Showing posts with label ரஜினி. Show all posts
Showing posts with label ரஜினி. Show all posts

Monday, July 7, 2014

சூப்பர் ஸ்டார் ஸ்பெஷல் - இதையெல்லாம் கண்டுக்காம விட்டுடுங்க பாஸ்

து என்ன மாயமோ தெரியவில்லை. சூப்பர் ஸ்டார் பட்டம் மேல் அனைவருக்கும் அத்தனை மோகம். இரண்டு படம் ஓடினால் சூப்பர் ஸ்டார் ஆசை வந்து விடுகிறது. மூன்றாவது படமும் ஓடி விட்டால்  முதல்வர் ஆசை. ரஜினி அப்படிப்பட்ட ஒரு பாதையை வகுத்து வைத்து இருக்கிறார். அந்த பாதையிலேயே சென்றால் அவரின் இடத்தை அடைந்து விடலாம் என்பது இந்த தலைமுறை நடிகர்களின் கருத்து.

ரஜினி நடிப்பது போன்ற கதைகளை தேர்ந்து எடுத்து நடித்தால் போதும். எளிதாக வெற்றி பெறலாம் என்ற எண்ணமே தவறு. சற்று கவனித்தால்  ரஜினி தேர்ந்தெடுத்த வழி தனி வழி. புரட்சி தலைவர் போல அவர் மது அருந்தாமல் நடிக்கவில்லை. புகை பிடிக்காமல் நடிக்கவில்லை. கதாநாயகர்கள் புனிதர்களாக இருக்கவேண்டும் என்ற பிம்பத்தை தகர்த்து எறிந்தார். அவரை தமிழர்களுக்கு அவரை பிடித்து போக காரணம் அவரின் சுறுசுறுப்பும், நடிப்பில் காட்டிய மேனரிசங்களும். ஹீரோவேன்றால் இப்படித்தான் நடக்க வேண்டும், இப்படித்தான் நிற்க வேண்டும் என்று எடுத்துக்காட்டுவதாக அவரின் ஒவ்வொரு அசைவும் இருந்தது. அது அவருக்கு இயல்பாகவே அமைந்த விஷயம் என்பதால் அது மிகவும் ரசிக்கும்படியாகவும் இருந்தது .

ஒரு நாள் கூட ஓட தகுதியில்லாத கதையில் ரஜினி நடித்தாலும் அவர் அந்த கதையில் தன்னுடைய ஸ்டைலை புகுத்தி அதை இருபத்தி ஐந்து நாட்கள் ஓடக்கூடிய படமாக்குவார். இருபத்தி ஐந்து நாட்கள் ஓடக்கூடிய படம் ரஜினி இருந்தால் ஐம்பது நாட்கள் ஓடும். ஐம்பது நாட்கள் ஓட தகுதியான கதை படம் நூறு நாள் படமாகும். ரஜினியின் ரசிகர் பலத்தை அடிப்படையாக கொண்டு இதை கூறவில்லை. தன்னுடைய பங்களிப்பினால் எத்தகைய கதைக்கும் ரஜினி மதிப்பை கூட்டுவார் என்றே சொல்ல முயல்கிறேன்.

இந்த ஸ்டைலும், சுறுசுறுப்பும் ரஜினிக்கு இயல்பாகவே அமைந்த வரம். இத்தனை வருடம் அசைக்க முடியாத சூப்பர்ஸ்டாராக திகழ இதுவே காரணம். அவரை போல கதைகளில் நடித்தாலோ, அவரை போல அடுத்தடுத்து ஹிட் கொடுத்தாலோ யாராலும் சூப்பர் ஸ்டார் ஆகி விட முடியாது. அப்படிப்பட்ட முயற்சி எடுப்பவர்கள் இன்னும்  சற்று சிரமப்பட்டால் நல்ல மிமிக்ரி கலைஞர்களாக வேண்டுமானால் வரலாம்.

இது எல்லாம் தெரிந்து இருந்தும் ரஜினி ரசிகர்கள் ஏன் சூப்பர் ஸ்டார் விவகாரத்தை பெரிதுபடுத்தினார்கள் என்று தெரியவில்லை. சொல்லப்போனால் இப்படி பட்டம் கொடுப்பது இது முதல் முறையில்லை. சில ஆண்டுகளுக்கு முன் ஒரு தொலைக்காட்சியும் இதே போன்ற ஒரு பட்டத்தை இதே நடிகருக்கு வழங்கியது. இன்னும் பத்து ஆண்டுகளுக்கு பின்னும் இதே போன்ற கருத்து கணிப்பு நடத்தி அடுத்த  சூப்பர் ஸ்டார் என்று ஆராய்ந்து கொண்டுதான் இருப்பார்கள். ஆனால் எப்போதும் அவர்களால் உண்மையான அடுத்த சூப்பர் ஸ்டார் என்று கண்டுபிடிக்க முடியாது. அதனால் இதையெல்லாம் கண்டுக்காம  விட்டுடுங்க பாஸ்  .


ந்திரன் இரண்டாம் பாகத்தில் ரஜினி நடிக்கப் போகிறார் என்றதும் அதிர்ச்சியாக இருந்தது. காரணம் ரஜினியின் உடல்நிலை பாதிப்படைய எந்திரனும் ஒரு காரணமோ என்ற சந்தேகம் எனக்கு உண்டு. அந்த படத்துக்காக பட்ட கஷ்டம் கொஞ்ச நஞ்சமா? ஒரு பெட்டிக்குள் மணிக்கணக்கில் உடலை அசைக்காமல் படுத்து இருந்து, முகத்தில் எது எதையோ தடவி எத்தனை சிரமங்கள். படப்பிடிப்பு நடந்தபோது வைரமுத்துவிடம் உடம்பெல்லாம் வலிக்கிறது என்று கூறினாராம். இத்தனை கஷ்டப்பட்டும் அந்த படத்துக்காக ரஜினிக்கு பெரிய அளவில் விருதுகளுள் எதுவும் கிடைக்கவில்லை. தவிர எந்திரனுக்கு எடுத்த கால அவகாசத்தில் உழைப்பில் இன்னும் இரண்டு படங்களில் ரஜினி நடித்து இருக்கலாம். கடைசியில் இரண்டாம் பாகத்தில் ரஜினியில்லை என்ற செய்தி ஒரு வகையில் சந்தோசமே.


Wednesday, June 4, 2014

கோச்சடையான் – சில கருத்துகள் மட்டும்

கோச்சடையான் வெளிவந்து பத்து நாட்களுக்கும் மேல் ஆகிவிட்டது. இரண்டாம் நாளே படம் பார்த்து விட்டேன். இதற்கு மேல் படத்தை பற்றி எழுத வேண்டுமா என்ற எண்ணம் தோன்றினாலும் படத்தின் ட்ரைலர், பாடல்கள் பற்றி எல்லாம்  எழுதிய பின்பு படத்தை பற்றி எழுதவில்லை என்றால் ஒரு குறையாகவே இருக்கும் என்பதால் எழுதுகிறேன்.

படம் சூப்பர்பா, ரஜினி குரல் மட்டுமே போதும், ரவிக்குமார் கதை சூப்பர், ரஹ்மான் மியூசிக் என்னமா இருக்கு, நாகேஷ் அருமை  என நல்ல விதமான விமர்சனங்களும் ஏன் நடக்கும்போது எல்லோரோட காலும் வளைஞ்சு இருக்கு, ரஜினி பல்லை நல்லா காட்டி இருக்கலாம், தீபிகா படுகோன் மூஞ்சி படு கோணையா இருக்கு, சரத்குமார் எந்த கேரக்டர்ல வராருன்னே கண்டுபிடிக்க முடியல, தொட்டதுக்கெல்லாம் பாட்டு, கார்ட்டூன் நெட்வொர்க்ல கூட இத விட நல்லா அனிமேஷன் படம் போடுவாங்க, இதை மட்டும் லைவ் ஆக்சன்ல எடுத்து இருந்தா பிச்சுகிட்டு ஓடி இருக்கும் இப்போ சுமார்தான்  என்று நெகடிவ் விமர்சனங்களும் இன்று வரை  வந்து கொண்டே இருக்கின்றன.  இப்படி ஒரு படம் வந்து இத்தனை நாளுக்கு பின்னும் நம்மால் விவாதிக்கப்படுகிறது என்றால் அது ரஜினி படமாக மட்டுமே இருக்க முடியும். பொம்மை படம் என்று யாராலும் எளிதில் ஒதுக்கித் தள்ளி விட்டு சென்று விட முடியவில்லை. அந்த வகையில் கோச்சடையான் சந்திரமுகி, எந்திரன் போல வெற்றி படமே.


படம் ஹாலிவுட் தரத்தில் இல்லை என்று சொன்னாலும் ஒரு சில விஷயங்கள் கவனிக்கப்பட வேண்டும். இந்த படத்தை கிட்டத்தட்ட ஒரு பரிசோதனை முயற்சி என்று கொள்ளலாம். காரணம் படத்தின் சில காட்சிகளில் கதாபாத்திரங்களின் உருவங்களும், அசைவுகளும் தத்ரூபமாகவும் சில காட்சிகளில் அமெச்சூர்தனமாகவும் இருப்பதுதான். படத்தின் இரண்டாம் பாதியில் வரும் காட்சிகள், முதல் பாதியில் வரும் காட்சிகளை விட நன்றாக வடிவமைக்கப்பட்டு இருந்தன. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் தீபிகாவின் முகம்  சில காட்சிகளில் நன்றாகவும், சில காட்சிகளில் மிக வித்தியாசமாகவும் இருப்பதை கவனித்தால் உணரலாம். அதே போல  இறுதிக்காட்சியில் வரும் சேனாவின் முகம் ராணா,கோச்சடையான் முகத்தை விட சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருந்தது. இரண்டாம் பாகம் எடுக்கும் பட்சத்தில் முதல் பாகத்தின்  தவறுகளை அவர்களின் அனுபவம் திருத்தி இருக்கும் என நம்பலாம். ஆனால் அப்போதும் தமிழ் சினிமா பட்ஜெட்டில் ஹாலிவுட் தரம் எல்லாம் சாத்தியம் இல்லை. சரி, பின்னர் எதற்கு இப்படி படம் எடுக்க வேண்டும் என்று யோசித்தால் கிடைக்கும் பதில், நம்ம ஊரில்தான் நாடகம் இருக்கிறதே பின்னர் எதற்கு சினிமா என்று ‘கீசக வதம்’ எடுக்கும்போது யோசித்து இருந்திருந்தால் இன்று தமிழ் சினிமாவே இருந்திருக்காது.

படம் பார்க்கும்போது தோன்றிய இன்னொரு விஷயம் ரஜினிக்கு படையப்பா பாணியில் பில்டப் காட்சிகள் வைத்து இருக்கலாம் என்பது. ஆனால் இத்தனை செலவு பிடிக்கும் முறையில் கதைக்கு தேவை இல்லாத காட்சிகளை திரைக்கதையில் கொண்டு வருவது சாத்தியம் அல்ல என்று பின்னர் தோன்றியது. படம் தொடங்கியது முதல் இறுதிவரை கதையில் மட்டுமே பயணிப்பதால் மட்டுமே இது சிறந்த திரைக்கதை என்று பாராட்டப்படுகிறது. இந்த திரைக்கதை மற்ற தொழில்நுட்ப குறைபாடுகளை மறக்க செய்து விடுகிறது. நடிப்பு பதிவாக்க முறையில் இருக்கும் ஒரு பிரச்சினையே படத்துக்கு ஒரு வகையில் பலமாகிவிட்டது.


ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது தமிழுக்கு ஒரு புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்திவிட்டார்கள் நல்ல முன்னெடுப்பு என்று தோன்றினாலும் இன்றைய சூழ்நிலையில் ரஜினியை தவிர மற்ற யாரை வைத்தும் இந்த தொழில்நுட்பத்தில் படம் எடுத்து விட முடியாது. ஏனென்றால் ரஜினி தவிர வேறு யாரால் குரல்  மட்டும் கொடுத்து நூறு கோடிக்கு மேல் வசூலை  குவிக்க முடியும்? பின்னர் மற்றவர்களுக்கு இந்த புதிய தொழில் நுட்பத்தின் பயன்தான் என்ன? காலம் மட்டுமே பதில் சொல்ல முடியும். 

Sunday, March 9, 2014

கோச்சடையான் ட்ரைலர் மற்றும் பாடல்கள் – ஒரு பார்வை

சில  நாட்களுக்கு முன் வெளிவந்த கோச்சடையான் டீசரை பார்த்தபோது ஏமாற்றமாக இருந்தது. இத்தனை செலவு செய்து இத்தனை சாதாரணமாக படத்தை எடுத்து விட்டார்களே என்று. அந்த எண்ணத்தை தவிடுபொடியாக்கி விட்டது இப்போது வெளிவந்துள்ள ட்ரெய்லர்.

ட்ரெய்லரின்  ஒவ்வொரு ப்ரேமிலும் படக்குழுவினரின் கடின உழைப்பு தெரிகிறது. அனிமேஷன் ரஜினியின் உடல்மொழி தத்ரூபமாக இல்லாவிட்டாலும் திருப்திகரமாகவே உள்ளது. ஆனால் பெரிய குறை ரஜினியின் முகவெட்டு. ரஜினியின் முகத்தை வடிவமைக்க இன்னும் சற்று மெனக்கெட்டு இருக்கலாம். அதே போலதான் ட்ரெய்லரில் வரும் மற்ற ஆண்களின் முகங்களும். சற்று சிரமப்பட்டுதான் நாசரை அடையாளம் காண முடிகிறது. ஆனால் ஆது என்ன மாயமோ பெண்களின் முகங்கள் அத்தனை துல்லியமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தீபிகா, ஷோபனா, ருக்மிணி என்று அத்தனை அனைவரின் தோற்றமும் அத்தனை இயல்பாக வழக்கமான படங்களில் பார்ப்பது போல. மனிதர்களை போலவே கழுதைப்புலிகள், டால்பின்கள், குதிரைகள் என்று மற்ற விலங்குகளையும் நன்றாகவே காட்சிப்படுத்தி உள்ளனர். ஒவ்வொரு காட்சியிலும் பிரம்மாண்டம். 

அதே நேரத்தில்  ஒவ்வொரு காட்சியிலும் முன்னணி கதாபாத்திரங்களை காண்பிப்பதில் எடுத்த சிரத்தையில் சிறிதளவு துணை கதாபாத்திரங்களை காண்பிப்பதிலும் எடுத்து இருக்கலாம். ஒரு காட்சியில் ரஜினியின் பின் நிற்கும் பணிப்பெண்கள் performance capturing செய்யப்பட்டவர்கள் போல இல்லாமல் பொம்மை போல தெரிகின்றனர். ரஜினியின் தாண்டவ காட்சியில் பின்னால் நிற்கும் மக்கள் வட இந்தியர்களை போல உடை அணிந்து இருப்பதன் காரணம் கதையா? அல்லது  கவனப்பிசகாக செய்ததா என்பது படம் பார்த்தால் தெரிய வரலாம். இது போன்ற விஷயங்கள் சிறியது போல தெரிந்தாலும் இவைதான் ‘டின்டின்’ போன்ற படங்களையும் இந்த படத்தையும் வேறுபடுத்து காண்பிப்பவை. ‘டின்டின்’ படத்தில் கதாபாத்திரங்களின் நிழல் தலைமுடி காற்றில் அசைவது போன்றவை கூட மிகுந்த சிரத்தை எடுத்து காண்பிக்கப்பட்டு இருக்கும். இருந்தாலும் நமக்கு  இருக்கும் பட்ஜெட்டுக்கு இத்தனை செய்து இருப்பதே பெரிய விஷயம்.



பாடல்களை பொறுத்தவரை A.R,ரஹ்மான் எந்த குறையும் வைக்கவில்லை. அதே போல வைரமுத்துவும். உண்மையை சொன்னால் தன்னுடைய பாடல் வரிகளில் ரஹ்மானின் இசையையே மிஞ்சி விடுகிறார். வைரமுத்துவின் வார்த்தைகளை அமுக்காமல் இசை அமைத்த ரஹ்மானுக்கு நன்றி. அத்தனை பாடல்களும் கால இயந்திரத்தில் பின்னோக்கி இழுத்து சென்று விடுகின்றன.

‘காதல் கணவா’ பாடலில் லதா ரஜினியின் குரலில் அத்தனை வசீகரம்.

ரஜினி வரிகளை வாசிக்கும்  ‘’மாற்றம் ஒன்றுதான்’ பாடல்  அருமை.

‘எங்கள் கோச்சடையான்’ பாடல் இசையில்  பிரமாண்டம்.

‘மெதுவாகத்தான்’, ‘இதயம்’ பாடல்கள்  மெல்லிசையில் ஈர்க்கின்றன.

‘கர்ம வீரன்’ பாடலும் கேட்க நன்றாகவே உள்ளது.

ட்ரெய்லரில் பார்த்தவரை K.S.ரவிக்குமாரின் திரைக்கதையும், ரஹ்மானின் இசையும்  ரசிகர்களை கவர்ந்து விடும் என்றே தோன்றுகிறது. இருந்தாலும் இந்த புது முயற்சியை ரசிகர்கள் ஏற்று கொள்வார்களா? படத்தில் வரும் உருவத்தை ரஜினியாக ஒத்து கொள்வார்களா என்பதை மில்லியன் டாலர் கேள்வி. ஆனால் அந்த உருவத்தை ஏற்று கொண்டாலும் ஏற்று கொள்ளாவிட்டாலும் ரஜினியின் குரலுக்காகவே படத்தை குறைந்தது மூன்று முறை பார்ப்பார்கள் . ஏனென்றால் அவர்கள்தான் ரஜினி ரசிகர்கள்.

Wednesday, September 18, 2013

விஜய்-அஜீத் ரசிகர்கள் மோதல் ஏன்?

மீப காலமாக சமூக வலைதளங்களில் நடந்து வரும் விஜய்- அஜித் ரசிகர்களின் சண்டையை கவனித்து வருகிறேன். எதற்காக அந்த இரு நடிகர்களின் ரசிகர்களும் இப்படி அடித்து கொள்கிறார்கள் என்றே புரியவில்லை. விஜய் ரசிகர்கள் அஜித்தை மோசமான வார்த்தைகளால் அர்ச்சிக்கின்றனர். பதிலுக்கு அவர்கள் மிக கேவலமாக  விஜயை கேலி செய்கின்றனர். 

தமிழ் சினிமாவில் நடிகர்களுக்கு இடையேயான போட்டி ஒன்றும் புதியதல்ல. MGR-சிவாஜி ரசிகர்கள் செய்யாததையோ, ரஜினி-கமல் ரசிகர்கள் செய்யாததையோ இவர்கள் செய்யவில்லைதான். ஆனால் நான் ஆச்சரியப்படும் விஷயம் விஜய்- அஜித் இடையேயான போட்டி எங்கிருந்து உருவானது? அது இயற்கையாக உருவானதா அல்லது உருவாக்கப்பட்டதா என்பதுதான்.

MGR-சிவாஜி இவர்களுக்கு இடையேயான போட்டியை எடுத்து கொண்டால் இவர்கள் திரை வாழ்விலும் சரி, அரசியல் வாழ்விலும் சரி இவர்கள் இரு துருவங்கள். ஒருவர் படத்தில் பணியாற்றும் கலைஞர்கள் மற்றவர் படத்தில் பணியாற்ற முடியாத அளவு இவர்களுக்கு இடையேயான போட்டி இருந்தது. இவர்கள் ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த நடிகர்கள் மேல் கொண்ட அபிமானத்தால் மற்ற நடிகர்கள் மேல் வெறுப்பு கொள்வது மிக இயல்பானது. 

ரஜினி-கமல் ரசிகர்களுக்கு இடையேயான மோதல்களை பற்றி சொல்லி தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. சில வருடங்கள் இவர்களில் ஒருவரின் படம் வெளி வந்தால் போதும். இன்னொருவரின் ரசிகர்கள் மாட்டு சாணமும் கையுமாக கிளம்பி விடுவார்கள். எங்கெல்லாம் அந்த படத்தின் போஸ்டர்கள் ஒட்டபட்டுள்ளதோ அங்கெல்லாம் சென்று சாணி அடித்து விட்டு வந்து விடுவார்கள். இதை காரணமாக வைத்து மறுநாள் இரு தரப்பு ரசிகர்களுக்கும் மோதல் மூளும். மோதல் என்றால் இப்போது நடப்பது போல பேஸ்புக் மோதல்கள் இல்லை. ரத்தம் வர அடித்து கொள்ளும் சண்டை அது. இந்த மோதல்கள் முற்றும்போது ரஜினியும் கமலும் சேர்ந்து புகைப்படம் எடுத்து கொண்டு நாங்கள் நண்பர்கள்தான் என்று அறிக்கை கொடுப்பார்கள். இருந்தாலும் ரசிகர்கள் ஓய மாட்டார்கள். 

ரஜினியும், கமலும் நண்பர்கள்தானே? அவர்களின் ரசிகர்கள் ஏன் மோதி கொள்ள வேண்டும்? என்று யோசித்தால் நமக்கு கிடைக்கும் விடை இவர்கள் ரசிகர்கள் இவர்கள் மேல் கொண்ட பேரபிமானம். தாங்கள் விரும்பும் நடிகரே மற்றவரை விட பெருந்திறமை கொண்டவர் என்று இவர்கள் நம்பியதும் அதை மற்றவர்களும் நம்ப வேண்டும் என்று இன்னொரு நடிகரை மட்டம் தட்ட எடுத்த முயற்சிகளுமே இத்தகைய மோதல்களுக்கு காரணம். சம காலத்தில் தமிழ் திரையுலகில் இவர்களுக்கு இணையான  திறமை கொண்ட நடிகர்கள் எவரும் இல்லாததால் தங்கள் அபிமான நடிகர்களை உயர்த்தி பிடிக்க முயற்சித்த இவர்களின் முயற்சி புரிந்து கொள்ள கூடியதே.


இப்போது  விஜய்-அஜித் போட்டிக்கு வருவோம். ரஜினி படம் நடிப்பதை குறைத்து கொண்டிருந்த சமயம். கமலோ ஆளவந்தான், மருதநாயகம்  போன்ற படங்களில் அதிக நேரத்தை செலவழித்து கொண்டிருந்தார். விஜயகாந்த் ஒரே மாதிரியான கதைகளில் நடித்து கொண்டிருந்தார். அது போன்ற சூழ்நிலையில் தமிழ் சினிமாவில் ஏற்பட்டு இருந்த வெற்றிடத்தை நிரப்புவது போல் விஜய், அஜீத், பிரசாந்த், அருண் விஜய் போன்றவர்களின் படங்கள் வெளி வந்து கொண்டிருந்தன. விஜய் அவருடைய தந்தையின் வழி காட்டுதலால் சிலவெற்றி படங்களை கொடுத்து படிப்படியாக முன்னேறி கொண்டிருந்தார்.  அஜீத்தும் சில வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்களை சம்பாதித்து வைத்திருந்தார். அப்போதே விஜய்க்கு காதல் பற்றி வசனம் மட்டுமே பேச தெரியும், நடிக்க தெரியாது என அஜீத் ரசிகர்களும், அஜீத்துக்கு விஜய் அளவு நடனம் ஆட தெரியாது,  பாட தெரியாது என விஜய் ரசிகர்களும் விவாதம் செய்ய ஆரம்பித்து இருந்தனர்.

இது போன்ற விவாதங்கள் சிறிது காலத்தில் திறமையான  புது நடிகர்கள் வரவின்போது முடிந்து போய் இருக்கும்.  ஆனால் அப்படி முடிய விடாமல் அதை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றார் விஜய். சில வருடங்கள் முன் அஜீத்தின் தீனா படம் வெளி வந்தது. அஜீத்துக்கு  தல  என்று பேர் சூட்டிய படம் அது. அந்த படத்திற்கு அடுத்து வந்த தன்னுடைய படத்தில்(தமிழன்??)  விஜய் 'உன்னோட தலை, வாலு எல்லாத்தையும் வர சொல்லு' என்று வசனம் பேசுவார். அடுத்தடுத்து வந்த படங்களிலும் இதே போன்ற தாக்குதலை தொடர்ந்தார். ஒரு கட்டத்தில் அஜீத்தும் தன்னுடைய படங்களில் பதில் தாக்குதலை ஆரம்பிக்க ஆட்டம் சூடு பிடித்தது. உண்மையிலேயே விஜயும், அஜீத்தும் ஜென்ம விரோதிகள் என்று எண்ணி கொண்டு அவர்களின் ரசிகர்கள் மோதி கொண்டார்கள்.  பின்னாளில் சில காரணங்களுக்காக விஜய்  அஜீத்தை  தன்னுடைய நண்பராக காட்டி கொள்ள முயன்ற போதும் ரசிகர்கள் தங்களுக்கு இடையிலான மோதலை விடவில்லை. அதன் காரணம் இவர்களின் மோதல் தங்களுக்கு பிடித்த நடிகர்கள் மீதான அபிமானத்தால் உருவானதில்லை. மாறாக மற்ற நடிகர் மேலான வெறுப்பினால் உருவானது.

அது சரி, விஜய் ஏன் அஜீத்தை தாக்கி வசனம் வைக்க வேண்டும்? அவர் கூட வாய்க்கால் தகராறா? இல்லை, இவரின் பட  வாய்ப்புகளை அஜீத் கைப்பற்றி எடுத்து கொண்டாரா?   இரண்டுமே இல்லை. அது விஜய் பின் பற்றிய ஒரு யுக்தி. அருமையாக திட்டமிடப்பட்டு கட்டமைக்கப்பட்ட தன் திரை  வாழ்க்கையில் தன்னுடைய முன்னேற்ற திட்டத்தின் ஒரு பகுதியாக அஜீத்தை தன்னுடைய எதிரியாக விஜய் சித்தரித்து கொண்டார். இதனால் அஜீத்தும் ஓரளவு பயனடைந்தார். கடைசியில் திரைக்கு வெளியே நடந்த நாடகத்தை உண்மை என நம்பி இன்றும் மோதி கொண்டிருப்பவர்கள் ரசிகர்கள்தான்.

நினைவுகளில் இருந்து எழுதப்பட்டது. விஜயும், அஜீத்தும் எப்போது தங்களை எதிரிகளாக காட்டி கொண்டனர் என்று தரப்பட தகவலில்  ஏதேனும் தவறு இருப்பதாக யாரேனும் நிறுவினால் இந்த பதிவை எடுத்து விடுகிறேன்.




Wednesday, September 11, 2013

கோச்சடையான் - சில எண்ணங்கள்

னக்கு ரஜினியை எந்த வயதிலிருந்து பிடிக்க ஆரம்பித்தது என்று சரியாக நினைவில்லை.குழந்தை பருவத்திலிருந்தே நான் ரஜினி ரசிகன் ஆகி விட்டேன். சிறிய வயதில் என்னை  வசீகரித்த எத்தனையோ விஷயங்கள் நாளடைவில் சாதாரண விஷயங்கள் ஆகிவிட்டன. ஆனால் ரஜினி மீதான ஈர்ப்பு மட்டும் வயது ஏற ஏற அதிகரித்ததே தவிர சிறிதும் குறையவில்லை. அதுதான் ரஜினி மேஜிக். படம் பார்க்க வருபவர்களை தன்னை நோக்கி ஈர்த்து கொள்ளும் காந்தம் அவர்.

'சிவாஜி' படம் வெளிவந்த போது ரஜினி மாநில எல்லைகளை கடந்து ஒட்டு மொத்த இந்தியாவுக்கும் சூப்பர் ஸ்டார் ஆகி போனார். அந்த படம் தயாரிப்பில் இருந்த நேரம் 'சுல்தான் தி வாரியர்' என்ற அனிமேஷன் படத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த்  இயக்கி கொண்டிருந்தார். அந்த படத்தின் டீசர் 'சிவாஜி' படத்தோடு  வெளியிடப்பட்டது. உண்மையிலேயே அந்த டீசர் அற்புதமாக வடிவமைக்கப்பட்டிருந்தது. ரஜினி போன்ற உருவம் கொண்ட ஒரு பொம்மையே சினிமாவின் வசூல் சாதனைகள் அனைத்தையும் முறியடிக்க போகிறது என்று எண்ணி கொண்டேன். 'சிவாஜி' ஜூரம் ஒட்டு மொத்த தேசத்திலும் அடித்து கொண்டிருந்த அந்த நாளில் அந்த படம் வெளிவந்து இருந்தால் அதுதான் நடந்து இருக்கும்.

இப்படி அதிரடியாக ஆரம்பிக்கப்பட்ட 'சுல்தான்' பின்னாளில் எதனால் கைவிடப்பட்டது என்று தெரியவில்லை. சௌந்தர்யா படம் தயாரித்து நஷ்டம் அடைந்தது ஒரு காரணமாக இருக்கலாம். அல்லது வேறு சில  காரணங்களும் இருக்கலாம். சௌந்தர்யா படம் எடுத்து பட்ட கடன்களை அடைத்த ரஜினி அவருக்கு திருமணம்  முடித்து வைத்தார். இந்த நிலையில் சுல்தானை ஏறக்குறைய எல்லாரும் மறந்தே விட்டனர். 

ரஜினியின் உடல் நல குறைவுக்கு பின் 'கோச்சடையான்' என்று மீண்டும் ஒரு அனிமேஷன் படம் ஆரம்பித்தனர். சரி, சுல்தானை தூசி தட்டுகிறார்கள் போலும் என்று நினைத்தேன். ஆனால் இந்த படத்துக்கும் சுல்தானுக்கும் சம்பந்தம் இல்லை என்று சௌந்தர்யா பேட்டி கொடுத்தார். எது எப்படி இருந்தால் என்ன ,தலைவர் படம் வந்தால் போதும் என்று எண்ணி கொண்டேன். படம் விறுவிறுப்பாக தயாரானது. ரஜினி நடனமாடும் அட்டகாசமான ஸ்டில் வேறு வெளியானது. K.S. ரவிகுமார் படத்தில் இணைந்து கொண்டதும் எனது எதிர்பார்ப்பு அதிகமானது. 'ஜீன்ஸ்' ராஜு சுந்தரம் போலி ஐஸ்வர்யா ராயை ஆட்டுவிப்பது போல, 'கோச்சடையான்' நடிகர்கள் அனைவரும் உடலில் இறுக்கமான ஆடை அணிந்து கொண்டு தங்கள் 3டி மாதிரிக்கு உயிர் கொடுக்கும் மேகிங் வீடியோ பார்த்ததும் எதிர்பார்ப்பு உச்சத்திற்கு போனது.

 
ரஜினி கடந்த ஆண்டு தீபாவளிக்கு படம் வெளிவரும் என்று பேட்டி கொடுத்தார். தயாரிப்பு நிறுவனமோ தீபாவளிக்கும் முன்னரே படம் வெளிவரும் என்றது. ஆனால் எதிர்பார்த்தது போல் எதுவும் நடக்கவில்லை. ஆண்டு ஒன்று ஓடிப்போனது. ரஜினிக்கு படத்தில் திருப்தி இல்லை; படம் கைவிடப்பட்டு விட்டது என பேச்சு எழ தொடங்கியது. ஆனால் விநாயகர் சதுர்த்தி அன்று டீசர் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டதும் வதந்திகள் அடங்கி விட்டன. சொன்னபடி டீசரும் வெளியானது.

கடந்த திங்கள் அன்று ஆவலோடு முதல் முறையாக டீசர் பார்க்க ஆரம்பித்தவனுக்கு அதிர்ச்சி. டீசர் 'சுல்தான்' பட டீசரை விட மோசமாக தெரிந்தது. என்ன காட்சிகள் ஓடுகிறது என்றே புரியவில்லை. இந்த தரத்தில் படம் எடுக்கவா இதற்கா இத்தனை நாட்கள் என திகைத்தேன். ஒரு வேளை கேன்ஸில் ரஜினி படத்தின் ட்ரைலரை வெளியிட விடாமல் தடுக்க இதுதான் காரணமோ என எண்ணினேன். அப்போதுதான் யூ ட்யூபில் இருந்த அந்த கமெண்டை கவனித்தேன்.

டீசரை 1080 hd தரத்தில் பார்க்கவும் என்று பரிந்துரைத்து இருந்தது அந்த கமெண்ட். அங்கே குறிப்பிட்டு இருந்தபடி வீடியோ  குவாலிட்டி மாற்றி பார்த்த பின்தான் மனம் ஓரளவு ஆறுதல் அடைந்தது. உண்மையிலேயே படத்திற்காக நிறைய மெனக்கெட்டு உள்ளனர். சில காட்சிகள் நன்றாகவே உள்ளன. ஒரே ஒரு குறை ரஜினியின் முகத்தை இன்னும் சற்று துல்லியமாக வடிவமைத்து இருக்கலாம். தந்தை ரஜினியின் முகம் ரஜினி போலவே இல்லை. மகன் ரஜினியின் முகமோ உடலை விட்டு வித்தியாசமாக, ஒட்டப்பட்டது போல தெரிகிறது. ரஜினியின் முகத்தை மட்டும் துல்லியமாக வடிவமைத்து இருந்தால் அது மற்ற எல்லா குறைகளையும் மறைத்து இருக்கும். ரஜினியின் முகத்துக்காக படம் பார்க்க வருபவர்கள்தானே அதிகம்.

இந்த டீசரை பார்த்து பலர் இந்த படம் தோல்வி அடையும் என்று சிலர்  கணித்து இருப்பார்கள். ஆனால் எனக்கு என்னவோ இந்த படம் சூப்பர் ஹிட் ஆகும் என்று தோன்றுகிறது. ஒரு வேளை மெகா ஹிட் ஆனாலும் ஆகலாம். ஏனெனில் எதையும் நடத்தி காட்டுவதுதானே ரஜினி மேஜிக்.

 

Sunday, July 7, 2013

அடுத்த சூப்பர் ஸ்டார் யார்?

அடுத்த சூப்பர் ஸ்டார் யார்? கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக விடை தெரியாத கேள்வி இது. 'சாமி' பட விழாவில் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் பட்டம் என்பது தனக்கு மட்டுமே நிரந்தரமானது இல்லை என்றதும் அனைத்து இளம் நடிகர்களுக்கு சூப்பர் ஸ்டார் கனவு காண தொடங்கினர். அந்த நடிகர்களின் ரசிகர்களும் தங்கள் தலைவர்களை சூப்பர் ஸ்டார் நாற்காலியில் அமர வைத்து அழகு பார்க்கும் நோக்கத்தில் தீவிரமாக களம் இறங்கினர்.10 ஆண்டுகளுக்கு பின் அவர்களின் கனவு எந்த அளவு நிறைவேறியுள்ளது என பார்க்கலாம்.

முதலில் யாரை சூப்பர் ஸ்டார் எனலாம்?  அதை இப்படி வரையறுத்து கொள்வோம்.  இப்படி எடுத்து அனைத்து தரப்பு மக்களையும் வயது வித்தியாசமின்றி கவர வேண்டும். இவர் படங்கள் வரும்போது தமிழ்நாட்டில்   75% மக்கள் ஒரு முறையாவது படத்தை பார்க்க என்ன வேண்டும். தயாரிப்பாளர் முதல் தியேட்டரில் முறுக்கு விற்பவர் வரை இவர் படம் அனைவருக்கும் லாபத்தையும் மகிழ்ச்சியையும் கொடுப்பதாக இருக்க வேண்டும்.இதுவே நாம் எடுத்து கொள்ள போகும் சூப்பர் ஸ்டாருக்கான எளிய வரைமுறை.

 'சூப்பர் ஸ்டார் நாற்காலி எனக்கு வேண்டும்' என்று முதல்முதலில் முழங்கியவர் அஜித். தான் நடிக்க போகும் 'ஆஞ்சநேயா' படம் சூப்பர் ஸ்டார் பட்டத்தை நோக்கி தான் வைக்கும் முதல் அடி என்று பேட்டி கொடுத்தார். ஆனால் அந்த படமோ படு தோல்வி. தொடர்ந்து நடித்த படங்களும் சரியாக போகவில்லை. மிக பெரிய ஓபனிங்,உயிரை கொடுக்கும் ரசிகர்கள் இருந்தும் கதை தேர்வில் தவற விட்டதாலும், பெண்களையும் குழந்தைகளையும் அதிகம் கவர முடியாமல் போனதாலும் 'சூப்பர் ஸ்டார்' என்ற இடத்தை இன்னும் நெருங்க முடியவில்லை. கால போக்கில் 'அல்டிமேட் ஸ்டார்' என்ற பட்டமே தனக்கு வேண்டாம் என்று கூறி விட்டார் அஜித். 

விஜய்- முதலில் சூப்பர் ஸ்டாராக ஆசைபட்டவர் இப்போது புரட்சி தலைவராக முயற்சி எடுக்கிறார். ஆனால் இன்னும் தான் ஆசைப்பட்டதை அடைய முடியவில்லை. ஆரம்பத்தில் இவர் சூப்பர் ஸ்டார் கனவுடன் நடித்த சில படங்கள் ஹிட். ஆனால் பின்னர் வந்த படங்கள் படு தோல்வி.இவரின் அதிரடி ஆக்சன் படங்களை காமெடி படங்களாக மாற்றி   SMS, Facebook என வாய்ப்பு கிடைத்த இடங்களில் எல்லாம்  ஊரே கேலி செய்து கை கொட்டி சிரிக்க தொடங்கியதும் தற்போது பாதையை சிறிது மாற்றி விட்டார். குழந்தைகள் விரும்பும் நடிகராக இருப்பதும், 'C' சென்டர் ரசிகர்களை அதிகம் கொண்டிருப்பதும் இவரின் பலம். ஆனால் இவரின் முந்தைய படங்களால் படித்தவர்களிடமும், மேல் தட்டு மக்களிடமும் இவரை பற்றி நல்ல விதமான அபிப்பிராயம் ஏதும் இல்லை. அந்த எண்ணத்தை மாற்றுவதே இப்போது  இவருக்குள்ள சவால். ஆழம் தெரியாமல் அரசியலில் வேறு காலை விட்டு விட்டார். அதனால் ஏற்படும் பிரச்சனைகளையும் சமாளிக்க வேண்டும். ஆக இவர் சூப்பர் ஸ்டார் பட்டத்தை அடைய இன்னும் சில ஆண்டுகளாவது வேண்டும்.

 விக்ரமை பற்றி இங்கு கூறாமல் இருக்க முடியாது. ரஜினி 'சாமி' விழாவில் பேசியபோது 'தூள்', 'சாமி' என அடுத்தடுத்த ஹிட்டுகள் கொடுத்து உச்சத்தில் இருந்தார். ஆனால் பின் இவர் நடித்த படங்கள் பெரிய பலன் ஏதும் தராமல் இவரின் உழைப்பையும், காலத்தையும் அதிகம் சாப்பிட்டு விட்டன. இப்போது வயது அதிகம் ஆகி விட்டதால் இவர் 'சூப்பர் ஸ்டார்' ஆவது இனி கிட்டத்தட்ட சாத்தியம்  இல்லை. அந்த இடத்தின் மேலும் இவர் ஆர்வம் காட்டுவது போல் தெரியவில்லை.

ஆரம்பத்தில் விஜய், விக்ரம், அஜித்திடம் மட்டுமே போட்டி இருந்தது. பின்னர் அதிரடியாக களத்தில் குதித்தவர் சூர்யா.  வெற்றி படங்கள் , பெண்கள், குழந்தைகளிடம் நல்ல பெயர் என்று மெதுவாக முன்னேறி கொண்டுள்ளார். இருப்பினும் மற்ற நடிகர்களிடம் ஒப்பிடும்போது தீவிர ரசிகர்கள் இவருக்கு குறைவே. அத்தகைய தீவிர ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் சில ஆண்டுகளில் இவர் சூப்பர் ஸ்டார் பட்டத்தை அடையலாம்.

மேலே கூறிய நடிகர்கள் அனைவரும் நடிக்க வந்து ஏறத்தாழ  20 ஆண்டுகள் ஆகி விட்டது. இன்னும் 'சூப்பர் ஸ்டார்' பட்டத்தை நெருங்க முடியவில்லை. ஆனால் ரஜினியோ அவர் நடிக்க வந்த 20 ஆண்டுகளுக்கு பின் அசைக்க முடியாத சூப்பர் ஸ்டார். முதல்வர் பதவியையே அவருக்கு  கொடுக்க தயாராக இருந்தனர் மக்கள். ஆனால் அடுத்த தலை முறை நடிகர்கள் இன்னும் அந்த உயரத்தில் பாதி கூட அடையவில்லை. இப்போது அதர்வா, விக்ரம் பிரபு என மூன்றாம் தலை முறை நடிகர்களும் நடிக்க வந்து விட்டனர்.

ஆரம்பத்தில் இருந்தே சூப்பர் சூப்பர் ஸ்டார் ஆக முயன்று வரும் விஜயும், அஜித்தும் எங்கே தவற விட்டனர்? கால மாற்றம், ரஜினிக்கு இருந்த வசீகரம் என அனைத்தையும் விட்டு விடலாம்.  இவற்றை மீறி அவர்கள் செய்த தவறு ரஜினி போல் பறந்து பறந்து அடித்து பஞ்ச் வசனம் பேசினால் சூப்பர் ஸ்டார் ஆகி விடலாம் என கணித்தது. இவற்றை செய்தால் மக்கள் சூப்பர் ஸ்டார் ஆக்கி விடுவார்கள் எனில் விஜயகாந்த் தானே பெரிய சூப்பர் ஸ்டாராக இருந்திருக்க வேண்டும்? ரஜினி போல் அனைவருக்கும் ஏற்ற கதைகளில் நடிக்காமல் அதிரடி நாயகர்களாவே நடித்தால் சூப்பர் ஸ்டார் ஆகி விடலாம் என்று எண்ணியதே அவர்கள் செய்த தவறு. எது எப்படியோ இன்னும் சில ஆண்டுகள் பொறுத்து பார்க்கலாம். யார்தான் சூப்பர் ஸ்டார் ஆகிறார்கள் என்று.

Thursday, May 30, 2013

ரஜினி-கமல் இணைந்தால் படத்தின் கதை எப்படி இருக்கும்?

"ரஜினி! நாம சேந்து படம் பண்ணனும்னு எல்லாரும் ஆசைப்படுறாங்க. அதுக்காக நான் ஒரு ஸ்கிரிப்ட் ரெடி செஞ்சுட்டேன். நாம சேந்து படம் செய்யலாம்"

"டெபனட்லி கமல்! நீங்க கதைய சொல்லுங்க. நாம பண்ணலாம்."

"ரஜினி! இந்த படத்துல நான் ஒரு புதுமைய கொண்டு வரேன். இந்த படத்தை நாம வெப்கேம்ல எடுக்குறோம். படம் எடுக்க எடுக்க லைவா இண்டர்நெட்ல போட்டு காமிக்கிறோம். இதுக்காக நான் இந்தியால எல்லா இன்டர்நெட்  சர்வீஸ்  ப்ரொவைடர்ஸ் கிட்டவும் பேசிட்டேன். "

ரஜினியின் மைண்ட் வாய்ஸ், "அரே பாபாஜி! என்னை என் நண்பர்களிடம் இருந்து காப்பாற்று."

"சூப்பர் கமல்! சூப்பர்! உங்களால மட்டும்தான் இது மாதிரி யோசிக்க முடியும். யூ ஆர் அ ஜீனியஸ். பாலச்சந்தர் சார் 1978ல உங்களை பத்தி சொன்னது சரிதான். பட் கமல் படத்தோட கதை என்ன?"

"நம்ம கதைப்படி  ஒரு பணக்கார  துபாய் ஷேக்."

"வெல்! நமக்கு ஷேக் வேஷமெல்லாம் நல்லா சூட் ஆகும்"

 
"அப்கோர்ஸ் ரஜினி. உங்க முகத்துக்கு அந்த ரோல் பொருந்தும். இப்போ கதைக்கு வரலாம். அந்த ஷேக் பெரிய பணக்காரர். நெறைய எண்ணெய் கிணறு அவர் பேருல இருக்கு. அந்த ஷேக்குக்கு ஒரு நாள் போன் வருது."

"வெயிட்! வெயிட்!  இன்ட்ரோ சாங் இருக்குல"

"நிச்சயம் இருக்கு. அந்த ஷேக்குக்கு  போன் பண்ணது அமெரிக்க அதிபர். தன் பொண்ணை அல்-கொய்தா தீவிரவாதிங்க  கடத்தி ஷேக்கோட  ஊருல வச்சு இருக்குறதா சொல்றார். இதை ஏன்  ஷேக்கிட்ட சொல்றாருன்னு கேக்குறீங்களா? ஷேக் முன்னாள் FBI ஏஜெண்ட். அவரு காதலிய தீவிரவாதிங்க கொன்னதால துபாய் வந்து ஷேக்கா மாறிட்டார்."

"சோ நீங்க தசாவதாரம் படத்துல புஷ் வேஷம் போட்ட மாதிரி இப்போ ஒபாமா வேஷம் போடுறீங்க. குட்"

"ஆமா ரஜினி! என்னை தவிர யாருக்கு அந்த ரோல் சூட் ஆகும். அப்புறம் அந்த அதிபர்  பொண்ணு ரோல்ல ஏஞ்சலினா ஜோலி நடிக்கிறாங்க "

"வெரி குட்!ரொம்ப நல்லா இருக்கு  . பட் கமல், கதைல ஒரு சின்ன மாற்றம்  செய்ய முடியுமான்னு பாருங்க."

" சொல்லுங்க ரஜினி. பகுத்தறிவாளர்கள் யாரு என்ன சொன்னாலும் ஆராய்ந்து முடிவு எடுப்பாங்க. சொல்லுங்க "

"அந்த ஷேக்கை அல்-கொய்தா தீவிரவாதிங்க ஏமாத்தி அவர் சொத்தை எல்லாம் பிடுங்கிட்டு நடு தெருல விட்டுடுறாங்க. அப்புறம் அந்த ஷேக் அவங்ககிட்ட சவால் விட்டுட்டு உழைச்சு புதுசா நாலு எண்ணெய் கிணறு வாங்குறாரு. அதுனால ஏற்கனவே அவருக்கும் தீவிரவாதிங்களுக்கும் பகை."

கமலின் மைண்ட் வாய்ஸ், "நம்மளை ஹாலிவுட் தரத்துல படம் எடுக்க விட மாட்டார் போலயே "

"இதை  K.S. ரவிகுமார் கிட்ட சொல்லி கதைல கொண்டு வர முடியுமான்னு பாக்குறேன். இப்போ கதை. இந்த விஷயத்த கேள்விபட்ட ஷேக் அதிபர் மகளை தேடி கிளம்புறாரு. இது தெரிஞ்ச தீவிரவாதிகள் பாகிஸ்தான்ல இருந்து நியுக்லியர் பாம் வாங்கிட்டு வந்து அந்த ஊரு முழுசும் வச்சுடுறாங்க. இப்போ அந்த ஷேக் அந்த பாமை எல்லாம் எடுத்துட்டு அந்த ஊரையும் அந்த பொண்ணையும் காப்பாத்துறதுதான் கதை. கிளைமாக்ஸ்ல ஷேக்குக்கு அமெரிக்க அதிபர் பாராட்டு விழா நடத்துறாரு. அவரு கையாலேயே ஆஸ்கார் அவார்ட் குடுக்குறாரு . ஷேக்குக்கு  ஜோலி லிப் டு லிப் கிஸ் குடுக்குறாங்க. இந்த கிஸ்ஸிங் ஸீன் மட்டும் 5 நிமிசம் வருது. இதை உலக தரத்துல எடுக்குறோம்"

"கமல்! இந்த கிஸ்ஸிங் சீன் எல்லாம் என்னால செய்ய முடியாது"

"நீங்க ஏன் செய்யணும் ரஜினி. நான்தானே படத்தோட ஹீரோ. நான்தான் செய்யணும்."

"அப்போ ஷேக் ரோல்ல நீங்க நடிக்கிறீங்களா? என்கிட்ட உங்க முகம்தான் ஷேக் ரோலுக்கு நல்லா வருமுன்னு சொன்னீங்க?"

"ஆமா. அதனாலதான் நான் உங்களை  மாதிரி வேஷம் போட்டு இந்த படத்துல நடிக்க போறேன். இதுக்காக நான் ஹாலிவுட் மேக்-அப் மேன் மைக்கேல் வெஸ்ட்மோர் கிட்ட பேசியாச்சு. அப்படியே என்னை உங்களை மாதிரியே மாத்திடுவார். இது கூடவே ஒபாமா வேஷமும் "

"அப்போ எனக்கு இந்த படத்துல வில்லன் ரோலா?"

"நோ நோ. உங்களை அப்பிடி விடுவேனா?"

"அப்போ எனக்கு என்னதான் ரோல்?"

"கிளைமாக்ஸ்ல பாராட்டு விழால என்னை பாராட்டி 5 நிமிஷம் பேசுறீங்க. அதுக்கு வசனம் எல்லாம் நீங்களே எழுதிக்கலாம்.  உங்களுக்கு அது நல்லா வருமே. ரஜினி! நில்லுங்க  எங்க போறீங்க."
 
"இமயமலைக்கு."


Tuesday, May 21, 2013

ரஜினி சமூகத்துக்கு நல்லது செய்யுறாரா? இல்ல ராமதாஸ் சமூகத்துக்கு நல்லது செய்யுறாரா?

"ஏம்பா! நீ ரஜினி ரசிகன்னு சொல்றியே. அது என்ன ராமதாஸ் மேல போட்ட ரஜினி ரசிகர்களை தாக்கின வழக்கு?"

"அது நடந்து ஒரு பத்து வருசம் இருக்கும்ணே. எனக்கும் ரொம்ப விசயம் நினைவுல இல்ல. எனக்கு தெரிஞ்ச அளவு சொல்றேன். அப்போ தினமலர்ல இது பெரிய நியூஸா வந்துச்சு."

"சரி சொல்லு"

"பாபா படம் வந்தப்ப ராமதாஸ் ரஜினிய எதித்து அறிக்கை விட்டதும், அப்புறமா பாபா பட பெட்டியை பாமககாரங்க கடத்துனதும் எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம்"

"ஆமா"

"இது நடந்து கொஞ்ச நாள்ல ராமதாஸ் பிரசாரத்துக்கு மதுரைக்கு வந்தார். உங்களுக்குத்தான் மதுரை ரசிகர்களை பத்தி தெரியுமே. ரஜினி பாஷைல சொன்னா அவங்க வெறியங்க. ராமதாஸ் மதுரை வரது தெரிஞ்சதும் ராமதாஸ்க்கு கறுப்பு கொடி காட்ட முடிவு செஞ்சாங்க."


"ஆமா. நானும் மதுரை ரசிகர்களை பத்தி கேள்வி பட்டு இருக்கேன். ரஜினின்னா உசுரை விடுவாங்களாமே"

"ஆமாண்ணே. அவங்க திட்டப்படி ராமதாஸ் வந்தபோது கறுப்பு கொடி காட்ட திரண்டு வந்துட்டாங்க. பாமககாரங்க இதை ஏற்கனவே எதிர் பாத்து இருப்பார் போல.ராமதாஸ்  கூட வந்த ஆட்கள் அரிவாள், ப்ருஸ் லீ வச்சு இருப்பாரே நுஞ்சக் இது மாதிரி ஆயுதங்கள கையோட கொண்டு வந்து இருக்காங்க"

"பின்ன என்ன? கறுப்பு கொடி காட்டுனா பொறுத்துக்க ராமதாஸ் என்ன காந்தியா? "

"அது சரிதான். வந்தவங்க ரஜினி ரசிகர்களை கைல வச்சு இருந்த ஆயுதத்தால விரட்டி விரட்டி தாக்கி இருக்காங்க. இதுல 'ரஜினி' வைரம் அப்படிங்குற ரசிகர் மிக மோசமா தாக்கப்பட்டு இருக்கார். இதெல்லாம் தினமலர்ல பெரிய அளவு படங்களோட வந்துச்சு."

"இதெல்லாம் ரஜினி கண்டுக்கவே இல்லையா?"

"சே சே! தலைவர் ரொம்ப கோபமா பேட்டி குடுத்தார். . அந்த பேட்டில அவர் சொல்லி இருந்த குறிப்பிடத்தக்க  விஷயம் என்ன தெரியுமா?"

"எனக்கு தெரிஞ்சா நான் ஏன் உன்கிட்ட கதை கேட்க வரேன்"

"இந்த கேஸை தான் விடுற மாதிரி இல்லை அப்படின்னு சொல்லி இருந்தார்."

"ஓஹோ"

"அது மட்டும் இல்ல. தாக்கபட்ட ரசிகர்களை சந்திக்க மதுரை வர இருந்ததாகவும் ஆனா அதுனால ரசிகர்கள் பாமககாரங்க மேல ரொம்ப ஆவேசப்படுவாங்க. நிலைமை ரொம்ப மோசமடையும்னு நினைச்சு அந்த யோசனைய கைவிட்டதாகவும் கூட கேள்விபட்டேன்"

"அப்படியா?"

"ஆமா. ஆனா ரஜினி சொன்ன விசயம் எனக்குள்ள ரொம்ப நாளா இருந்துட்டே இருந்துச்சு. அந்த கேஸ் என்ன ஆச்சுன்னு எவ்வளவோ நாள் யோசிச்சு இருக்கேன். தலைவர் அந்த கேஸை கை விட்டுட்டார் அப்பிடின்னு நெனச்சேன் . ஆனா  இப்போ என்னோட கேள்விக்கெல்லாம் பதில் கிடைச்சுடுச்சு. அன்னைக்கு சூழ்நிலைல ஆட்சில இருந்த அதிமுகவுக்கு ராமதாசை விட ரஜினிதான் பெரிய எதிரி. அதனால போலீஸ் அந்த கேஸ் மேல இன்ட்ரெஸ்ட் எடுத்துக்காம இருந்து இருக்கு .   போலீஸ் ஒத்துழைக்காம ரஜினியால  என்ன செய்ய முடியும். கடைசில அந்த வஷயமே அடி வாங்குனவங்க தவிர எல்லாருக்கும் மறந்து போச்சு."

" அப்போ போலீஸ்  இன்னைக்கு தேவைன்னதும்  எல்லாரும் மறந்து போன ஒரு விஷயத்தை திரும்ப தூசி தட்டி எடுத்து இருக்காங்க"

"ஆமா! இதை பார்த்ததும் தப்பு செஞ்சவன் தண்டனை அனுபவிச்சே ஆகணும்னு நம்ம முன்னோர்கள் சொன்னது ஒரு வேளை சரியா இருக்கும்னு சந்தேகம் வருது."

"சரியா கூட இருக்கலாம்"

"ராமதாஸ் ரஜினி மேல சொன்ன குடுத்த ப்ராது என்னன்னா இவரு தண்ணி அடிக்கிற மாதிரி நடிக்கிறார். சிகரட் குடிக்கிற மாதிரி நடிக்கிறார். இதை பாத்து இவரோட ரசிகர்கள் கெட்டு போறாங்கன்னு. ஆனா யோசிங்க. சிலர் ரஜினிய பாத்து சிகரட் குடிச்சது உண்மைதான். ஆனா சிகரட் குடிக்கிறவங்க அவங்களுக்கு அவங்களே கெடுதல் செய்றாங்களே தவிர சமூகத்துக்கு கெடுதல் பண்ணல. அதே நேரத்துல ரஜினி சினிமால எத்தனையோ நல்லது சொல்லி இருக்கார். எல்லா ஜாதி, மதத்தினரையும் அவரோட ரசிகரா மாத்தி ஏதோ ஒரு வகைல அவங்களை சேத்து வச்சு இருக்கார். எப்பவும் ஒரு குறிப்பிட்ட ஜாதி ஆளா தன்னை காமிச்சுகிட்டு நடிச்சது இல்ல. இப்பிடி எல்லாரையும் சேத்து வைக்கிற ரஜினி சமூகத்துக்கு கெடுதல் செய்யுறாரா?  இல்ல ஒரு ஜாதி பேரு சொல்லி குறுகிய வட்டத்துல அரசியல் பண்ற ராமதாஸ்  சமூகத்துக்கு கெடுதல் செய்யுறாரா? சொல்லுங்க அண்ணே?"

"ஆமாம்பா! அதுலயும் பஸ் மேல எல்லாம் கல்லு விட்டு எறிஞ்சு ஒருத்தரை கொலை கூட செஞ்சாங்க. அதை மன்னிக்கவே கூடாது"

"ஆமா. அதை மன்னிக்கவே கூடாது. நான் கேட்டதுக்கு முதல்ல பதில் சொல்லுங்க. ரஜினி சமூகத்துக்கு கெடுதல் செய்யுறாரா?  இல்ல ராமதாஸ்  சமூகத்துக்கு கெடுதல் செய்யுறாரா?"

"போப்பா. நான் பதில் சொன்னா என்னை ரஜினி ரசிகன்னு சொல்லிடுவீங்க. புத்திசாலித்தனமா ரெண்டு பேருமேன்னு பதில் சொல்ல என் மனசாட்சி ஒத்துக்காது "

"சரி நீங்க சொல்ல வேண்டாம். இதை படிக்கிற அண்ணே. நீங்களாச்சும் சொல்லுங்க. ரஜினி சமூகத்துக்கு நல்லது செய்யுறாரா?  இல்ல ராமதாஸ்  சமூகத்துக்கு நல்லது செய்யுறாரா?"


Friday, February 22, 2013

ரஜினியும் சச்சின் டெண்டுல்கரும்

"என்ன தலைப்புடா இது?" ரஜினிக்கும் டெண்டுல்கருக்கும் என்ன சம்பந்தம் என்று நினைகிறீர்களா? இருக்கிறது. இந்த இரு மராட்டியர்களும் பாதி தேசத்தை கட்டி போட்டவர்கள், என்னை மிகவும் கவர்ந்தவர்கள் என்பதை தவிர்த்து இன்ன பல விசயங்களும் உள்ளன. இவர்கள் வாழ்கையிலிருந்து எடுத்து கொள்ளவும் எவ்வளவோ உள்ளன.  

கடின உழைப்பு:



இவர்கள்  இருவரின் திறமை பற்றி சொல்லி தெரிய வேண்டியதில்லை. அனால் வெற்றி பெற திறமை மட்டும் போதுமா? நிச்சயம் இல்லை. ரஜினியை விட திறமையான திறமையான நடிகர்கள் உள்ளனர். வினோத் காம்ப்ளி தன்னை விட திறமையான ஆட்டக்காரர் என்று டெண்டுல்கரே கூறி உள்ளார். ஆனால் திறமையாலர்களால் இவர்கள் அடைந்த வெற்றியில் பாதியை கூட அடைய முடியவில்லையே. இவர்களின் நெருங்க முடியாத சாதனைகளுக்கு காரணம் என்ன? இவர்களின் கடின உழைப்பும் அர்ப்பணிப்பு உணர்வுமே. டெண்டுல்கர் உலகின் சிறந்த ஆட்டக்காரர் என்று அனைவரும் ஓப்பு கொண்ட பின்னும் அதிக  நேரம் பயிற்சி எடுப்பவர். இந்திய சூப்பர் ஸ்டார் என்று ஆனா பின்னும் ரஜினி எந்திரனுக்காக பட்ட கஷ்டம் என்ன வென்று அறிவோம். தம் வேலையின் மேல் இவர்களுக்கு இருக்கும்  அதீத ஈடுபாடு இவர்களை இயக்குகிறது.

தோல்வியிலிருந்து மீள்தல்:



இவர்கள் அடைந்த வெற்றி மட்டுமே நமக்கு நினைவில் உள்ளது. ஆனால் இவர்கள் அடைந்த   தோல்விகளும் ஏராளம். ரஜினிக்கு சந்திரமுகியும் டெண்டுல்கருக்கு 2003 நியூசிலந்து தொடருக்கு பின்னான உலக கோப்பை தொடரும் ஒரு உதாரணம். இவர்களின் சிறிய தோல்விகளும் பெரிது படுத்த படுகிறது. இவர்கள் தோல்வி அடைந்தால் கொண்டாட ஒரு கூட்டமே உள்ளது. இருந்த போதிலும் இவர்கள்  தோல்வியிலிருந்து மீண்டு வந்த விதம் அலாதியானது. தங்கள் தகுதி  திறமை மேல் இவர்களுக்கு இருந்த அதீத நம்பிக்கையே இதற்கு காரணம்.

 - தொடரும்



விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன.


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...