கஷ்டப்பட்டு அந்த முகவரியை தேடி கண்டு பிடித்து விட்டேன். இந்த அபார்ட்மெண்டின் மூன்றாவது மாடியில்தான் நான் தேடி வந்த நபர் இருக்கிறார். லிப்டில் ஏறி மூன்றை அழுத்தினேன். மூன்றாவது மாடியை அடைந்ததும் முகவரியில் இருந்த கதவு எண்ணை நோக்கி நடந்து அழைப்பு மணியை அழுத்தினேன். சில நொடிகளில் அருகில் இருந்த திரை ஒளி பெற்று ஒரு அழகிய இளம் பெண்ணின் முகம் தோன்றியது.
"யார் நீங்கள்?"
"நான் டோசிமோ கம்பெனியில் இருந்து வருகிறேன். உங்களின் ஹப்பி-2023 மாடல் ரோபோ சரியாக இயங்கவில்லை என்று நீங்கள் புகார் அனுப்பியிருந்தீர்கள். அதை சரி செய்ய என்னை இங்கே அனுப்பி இருக்கிறார்கள்."
கதவு திறந்தது.
"உள்ளே வாருங்கள்."
"என்ன பிரச்சினை?"
"நேற்றில் இருந்து இது சரியாகவே இல்லை. அங்கே இங்கே அசையாமல் ஒரே இடத்தில் இருக்கிறது. கூப்பிட்டால் திரும்ப கூட மாட்டேன் என்கிறது" என்றாள்.
"கவலைப்படாதீர்கள். சரி செய்ய கூடிய பிரச்சினையாகவே இருக்கும்" என்றேன்.
"எப்படியாவது சரி செய்து விடுங்கள். ஒரே மாதத்தில் என்னுடைய வாழ்க்கையை ஆக்கிரமித்து விட்டது. இது இல்லாமல் என்னால் இருக்க முடியாது." சொன்னவளின் முகத்தில் கவலை தெரிந்தது
நான் அதை சோதிக்க ஆரம்பித்தேன். சில நிமிடங்களில் என்ன பிரச்சினை என்று தெரிந்து விட்டது.
"கவலைப்பட தேவை இல்லை. வைரஸ் பிரச்சினைதான். எளிதில் சரி செய்து விடலாம்"
"வைரஸா? கடைசியாக இரண்டு நாட்கள் முன் இதனுடன் இணைந்து சந்தோசமாக இருந்தேன். அந்த வைரஸ் எனக்கும் பரவி இருக்குமா?"
"சே சே ! நீங்கள் நினைப்பது போன்ற வைரஸ் இல்லை. மென்பொருள் வைரஸ்தான். உங்களுக்கு எந்த பாதிப்பும் வராது"
"நல்லவேளை. நான் பயந்து விட்டேன். ரோபோவை சரி செய்வது கஷ்டமா?"
"இல்லை. ஸ்கேன் ப்ரோக்ராமை ஓட விட்டு விட்டேன். வைரஸை நீக்கி விடும். ஆனால் இது முடிய சற்று நேரம் ஆகும்". அந்த ரோபோவை விட்டு விலகினேன்.
"எவ்வளவு நேரம்?"
"அதிக பட்சம் ஒரு மணி நேரம். அது வரை வெளியே சென்று விட்டு வருகிறேன்."
"நீங்கள் இங்கேயே வேண்டுமானாலும் காத்து இருக்கலாம். எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. உட்காருங்கள், உங்களுக்கு காப்பி எடுத்து வருகிறேன்." என்னுடைய பதிலை எதிர்பார்க்காமல் சமையலறையை நோக்கி சென்றவள் சில நிமிடங்களுக்கு பின் கையில் ஒரு கோப்பையுடன் வந்தாள்.
"எடுத்து கொள்ளுங்கள். ரோபோ இல்லாமல் நேற்றிலிருந்து நானே எல்லா வேலைகளையும் செய்ய வேண்டியாதாகி விட்டது."
நான் கோப்பையை கையில் எடுத்து கொண்டேன்.
" சுயமாக சிந்திக்கும் ரோபோக்களை உங்கள் கம்பெனி எப்போது தயாரிக்கும்?"
"இன்னமும் ஆராய்ச்சி நிலையிலேயே இருக்கிறது. இன்னும் ஒரு சில ஆண்டுகள் ஆகலாம். அதற்கு முன் வேறு எந்த கம்பெனியாவது அப்படி ஒரு ரோபோவை தயாரிக்கவும் வாய்ப்பு இருக்கிறது. ஏன்? சிந்திக்கும் ரோபோ வந்தால் இந்த ரோபோவுக்கு பதில் அதை அப்கிரேட் செய்து கொள்ளலாம் என நினைக்கிறீர்களா?"
"இல்லை இல்லை. அதற்கு நான் நிஜ மனிதனையே திருமணம் செய்து கொண்டு விடுவேன்." சொல்லிவிட்டு சத்தமாக சிரித்தாள்.
"அப்படியென்றால் உங்களுக்கு திருமணம் செய்து கொள்ளும் திட்டமே இல்லையா? கடைசிவரை ரோபோவுடனே வாழ்ந்து விட போகிறீர்களா?"
"திருமணம் எதற்கு தேவை? என்னிடம் பணம் இருக்கிறது. நான் ப்ரோடெக்ட் என்ற ஒரு வார்த்தையை உச்சரித்து விட்டால் போதும். இதை மீறி என்னை யாரும் தொட கூட முடியாது. அந்த அளவு ஒரு ஆணால் கூட தர முடியாத அளவு பாதுகாப்பை இது எனக்கு கொடுக்கிறது. கூடவே ஒரு ஆண் கொடுக்ககூடிய மற்ற எல்லா சந்தோசங்களையும் இந்த ரோபோ எனக்கு கொடுக்கிறது. இதற்கு மேல் என்ன வேண்டும்."
"இதனால் குழந்தை தர முடியாது."
"குழந்தை பெற்று கொள்ள கிராமப்புற பெண்கள் நிறைய பேர் இருக்கின்றனர்." அவள் குரலில் அலட்சியம் தெரிந்தது. அதற்கு மேல் அவளுடன் அதை பற்றி பேச எனக்கு பிடிக்கவில்லை. எழுந்து ரோபோவை நோக்கி நடந்தேன்.
ஜப்பான்காரன் இந்த ரோபோவை இந்தியாவுக்கு கொண்டு வந்ததும் கொண்டு வந்தான். எவனுக்கும் திருமணம் செய்ய பெண் கிடைக்க மாட்டேன் என்கிறது. வெறும் முப்பது கட்டளைகளை மட்டும் புரிந்து கொள்ளும் இந்த ரோபோதான் ஆண்களை விட பெண்களுக்கான அத்தியாவசிய தேவையாகிவிட்டது. இந்த ரோபோவினால் ஆண்களுக்கு கிடைத்த ஒரே லாபம் என்னை போன்ற ஒரு நூறு பேருக்கு வேலை கிடைத்ததுதான்.
"வேலை முடிந்ததா?" என்னுடைய சிந்தனையை கலைத்தாள்
"வைரஸை நீக்கி விட்டேன். சரியாக இயங்குகிறதா என சோதித்து கொள்கிறேன்." சொல்லிவிட்டு அதை பரிசோதிக்க தொடங்கினேன். கட்டளைகளை சரியாக புரிந்து கொண்டது.
"மேடம்! நான் சோதித்த அளவு இது நன்றாக வேலை செய்கிறது. மற்ற செயல்பாடுகளும் சரியாக இருக்கிறதா என நீங்கள் தனி அறையில் சென்று பரிசோத்து கொள்ளுங்கள்"
"தேவை இல்லை. நன்றாக இயங்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. நான் இன்று இரவு பரிசோதித்துவிட்டு ஒரு வேளை பிரச்சினை இருந்தால் நாளை கூப்பிடுகிறேன்"
"ஓகே"
"இது போன்ற பிரச்சினைகள் எதிர்காலத்தில் வராமல் எப்படி தடுப்பது?"
"உங்கள் ரோபோவுடன் வெளியே செல்லும்போது டேட்டா ட்ரான்ஸ்ஃபர் ஆப்சனை ஆஃப் செய்து விடுங்கள். மற்ற எலக்ட்ரானிக் சாதனங்களில் இருந்து இந்த வைரஸ் பரவுவது தடுக்கப்படும்"
"சரி அப்படியே செய்கிறேன்"
"நான் வருகிறேன். ஏதேனும் பிரச்சனை என்றால் அழையுங்கள்."
"நிச்சயம். மிக்க நன்றி"
அவளின் வீட்டை விட்டு வெளியே வந்து நடக்க தொடங்கினேன். எளிதில் சரி செய்ய முடியாத அளவு ஒட்டு மொத்த கணவன் ரோபோட்டுகளின் செயல்பாட்டை முடக்க போகும் வைரஸ் அவள் ரோபோவிருந்தே தன்னுடைய கணக்கை தொடங்கப் போகிறது என அவள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அப்படிப்பட்ட வைரஸை உருவாக்கி அவளின் ரோபோவில் செலுத்திய திருப்தியுடன் நடக்க தொடங்கினேன்
No comments:
Post a Comment