சினிமா என்பது ஒரு மொழி. அந்த மொழியை சாதாரணமான பேச்சு வழக்குக்கும் பயன்படுத்தலாம்; அதை பயன்படுத்தி அழகாக கவிதைகளும் எழுதலாம். மிஷ்கின் வழக்கமாக கவிதை எழுத முயற்சிப்பவர். நேர்த்தியான காட்சி அமைப்புகள், வித்தியாசமான கேமரா கோணங்கள், இயல்பான நடிப்பை தரும் நடிகர்கள், மயங்க வைக்கும் பின்னணி இசை என ஒவ்வொரு பிரேமையும் ரசித்து ரசித்து செதுக்கி உள்ளார் தன்னுடைய ஓநாயையும் ஆட்டு குட்டியையும்.
படத்தின் கதை மிக சாதாரண திருடன், போலீஸ் கதைதான். சாலையில் குண்டு அடிபட்டு கிடக்கும் ஒருவனுக்கு மருத்துவ கல்லூரி மாணவன் ஒருவன் உதவுகிறான். காப்பற்றப்பட்ட மனிதன் தப்பி ஓடிய பின்னரே தான் உதவியது ஒரு கொலைகாரனுக்கு என்று அந்த மாணவனுக்கு தெரிகிறது. தப்பி ஓடிய கொலைகாரனை பிடிக்க வைக்கப்பட்ட பொறியில் காவல்துறை அந்த மாணவனையே ஆட்டு குட்டியாக பயன்படுத்துகிறது. பொறியில் ஓநாய் சிக்கியதா? ஆட்டுக்குட்டி என்ன ஆனது? என்பதே மீதி கதை.
இந்த கதையை படத்தை மிஷ்கின் காட்சிப்படுத்தி இருக்கும் விதம்தான் படத்தை சிறந்த படங்களின் வரிசையில் சேர வைக்கிறது. பிரேமை விட்டு நடிகர்கள் விலகிய பின்னரும் அசையாத கேமரா, சீரியசான காட்சிகளுக்கு நடுவில் வரும் மெல்லிய நகைச்சுவை என படம் நெடுக மிஷ்கின் முத்திரை. படத்தின் முக்கிய பலம் இளையராஜா. எத்தனை வயது ஆனாலும் ராஜா ராஜாதான் என்று நிருபித்துள்ளார். நடிகர்கள் ஒவ்வொருவரும் தங்கள் கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக செய்துள்ளனர். படத்தின் நிறைகள், குறைகளை முற்றிலும் மறைத்து விடுகின்றன
'ஒரு கல் ஒரு கண்ணாடி', 'தீயா வேலை செய்யணும் குமாரு' போன்ற படங்களை மக்கள் விரும்பும் இந்த நேரத்தில் இந்த படம் ஓடுமா என்று தெரியவில்லை. ஆனால் ஓடினால்தான் தமிழ் சினிமாவுக்கு நல்லது. எது எப்படியானாலும் இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர்கள் வரிசையில் மிஸ்கின் இடம் பிடித்து விட்டார்.
No comments:
Post a Comment