Saturday, August 3, 2013

கடவுளின் ஃபோன் கால்

ரு வெள்ளிக்கிழமையின் அதிகாலை பொழுது.அயர்ந்து தூங்கி கொண்டு இருந்தேன். அப்போது எனக்கு அந்த தொலைபேசி  அழைப்பு வந்தது.மிகவும் சலிப்புடனும், இந்த நேரத்தில் அழைப்பது யார் என்னும் குழப்பத்துடனும்   மொபைலை எடுத்து பார்த்தவனுக்கு ஆச்சரியம். calling god என்று டிஸ்ப்ளேயில் ஒளிர்ந்தது. யாருடைய பெயரையும் நான் god என்று சேமிக்கவில்லையே. மொபைலின் ஆன்சர் பட்டனை அழுத்தினேன்.

"ஹலோ! யாரு பேசுறது"

"நான்தான் கடவுள்."

"சார்! காலங்காத்தால நாலு மணிக்கு எழுப்பி விட்டு விளையாடுறீங்களே"

"சுரேஷ்! என்னை நம்பு. நான் கடவுள்தான். உன்னுடைய மொபைலில் calling god என்று வந்ததே. அது கூடவா உனக்கு தெரியவில்லை. வேண்டுமென்றால் அழைப்பு வந்த எண்ணையும் பார். ."

எண்ணை சோதித்தேன். எனக்கு குழப்பம் அதிகமானது. என்னுடைய மொபைலை யாராவது எடுத்து தங்கள் நம்பரை god என்று சேமித்து வைப்பது சாத்தியம். ஆனால் அழைப்பு வந்த எண் என ஒரு வெற்றிடம் மட்டுமே இருக்கிறதே. புதிதாக வந்த ஏதோ ஒரு  மென்பொருளை பயன்படுத்தி யாராவது விளையாடுகிறார்களா? விட கூடாது. அவன் வழியிலேயே சென்று மடக்குவோம்.

"இதை மட்டும் வைத்து உங்களை எப்படி கடவுள் என்று சொல்வது?"

"வேறு என்ன செய்தால் நம்புவாய்?"

"இப்போது எனக்கு சூடாக  காபி வேண்டும். அதுவும் நடிகை நஸ்ரியா கொண்டு வந்து தர வேண்டும்."

நம்பினால் நம்புங்கள். இதை சொல்லி நான் வாய் மூடவில்லை . என்னுடைய  அறை கதவை திறந்தது கொண்டு நஸ்ரியா வந்தார். அதே அழகிய முகம். திணறவைக்கும் அழகு.கைகளில் காப்பி கோப்பை. மெதுவாக என்னை நெருங்கி என்னுடைய கைகளில் காப்பியை கொடுத்து விட்டு மறைந்து விட்டார். என்னுடைய உடல் நடுங்கி கொண்டிருந்தது. ச்சே! மடையன் நான். போயும் போயும் காப்பியோடு  நிறுத்தி கொண்டேனே. மறைந்த நஸ்ரியாவை எங்கே தேடுவேன்.


"இப்போது நம்புகிறாயா?" கடவுளின் குரல் என்னுடைய சிந்தனையை கலைத்தது.

"கடவுளே! நம்புகிறேன் "

"சந்தோசம். உன் வீட்டுக்கு பக்கத்தில் இருக்கிறதே கோயில் அதுதான் என்னுடைய இருப்பிடம் "

"நீங்கள் ஏன் என்னை தொடர்பு கொண்டீர்கள்?"

"அதைத்தான் சொல்ல போகிறேன் கேள். வர வர எனக்கு எப்படி பொழுது போக்குவது என்றே தெரியவில்லை. அதுதான் உன்னுடன் சற்று நேரம் பேசி கொண்டிருக்கலாம் என்றுவந்து விட்டேன்"

"என்னது! கடவுளுக்கே பொழுது போகவில்லையா"

"அதை ஏன் கேட்கிறாய். முன்பெல்லாம் மனிதன் சதாசர்வ காலமும் என்னையே நினைத்து கொண்டிருப்பான். அவனின் குறைகளை கேட்கவே நேரம் சரியாக இருக்கும். ஆனால் இப்போது என்னை பற்றி நினைப்பதே அபூர்வமாகிவிட்டது."

"எனக்கு அப்படி தோன்றவில்லை. இன்னமும் கோவில்களில் கூட்டம் குவிகிறதே. ஆனால் எத்தனை பெண்கள் வாரத்துக்கு 4 நாட்கள் கோவிலுக்கு செல்கின்றனர் தெரியுமா?"

"வருகிறார்கள். ஆனால் அவர்கள் எண்ணம் முழுவதும் டிவி  சீரியல் ஆரம்பிக்கும் முன் வீட்டுக்கு செல்வதிலேயே இருக்கிறது"

"சரி அவர்களை விடுங்கள். எத்தனை இளைஞர்கள்  கோவிலிலேயே  தவம் இருக்கின்றனர் தெரியுமா ?"

"அவர்கள் அங்கே தவம் கிடப்பது என்னை நோக்கி இல்லை. அங்கே வரும் இளம் பெண்களை நோட்டமிட. கோவிலுக்கு வரும்  இளம் பெண்களோ அவர்களின் தேர்வு முடிவுகளில் என்னை தலையிட சொல்லியே வேண்டுகோள் வைக்கின்றனர். நானும் அப்படி  எத்தனை பேரைத்தான் பாஸாக்கி விடுவது. முன்பு பெண்கள் நல்ல கணவன் வேண்டும் என்று வேண்டி கொள்வார்கள். ஆனால் இப்போது அவர்கள் கணவனை, அவர்களே தேடி கொள்கின்றனர். நல்ல கணவனா என்றெல்லாம் அவர்கள் அதிகம் அலட்டி கொள்வதில்லை."

"புரிகிறது கடவுளே. ஆனாலும் நிறைய டூரிஸ்ட்கள் உங்களை தேடி வருகிறார்களே "

"அவர்களை பற்றி மட்டும் பேசாதே. கோவிலுக்குள் வந்து தங்களின்  டிரைவரை குறை கூறி கொண்டும், டாக்சி வெய்டிங் சார்ஜ் பற்றியும் பேசி கொண்டு இருப்பார்கள். ஏதோ தூரத்து சொந்தத்தின் வீட்டுக்குள் நுழைந்தது போல அவசரமாக கும்பிட்டு விட்டு ஓடி விடுகின்றனர் . இதை விட கொடுமை கோவிலுக்கு வருபவர்களில் பாதி பேரின் எண்ணம் வாசலில் விட்ட செருப்பின் மேலேயே இருக்கிறது."

"முதியோர்கள்?"

"வருகின்றனர். ஆனால் அவர்கள் என்னிடம் எதையும் பெரிதாக கேட்பதில்லை. அவர்கள் கோவிலுக்கு வருவது ஒரு மன நிம்மதிக்காக"

" கடவுளுக்கே job satisfaction இல்லாமல் போய் விட்டது போலும். உங்களிடம் ஒரு கேள்வி."

"ஆம். எனக்கு ஊழி பிரளயத்தை நடத்த  திட்டமிட வேண்டியது ஒரு முக்கிய வேலை. அந்த வேலையையும் நீங்கள் எனக்கு விட்டுவைக்கவில்லை.உங்கள் செயல்களே அந்த ஊழி பிரளயத்தை எப்படியும்  உலகத்தில் நடத்தி விடும். இப்போது எனக்கு கிட்டத்தட்ட வேலையே இல்லை. அதனால்தான் உன்னிடம் பேசலாம் என்று வந்தேன்"

எனக்கு அயர்ச்சியாக இருந்தது. இவருக்கு நான் என்ன பொழுதுபோக்கு சாதனமா? எனக்கு வேறு வேலையே இல்லை என்று நினைத்துவிட்டாரா? இவருடன் பேசி எனக்கு என்ன ஆக போகிறது. நான் கடவுளுடன் பேசினேன் என்று வெளியே சொன்னால் என்னை பைத்தியம் என்று நினைப்பார்கள். 

"கடவுளே! உங்களுக்கு தெரியாதது இல்லை. இந்த கலிகாலத்தில் நீங்கள் ஆழ்வார்கள், நாயன்மார்களை எல்லாம் எதிர்பார்க்க முடியாது. நான் இப்போது  ஆபீஸ் கிளம்ப வேண்டும் கடவுளே. தாமதமாக சென்றால் சம்பளத்தை பிடிப்பார்கள். இன்னொரு நாள் பேசலாம். நான் தொடர்பை துண்டிக்க போகிறேன்"

"சற்று நேரம் இரு!"

கடவுள் சொன்னதை பொருட்படுத்தாமல் தொடர்பை துண்டித்தேன்.

4 comments:

  1. அருமையாக உள்ளது . சுஜாதாவின் பாதிப்பு தங்களை அறியாமல் வந்திருக்கலாம் .

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே! சுஜாதாவின் பாதிப்பு அறிந்தே வந்ததுதான். சொந்தமாக நடை அமைத்து எழுதும் திறமை எல்லாம் எனக்கு ஏது :)

      Delete
  2. Replies
    1. எனக்கு படம் எல்லாம் எடுக்க தெரியாதே. ஒரு வேளை நீங்கள் இதை படமாக எடுக்க நினைத்தால் என்னிடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டு தாராளமாக எடுத்து கொள்ளுங்கள்.

      Delete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...