Monday, May 16, 2016

அப்சரஸ் வந்திருந்தாள்

னது புத்தம் புதிய வீட்டின் சமையல் அறைக்குள்  அந்த தவளையைப் பார்த்ததும் ராஜுவுக்கு அறுவறுப்பாக இருந்தது. வந்த அந்த தவளை அவனை சற்று அலட்சியமாக பார்த்து விட்டு தனது வழியில் தத்தி தத்தி செல்ல ஆரம்பித்தது. அந்த தவளை பாத்திரங்களின் உள்ளே சென்று ஒளிந்து கொள்ளும் வாய்ப்பு இருந்ததை உணர்ந்த ராஜு வேகமாக அந்த தவளையை தவளையை மிதித்து பலமாக நசுக்கத் தொடங்கினான். சில வினாடிகளுக்கு பின் தவளை இறந்திருக்கும் என்று திருப்தி அடைந்து காலை நகர்த்தியதும்தான் தவளையின் உடலில் இருந்து புகை வருவதை உணர்ந்தான். அவன் என்ன நடக்கிறது என்று யோசிப்பதற்குள் புகை சமையல் அறை முழுவதும் பரவியது. புகைக்கு அவனுக்கு  மூச்சு முட்டியது..

அப்போதுதான் அதை கவனித்தான்.புகையின் மத்தியிலிருந்து ஒரு பெண் வெளிப்பட ஆரம்பித்தாள். ராஜு கண்களை கசக்கிவிட்டு கவனிக்கத் தொடங்கினான். சந்தேகமே இல்லை. உண்மையிலேயே அவள் பெண்தான். அந்த பெண் அப்படி ஒரு அழகு.ஹன்ஷிகா, தமன்னா எல்லாம் பிச்சை வாங்க வேண்டும். புராணப் படங்களில் வருவது போல உடை அணிந்திருந்தாள். உடலில் ஒரு இடம் விடாமல் நகை அணிந்திருந்தாள். அதிகம் ஜொலிப்பது தங்கமா இல்லை அவளின் முகமா என்று பட்டிமன்றமே நடத்ததலாம். நடப்பது கனவா இல்லை நனவா என்று நம்ப முடியாமல் ராஜு எக்கச்சக்கமாக பயந்திருந்தான். அந்த பெண், ஒரு பேய்தான் என்று முடிவு எடுத்து விட்டான். வெளியே ஓடலாம் என்றால் அந்த பெண் கட்சிதமாக வழியை மறைத்துக்கொண்டு நின்றிருந்தாள்.

ராஜுவுக்கு வேர்த்துக் கொட்டியது. தைரியத்தை வரவழைத்துக் கொண்டு “யாரு நீ?” என்றான்.

அந்த பெண் புன்னகை செய்தாள். “முதலில் உங்களுக்கு மிகுந்த நன்றிகள். பயப்படாதீர்கள் அன்பரே. நான்தான் அப்சரஸ்..”

“அப்சரஸ்னா ஒருவகை பேய்தான?”

“இல்லை இல்லை. நான் தேவலோக மங்கை.”

“நம்புற மாதிரியே இல்லையே?”

“நம்புங்கள் அன்பரே . தவளை பெண்ணாக மாறியதை பார்த்தீர்களா இல்லையா?”

“பார்த்தேன்”

“பின் என்ன சந்தேகம்?”

“சரி. நீங்க ஏன் பூமிக்கு  வந்தீங்க? அதுவும் என் வீட்டுக்கு?”

“ஒரு  லட்சம் ஆண்டுகளுக்கு முன் ஒரு ரிஷியை நான் அவமதித்தேன். அந்த ரிஷி எனக்கு இரண்டு சாபங்களை குடுத்தார். அதில் முதல் சாபம் நான் பூமியில் தவளையாக பிறக்க வேண்டும். அதன் பின் மானுடன் ஒருவன் என்னை தனது காலால் நசுக்கி சாப விமோட்சனம் அளிப்பான் என்பது. நான் அந்த ஒரு மானிடனுக்காக . ஒரு லட்சம் ஆண்டுகள் காத்திருந்து இதோ உங்களை கண்டடைந்து விட்டேன்”

ராஜுவுக்கு சந்தேகமாக இருந்தது. ஆனால் அவள் கூறுவதை நம்புவதுதான் அவனுக்கிருந்த ஒரே வழி. பின்னே பூட்டிய வீட்டுக்குள் தவளை பெண்ணாக மாறுகிறது என்றால் இப்படி ஒரு விளக்கம் இருந்தால்தான் உண்டு.

“சரி அப்சரஸ். இப்ப  நீங்க  உங்க லோகத்துக்கு போகலாம்தானே?”

“அது முடியாது அன்பரே. இன்னொரு சாபம் இன்னும் என் மேல் இருக்கிறது அதுவும் தீர்ந்தால்தான் நான் தேவலோகம் செல்ல முடியும்.”

இத்தனை வருஷம் அப்புறம் அந்த சாபம் எல்லாம் காலாவதி ஆகி இருக்கும். நீங்க தேவலோகம் போக எந்த தடையும் இருக்க வாய்ப்பு இல்லை”

“நானும் அப்படி இருக்கத்தான் ஆசைப்படுகிறேன் அன்பரே”

“அப்போ தேவலோகம் போகலாம்தானே?”

“அது எப்படி அன்பரே. எனக்கு உதவி செய்த உங்களுக்கு நான் உபகாரம்  செய்ய வேண்டாமா?”

“கட்டாயம் செய்யத்தான் வேண்டும். நீங்க என்ன பண்றீங்க ஒரு பத்து கோடி ரூபாய் எனக்கு குடுத்து உதவி செஞ்சா நான் என்னோட கடன் எல்லாம் அடைச்சுட்டு கடைசி காலம் வரைக்கும் சந்தோசமா  இருப்பேன்”
“ரூபாய் என்றால்”

“ம்ம். செல்வம், பொருள்”

“செல்வம் தர என்னால் முடியாது அன்பரே.”

“என்னம்மா இப்படி சொல்லுற. தேவலோகவாசிகள்  ஜீபூம்பானு சொல்லி  பணம் கொண்டுவர முடியாதா?”

“சித்து வேலை எனக்கு தெரியாது”

“அப்போ கெளம்பு”

“அது எப்படி. எனக்கு இத்தனை உதவி செய்த உங்களை நான் விவாகம் செய்து கொண்டு வாழ்நாள் முழுக்க உங்களுக்கு சேவை ஆற்ற வேண்டும். அதன் பின் தேவலோகம் சென்று விடுவேன்”

“அய்யோ அப்சரஸ். எப்படிப்பட்ட  ஒரு வாய்ப்பை எனக்கு கொடுத்து இருக்கீங்க. ஆனா எனக்கு ஏற்கனவே  கல்யாணம் ஆயிடிச்சு.  உங்களை கல்யாணம் பண்ண சட்டம் ஒத்துக்காது. அப்படியே சம்மதிச்சாலும் என்னோட பொண்டாட்டி சம்மதிக்கமாட்டா.”

“நீங்கள் அப்படி  சொல்லக்கூடாது நாதா”

“புரிஞ்சுக்கோங்க. இத்தனை அழகான பொண்ணை வச்சு காப்பாத்துறது இந்த ஊருல ரொம்ப கஷ்டம். அது மட்டும் இல்லாம நீங்க பணம்னா என்னன்னு கேக்குறீங்க. இனிமே நீங்க பணத்தை பத்தி தெரிஞ்சுகிட்டு இந்த ஊருக்கு அட்ஜஸ்ட் ஆகிறது எல்லாம் வாய்ப்பே இல்ல. . புரிஞ்சுக்கோங்க”

“தங்களுக்கு சேவை செய்யாமல் போவது எனக்கு வருத்தமாக இருக்கிறது” என்றாள் அப்சரஸ். உண்மையிலேயே வருத்தம் அவள் முகத்தில் தெரிந்தது.

“அப்போ ஒன்னு செய்யுங்க. எப்படியும் ஒரு பத்து கிலோக்கு நகை போட்டு இருக்கீங்க. அதுல ஒரு இரண்டு கிலோ எனக்கு குடுத்துடுங்க. என் பொண்டாட்டி ரொம்ப  சந்தோசப்படுவா. நானும் சந்தோசப்படுவேன்"

“இல்லை அன்பரே. அது என்னால் முடியாது. அது தேவலோக தங்கம்.”

ராஜுவுக்கு ஏமாற்றமாக இருந்தது. இத்தனை நகை இவளுக்கு எதற்கு எப்படியும் தேவலோகத்தில் எப்படியும் குறைந்த விலைக்கு  இதே போல நிறைய நகை கிடைக்கும் என்று நினைத்தவனுக்கு அந்த யோசனை வந்தது.. இவளின் மொத்த நகைகளையும் திருடிவிட்டால் இவள் எங்கே போய் புகார் குடுப்பாள். எப்படியாவது இன்று இரவுக்கு இவளை இங்கே தங்க சொல்லி நகைகளை அபகரித்து விடலாம். காலையில் எழுந்து கேட்டால் எனக்கு ஒன்றும் தெரியாது என்று கூறி விடலாம். இவள் நடந்ததை வெளியே போய் சொன்னாலும் யாரும் நம்ப மாட்டார்கள். முடிந்தால் இந்த பேரழகியை  வெளியே விற்கவும் கூட முயன்று பார்க்கலாம். ஆனால் அதற்கு இவளை முதலில் இங்கிருந்து வெளியேற விடக் கூடாது. அவளை அவனின் சிந்தனையை அப்சரஸ் கலைத்தாள்.

“என்ன சிந்தனை அன்பரே”

“அப்சரஸ். நீ எனக்கு உதவி செய்யணும்  அதானே உன் ஆசை. இன்னைக்கு  ராத்திரி  இங்கேயே தங்கு. நாம நாளைக்கு கல்யாணம் செஞ்சுக்கலாம்”

“மகிழ்ச்சி அன்பரே”

அப்சரசை தனது படுக்கை அறைக்கு அழைத்து சென்றான் ராஜு.

“என் பொண்டாட்டி நைட்டி எடுத்து தரவா”

“நைட்டி என்றால்?”

“இரவு உடை”

அப்சரஸ் இனிமையாக சிரித்து, “அதெல்லாம் வேண்டாம்.திருமணம் முடியும்வரை தேவலோக உடைகளையே அணிந்து கொள்கிறேன் ” என்றாள்.

பாவி, நகையை கழட்டாமல் தூங்கப் போகிறாளே இவள் என்று ராஜு நினைத்துக் கொண்டான். இரவு பலவந்தமாக திருடி விட முடிவு எடுத்தான். அப்சரஸ் அந்த அறையில் படுத்துக் கொண்டாள். ராஜு இன்னொரு அறையில் படுத்துக் கொண்டான்.

ரவு ஒரு மணி.

ராஜு சத்தம் எழுப்பாமல் அந்த அறைக்குள் வந்தான். அப்சரஸ் அசந்து தூங்கிக் கொண்டிருந்தாள். மெதுவாக சென்று அவளின் கால்களில் அணிந்து இருந்த அந்த பெயர் தெரியாத ஆபரணத்தை கழட்ட முயற்சி செய்தான் ராஜு. அந்த நகை  அவன் கையில் வந்தவுடன் திடுமென எழுந்தாள் அப்சரஸ். எழுந்தவள் பெருங்குரல் எடுத்து அழத் தொடங்கினாள். ராஜுவுக்கு ஒன்றும் புரியவில்லை. எதிர்ப்பாள் என்று எதிர்பார்த்தால் அழுகிறாளே. அவளின் அழுகை பலமாகிக் கொண்டே போனது. ராஜுவின் காதுகள் வலிக்கத் தொடங்கின

“அப்சரஸ். அழாத. என் தலையே வெடிச்சுடும் போல இருக்கு. . தெரியாம நகையை எடுத்துட்டேன். நீயே வச்சுக்க ”

“நான் அதற்கு அழவில்லை நண்பரே”

“பின்ன?”

“அந்த இரண்டாம் சாபம் இன்னும் என்னை விட்டு  நீங்கவில்லை. இப்போதுதான் சாபமே தொடங்கியிருக்கிறது. என்னால் அதை உணர முடிகிறது.இன்னும் எத்தனை நாள் அந்த சாபத்தோடு நான் வாழ வேண்டுமோ தெரியவில்லை”

“இன்னுமா அந்த சாபம் கன்டின்யு ஆகுது?”  

“நானும் அந்த சாபம் இனி பாதிக்காது என்றுதான் நினைத்தேன். ஆனால் விடாமல் துரத்துகிறது” சொல்லிக்கொண்டே அப்சரஸ் தனது உடலை பயங்கரமாக முறுக்கத் தொடங்கினாள். அவள் கண்கள் சிகப்பாக மாறத் தொடங்கியது. “எனக்கு உடலெல்லாம் வலிக்கிறது என்றாள்.

 “சரி என்ன சாபம்னு சொல்லுங்க. சரி செய்ய முயற்சி பண்ணலாம்”
“இல்லை. உங்களால் அது முடியாது”

“நான் முயற்சி பண்றேன்.இது ஏதோ உடம்பு பிரச்சினை மாதிரிதான் இருக்கு. நல்ல டாக்டர் கிட்ட கூட்டிபோறேன் ஆனா நான் உனக்கு சரி செஞ்சு விட்டா எனக்கு உன் நகை முழுக்க தரணும் சரியா”

“சரி” என்றாள் ராஜு உற்சாகம் ஆனான். இன்னமும் நகைகளை அடைய வாய்ப்பு இருக்கிறது

“நான் உங்களால் தவளை வாழ்வில் இருந்து விடுபட்டேன் என்று நீங்கள் அறிவீர்கள்”

“ஆமா. மேலே சொல்லு”

“இரண்டாம் சாபத்தின்படி நான் தவளை வாழ்வில் இருந்து விடுபட்டு  நான் பகலில் அப்சரஸாக வாழ்ந்தாலும் .....”

அவள் வாயில் இருந்து வார்த்தை வரத் தடுமாறியது. அவள் கை விரல்கள் தடித்து நகம் நீள்வது போல ராஜுவுக்கு தோன்றியது. ராஜு லேசாக பயந்தான்

“வாழ்ந்தாலும்????”.

“மூன்றாம் ஜாமத்தில் மனித ரத்தம் குடிக்கும் பூதமாக மாறி விடுவேன்” என்று அவள் சொல்லி முடிக்கும்போது அவளின் நாக்கு வயிறு வரை நீண்டு வளர்ந்து இருந்தது. சில வினாடி சிரமங்களுக்குப் பின் ராஜுவின் ரத்தத்தை அவள் குடிக்கத் தொடங்கியிருந்தாள்.
   

Thursday, March 24, 2016

வசிய வாக்கு வங்கி

லக்சன்ல நம்ம கட்சி ஜெயிக்கணும்னா இதை செஞ்சே ஆகணும் தலைவரே. கொள்கை முரண்பாடு பத்தியெல்லாம் இப்போ யோசிக்காதீங்க” சோமுக கட்சித் தலைவரிடம் தனது யோசனையை அவர் மகன்  எடுத்து வைத்தார்.

“பதவி  மட்டுமே நமது ஒரே கொள்கை மகனே. வெற்றி பெற வழி  கூறடா என் கண்மணி. நிச்சயம் உன் யோசனை சிறப்பாகவே இருக்கும் என்பது என் நம்பிக்கை”

“அதுல என்ன சந்தேகம் தலைவரே. இதுவரை இந்த தேர்தலுக்காக நாமளும் பேப்பர் விளம்பரத்துக்கு ஐம்பது கோடி, டிவி விளம்பரத்துக்கு  நூறு கோடின்னு எக்கச்சக்கமா செலவு செஞ்சுட்டோம். இருந்தாலும் எந்த கருத்துகணிப்பும் நமக்கு சாதகமா இல்ல. இந்த முறையும் அசோமுகதான் ஜெயிக்கும் போல தோணுது. இப்போ ஜெயிக்கணும்னா நமக்கு இதுதான் ஒரே வழி”

“பீடிகை போதும் மகனே. யோசனையை கூறு”

“ சொல்றேன் தலைவா. கவனமா கேளுங்க. உலகத்துலேயே  பெரிய ஹிப்னாடிச  நிபுணரை சீனால இருந்துவரவழைச்சு இருக்கேன். சாதாரண ஆளு இல்ல அவரு. டிவி வழியாவே அவரால மனோவசியம் பண்ண முடியும். அவரால”

“மனோவசியத்தை என் பகுத்தறிவு ஏற்று கொள்ள மறுக்கிறது”

“தலைவா, நம்ம பகுத்தறிவை தேவைப்படும்போது மட்டும்   பயன்படுத்திக்கலாம். இப்போ சொல்றதை கேளுங்க.”

“சரி சொல் மகனே”

“நாளையோட நம்ம பிரச்சாரம் முடியுது. நாம என்ன பண்ணப் போறோம்னா சரியா ராத்திரி 9:59க்கு நாம நம்மளோட பத்து சேனல்ல எந்த நிகழ்ச்சி நடத்துனாலும் அதை பாதில நிறுத்திட்டு  நம்ம மனோவசியக்காரரை நேரடி ஒளிபரப்புல பேச விடுறோம்”

“நேரடி ஒளிபரப்பா?”

“ஆமா. நேரடி ஒளிபரப்புலதான் அவரால வசியம் செய்ய முடியும்.”

“அது சரி மகனே. ஏன் கடைசி நிமிசத்துல வசியம் செய்யணும். பேசாமல் ஒருநாள் முன்பேசெய்து விடுவோமே?”

“வசியத்தை எவ்வளவு  தாமதம் செய்யுறோமா அவ்வளவு நல்லது தலைவா. ஏன்னா மக்களை வசியத்தோட பிடியில ஒரு குறிப்பிட்ட நேரம்தான் வைக்க முடியும். அது எவ்வளவு நேரம்ங்குறது வசியம் செய்யப்பட்டவன்களோட மன பலத்தை பொருத்தது”

“புரிகிறது”

“புரிஞ்சதுல. அப்புறம் என்ன? நம்ம சேனலை அந்த நேரத்துல ஒரு கோடி பேரு பாப்பாங்கன்னு டிஆர்பி சொல்லுது தலைவா. நாம அந்த சீனாகாரனுக்கு செலவழிக்கிற நூறு கோடி நமக்கு ஒரு கோடி ஓட்டா திரும்ப வரப்போகுது... வெற்றி நமக்கே

“வெற்றி என்ற  சொல்லை கேட்டவுடன் இதயம்இனிக்கிறது. தந்தையை காத்த தனயன் நீ. அந்த வசியக்காரர் என்ன பேசுவார் மகனே?”'

“சோமுகவுக்கு ஓட்டு போடுங்கன்னு நாம எழுதி குடுத்துட்டா போதும். அதை அப்படியே  படிப்பார் அவர். அப்போ அவர் கண்ணை மட்டும் நாம டிவில காமிச்சாப் போதும்”

“இப்போது எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது கண்ணே. பார்வைக்கு இது சாதாரண பிரசாரம். ஆனால் நமக்கோ வெற்றி கனியை பறித்துக் கொடுக்கும் ராஜ தந்திரம். புலிக்கு பிறந்தது பூனையாகாது என்று நிரூபணம் செய்துவிட்டாயடா"

"வெற்றி நமக்கே தலைவா"

"வெற்றி என்பது மூன்றெழுத்து. கட்சி என்பது மூன்றெழுத்து. ஆனால் வசியம் என்பது மட்டும் நான்கெழுத்து.”

வர்கள் திட்டப்படியே வசிய நிகழ்ச்சி நடந்தது. ஆனால் ஆளுங்கட்சி   அசோமுக ஆட்சியை பிடிக்கிறது. தோல்வியை ஆராயும் கூட்டத்தில் தலைவர் கோபத்தோடு அமர்ந்திருக்கிறார். அவரது மகனும் மற்ற கட்சி முக்கிய உறுப்பினர்களும் தலையை தொங்கப் போட்டு அமர்ந்திருக்கின்றனர். கோபத்தில் தலைவர் செந்தமிழை மறக்கிறார்.

“என்னய்யா இது? எப்பிடி இவ்ளோ மோசமா தோர்த்தோம்? வழக்கமா வர்ற ஓட்டு கூட வரலியே?”

“அதான் தலைவா எங்களுக்கும் புரியல”

“போச்சு இனி அஞ்சு வருஷம் ஒன்னும் செய்ய முடியாது.. எனக்கு அந்த சீனாகாரன் மேலதான் சந்தேகமா இருக்கு. என்னய்யா செஞ்சான் அவன். அந்த வீடியோவை காட்டுங்க” என்று தலைவர் கூறியதும் தனது பையில் இருந்த மொபைலை எடுத்து கட்சியின் சேனாதிபதி அந்த வீடியோவை ஓட வைக்கிறார்.

வீடியோவில் “ஆஆஆஆஆஆஆஆஆ” என்று இழுத்து கொட்டாவி  விட்ட சீனாக்காரர் . சோமுகவுக்கு ஓட்டு போடுங்க” என்றார்

“இன்னொரு முறை போடு”

“ஆஆஆஆஆஆஆஆஆ................. சோமுகவுக்கு ஓட்டு போடுங்க”

“அது என்னய்யா ஆஆஆஆஆஆஆஆஆ”

“அது ஆஆஆஆஆஆஆஆஆ இல்ல தலைவரே . அவர் கொட்டாவி விட்டார்”

“அடப்பாவிகளா. அது கேக்க ஆசோமுகவுக்கு ஓட்டு போடுங்கன்னு சொல்ற மாதிரி இருக்கு”

“அட ஆமாம் தலைவரே”

“ஆமாவா. வசியம் பண்றேன்னு சொந்த செலவிலே சூனியம் வச்சுட்டீங்களேடா. என்ன செஞ்சாலும் நம்மால ஜெயிக்க முடியலையே”


Monday, March 14, 2016

எல்லாரும் கெட்டவரே

“ஐயா. நீங்க பெரியவரு. facebook,whatsappல நெறைய எழுதறீங்க. இந்த முறை தேர்தல்ல எனக்கு  யாருக்கு ஒட்டு போடுறதுன்னு வழி காட்டுங்க ஐயா”

“அது என் கடமை தம்பி”

“இந்த முறை ஆளுங்கட்சிகே ஒட்டு போடலாமா?”

“ஸ்டிக்கர் ஓட்டுறது தவிர. ஒண்ணுமே செய்யல தம்பி அவங்க.  இந்த அஞ்சு வருசத்துல.அடிமை அரசியலை வளர்த்ததுதான் ஒரே சாதனை”

“அப்போ இதுக்கு முன்னாடி ஆண்டவங்களுக்கு?”

“இதுவரைக்கும் கோடிக்கணக்குல கொள்ளை அடிச்சது பத்தாதுன்னு திரும்ப வேற ரெண்டு பெரும் சேர்ந்து கூட்டணி வச்சுகிட்டு  ஒட்டு கேட்டு வராங்க. போன முறை பதவில இருந்தப்போ மக்களை  என்ன பாடுபடுத்தினாங்க இவங்க”

“அப்போ அந்த நடிகருக்கு?”

“அவர் பேசுறது அவருக்கே புரியாது.  கூட்டணிக்கு பேரம் பேசிட்டு எதுவும் சரியா வரலைன்னதும்  தனியா நின்னு கிங் ஆகப் போறதா அவரே சொல்லிக்கிறாரு. போன அஞ்சு வருசத்துல மக்களுக்கு எதாச்சும் பண்ணனும்னு முயற்சியாவது செஞ்சாரா?”

“அப்போ அந்த நாலு பேருக்கு?”

“நாலு பேரு மக்களுக்கு நல்லது பண்ணப் சேர்ந்துட்டாங்கலாம். இவங்க அவங்களோட பி டீம்யா. அதுல  எம்பியா இருந்தவரு அவர் தொகுதிக்கு என்ன நல்லது செஞ்சாரு முதல்ல?”

“அப்போ பெரிய படிப்பு படிச்சவருக்கு?”

“இத்தனை வருசமா ஜாதி அரசியல் பண்ணிட்டு மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் கொண்டு வரப் போறாங்களாம்.”

“அப்போ சென்ட்ரல் ஆளுங்களுக்கு”

“மதத்தை வச்சு அரசியல் பண்ற ஆளுங்க அவங்க. நாட்டை சுடுகாடா மாத்திடுவானுங்க”

“அப்படின்னா மிச்சம் இருக்குறவரு  செந்தமிழர்தான். கட்டாயம் அவரு நல்லவராதான் இருக்கணும்”

“இலங்கைத் தமிழரை காப்பாத்தப் போறேன்னு அரசியலுக்கு வந்துட்டு . இப்போ தமிழ்நாட்டை தமிழன்தான் ஆளணும்னு அரசியல் பண்றாரு. அவரை நம்பாதே தம்பி  ”

“ஐயா!. அப்போ இங்க யாருமே நல்லவங்க இல்லையா ஐயா. இந்த அரசியலை நினைச்சு  எனக்கு  மனசு நொந்து போச்சு. பக்கத்தில ஒரு ஆன்மீக குரு யோகா கிளாஸ் நடத்துறாரு. அங்க போய் சேர்ந்து சாமியாரா ஆயிடுறேன்”

“ஐயோ அவரா?. யானை தண்ணி குடிக்கப் போற பாதையெல்லாம் வளைச்சு போட்டுகிட்டாறு . அவர் மேல நெறைய கம்ப்லைண்ட்ஸ் இருக்கு தம்பி. அவர் கிட்ட எல்லாம் போகாத தம்பி.”

“யோவ்வ்வ்வ்வ்”  

  

Sunday, February 7, 2016

காதலிக்கும் நேரமில்லை

ந்த காலைப் பொழுதில் மதுரை டிவிஎஸ் நகர் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. அந்த டிவிஎஸ் நகரின் முதல் தெருவில் ஆறாவது வீட்டில்  கதை ஆரம்பிக்கிறது.

 “என்னமா தலை வாருற. நான் இன்னும் சின்னப் பொண்ணு இல்ல. இன்னைக்கு ப்ளஸ் ஒன் ஜாயின் பண்ணப் போறேன். நீ இப்பிடி ரெட்டை ஜடை போட்டா எல்லா பசங்களும் கிண்டல் பண்ணுவாங்க”  என்றாள் கீர்த்தனா.

“இந்த வயசுல ரெட்டை சடை போடாம எப்படி போடுவ. எவனாச்சும் கிண்டல் பண்றான்னா  எனக்கு போன் பண்ணு. வந்து உண்டு இல்லன்னு ஆக்கி விட்டுடுறேன் ” என்றாள் அவளின் அம்மா

“முதல் நாளே ஸ்கூலுக்கு லேட் ஆக்கிடுவ போலயே. சீக்கிரம் கிளம்புமா” என்று அவளின் அப்பா  குரல் குடுத்தார்.

“இதோ கிளம்பிட்டேன் பா. ஜஸ்ட் பைவ் மினிட்ஸ். லேசா பவுடர் அடிச்சிட்டு கிளம்ப வேண்டியதுதான்”

“சரி. ஸ்கூல்ல யாரும் எப்போ யூனிபார்ம் வரும்னு கேட்டா அடுத்த வாரம்னு சொல்லு"

முப்பது நிமிடங்கள் கழிந்த பின் அவள் தனது சைக்கிளில்  பள்ளிக்கு கிளம்பினாள். ஏற்கனவே பத்து நிமிடங்கள் தாமதம் ஆகிவிட்ட பரபரப்பில் வேகவேகமாக சைக்கிளை மிதிக்கத் தொடங்கினாள். முதல் நாள் தாமதத்தை  மன்னித்து விடுவார்கள் என்ற தைரியம் அவளுக்கு. பத்து வருடங்கள் படித்த பள்ளியை விட்டுகிட்டு புது பள்ளி. புது நண்பர்கள். பயமும் மகிழ்ச்சியும் கலந்த ஒரு உணர்வு அவளுக்கு.

ந்த பள்ளி கட்டிடம் பிரம்மாண்டமாக நின்றிருந்தது. இதுவரை படித்த பள்ளியை விட இது மிகப் பெரிய பள்ளி. எந்த பக்கம் செல்வது என்று தெரியவில்லை. பதினோராம் வகுப்பு முதல் மாடியில் என்று அவளின் தந்தை கூறியது நினைவுக்கு வந்தது. மாடிப் படிகளில் ஏறி வேகமாக ஓடத் தொடங்கினாள்.

X A
X B
X C
XI A
XI B

அப்பாடா. கண்டுபிடித்துவிட்டாள். தயக்கத்துடன் வகுப்பில் நுழைய முயலும்போது அந்த குரல் தடுத்தது.

“ஹலோ மேடம். எங்க போறீங்க?”

குரல் வந்த திசையில் திரும்பினாள். ஒல்லியாக ஒரு உருவம் கண்ணாடி அணிந்து நின்று கொண்டிருந்தது.

“யாரு நீ?”

“மை  நேம் இஸ் காந்தி”

“உன் பேரை கேட்கல. எதுக்கு என்னை உள்ள விட மாட்டேங்குற.?”

“உனக்கு அஞ்சு நிமிஷம் முன்னாடி வந்த என்னையே உள்ள விடல. இப்போ வந்த உன்னை உள்ள விட்டுடுவாங்களா?”

“நீ எதுக்கு லேட்டா வந்த?”

“இப்போதான லீவ் முடிஞ்சுது. அதனால காலைல  எந்திரிக்க கஷ்டமா இருந்தது”

“மிஸ் காரணம் கேட்டதுக்கு இப்படித்தான் பதில் சொன்னயா?”

“இல்ல. சிம்பிளா தூங்கிட்டேன்னு சொன்னேன்”

“உன்னை வெளிய நிறுத்துனதுல தப்பே இல்ல. காந்தின்னு பேர்  வச்சதால உண்மைய மட்டும்தான் பேசுவியா? ” சொல்லிக் கொண்டே வகுப்பினுள் நுழைந்தாள். வகுப்பரையில்  ஒரு இளம்பெண் பாடம் எடுத்துக் கொண்டிருந்தாள்.

“எக்ஸ்க்யூஸ் மீ மிஸ்”

“யாரு நீ?”

“மை நேம் இஸ் கீர்த்தி. இந்த கிளாஸ்தான்  மிஸ்”

“நீங்க எதுக்கு மேடம் லேட்?”

“நான் ஸ்கூலுக்கு சீக்கிரமே வந்துட்டேன் மேடம். கரஸ்பாண்டன்ட் அங்கிளை மீட் செஞ்சுட்டு வர டைம் ஆகிடுச்சு”

“கரஸ்பாண்டன்ட் உனக்கு அங்கிளா?”

“ஆமா மிஸ். அவரை எப்பவும் அப்படிதான் கூப்பிடுவேன்”

“சரி நீ உள்ள வந்து உக்காரும்மா.”

அவள் வகுப்புக்குள் நுழைந்தாள்.

“எந்த டெஸ்க்ல மிஸ்”

“பர்ஸ்ட் டெஸ்க்ல”

முதல் பாட வேளை முடிந்தது. வெளியில் நின்றிருந்த மாணவன் வகுப்புக்குள் நுழைந்தான். ஆசிரியர்களுடன் அறிமுகப்படுத்தி கொள்வதில் அன்றைய பொழுது முடிந்தது. கீர்த்தனா வீட்டுக்கு கிளம்பிக் கொண்டிருந்தாள்.

“கீர்த்தனா. ஒரு நிமிசம் நில்லு”

“சொல்லுங்க காந்தி”

“நெஜமாவே கரஸ்பாண்டன்ட் உனக்கு தெரிஞ்சவரா?”

“ஆமா. எனக்கு தெரிஞ்சவர்தான். அட்மிசன் அப்போ பார்த்தேன்.”

“என்னது? எந்த தைரியத்துல பொய் சொன்ன?”

“கரஸ்பாண்டன்ட் கிட்ட அவங்க பொய் இதெல்லாம் கேட்க மாட்டாங்கங்குற தைரியத்துலதான். இனிமே பாரு அந்த மிஸ் எனக்கு என்ன மரியாதை தராங்கன்னு”

“ரெட்டை ஜடை போட்டு பாப்பா மாதிரி இருந்துட்டு என்ன தெளிவா இருக்க?”

“நான் மட்டும் இல்ல. இங்க எல்லா பொண்ணுங்களும் தெளிவுதான். நீ மொட்டை போடாத காந்தி மாதிரி பேசுறதை நிறுத்திட்டு பொய் சொல்ல கத்துக்கோ.

அவள் சைக்கிளை மிதிக்கத் தொடங்கினாள். அவன் பார்த்துக் கொண்டே நின்றான்.


  தொடரும் 

Sunday, January 24, 2016

தமிழ்நாடே ஜென்தான் – ஒரு அரசியல் ஜென் கதை

பான்பாக் என்ற ஜென் துறவி மக்களுக்கு போதனை செய்து கொண்டிருந்தார். அப்போது கூட்டத்தில் இருந்து கிஷிடோமோ என்ற  ஒருவர் எழுந்து “குருவே! உங்களை விட முற்றிய ஜென் நிலையை அடைந்த மக்கள் யாரேனும் இருக்கிறார்களா? அப்படி யாரேனும் இருந்தால் அவர்களை நான் பார்க்க முடியுமா” என்றார்.

அவரை பார்த்து புன்னகை செய்த ஜென் குரு “என்னை விட முற்றிய ஜென் துறவிகள் ஏழு கோடி பேர் இருக்கிறார்கள்.  அவர்களை பார்க்க வேண்டுமென்றால் நீ தமிழ்நாடு என்ற பகுதிக்கு செல்ல வேண்டும்” என்றார்

கிஷிடோமோ ஆச்சரியமடைந்தார். “அத்தனை கோடி ஜென் துறவிகள் ஒரே இடத்திலா? அவர்கள் எனக்கு போதனை அளிப்பார்களா?” 

”அவர்கள் போதனை அளிக்க மாட்டார்கள். நீ அவர்களுடன் இணைந்து இருபத்தி ஐந்து ஆண்டுகள் வாழ்ந்தால் நீ அவர்களை உணர்ந்து கொள்ளலாம்”  என்றார் துறவி.

கிஷிடோமோ  உடனே தாம் அவர்களுடன் வாழ்ந்து அவர்களை உணர்ந்து  வருவதாக கூறி தமிழ்நாடுக்கு வந்தார்.  

இருபத்தி ஐந்து ஆண்டுகள் கழிந்தன. ஜென் துறவியை பார்க்க மீண்டும் சொந்த ஊருக்கே வந்தார் கிஷிடோமோ. அவரை அடையாளம் கண்ட துறவி “நீங்கள் தேடியதை அறிந்து கொண்டீர்களா?” என்று கேட்டார்.

“அறிந்து கொண்டேன் குருவே. மிகப் பெரிய துறவிகள் அவர்கள். ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை தேர்தல் என்று ஒன்று அரசியல் நடத்தி  அரசு நடத்த  ஒரு கட்சியை  தேர்ந்தெடுக்கிறார்கள்.  அடுத்த தேர்தலில் மற்றொரு  கட்சியை தேர்ந்தெடுக்கிறார்கள். ஆளும் காலத்தில் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் என்ன தவறு செய்தாலும், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஏமாற்றினாலும்   அவர்கள் அதைப் பெரிதாக எடுத்துக்கொண்டு அவர்களைப் புறக்கணிப்பதில்லை. அவர்களின் மேல் கோபம் எதுவும் கொள்ளாமல் அவர்களை மன்னித்து விடுகிறார்கள். இருபத்தி ஐந்து ஆண்டுகளாக அவர்களை மாறி மாறி தேர்ந்தெடுக்கும் சம நிலையையும் அவர்கள்  தவற விட்டதும்  இல்லை. மிகப் பக்குவம் அடைந்த நியாயஸ்தர்கள் அவர்கள்” என்றார்  கிஷிடோமோ.

"நீயும் பக்குவம் அடைந்து விட்டாய்" என்றார் குரு.

அவர்கள்  தேநீர் பருகினார்கள்.


Friday, January 1, 2016

இட்லி, தோசை, சட்னி - மறைக்கப்பட்ட வரலாறு

ட்லி, தோசை, சட்னி. நம் வாழ்வில் தவிர்க்க முடியாத உணவுப்பொருட்கள். தினம் தினம் இவற்றை உண்டு பசியாறும் நாம் என்றாவது ஒரு நாள் இவற்றின் வரலாறை பற்றி சிந்தித்திருப்போமா? இந்த உணவுப்பொருட்களின் உருவாக்கமும் ஒட்டு மொத்த பாரத ஒற்றுமையும் பின்னிப் பிணைந்து இருப்பதை   நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள். இந்த உணவுப் பொருட்களை கண்டறிந்த அந்த மாமன்னரின் புதைந்து  போன சரித்திரத்தை  தோண்டி எடுத்து உங்களின் பார்வைக்கு அளிப்பதில் பெருமை கொள்கிறேன்.

முன்னொரு காலத்திலே தமிழ்நாட்டில் பெயர் தெரியாத மன்னர் ஒருவர் வாழ்ந்து வந்தார். தினமும் தானியங்களை வேக வைத்து சாப்பிடுவது அவருக்கு சலிப்புத் தட்டியது. எனவே பண்டைய பாரத தேசத்தின் சிறந்த அறிவியல் அறிஞர்கள் அனைவரையும் தனது நாட்டிற்கு வரவழைத்து “அறிஞர்களே! ஒரே மாதிரியான சாப்பாட்டை சாப்பிட்டு எனக்கு அலுத்து விட்டது. நீங்கள் ஒரு மாதம் நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். தேவையான  ஆராய்ச்சி செய்து  புதுமையான உணவுப்பொருட்களை உருவாக்குங்கள்” என்றார். மன்னர் சொல்லிவிட்டாரே என்று வேறு வழி இல்லாமல் அறிவியல் அறிஞர்களும் சம்மதித்தனர்.

நாட்கள் கடந்தது. கன்னட தேசத்தில் இருந்து வந்த அறிஞர் அரிசியை மாவாக ஆட்டி வைத்து விட்டு பின்னர் அதை என்ன செய்வது என்று செய்வது என்று தெரியாமல் குழம்பிக் கொண்டிருந்தார். ஒரு நாள் குளிக்க வெந்நீர் தயார் செய்யும்போது அவரின் மூலையில் ஒரு மின்னல் வெட்டி மாவை நீராவியில் வேக வைத்து மன்னனுக்கு அளித்தார். அதை உண்ட மன்னனும் திருப்தி அடைந்து இந்த உணவை எதில் செய்தார் எனக் கேட்டார். கன்னடத்துக்காரர் தனது மொழியில் “ஹிட்டுலி” (மாவில்) என்றார். அதை சரியாக கேட்காத  மன்னர், “இட்டிலி! இட்டிலி! அருமை அறிஞரே” என்று அவரை பாராட்டி உலகின் முதல் இட்டிலியை தாம் சாப்பிட்டதாக  தனது  குடிமக்களுக்கு அறிவிக்க உத்தரவிட்டார்.

வெறும் இட்டிலியை சாப்பிட்டுக் கொண்டிருந்த  மன்னருக்கு ஏதோ ஒன்று குறைவதாக தோன்றியது. தேங்காயை அரைத்து வைத்து தொட்டுக் கொண்டால் சுவையாக இருக்கும் என எண்ணினார். தனது பணியாளை அழைத்து தேங்காயை உடனே அரைத்து கொண்டு வர  ஆணையிட்டார். ஆனால் பணியால் மரத்தின் மேல் ஏறி தேங்காயை பறித்து அரைத்து கொண்டு வர நேரம் ஆகிவிட்டது. கோவம் அடைந்த மன்னர் பணியாளிடம்,”சட்டுன்னு அரைக்க மாட்டாயா?” என்று கோபத்துடன் கேட்டார். பயத்தில் பணியாள் வாய் குளறி “சட்டினி தான் மன்னா” என்றான். “குடு அந்த சட்டினியை” என்று மன்னர் அதை வாங்கி உண்டு அந்த சுவையில் மயங்கினார்.

இட்லி, சட்டினியை மட்டும் நான்கு  நாட்கள் சாப்பிட்ட மன்னருக்கு அப்போதுதான் வரவழைத்து இருந்த வட இந்திய அறிஞர்  நினைவுக்கு வந்தார். இத்தனை நாட்கள் ஆகியும் அவர் எதுவும் கண்டு பிடிக்காமல் போனதால் ஆத்திரம் அடைந்த அவர் வேகமாக அந்த வட இந்திய சமையல்காரரை வரவழைத்து அன்றைய  இரவுக்குள்  புதிய உணவு வரவில்லை என்றால் தலை துண்டாகி விடும் என்று எச்சரித்தார். பயந்தபோன  வட இந்திய அறிஞர் வேகமாக தனது ஆராய்ச்சி நிலையம் வந்தார். அங்கே கன்னடக்காரர் இட்லிக்கு அரைத்து வைத்து இருந்த மாவு   புளித்துப் போய் இருந்தது. ஆத்திரத்தில் அந்த மாவைத் தூக்கி வெளியே கொட்டி விட்டு அமர்ந்து அழத் தொடங்கினார். இறுதியில் மன்னரிடம் மன்னிப்பு கேட்டு அழலாம் என்று வெளியே வந்தபோது தான் வெளியே கொட்டிய மாவு வெயிலில் காய்ந்த கருங்கல்லில் விழுந்து வடிவம் மாறியிருப்பதை கவனித்தார். அதை சுவைத்து பார்த்தவர் அதே போல் நிறைய செய்து மன்னரை காண சென்றார்.அந்த பண்டத்தை எடுத்து சுவைத்த மன்னர் உற்சாகம் அடைந்து அந்த பண்டத்தை மன்னருக்கு சென்று தந்தார். அதன் சுவையில் மெய் மறந்த மன்னர் இன்னும் சாப்பிட நினைத்து  “ரெண்டு வேண்டும்” என்றார். வட இந்தியருக்கு அவர் சொல்வது புரியாமல் “ரெண்டு? கியா ரெண்டு” என்றார். எரிச்சல் அடைந்த மன்னர் தனக்கு தெரிந்த ஹிந்தியில் “அதாண்டா தோ. சை இவனை வச்சுகிட்டு” என்றார். அதை “தோசை”  என்று புரிந்து கொண்ட ஹிந்திகாரர் உணர்ச்சிப்பெருக்கில் “தோசை! தோசை!” என்று வாய்விட்டு கத்தினார். மன்னரும் மகிழ்ச்சி அடைந்து வட இந்தியருக்கு மூடை மூடையாக  தங்க காசுகள் வழங்கினார்.

அதற்கு மறுநாள்  அந்த நாட்டின் குடிமகன் ஒருவர் மன்னரை சந்தித்து விழுந்து வணங்கி தான் கையில் வைத்து இருந்த பொருளை சாப்பிட குடுத்தார்.  அரசர் அதை தனது  அரசவைக்கு வந்து இருந்த வெளிநாட்டு பயணி ஒருவருக்கு குடுக்க அதை உண்ட வெளிநாட்டுக்காரர்  “it is stinking” என்றார். அதிர்ச்சியடைந்த மன்னர் “என்னய்யா இது மோசமான வாடை?” என்று குடிமகனிடம் வினவினார். “மன்னா! அது கேட்டு போச்சு. அவரை இதை சாப்பிட சொல்லுங்க” என்று வேறு ஒன்றை எடுத்துக் கொடுத்தார். அதன் சாப்பிட்ட வெளிநாட்டுக்காரர் “வாடை is awsome” என்று சொல்ல வடை அவதாரம் எடுத்தது.

அதன் பின் அந்த மன்னர் அரசாட்சியை துறந்து தான்  கண்டறிந்த உணவுப் பொருட்களை தமிழகம் முழுவதும் பரப்பினார். இவ்வாறாக இன்று நாம் சாப்பிடும்  இட்லி,சட்னி,தோசை,வடை வேறு வேறு மொழிகள் மூலம் பெயர் பெற்றது. இப்படி அந்த அந்த உணவுப்பொருட்களை பரப்பிய மன்னரின் நினைவு நாள் இன்று. இன்றைய தேதியில் மட்டும் அல்ல. இட்லி, வடை, தோசை உண்ணும்போதெல்லாம்  அந்த மன்னரை   நினைவு கொள்ள வேண்டியது நம் கடமை.

முழுக்க முழுக்க பொழுதுபோக்குக்காக எழுதப்பட்டது. படிப்பவர்கள்  யாரேனும்   இதை நம்பித் தொலைத்தால் வத்திகுச்சி வலைப்பூ பொறுப்பேற்காது

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...