Monday, February 9, 2015

பெண்களுக்கு ஏன் சூர்யாவை பிடிக்கிறது ?

சில நாட்களாகவே என் மனதில் உள்ள  ஒரு கேள்வி பெண்களுக்கு சூர்யாவை ஏன் பிடிக்கிறது என்பதுதான். எந்த பெண்ணிடம் பிடித்த நடிகர் யார் என்று கேட்டால் தயங்காமல் சூர்யா என்று சொல்கின்றனர். சூர்யாவின் நடிப்பை பற்றியோ அழகை பற்றியோ எந்த சந்தேகமும் இல்லை. இருந்த போதும் எப்படி எல்லா பெண்களையும் கவர்ந்தார் மனிதர் என்பதுதான் ஆச்சரியம். அரிதாக மற்ற நடிகர்களின் பெயர்களை சிலர் கூறினாலும் “சூர்யாவையும் பிடிக்கும்” என்று இழுத்து கொண்டேதான் முடிக்கின்றனர். பத்து வயது முதல் முப்பது வயது வரை பெரும்பாலான பெண்கள் சூர்யா ரசிகைகளாகவே உள்ளனர்.

ஒரு வேளை சிக்ஸ்பேக்ஸ்தான் காரணமோ என்ற சந்தேகத்தில் ஒரு பெண்ணிடம் கேட்டேன். சூர்யாவை எந்த படத்திலிருந்து பிடிக்க ஆரம்பித்தது என்று. நான் எதிர்பார்த்த பதில் “அயன்” அல்லது “வாரணம் ஆயிரம்”. ஏனென்றால் ஆனால் அந்த பெண் சொன்ன பதில் “பூவெல்லாம் கேட்டு பார்”. அந்த படம் வெளிவந்தபொழுது அந்த பெண்ணுக்கு பத்து வயதுதான் இருந்திருக்கும். அந்த படம் சூர்யாவுக்கே எவ்வளவு பிடிக்கும் என்பது சந்தேகம்தான். ஆனால் பாருங்கள், அந்த பெண்ணுக்கு அந்த படம் பிடித்து  இருக்கிறது.

இந்த ரகசியத்தை எப்படியாவது தெரிந்து கொள்ள வேண்டும் என்று துணிந்து ஒரு பெண்ணிடம் கேட்டே விட்டேன் “அப்படி சூர்யாவிடம் என்ன ஸ்பெசலாக இருக்கிறது என்று உங்களுக்கு எதற்கு சூர்யாவை பிடிக்கிறது” என்று.

“எதற்காக கேட்கிறீர்கள்” என்றார் அந்த பெண்.

“இதை தெரிந்து கொண்டால் பெண்களை புரிந்து கொள்ளலாம் என்றுதான் ” என்றேன்.

அந்த பெண் சிறிது நேரம் யோசித்தார். “ஆண்களுக்கு எந்த நடிகர்களை பிடிக்கிறது?” என்று கேட்டார்

“பெரும்பாலும் விஜய், அஜித் என்று சொல்வார்கள்” என்றேன்.

“சரி. ஏன் விஜயை பிடிப்பவர்களுக்கு அஜித்தை பிடிக்கவில்லை. அஜித் பிடிப்பவர்களுக்கு விஜயை பிடிப்பதில்லை” என்று கேட்டார்.

“காரணம் சொல்வது கடினம். ஒரு வேளை விஜயை பிடிக்காமல் போனதால் அஜித்தை பிடித்து இருக்கலாம். அல்லது  அஜித்தை பிடிக்காமல் போனதால் விஜயை பிடித்து இருக்கலாம்” என்றேன்.

“அதுதான் ஏன்? இருவரின் கதை தேர்வு செய்யும் விதத்திலும் ஒரு வித்தியாசமும் இல்லை. நடிப்பிலும் பெரிய வித்தியாசம் ஏதும் சொல்ல முடியாது. பின்னர் ஏன்?” என்றார்.

“இதற்கு பதில் சொல்ல வரலாற்றை திருப்பி பார்க்க வேண்டியது இருக்கும். ஆரம்ப காலங்களில் ஒருவர்  நடித்த படங்கள் சில ஆண்களுக்கு பிடித்து இருக்கும். அதே நேரத்தில் மற்ற சில ஆண்களை வெறுப்படித்து இருக்கலாம் ” என்றேன்.

“பாருங்கள். பெண்களுக்கு  சூர்யாவை பிடித்திருக்கிறது. ஆனால் பாதி ஆண்களுக்கு பிடித்த நடிகரை இன்னொரு பாதி ஆண்களுக்கு பிடிப்பதில்லை. அப்படியானால் ஆண்களை அறிந்து கொள்வதுதானே கடினம்?” என்று கேட்டார்.

“யோசிக்க வேண்டிய கேள்வி. ஆனால்  நீங்கள் எப்பொழுதாவது ஆண்களை அறிந்து கொள்ள முயற்சி செய்திருக்கிறீர்களா?”  என்று கேட்டேன்

“நான் எதற்கு செய்ய வேண்டும்” என்று கேட்டு முகத்தை திருப்பி கொண்டார்.

உண்மையை சொல்லப் போனால் ஆண்களோ பெண்களோ மனிதர்களை  புரிந்து கொள்வதுதான் கடினம். ஆனால் பாருங்கள் ஆண்கள் எப்பொழுதும் பெண்களை புரிந்து கொள்ள முயன்று தோற்று பெண்களை புரிந்து கொள்ளவே முடியாது என்று எழுதி வைத்து விட்டனர். ஆனால் ஆண்களை புரிந்து கொள்ள பெண்கள் முயல்வதில்லை. ஆண்களும் கூட.


மேற்கண்ட பதிவில் பாதி கற்பனை 


Wednesday, February 4, 2015

உலகக்கோப்பை இந்திய அணி - ஒரு பார்வை

லகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள்  நெருங்கி விட்டது. இந்த முறை இந்திய அணி மீது பெரிய எதிர்பார்ப்பு ஏதும் இல்லை. லீக் சுற்றை தாண்டி முன்னேறினாலே பெரிய சாதனை என்ற அளவிலேயே அணியின் சமீபத்திய செயல்பாடுகள் அமைந்து விட்டது. அதே நேரத்தில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, சவுத் ஆப்ரிக்க அணிகள் நல்ல பார்மில்  உள்ளன. இந்திய அணியோ  பேட்டிங்கில் பலவீனமாகவும், பந்து வீச்சில் மிக  பலவீனமாகவும் உள்ளது.

இந்திய அணியின் வீரர்களை பற்றி பார்க்கலாம். முதலில் சிகர் தவான். நீ எப்படி வேண்டுமானாலும் பந்து வீசிக் கொள் , நான் அவுட் ஆகி காட்டுகிறேன் பார் என்ற ரீதியில் ஆடிக் கொண்டிருக்கிறார். சமீப காலங்களில் ஒரே மாதிரி ஆட்டம் இழப்பது இவர் மேலான  நம்பிக்கையை மேலும் குறைக்கிறது.

அடுத்தவர் ரஹானே. டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக ஆடினாலும் ஒரு நாள் போட்டிகளில் இவர் செயல்பாடுகள் திருப்தி அளிப்பதாக இல்லை. இதுவரை ஒரு நாள் போட்டிகளில் மிகப் பெரிய ஸ்கோர் எதுவும் எடுத்தது இல்லை. துவக்க ஓவர்களில் எதிரணியின் பந்து வீச்சை ஓரளவு சமாளித்தாலும், ரன்களை உயர்த்த முயலும்போது அவுட்டாகி விடுகிறார். இவரிடம் அதிகமாக எதிர்பார்க்க முடியாது.

கோலியை பற்றி கூற வேண்டுமானால் சமீபத்திய முத்தரப்பு தொடரில் சிறப்பாக செயல்படவில்லை என்றாலும் அதிலிருந்து விரைவாக மீண்டு வந்து ரன் குவிப்பார் என்று நம்பலாம். அவரின் திறமை அப்படிப்பட்டது.

ரோஹித் ஷர்மா ஒரு கணிக்க முடியாத வீரர். எப்போது எப்படி ஆடுவார் என்று கணிக்க முடியாது.  அவருடைய அதிர்ஷ்ட தினத்தில் அணியை தனியாளாக வெற்றி பெற செய்யக் கூடியவர்.

அம்பதி ராயுடு அதிக சர்வதேச போட்டிகளில் ஆடிய அனுபவம் இல்லாதவர். நன்றாக ஆடக் கூடியவர்தான். இருந்தபோதும் IPL போட்டிகளில் கவனித்தவரை இவர் எளிதில் பொறுமை இழக்க கூடியவர். உலகக்கோப்பையின் பதட்டமான கணங்களை எப்படி கையாளப் போகிறார் என்பது கேள்விக்குறி.

சுரேஷ் ரெய்னா முத்தரப்பு தொடரில் சாதிக்க தவறினாலும் தனது தவறுகளை உணர்ந்து விரைவில்  சரி செய்து கொண்டு விடுவார். உலகக்கோப்பையில் நன்றாக ஆடுவார் என்றே நம்பலாம்.

ஒரு நாள் போட்டிகளில் தோனியின் பேட்டிங் பற்றி அதிகம் பேசத் தேவையில்லை. இவர் மோசமான பார்மில் இருந்த நாட்கள் மிகக் குறைவு. இவரின் கேப்டன்ஷிப்பும் அணிக்கு மிகப் பெரிய பலம்.

ஜடேஜா நன்றாக பந்து வீசி எதிரணியை திணற செய்வார், ஆனால் சுழலுக்கு சாதகமான பிட்சுகளில் மட்டும். ஆஸ்திரேலியாவில் இவரின் பந்து வீச்சு எதிரணிக்கு எந்த சிரமத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. ஆஸ்திரேலியாவில்  பேட்டிங் எடுபடுவதும் சந்தேகம்தான்.

ஸ்டூவர்ட் பின்னியின் தேர்வு மிகவும் சர்ச்சை கிளப்பிய ஒன்று. ரோஜர் பின்னியின் மகன் என்பதால் வாய்ப்பு பெற்றார் என்றெல்லாம் பேசினார்கள். ஆனால் எனக்கென்னவோ  தோனி போட்டியில் ஆட வாய்ப்பு கொடுக்கும் பட்சத்தில் இவர் நன்றாகவே ஆடுவார் என்றே தோன்றுகிறது. பந்து ஸ்விங் ஆகும் மைதானங்களில் இவரை சமாளிப்பது கடினம். பேட்டிங்கிலும் விரைவாக இருபது, முப்பது ரன்களை சேர்த்து விடுவார்.

அக்சர் படேலை சுழல் பந்து வீச்சாளர் என்று கூற முடியாது. இருந்தபோதும் விரைவாக நேர்கோட்டில்  பந்து வீசி ரன்களை கட்டுப்படுத்தி விடுவார். ஆஸ்திரேலிய பிட்சுகளில், இவரின் உயரம் பந்துகளை அதிக பௌன்ஸ்  செய்ய உதவும். சுமாராக பேட்டிங் செய்வது கூடுதல் பலம்.

அஷ்வின் பந்து வீச்சில் ஏமாற்ற மாட்டார் என்று நம்புவோம். இருந்தபோதும் ஒரு நாள் போட்டிகளின் புதிய விதிகள் சுழல் பந்து வீச்சாளர்களுக்கு சிரமம் ஏற்படுத்தக்கூடியவை.

புவனேஸ்வர் குமார் வேகப்பந்து இந்திய வேகப்பந்து  வீச்சில் ஒரே நம்பிக்கை. மற்ற பந்து வீச்சாளர்களுடன் ஒப்பிடுகையில் இவரை நம்பலாம். விக்கெட்டுகள் வீழ்த்த இயலாவிட்டாலும் ரன்களை கட்டுப்படுத்துவார்.

இஷாந்த் ஷர்மாவை பற்றி என்ன சொல்வது? ரிக்கி பாண்டிங் உச்சத்தில் இருக்கும்போது அவரை திணற வைத்ததை தவிர்த்து இத்தனை ஆண்டுகளில் எதுவும் பெரிதாக சாதித்தது போல் நினைவில்லை. சமீபத்தில் இங்கிலாந்துடன் நடந்த டெஸ்ட் போட்டியையும், சாம்பியன்ஸ் ட்ராபி பைனலையும் கணக்கில் சேர்க்காதீர்கள். முப்பது போட்டிகளில் விளையாடும்போது ஒன்றிரண்டு போட்டிகளில் தவறுதலாக சில விக்கெட்டுகள் விழுந்து விடும்.

உமேஷ் யாதவும், முஹம்மது சாமியும் நல்ல பந்து வீச்சாளர்கள்தான். ஆனால் மலிங்கா போலவோ, ஸ்டெயின் போலவோ அச்சுறுத்தும் பந்து வீச்சாளர்கள் இல்லை.

ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது சச்சின் இல்லாத குறை அப்பட்டமாக தெரிகிறது. கடந்த உலகக் கோப்பைகளில் அவர் ஒரு முனையில் உறுதியாக நின்று ஆட இன்னொரு முனையில் மற்றவர்கள் அவருக்கு துணையாக தங்கள் இயல்பான ஆட்டத்தை ஆடினால் போதும் என்ற வாய்ப்பு இருந்தது. ஆனால் இந்த முறை அந்த வாய்ப்பு இல்லாததால் ஒவ்வொரு வீரருக்கும் அழுத்தம் இருப்பது போல் தோன்றுகிறது. இந்த சூழ்நிலையில் அனைத்து வீரர்களும் சிறப்பாக ஆட வேண்டியது அவசியம். ஒருவர் தொடர்ந்து ரன் சேர்க்க  தவறினாலும் அது அணியின் வெற்றியை பாதிக்கும்.

தன்னம்பிக்கை  குறைவாக உள்ள வீரர்கள் குட்டி அணிகளுடன் ஆடி ரன் சேர்த்து மீண்டும் பார்முக்கு திரும்ப வாய்ப்பு உள்ளது. இருந்த போதும் பந்து வீச்சு மிகவும் கவலை அளிக்கும் விஷயம். இந்திய அணியின் கேப்டன், மற்ற அணிகளின் கேப்டன்களை விட நெருக்கடியான நேரங்களை  சிறப்பாக கையாளக்கூடியவர் என்பதே இப்போதைக்கு அணியின் ஒரே பலம். பார்க்கலாம் வேறு எதாவது அதிசயம் நடக்கிறதா என்று.


Wednesday, January 21, 2015

இன்டர்ஸ்டெல்லர்- inspired by தமிழ் சினிமா????

கொஞ்ச நாளா நம்ம ஊருல ஒரு பழக்கம் வேகமா பரவிட்டு வருதுக. அதுதாங்க ஒரு தமிழ் படம் வந்ததுன்னா அந்த படத்தை பார்த்து அது எந்த எந்த இங்கிலீஷ் படத்துல இருந்து உருவியிருக்காங்கன்னு ஆராய்ச்சி செஞ்சு நெட்ல போடறது. அப்புறம் வெள்ளைக்காரன்லாம் என்னமா படம் எடுக்குறான். நம்ம ஆளுங்க காப்பி அடிக்கத்தான் லாயக்குன்னு கமெண்ட் போடுறது.

ஆனா பாருங்க, வெள்ளைக்காரன் யோசிக்க முன்னாடியே நம்ம ஆளுங்க விதவிதமா யோசிச்சு படம் எடுத்துகிட்டுதான் இருக்காங்க. என்ன நம்ம ஆளுங்களுக்கு எல்லாமே புரிஞ்சுடும்னு நெனச்சு ரொம்ப விசயத்தை மேலோட்டமா சொல்லிட்டு விட்டுடுறாங்க.

இப்பிடிதாங்க யாரோ கிறிஸ்டோபர் நோலனாம். பெரிய டைரக்டராம். ‘இன்டெர்ஸ்டெல்லர்’ அப்பிடின்னு படம் எடுத்திருக்காராம்; அவர் படம் எடுத்தா யாருக்கும் புரியாதாமாம்; இப்படி எல்லாம் சிலர் பேசிக்கிட்டு இருந்தாங்க. அப்பிடி என்னப்பா புரியாத மாதிரி படம்; கண்டிப்பா அதை பார்த்தே ஆகணுமேன்னு முடிவு செஞ்சு படத்துக்கும் போய்ட்டேன். படம் ஓடிகிட்டே இருந்தது. எப்படியாச்சும் புரிஞ்சுக்கணும் அப்பிடின்னு ஆர்வமா வச்ச கண்ணு வாங்காம திரையை பார்த்துக்கிட்டே இருந்தேன்.

என் பக்கத்துல உக்காந்து இருந்தவர் படத்தோட ஆரம்பத்துல இருந்தே   சீட்ல உக்கார முடியாம நெளிஞ்சுகிட்டே இருந்தாரு. திடீர்னு என்ன நெனச்சாரோ என்கிட்ட வந்து “ஏன் சார்? ஏதோ வார்ம் ஹோல் அப்பிடின்னு சொல்றானே அப்பிடின்னா என்ன?” அப்பிடின்னார்.

ஆஹா! நம்ம புத்திசாலித்தனத்தை காமிக்க சிக்குனாண்டா ஒருத்தன்னு நெனச்சுக்கிட்டு ஐன்ஸ்டீன் அவதாரம் எடுத்தேன். “அதாவது சார், நாம இப்போ சென்னைல இருக்கோம். நாம இப்போ மதுரை போகணும்னா ஐநூறு கிலோமீட்டர் போகணும். அப்பிடி ஐநூறு கிலோமீட்டர் போகணும்னா நாம பஸ்ல போறோமா? ட்ரைன்ல போறோமா? இல்ல பிளைட்டா? அப்பிடிங்குறதை பொறுத்து ரெண்டு மணி நேரத்துல இருந்து, பனிரெண்டு மணி நேரம் வரை ஆகலாம். அப்பிடின்னா என்ன அர்த்தம்னா மதுரைக்கும் சென்னைக்கும் நடுவுல தூரம் மட்டும் இல்ல. நேரமும் இருக்கு. இது வரைக்கும் சொன்னது புரிஞ்சதா?” அப்படின்னேன். உண்மைல நான் சொன்னது எனக்கே புரியல. அந்த ஆளுக்கும் புரியாதுன்னு நம்பிக்கை. ஆனா அந்த ஆளு வயித்து கடுப்பு வந்த மாதிரி மூஞ்சிய வச்சுக்கிட்டு தலையை ஆட்டுனார்.

“ரைட்! இப்போ இந்த வார்ம் ஹோல் என்ன செய்யும்னா நம்ம பிரபஞ்சத்துல இருக்குற ரெண்டு இடத்துக்கு நடுவுல ஒரு ஷார்ட் கட் கிரியேட் செய்யும். நீங்க அந்த ஷார்ட் கட்டை பிடிச்சுட்டா தூரத்தை பத்தி கவலைப்பட தேவை இல்லை. பிரபஞ்சத்தோட ஒரு இடத்துல இருந்து இன்னொரு இடத்துக்கு நேர விரயம் ஏதும் இல்லாம போயிடலாம். இதுதான் வார்ம் ஹோல்” அப்பிடின்னேன்.

அவர் தலையை ஆட்டிகிட்டே தியேட்டரோட விட்டத்தை பார்த்தார். ச்சே! மனுசன்  என்னமா யோசிக்கிறார் அப்பிடின்னு நெனச்சுகிட்டேன். திடீர்னு சத்தமா சிரிச்சார். கொஞ்ச நேரம் கழிச்சு “இந்த இரண்டாம் உலகம் படத்துல ஆர்யா ஒரு மலைல ஏறி இன்னொரு கிரகத்துக்கு போய் அனுஷ்காவை பார்ப்பாரே. அதுவும் வார்ம் ஹோல்தான?” அப்பிடின்னார்.

அப்போதான் நானும் யோசிச்சேன். நோலன் ‘இரண்டாம் உலகம்’ பார்த்துதான்  ‘இண்டரஸ்டெல்லர்’ எடுத்துட்டாரோன்னு. செல்வராகவனுக்கு இந்த விசயம் தெரியுமான்னு தெரியலையே அப்பிடின்னு நான் அதிர்ச்சில உறைஞ்சு போனப்பதான்  பின் சீட்ல இருந்து இன்னொருத்தர் என்ட்ரி ஆனார்.

“என்ன சார் இரண்டாம் உலகம்? ‘பாபா’ படம் பார்த்தீங்களே? தலைவர் கொத்தவால் சாவடில இருந்து இமயமலைக்கு ஷார்ட் கட் எடுப்பார் பாருங்க. பத்து வருஷம் முன்னாடியே தமிழ் சினிமால இதெல்லாம் வந்தாச்சு சார். ஹாலிவுட்காரனுக்கு இதெல்லாம் இப்போதான் புரிஞ்சிருக்கு” அப்பிடின்னார்.


அவங்க பேசுனதும் எனக்கு கிரிஸ்டோபர்  நோலன் மேலேயே சந்தேகம் வந்துடுச்சு. ஒரு வேளை அவர் தமிழ் சினிமா பார்த்துதான் ‘இன்டர்ஸ்டெல்லர்’ எடுத்தாரா? நீங்களும் யோசிச்சு பார்த்து சொல்லுங்களேன். 

Friday, January 16, 2015

‘ஐ’ – மெர்சல் ஆக்கவில்லை

 ‘ரட்சகன்’ என்றொரு படம் வந்தது உங்களில் சிலருக்கு நினைவிருக்கலாம். அந்த படத்தின் இயக்குனர் பெயர் பிரவீன்காந்த் என்று நினைவு. அந்த படம் கிட்டத்தட்ட அந்த ஷங்கர் படங்களை அடியொற்றி பிரமாண்டமாக எடுக்கப்பட்டிருக்கும். இருந்தபோதும் வலுவான கதை இல்லாததால் படம் பெரிய வெற்றியை ஈட்ட முடியவில்லை. படத்தின் தயாரிப்பாளர் குஞ்சுமோனுக்கு  மிகப் பெரிய பாதிப்பையும் ஏற்படுத்தியது. சில வருடங்களுக்கு முன் அதே போல் பிரமாண்டமாக பணத்தை கொட்டி சுசி.கணேசன் ‘கந்தசாமி’ என்றொரு படம் எடுத்தார். பொறுமையை சோதிக்கும் திரைக்கதை. பெரிய அளவில் மார்கெட்டிங் செய்தும் படம் தேறவில்லை. படத்தின் இயக்குனர் அதன் பின் படம் எடுத்தது போல தெரியவல்லை.

பிரமாண்டம் மட்டுமே ஷங்கரின் வெற்றி சூத்திரம் என்பதாக வைத்து கொண்டால் மேலே கூறிய இரண்டு படங்களும் பெரிய வெற்றியை பெற்றிருக்க வேண்டும். ஆனால் பிரமாண்டம் என்பது மட்டுமே ஷங்கரின் வெற்றிக்கு காரணம் இல்லை. அழுத்தமான கதை, விறுவிறுப்பான திரைக்கதையே அவரின் படங்களின் வெற்றிக்கு காரணம். பிரமாண்டம் ஷங்கரின் அடையாளம் மட்டுமே. ஆனால் அதை அவர் வெற்றிக்கு காரணமாக புரிந்து கொண்டதால் ‘கந்தசாமி’யும், ‘ரட்சகன்’ னும் பெரிய அளவு பணத்தை விழுங்கி முதலுக்கு மோசம் விளைவித்தன.

‘ஐ’யை பொருத்தமட்டில்  இந்த முறை ஷங்கரே தன்னுடைய வெற்றியை தவறாக  புரிந்து கொண்டாரோ என்று சந்தேகம் எழுகிறது. கலர் கலராக காட்சிகளும், பிரமிக்க வைக்கும் விசுவல் எபக்ட்சம் இருந்தால் போதும் படம் ஓடி விடும் என்று நினைத்து விட்டாரோ என்னவோ. மிக சாதாரண கதையை எடுத்து கொண்டு படம் காட்டியுள்ளார். படத்தின் நீளம் வேறு பொறுமையை சோதிக்கிறது. படத்தின் கதை அப்படி ஒன்றும் மறைத்து வைக்க வேண்டிய கதை இல்லை. தன் உருவத்தை சிதைப்பவர்களின் உருவத்தை கதாநாயகன் சிதைத்து அவர்களை பழி வாங்குகிறார். கதை அவ்வளவுதான்.

விக்ரம் உழைப்பை கொட்டியுள்ளார்.  உடலை ஏற்றி, இறக்கி, உருமாற்றி அர்ப்பணிப்பு உணர்வு என்றால் என்ன என்று காட்டுகிறார். வேறு எந்த நடிகராலும் அந்த கதாபாத்திரத்தை செய்து விட முடியாது. உண்மையில் படம் பார்த்து கொண்டிருப்பவர்களுக்கே ஒரு பயம் வருகிறது. இப்படி எல்லாம் உடலை வருத்தி எதாவது ஆகி விடப் போகிறது என்று. வருடத்துக்கு மூன்று படம் நடித்து பணம் பார்ப்பதை விட்டுவிட்டு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு படம் என்று நடித்து கஷ்டப்பட்டு தன்னை வித்தியாசப்படுத்தி காட்டி கொள்ளும் விக்ரம் ஒரு ஆச்சரியம்.

எமி தமிழ் பெண் போலவே தெரிகிறார். வெள்ளைத்தோல் துருத்தி கொண்டு தெரியாமல் அழகாக இருக்கிறார். நடிப்பிலும் குறை இல்லை. சந்தானத்திற்கு சிரிக்க வைக்க அதிக வாய்ப்புகள் இல்லை. கிடைத்த வாய்ப்புகளில் தன்னுடைய  காமெடி செய்கிறார். ஆனாலும் பெரும்பாலான இடங்களில் முகம் சுளிக்க வைக்கும் வகையிலேயே காமெடி இருக்கிறது. இவர்களை தவிர வரும் ஐந்து வழக்கமான வில்லன்கள். நன்றாகவே வில்லத்தனம் செய்திருக்கிறார்கள்

அது எப்படி ஷங்கர் படங்களில் மட்டும் காட்சிகள் இத்தனை  அழகாக இருக்கிறது என்று தெரியவில்லை. சென்னை நகரின் அழுக்கு தெருக்களையும் அழகாக காட்டியுள்ளனர். சண்டை காட்சிகள் வித்தியாசம். ஆனால் மிக நீளம். பாடல் காட்சிகளில் வழக்கம் போல ஷங்கர் முத்திரை. ஆனால் பாடல்கள் இன்னும் நன்றாக இருந்திருக்கலாம். சில நேரங்களில்  சலிப்பை வர வைக்கின்றன. படத்திலேயே சில விளம்பரங்களையும் எடுத்து ஒரே கல்லில் இரண்டு மாங்காய் வீழ்த்தியது ஒரு புதுமை

ஷங்கர் ‘நண்பன்’ படத்தை ரீமேக் செய்ய கதை இல்லாததுதான் காரணமோ என்று இந்த படத்தை பார்த்தும் தோன்றியது. ட்விஸ்ட் என்று அமைத்த காட்சிகளும் எடுபடவில்லை. எல்லா ட்விஸ்ட்களும் எதிர்பார்த்ததுதான். வழக்கமாக ஷங்கர் படம் ஏற்படுத்தும் எந்த பாதிப்பையும் இந்த படம் ஏற்படுத்தவில்லை. பளபள காட்சிகளுக்காகவும், விக்ரமுக்காகவும் ஒரு முறை பார்க்கலாம். இரண்டாம் முறை பார்ப்பது கடினம். பொறுமை இழந்து விடுவோம்.

‘நாயக்’ ‘பாய்ஸ்’ என்று இரண்டு படங்கள் தோல்வி அடைந்த பின் ‘அந்நியன்’ எடுத்தார் ஷங்கர். படம் வெளிவந்த பின் ஒரு பேட்டியில் ‘அந்நியன்’ படத்துக்குத்தான் ஸ்க்ரிப்டுக்காக அதிகம் உழைத்தோம் என்று கூறி இருந்தார். அந்த படம் பார்க்கும்போது அது உண்மை என்றும் தோன்றியது. இப்போது சுஜாதாவும் இல்லாததால், அதை விட அதிக உழைப்பை அடுத்த படத்துக்கு ஷங்கர் கொட்டியே ஆக வேண்டும்.

இது விமர்சனம் இல்லை. இதை எழுதியவர் சினிமா மேதையும் இல்லை. படத்தை பார்க்கும்போது தோன்றிய எண்ணங்களின் தொகுப்பே இந்த கட்டுரை.
  

Tuesday, December 30, 2014

டிசிஎஸ் அடிக்கும் எச்சரிக்கை மணி

டி துறை ஊழியர்களின்  எதிர்காலம் கடுமையாக இருக்கப் போவதாய் தோன்றுகிறது. இனி ஐடி  துறை ஊழியர்கள் தேவைக்கு அதிகமான ஊதியம் பெறுவதாக கருதப்படும் பொது கருத்து விரைவில் மறைந்து போகும். அதற்கு பிள்ளையார் சுழி போட்டு இருப்பது டிசிஎஸ். 25000 பேரை வேலை நீக்கம் செய்வது என்பது சாதாரண விஷயம் அல்ல. இந்தியாவில் இயங்கும் அமெரிக்க கம்பெனிகள் கூட செய்ய தயங்கும் ஒரு காரியத்தை செய்து, டிசிஎஸ் வேலை அரசாங்க வேலை போல என்ற கருத்தையும் தவிடுபொடியாக்கி விட்டது  டிசிஎஸ் நிர்வாகம். குறைந்த ஊதியத்தில் புது ஊழியர்கள் 50000 பேரை வேலைக்கு தாங்கள் உருவாக்கிய காலி பணியிடங்களை தாங்களே நிரப்பவும் போகிறார்கள்.

ஆட்குறைப்பு என்பது சில சூழ்நிலைகளில் தவிர்க்க முடியாததே. கம்பெனி நஷ்டத்தில் இயங்கும்போது செலவுகளை குறைக்க நினைப்பதும் இயல்பானதே. ஆனால் இருக்கும் இலாபத்தை அதிகரிக்க இவர்கள் ஆட்குறைப்பு செய்வதைத்தான் ஏற்று கொள்ள முடியவில்லை. பத்து ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர்களை தூக்க போவதாக சொன்னார்கள். ஆனால் பத்து ஆண்டுகளுக்கு கீழே அனுபவம் கொண்டவர்களாக இருந்தாலும் அவர்கள் தாங்கள் செய்யும் வேலைக்கு மேலே அதிக ஊதியம் பெறுவதாக நிர்வாகம் கருதினால் அவர்களையும் வெளியேற்றுவதாக தெரிகிறது. கம்பெனியில் உள்ள சேர், பெஞ்ச் போன்ற ரிசோர்ஸ்(resource) களுக்கும்   மனித ரிசோர்ஸ்களுக்கும் எந்த வித்தியாசமும் பார்க்கவில்லை நிர்வாகம்.  

வெளியேறிய ஊழியர்களின் பாடு திண்டாட்டம்தான். அதிக அனுபவம் கொண்ட ஊழியர்கள் வெளியற்றப்பட்டால் அவர்கள் மீண்டும் வேலை பெறுவது அத்தனை சுலபம் இல்லை. பத்து, பதினைந்து ஆண்டுகள் தம்மை பயன்படுத்திய நிர்வாகம் தம்மை தூக்கி எரியும் என  அவர்கள் எதிர்பார்த்திருக்கவும் மாட்டார்கள். வேறு ஏதாவது துறையின் ஒரு தொழிற்சாலை மூடப் போவதாக தெரிந்தால் அரசாங்கமே தொழிலாளர் நலம் கருதி எதாவது ஒரு வகையில் அந்த தொழிற்சாலையை இயங்க வைக்க முயற்சிக்கும். இத்தனை ஆண்டுகள் வருமான வரி கட்டிய இவர்களுக்கு பரிந்து பேச அப்படி  யாரும் வரப்போவதும் இல்லை.


டாட்டா தனது பிராண்ட் இமேஜ் பற்றி எல்லாம் கவலைப்படாமல் செய்யும் இந்த காரியம் பாதிக்கப்போவது டிசிஎஸ் ஊழியர்களை மட்டும் அல்ல. ஒட்டு மொத்த ஐடி  துறை ஊழியர்களின் வாழ்வையும் கேள்விக்குறியாக மாற்றப்போகும் மோசமான  முன்னுதாரணம். நாளை இதே முறையை அனைத்து கம்பெனிகளும் பின்பற்றினால் பத்து அல்லது பதினைந்து ஆண்டுகளுக்கு மேலே ஐடி துறையில் யாரும் நிலை கொள்ள முடியாது. அப்படியே இருக்க விரும்பினாலும் ஊதிய உயர்வை எல்லாம் மறந்து விட்டே வேலை செய்ய வேண்டியது இருக்கும். மொத்தத்தில் ஐடி துறை ஊழியர்கள் தங்கள் எதிர்காலத்தை பற்றியும், தாங்கள் செய்து கொள்ள வேண்டிய மாற்று ஏற்பாடுகளை பற்றியும் சிந்திக்க வைத்து விட்டது டிசிஎஸ். ஐடி துறையை தேர்ந்தெடுக்க விரும்பும் மாணவர்களும் இதை கவனத்தில் கொள்வது நல்லது.


Tuesday, December 9, 2014

டாஸ்மாக்கை தேடியவர்!!!

“குடி குடியை கெடுக்கும்” என்று கேள்விபட்டு இருப்பீர்கள். கேள்விப்படாதவர்கள் யாராவது இருந்தால்  மீண்டும் முந்திய வரியை படித்து கேள்விப்பட்டு கொள்ளுங்கள். மது குடிப்பவர்களுக்கு மட்டும்தான் பாதிப்பு ஏற்படுத்தும் என்பதில்லை. மது குடிப்பவர்களுக்கு உதவ நினைத்தாலும் பாதிப்புதான். அப்படி உதவி செய்யப்போய் நஷ்டம் அடைந்த ஒரு அப்பாவியின் கதை இது.


அன்று ஒரு நிறைந்த வெள்ளிக்கிழமை. மதுரைக்கு ட்ராவல்சில் டிக்கெட் எடுத்து வைத்து இருந்தேன். எதிர்பாராத தாமதம் காரணமாக  நான் டிக்கெட்டில் குறிப்பிட்டு இருந்த  நிறுத்தத்துக்கு செல்ல முடியாத நிலை. ட்ராவல்சுக்கு மீண்டும் போன் செய்து பேருந்தை என்னுடைய  வீட்டுக்கு அருகிலேயே  இருக்கும் நிறுத்தத்தில் நிறுத்த  கேட்டு கொண்டேன். முதலில் அதெல்லாம் முடியாது என்று மறுத்தவர்கள் பத்து மணிக்கு பேருந்து வரும். ஒரு சில வினாடி மட்டுமே நிறுத்துவோம், அதற்குள் நிறுத்தத்துக்கு வந்து பேருந்தில் ஏறவில்லை என்றால் கிளம்பிவிடுவோம் என்ற  நிபந்தனையுடன் என் கோரிக்கையை ஏற்று கொண்டனர். நானும் ஒப்பு கொண்டேன்.

பத்து நிமிடங்கள் முன்பே பேருந்து நிறுத்தத்துக்கு கிளம்பி  விட்டேன். பேருந்து நிறுத்தத்தை நெருங்கும்போதுதான்  அவரை கவனித்தேன். எனக்கு எதிர் திசையில் பரபரப்பாக நடந்து வந்த அந்த நபர்தான் இந்த கதையின் திருப்புமுனை ஏற்படுத்தப் போகிறார் என்று அப்போது உணரவில்லை. அவர்  ஒரு வட இந்தியர். ஜீன்ஸ்,டீ சர்ட் என்று உடை உடுத்தி இருந்தவருக்கு நாற்பது வயது இருக்கும். அவர் நடந்து வந்த வேகத்தில் அவர் ஏதோ அவசரத்தில் இருக்கிறார் என்று உணர முடிந்தது. வேகமாக வந்தவர் என்னை நெருங்கியதும் பிரேக் அடித்து நின்றார்.

இங்க எங்க ஒயின்ஷாப் இருக்குஎன்று கேட்டார் ஆங்கிலத்தில்.

தெரியாது என்று ஒரே வார்த்தையில் முடித்து இருக்கலாம். இருந்தாலும் வந்தாரை வாழ வைக்கும் தமிழகத்தில் சரக்கு கிடைக்காமல் கஷ்டப்படும் ஒருவருக்கு உதவுவது நம் கடமையல்லவா? அவருக்கு உதவ முடிவு செய்து என்னுடைய நினைவை தூசி தட்டி  யோசித்தேன். எங்கேயெல்லாம் கூட்டம் நிரம்ப நிரம்ப நிற்கும்.

சார்! நீங்க வந்த வழியே போங்க. அங்க ஒரு கடை இருக்கு.

அங்க இருந்துதான் வரேன். அதை மூடிட்டாங்க என்றார். பதட்டம் கூடி இருந்தார்.

9:50 தான ஆகுது. இந்த அரசு ஊழியர்களே  இப்படிதான். கொஞ்சம் கூட பொறுப்பு இல்லாதவங்க

"ஆமாங்க. சரக்கு இல்லைன்னு காரணம் சொல்றாங்க. நம்புற மாதிரியா இருக்கு?"

“சரி விடுங்க. அப்படியே நேரா போனா  ஒரு கடை வரும். அங்க ட்ரை செஞ்சு பாருங்க.”

“அங்க அந்த கடையே இல்லங்க. மூடிட்டாங்க” குரலில் வருத்தம் காண்பித்தார். நெடுஞ்சாலைகளில் இருந்த கடைகளை இடம் மாற்றியது எனக்கு  நினைவுக்கு வந்தது.

“சரி. கவலையை விடுங்க. அந்த கடையை பக்கத்துல  இருக்குற தெருல  கொண்டு வச்சு இருப்பாங்க. பார்த்தீங்களா?”

“அதெல்லாம் நேத்தே நல்லா தேடி பார்த்துட்டேன்”

“அரசாங்கத்துக்கு பொறுப்பே இல்லீங்க. இடம் மாத்துனா, எங்கே மாத்துறாங்கன்னு பழைய இடத்துல  ஒரு மேப் வைக்கணும். கஸ்டமர் மேலே அக்கறையே இல்ல. அமெரிக்கால எல்லாம் இப்பிடி செஞ்சா கோர்ட், கேசுன்னு போய் நஷ்டஈடு கேட்கலாம் தெரியுமா ”

அவர் நான் சொன்னதை கேட்கும் மன நிலையில் இல்லை. தன்னுடைய கடிகாரத்தை பார்த்துக் கொண்டார்.

“டென்சன் ஆகாதீங்க சார். இன்னும் பத்து நிமிஷம் இருக்கு. நீங்க அந்த பழைய கடைக்கு வலது பக்கம் இருந்த சந்துல போய் பார்த்து இருக்கமாட்டீங்க. சரிதானே”

“ஆமாம். அது சின்ன சந்துன்னு”

“தப்பு செஞ்சுடீங்களே சார். இடது பக்கம் இருந்த ரோட்ல பள்ளிக்கூடம் இருக்கு. அங்க கடையை வச்சு இருக்க மாட்டாங்க அந்த சந்துல போய் பாருங்க”

அவர் சந்தேகத்தோடு இடத்து விட்டு அகன்றார். நான் மணியை பார்த்தேன். 9:55 ஆகி இருந்தது. சற்று முன்னதாகவே கிளம்பியது நல்லதே. இன்னும் ஐந்து நிமிடங்கள் இருந்தது பேருந்துக்கு. நிறுத்தத்தை நோக்கி நடந்து காத்திருக்க தொடங்கினேன். 10 மணி ஆகியும் பேருந்து வரவில்லை.

ஒரு பத்து நிமிடம் கடந்தது. பேருந்து வரவில்லை. எதற்கும் போன் செய்து விடலாம் என்று மொபைலை எடுத்தேன். 1 மிஸ்ட் கால் என்று கூறியது. ட்ராபிக் சத்தத்தில் போன் வந்ததே கேட்கவில்லை. அவசரமாக அந்த எண்ணை மீண்டும் தொடர்பு கொண்டேன்.

“எங்க இருக்கீங்க”

“நாங்க செங்கல்பட்டு தாண்டிட்டோம்.”

“நான் நிக்கிறேன்னு சொன்னேன்லங்க”

“எங்க நின்னீங்க. நாங்க நின்னு பார்த்தோம். போன் செஞ்சும் பார்த்தோம். அதையும் எடுக்கலை”


போன் வந்த நேரத்தை பார்த்தேன். 9:55

“10 மணிக்கு வரேன்னு சொல்லிட்டு முன்னாடியே வந்துட்டீங்க?”

“சார். நீங்க என்ன பஸ் ஸ்டாண்ட்லயா நிக்குறீங்க. நாங்க சொன்ன நேரத்துல வரலன்னு சொல்ல. வழில நிக்குறவரு ஒரு பத்து நிமிஷம் முன்னாடிதான் வரணும்”

தொடர்பை துண்டித்தேன். அவர் சொல்வதும் நியாயம். இனி பேசி பயனில்லை. டிக்கெட் பணம் 600 ரூபாய் காந்தி கணக்குதான். வீட்டுக்கு போய் தூங்க வேண்டியதுதான். அந்த ஆள் பேச்சு குடுக்காமல் இருந்திருந்தால் பேருந்தை தவற விட்டிருக்க மாட்டேன்.

அப்போதுதான் கவனித்தேன். அந்த வட இந்தியர் சந்தோசமாக கையில் புட்டியுடன் வந்து கொண்டிருந்தார். என்னை பார்த்து சிரித்து நன்றி கூறினார். அரசாங்கத்தின் வருவாய்க்கு உதவிய சிறு திருப்தியுடன் ஒரு விரக்தி சிரிப்பில் அந்த நன்றியை ஏற்று கொண்டேன்.

  

Saturday, November 22, 2014

'நாய்கள் ஜாக்கிரதை’ - ஜாக்கிரதை!!!

பிடித்த படங்களை பற்றி மட்டுமே எழுத வேண்டும். அப்படி எழுதும் படங்களின் கதையை எழுதக்கூடாது என்பது எனது கொள்கை. படம் பிடிக்காவிட்டால் அந்த படத்தை பற்றி எதுவும் எழுதாமல் தவிர்த்து விடுவேன். இருந்த போதும் 'நாய்கள் ஜாக்கிரதை’ என்னை  கொள்கை மீற வைத்து விட்டது.

நூறு ரூபாய் கொடுத்து படத்துக்கு வந்ததே தவறோ என்று சில படங்கள் சிந்திக்க வைக்கும். அது போன்ற படங்களில், விறுவிறுப்பே இல்லாமல் மந்த கதியில் சென்று பார்ப்பவர்களின் பொறுமையை சோதிக்கும் ‘நீதானே என் பொன் வசந்தம்’ போன்ற படங்கள் ஒரு வகை. லாஜிக் எல்லாம் தேவையில்லை. படம் என்று ஏதோ ஒன்றை எடுத்து வைப்போம் என்ற ரீதியில் படம் எடுத்து பார்ப்பவர்களின் காதில் பூ வைக்க முயன்று தோற்கும்  ‘நாய்கள் ஜாக்கிரதை’ வகை படங்கள் இன்னொரு வகை.


படம் முதல் பாதியில் எல்லாம் நன்றாகத்தான் செல்கிறது. போலீஸ்காரர் சிபி பெண்களை கடத்தும் கும்பலுடன் மோதுகிறார். அந்த சண்டையில் தன்னுடைய போலீஸ் நண்பரை இழக்கிறார். அந்த சண்டையில் அவர் காலிலும் குண்டடிபட்டு விடுவதால் விடுப்பில் இருக்கிறார். அந்த நேரத்தில் ஒரு நாயுடன் பழக்கம் ஏற்பட அந்த நாயை செல்லப்பிராணியாக்கி கொள்கிறார். இவை எல்லாம் நடந்து முடியும்போது சிபிராஜின் மனைவி அந்த பெண் கடத்தல் கும்பலால் கடத்தப்படுகிறார். இடைவேளை  விடுகின்றனர். இதுவரை படம் பரவாயில்லை ரகம்தான்.

இடைவேளைக்கு பின்னர்  கிளைமாக்ஸ் ஆரம்பித்து விடுகிறது. படமும் நொண்டியடிக்க ஆரம்பித்துவிடுகிறது. கடத்தல் கும்பல்  சிபிராஜின் மனைவியை சவப் பெட்டியில் வைத்து குழி தோண்டி புடைத்து விடுகின்றனர். பெட்டியில் அவரின் மனைவி படும் கஷ்டத்தை சிபிக்கு நேரடி ஒளிபரப்பு செய்கின்றனர். இனி சிபிராஜ் அந்த நாயுடன் சேர்ந்து எப்படி தனது மனைவியை கண்டுபிடிக்கிறார் என்பதே மீதிக்கதை.

கதை நன்றாக இருப்பது போல்தான் தெரியும். ஆனால் சிபி தன்னுடைய மனைவியை தேடும்  காட்சிகள் அபாரம்
  • மனைவி மண்ணுக்குள் இருக்கும்போது சிபிராஜ்  துளி பதட்டமும் சோகமும் இன்றி இருக்கிறார். அந்த ஹீரோயினுக்காக எல்லாம் சோகமாக இருக்க தேவையில்லை என்று நினைத்து விட்டாரோ என்னவோ.
  • மண்ணுக்குள் புதைத்து வைத்த பெட்டிக்குள் மழை நீர் இறங்குகிறது.
  • ஊட்டியில் மழை பெய்வது தெரிந்து சிபிராஜ்  ஊட்டியில் மனைவியை தேடி திரிகிறார். ஆனால் ஊட்டியில் மழை பெய்த அறிகுறியே எங்கும் இல்லை.  
  • நாய்க்கு வெறி பிடித்து விட்டது என்று மயக்க ஊசி போடுகின்றனர். ஆனால் மயங்கிய  நாயை பிடித்து அடைத்து வைக்காமல் அவரவர் வேலையை பார்க்க சென்று விடுகின்றனர்.
  • ஆறு மணிநேரம் பெட்டிக்குள் இருந்த கதாநாயகி ஏதோ தூங்கி விழிப்பதை போல எழுந்து நடந்து நடந்து செல்கிறார்.
  • சிபி நன்றாகத்தானே துள்ளி குதித்து நடக்கிறார். பின்னர் ஏன் காலில் கட்டு

மேலே சொன்னவை எல்லாம் சிறு துளிதான். லாஜிக் மீறாமல் எல்லாம் யதார்த்த படம் எடுக்க முடியாதுதான். இருந்தாலும் அதற்காக காட்சிக்கு காட்சியா லாஜிக் இல்லாமல் படம் எடுப்பது. நல்ல சினிமா விமர்சகர்கள் படத்தை பிரித்து எடுத்து விடுவார்கள். மகனுக்காக படம் எடுப்பது என்று முடிவு செய்த சத்தியராஜ் இன்னும்  நன்று அறிமுகமான நடிகர்களை முக்கிய வேடங்களில் நடிக்க வைத்து இருக்கலாம். படம் முடிந்தபின்  ஹீரோ போல முன்னிறுத்தப்பட்ட அந்த நாயும் மனதில் பதியவில்லை. படமும் கூட.


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...