சமீபத்தில் ஒரு பிறந்த நாள் விழாவுக்கு சென்றிருந்தேன். ஒரு பிரபல ஹோட்டலின் முதல் தளத்தில் விழா ஏற்பாடு செய்யபட்டிருந்தது. உறவினர், நண்பர்கள் என கிட்டத்தட்ட 100 பேர் வரை வந்திருந்தனர். வந்திருந்த அனைவருக்கும், இலைக்கு 200 ரூபாய் மதிப்பில் விருந்து அளிக்கப்பட்டது . கிட்டத்தட்ட ஒரு ஏழை குடும்பம், திருமணத்திற்கு செய்ய கூடிய செலவை அந்த பிறந்த நாள் விழாவுக்காக செலவு செய்திருந்தனர். இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் பிறந்த நாள் கொண்டாடியவரின் வயது ஒன்று. அவரின் பெற்றோர்கள் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள்.
'சம்பாதிக்கும்போதுதான் பணத்தின் மதிப்பு தெரியும்' என்று பெரியவர்கள் கூற கேட்டிருப்போம். ஆனால் இது போன்ற விழாக்களை பார்க்கும்போது பெரியவர்கள் கூறியது தவறோ என்று தோன்றுகிறது. எதற்காக இது போன்ற விழாக்கள்? அந்த குழந்தையின் சந்தோசத்துக்கா? ஒரு வயது குழந்தை அந்த விழாவால் என்ன சந்தோசமடையும்? அந்த குழந்தையின் சந்தோசத்துக்கு ஒரு சிறிய பொம்மை போதும். பெரியவர்கள் தங்கள் கவுரவத்தை நிலை நாட்ட இது போன்ற விழாக்கள் தேவை என்று கூறலாம். ஆனால் இது என்ன வகையான கவுரவம் என்று புரியவில்லை. தங்களின் வசதியான பொருளாதார சூழலையும், குழந்தை மேல் வைத்திருக்கும் அன்பையும் இது போல்தான் காட்ட வேண்டுமா?
இன்னொரு குறிப்பிடத்தக்க விஷயம் இன்றைய திருமண விழாக்களில் நடக்கும் விருந்துகள். இலைக்கு இவ்வளவு என பேசிவிட்டு வகை, வகையாக பரிமாறுகின்றனர். நிச்சயம் ஒரு சாதாரண மனிதனால் இவர்கள் இலையில் பரிமாறும் அனைத்தையும் சாப்பிட முடியாது. இன்னும் சிலருக்கோ சாப்பிட ஆசை இருந்தாலும் உடல் நிலையால் பரிமாறப்படும் அனைத்தையும் சாப்பிட முடிவதில்லை. இறுதியில் எக்கச்சக்கமான உணவு பொருட்கள் குப்பை தொட்டியை சென்று சேர்கின்றன. சோமாலியாவில் உணவு இல்லாமல் மக்கள் சாகும்போது நாம் இப்படி உணவை வீணாக்கலாமா என்றெல்லாம் யோசிக்க வேண்டாம். நாம் கஷ்டப்பட்டு சேர்த்த பணத்தை இப்படி பாழ் செய்வது சரியா என்றாவது யோசிக்கலாமே?
செலவு செய்யத்தானே பணம்.இதை மிச்சபடுத்தி என்ன செய்யபோகிறோம் என சிலர் கேட்கலாம். இன்றைய சூழலில் பொருளாதாரம் எப்போது சுறுசுறுப்படையும்? எப்போது மந்தமடையும்? என யாருக்கும் தெரியாது. அரசாங்க ஊழியர்கள் தவிர மற்ற யாருக்கும் வேலை உத்தரவாதம் இல்லை. இப்படிப்பட்ட நிலையில் கையில் இருக்கும் பணத்தையெல்லாம் அநாவசியமாக செலவு செய்வது புத்திசாலித்தனமா?
இப்போது ஒரு சிலரே இது போல் ஆடம்பர விழாக்கள் நடத்துகின்றனர் . இதை பார்த்து மற்றவர்களும் இதே போல் செய்ய ஆரம்பித்து இதை ஒரு அத்தியாவசிய தேவை போல் மாற்றிவிட கூடாது என்பதே என் கவலை.
புதிதாக பணம் சேர்தல் நிமித்தம் நடுத்தர குடும்பங்கள் பணாதிக்க குடும்பங்களை காப்பியடித்து ஆடம்பர செலவினங்களை, கடனை உடனை வாங்கியோ, சேமிப்புக்களை நசுக்கியோ ஆற்றுகின்றனர். பிறந்த நாள் விழாக்கள், பூப்புனித நீராட்டுக்கள், ஆடல் அரங்கேற்றங்கள், வாராந்திர விருந்துகள், திருமண நாள் விழாக்கள், திருமண வைபவங்கள் என பட்டியல் நீள்கின்றன. காணாததைக் கண்டது போல கிடைக்கும் செல்வங்களை ஆடம்பரத்துக்கு அழித்தால் வாழ்வியல் துன்பங்களே மிஞ்சிக்கிடக்கும் என்பதை அவர்தம் உணர்தல் வேண்டும்.
ReplyDeleteஉண்மைதான். உங்கள் தொடர் வருகைக்கும், கருத்துகளுக்கும் நன்றி நண்பரே!
Deleteசிந்திக்கவேண்டிய பதிவு நம்மவர்களுக்கு புரிந்தால் நல்லது வீண் ஆடம்பரத்திற்கு அடிமையானவர்கள் சிந்தித்தால் நல்லது
ReplyDelete