளிடம் நல்ல பெயர் என்று மெதுவாக முன்னேறி கொண்டுள்ளார். இருப்பினும் மற்ற நடிகர்களிடம் ஒப்பிடும்போது தீவிர ரசிகர்கள் இவருக்கு குறைவே. அத்தகைய தீவிர ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் சில ஆண்டுகளில் இவர் சூப்பர் ஸ்டார் பட்டத்தை அடையலாம்.

மேலே கூறிய நடிகர்கள் அனைவரும் நடிக்க வந்து ஏறத்தாழ  20 ஆண்டுகள் ஆகி விட்டது. இன்னும் 'சூப்பர் ஸ்டார்' பட்டத்தை நெருங்க முடியவில்லை. ஆனால் ரஜினியோ அவர் நடிக்க வந்த 20 ஆண்டுகளுக்கு பின் அசைக்க முடியாத சூப்பர் ஸ்டார். முதல்வர் பதவியையே அவருக்கு  கொடுக்க தயாராக இருந்தனர் மக்கள். ஆனால் அடுத்த தலை முறை நடிகர்கள் இன்னும் அந்த உயரத்தில் பாதி கூட அடையவில்லை. இப்போது அதர்வா, விக்ரம் பிரபு என மூன்றாம் தலை முறை நடிகர்களும் நடிக்க வந்து விட்டனர்.

ஆரம்பத்தில் இருந்தே சூப்பர் சூப்பர் ஸ்டார் ஆக முயன்று வரும் விஜயும், அஜித்தும் எங்கே தவற விட்டனர்? கால மாற்றம், ரஜினிக்கு இருந்த வசீகரம் என அனைத்தையும் விட்டு விடலாம்.  இவற்றை மீறி அவர்கள் செய்த தவறு ரஜினி போல் பறந்து பறந்து அடித்து பஞ்ச் வசனம் பேசினால் சூப்பர் ஸ்டார் ஆகி விடலாம் என கணித்தது. இவற்றை செய்தால் மக்கள் சூப்பர் ஸ்டார் ஆக்கி விடுவார்கள் எனில் விஜயகாந்த் தானே பெரிய சூப்பர் ஸ்டாராக இருந்திருக்க வேண்டும்? ரஜினி போல் அனைவருக்கும் ஏற்ற கதைகளில் நடிக்காமல் அதிரடி நாயகர்களாவே நடித்தால் சூப்பர் ஸ்டார் ஆகி விடலாம் என்று எண்ணியதே அவர்கள் செய்த தவறு. எது எப்படியோ இன்னும் சில ஆண்டுகள் பொறுத்து பார்க்கலாம். யார்தான் சூப்பர் ஸ்டார் ஆகிறார்கள் என்று.

Friday, April 5, 2013

தமிழ் சினிமாவில் தளபதிகள்

மிழ் சினிமாவில் சில வருடங்கள் தளபதிகளின் ஆண்டாக இருந்தது. இந்த தளபதிகளின் கதை அனைவரும் அறிந்ததே. இருப்பினும் அடுத்து வரும் தலைமுறைகள் எப்படி இந்த தளபதி பட்டம் எங்கிருந்து வந்தது   வந்தது என்று குழம்பக்கூடாது என்பதற்காக நம் தளபதிகளின் வரலாற்றை இங்கே பதிந்து வைக்கிறேன்.

இளைய தளபதி:

சினிமாவுக்கு வந்து சங்கவிக்கும் யுவராணிக்கும் சோப்பு போட்டு கொண்டு இருந்த விஜய்க்கு சினிமாவில் நிலைத்து நிற்க  ஒரு அடையாளம் தேவைப்பட்டது. தன்னை ரஜினி ரசிகனாக காட்டி கொள்வதன் மூலம், ரஜினி ரசிகர்களின் ஆதரவு பெறலாம் என்ற எண்ணத்தில் இருந்த அவருக்கும் அவர் தந்தைக்கும் கையில் கிடைத்தது ரஜினியின்  "தளபதி" படம்.  "இளைய தளபதி'' பட்டத்தை தன் பெயரின் முன் சேர்த்து கொண்டார். இந்த பட்டத்தின் மூலம் ஆரம்ப   காலத்தில் சில ரஜினி ரசிகர்களை கவர்ந்தார்  என்பதே உண்மை. பின் இவர் வரிசையாக மொக்கை படங்களை கொடுத்து "இளைய தலைவலி" யாக அறியப்பட்டதும் வரலாறு. அதே நேரத்தில் இவர் நடித்து சில படங்கள் வெற்றியும் பெற்றன.  பெறியதாக .நடிக்க வராவிட்டாலும்  தமிழ் சினிமாவில் நீண்ட காலம் நிலைத்து இருப்பதும், அதிக அளவு ரசிகர்களை கொண்டு இருப்பதும் இவரின் சாதனை. இதற்கு அஜீத்தை தன் போட்டியாளராக  செயற்கையாக காட்டி கொண்டதும் ஒரு காரணம் 

புரட்சி தளபதி 

 தமிழ் சினிமாவால் அதிகமாக கேவலப்படுத்தபட்ட வார்த்தை புரட்சி. தமிழ் சினிமாவில் "புரட்சி" பட்டம் கொண்ட நாயகர்களுக்கு பஞ்சமே இல்லை. ஆனால் இந்த நாயகர்கள் என்ன புரட்சி செய்தார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம்.
"இளைய தளபதி "யின்  வெற்றி பெற்ற படங்கள் அடுத்து வந்த சில ஹீரோக்களின் மனதில் ஒரு பொய்யான நம்பிக்கையை தந்தன. அதிகமாக சிரமப்படாமல் சில சண்டை காட்சிகள், கொஞ்சம்  நகைச்சுவை காட்சிகள், ஓரிரண்டு குத்து பாட்டுகள் இருந்தால் பெரிய ஸ்டாராகி விடலாம் என்று நம்பினார். அதில் ஒருவர்தான் விஷால். இவர் ஆக்சன் ஹீரோவாக விஜய் போலெல்லாம் அதிக நேரம் எடுத்து கொள்ளவில்லை. தன் இரண்டாவது படத்திலேயே தன்னை ஒரு ஆக்சன் ஹீரோவாக நிலை நிறுத்தி கொண்டார். அதன் பின் தன்னை "புரட்சி தளபதி"யாக ஆக்கி கொண்டார். இந்த பட்டத்தை விஜய் சற்று வயதாகி கொண்ட பின் பயன்படுத்தி இருக்கலாம். ஆனால் அதற்குள் முந்தி கொண்டார் விஷால் 

அப்போது வந்த விஜய் படங்களும், விஷால் படங்களும் ஒரே மாதிரி இருக்கும். விஜய் ரஜினியிடமிருந்து காப்பி அடித்த  பார்முலாவை, விஜயிடமிருந்து காப்பி அடிக்க ஆரம்பித்தார் விஷால். விளைவு, ஒரு கட்டத்தில் ரசிகர்கள் சலிப்பு அடைந்தனர்; இருவரின் படங்களுமே படு தோல்வி அடைய தொடங்கின. விஜயின் பார்முலாவை மிக விரைவில்  சேதாரம் செய்ததே இவர் செய்த சாதனையும், இவர் தமிழ் சினிமாவிற்கு செய்த நன்மையும்.

சின்ன தளபதி:

விஜய்க்கு அதுத்தடுத்து இரண்டு ஹிட் கொடுத்தவர் பேரரசு. என்ன காரணத்தாலேயோ விஜய் இவரை தொடர்ந்து பயன்படுத்தவில்லை. பேரரசுவின் கதைகளுக்கோ கட்டாயம் ஒரு தளபதி தேவை. எனவே பேரரசு உருவாக்கிய தளபதி "சின்ன தளபதி". ஆனால்" சின்ன தளபதி"யின் முக அமைப்பு "தளபதி" பட்டத்திற்கு பொருந்தவே இல்லை.


பேரரசும் "சின்ன தளபதி". பரத்தும் இணைந்து பார்ப்பவர்கள் இரத்தம் கக்கி சாகும் அளவு படங்களை கொடுத்தனர். இனிமேல் சினிமாவில் யாரும் "தளபதி" பட்டத்தை பயன்படுத்த யோசிக்குமாறு செய்ததே இவரின் சாதனை.

இப்பொழுது தமிழ் சினிமாவில் தளபதிகளின் தேவை கொஞ்சம் குறைந்துள்ளது. நான் எதிர்பார்த்தபடி குட்டி தளபதி, மினி தளபதி என்றெல்லாம் யாரும்  வரவில்லை. இந்த நிலை தொடரும் என நம்புவோம்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...