Tuesday, September 24, 2013

உங்களை எல்லாம் ஆயிரம் பெரியார் வந்தாலும்

மென்பொருள் நிறுவன ஊழியர்கள் இருவரிடையே நடந்த உரையாடலை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது. சிறிதளவு கற்பனை கலக்கப்பட்டுள்ளது. 


"ஏண்டா! நம்ம ப்ராஜெக்ட் க்ரிட்டிகல் ஸ்டேஜ்ல இருக்குன்னு உனக்கு தெரியும்ல. அப்புறம் ஏண்டா  நேத்து ஆபீஸ் லீவ் போட்ட?"

"நேத்து எனக்கு நேரமே சரி இல்ல மச்சி. எல்லாமே தப்பு தப்பா நடந்துச்சு."

"அப்பிடி என்ன ஆச்சு? எதாச்சும் பெரிய பிரச்சனையா?"

"பெரிய பிரச்சனை ஏதும் ஆகிட கூடாதுன்னுதான் லீவ் போட்டேன்"

"சரி! என்னதான் ஆச்சு? விஷயத்தை சொல்லு"

"நேத்து காலைல எந்திரிச்சேனா "

"சரி எந்திரிச்ச"

"வழக்கப்படி எழுந்த உடனே டிவில மியூசிக் சானல் போட்டேன். போட்ட உடனே கரண்ட் போயிடிச்சு"

"தமிழ்நாட்ல கரண்ட் போறதெல்லாம் ரொம்ப சாதாரணம். எப்போ வரும் எப்போ போகும்னு யாருக்குமே தெரியாது. இதெல்லாமா பிரச்சனை "

"நான் கூட அப்பிடிதான் மச்சான் நெனைச்சு குளிக்க போனேன். குளிச்சிட்டு வந்து  ஹேங்கர்ல தொங்குற சட்டைய எடுக்க போனா சட்டை அப்பிடியே கைல இருந்து தவறி கீழ இருந்து விழுந்திடிச்சு. ரெண்டாவது  சகுனத் தடையா போச்சு ."

"சட்டை கைல இருந்து கீழ விழுந்ததுக்கு காரணம் உன்னோட கவன குறைவு. இது ஒரு சகுனத்தடைன்னு லீவ் போட்டியா?"

"இல்ல. நான் அதை கூட பெருசா எடுத்துக்கல. கீழ விழுந்த சட்டையை எடுத்து மாட்டிகிட்டு ஆபீஸ் கிளம்பிட்டேன்."

"அப்புறம் ஏன் ஆபீஸ் வரல?"

"என்னோட வீட்டு பக்கத்துல ஒரு கோவில் இருக்குன்னு உனக்கு தெரியும்ல?"

"ஆமா"

"நான் வெளிய வந்து அந்த கோவில்ல க்ராஸ்  செஞ்சப்பதான் அந்த சம்பவம் நடந்துச்சு. அந்த சம்பவத்தை பார்த்த பின்னாடி எனக்கு ஆபீஸ் வர எண்ணமே சுத்தமா போயிடிச்சு."

"அப்பிடி என்னடா சம்பவம்?"

"நான் அந்த கோவிலை கடக்குற நேரம்.  சரியா அந்த நேரம் பாத்து கோவிலுக்கு  வந்தவர் அவரோட கைல அர்ச்சனை செய்ய வச்சு இருந்த தேங்காயை கீழ போட்டுட்டார். இப்பிடி மூணாவது சகுன தடைக்கு அப்புறமும்  நான் எப்பிடி ஆபீஸ் வரது."

"அடப்பாவி. முதல்ல சொன்ன ரெண்டுலயாவது ஒரு லாஜிக் இருந்துச்சு. இப்போ யாரோ ஒருத்தன் அவன் கைல இருந்த தேங்காயை கீழே போட்டது உனக்கு சகுன தடைன்னு சொல்றியே."

"போ மச்சான்! அதெல்லாம் உனக்கு தெரியாது. அது சகுன தடைதான். இதெல்லாம் நாம கரெக்டா புரிஞ்சுகிட்டாதான் பெரிய பிரச்சனை எதையும் சந்திக்காம தப்பிக்க முடியும்."

"உன்னை சொல்லி குத்தம் இல்லை. கோடி கோடியா கொட்டி பெரிய பெரிய கட்டடமா  கட்டி அதுல உன்னை  வேலைக்கு வச்சவனை  சொல்லணும். உங்களை எல்லாம் ஆயிரம் பெரியார் வந்தாலும் திருத்த முடியாதுடா."

இந்த பதிவு பிடித்திருந்தால் 'Like' செய்யவும். இது பதிவை பற்றிய உங்களின் கருத்தை எளிதில் அறிய உதவும்.


No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...