Sunday, March 9, 2014

கோச்சடையான் ட்ரைலர் மற்றும் பாடல்கள் – ஒரு பார்வை

சில  நாட்களுக்கு முன் வெளிவந்த கோச்சடையான் டீசரை பார்த்தபோது ஏமாற்றமாக இருந்தது. இத்தனை செலவு செய்து இத்தனை சாதாரணமாக படத்தை எடுத்து விட்டார்களே என்று. அந்த எண்ணத்தை தவிடுபொடியாக்கி விட்டது இப்போது வெளிவந்துள்ள ட்ரெய்லர்.

ட்ரெய்லரின்  ஒவ்வொரு ப்ரேமிலும் படக்குழுவினரின் கடின உழைப்பு தெரிகிறது. அனிமேஷன் ரஜினியின் உடல்மொழி தத்ரூபமாக இல்லாவிட்டாலும் திருப்திகரமாகவே உள்ளது. ஆனால் பெரிய குறை ரஜினியின் முகவெட்டு. ரஜினியின் முகத்தை வடிவமைக்க இன்னும் சற்று மெனக்கெட்டு இருக்கலாம். அதே போலதான் ட்ரெய்லரில் வரும் மற்ற ஆண்களின் முகங்களும். சற்று சிரமப்பட்டுதான் நாசரை அடையாளம் காண முடிகிறது. ஆனால் ஆது என்ன மாயமோ பெண்களின் முகங்கள் அத்தனை துல்லியமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தீபிகா, ஷோபனா, ருக்மிணி என்று அத்தனை அனைவரின் தோற்றமும் அத்தனை இயல்பாக வழக்கமான படங்களில் பார்ப்பது போல. மனிதர்களை போலவே கழுதைப்புலிகள், டால்பின்கள், குதிரைகள் என்று மற்ற விலங்குகளையும் நன்றாகவே காட்சிப்படுத்தி உள்ளனர். ஒவ்வொரு காட்சியிலும் பிரம்மாண்டம். 

அதே நேரத்தில்  ஒவ்வொரு காட்சியிலும் முன்னணி கதாபாத்திரங்களை காண்பிப்பதில் எடுத்த சிரத்தையில் சிறிதளவு துணை கதாபாத்திரங்களை காண்பிப்பதிலும் எடுத்து இருக்கலாம். ஒரு காட்சியில் ரஜினியின் பின் நிற்கும் பணிப்பெண்கள் performance capturing செய்யப்பட்டவர்கள் போல இல்லாமல் பொம்மை போல தெரிகின்றனர். ரஜினியின் தாண்டவ காட்சியில் பின்னால் நிற்கும் மக்கள் வட இந்தியர்களை போல உடை அணிந்து இருப்பதன் காரணம் கதையா? அல்லது  கவனப்பிசகாக செய்ததா என்பது படம் பார்த்தால் தெரிய வரலாம். இது போன்ற விஷயங்கள் சிறியது போல தெரிந்தாலும் இவைதான் ‘டின்டின்’ போன்ற படங்களையும் இந்த படத்தையும் வேறுபடுத்து காண்பிப்பவை. ‘டின்டின்’ படத்தில் கதாபாத்திரங்களின் நிழல் தலைமுடி காற்றில் அசைவது போன்றவை கூட மிகுந்த சிரத்தை எடுத்து காண்பிக்கப்பட்டு இருக்கும். இருந்தாலும் நமக்கு  இருக்கும் பட்ஜெட்டுக்கு இத்தனை செய்து இருப்பதே பெரிய விஷயம்.



பாடல்களை பொறுத்தவரை A.R,ரஹ்மான் எந்த குறையும் வைக்கவில்லை. அதே போல வைரமுத்துவும். உண்மையை சொன்னால் தன்னுடைய பாடல் வரிகளில் ரஹ்மானின் இசையையே மிஞ்சி விடுகிறார். வைரமுத்துவின் வார்த்தைகளை அமுக்காமல் இசை அமைத்த ரஹ்மானுக்கு நன்றி. அத்தனை பாடல்களும் கால இயந்திரத்தில் பின்னோக்கி இழுத்து சென்று விடுகின்றன.

‘காதல் கணவா’ பாடலில் லதா ரஜினியின் குரலில் அத்தனை வசீகரம்.

ரஜினி வரிகளை வாசிக்கும்  ‘’மாற்றம் ஒன்றுதான்’ பாடல்  அருமை.

‘எங்கள் கோச்சடையான்’ பாடல் இசையில்  பிரமாண்டம்.

‘மெதுவாகத்தான்’, ‘இதயம்’ பாடல்கள்  மெல்லிசையில் ஈர்க்கின்றன.

‘கர்ம வீரன்’ பாடலும் கேட்க நன்றாகவே உள்ளது.

ட்ரெய்லரில் பார்த்தவரை K.S.ரவிக்குமாரின் திரைக்கதையும், ரஹ்மானின் இசையும்  ரசிகர்களை கவர்ந்து விடும் என்றே தோன்றுகிறது. இருந்தாலும் இந்த புது முயற்சியை ரசிகர்கள் ஏற்று கொள்வார்களா? படத்தில் வரும் உருவத்தை ரஜினியாக ஒத்து கொள்வார்களா என்பதை மில்லியன் டாலர் கேள்வி. ஆனால் அந்த உருவத்தை ஏற்று கொண்டாலும் ஏற்று கொள்ளாவிட்டாலும் ரஜினியின் குரலுக்காகவே படத்தை குறைந்தது மூன்று முறை பார்ப்பார்கள் . ஏனென்றால் அவர்கள்தான் ரஜினி ரசிகர்கள்.

Saturday, March 8, 2014

தர்மமில்லா கூட்டணிகள்

வீட்டை கட்டிப்பார். கல்யாணத்தை செய்து பார்” என்று சொல்வார்கள். இன்றைய தேதிக்கு அதை “கூட்டணி அமைத்து பார். கூட்டணி பேச்சு வார்த்தை அமைத்து பார்” என்று மாற்றி கொள்ளலாம் போல. எத்தனை பேரங்கள், எத்தனை மணி நேர பேச்சு வார்த்தை. தேர்தலில் வெற்றி பெறுவதை விட வெற்றிகரமான கூட்டணி அமைப்பதே பெரும்பாடாக உள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக நடந்த கூத்துகளை நினைத்து பார்த்தாலே பிரமிப்பாக உள்ளது. கூடவே இருந்த தோழர்களை அதிமுக கழட்டி விட்டுவிட்டது. திருமாவுக்கு தொகுதிகள் பற்றவில்லை என்று தொண்டர்கள் உருவ பொம்மையை எரிக்கிறார்கள். காங்கிரஸ்காரர்களுக்கு யாருடன் சேருவது என்றே தெரியவில்லை. மூழ்கும் கப்பல் என்று நினைத்து கொண்டு அவர்களுடன் சேர தயங்குகிறார்கள். இன்னும் சில கட்சிகள் யாருடன் கூட்டணியில் இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை.

சொப்பன சுந்தரியை வைத்து இருப்பது யார் என்று கூட கண்டுபிடித்து விடலாம் போல. ஆனால் எந்த கூட்டணியில் எந்த கட்சியை  யார் வைத்து இருக்கிறார்கள் என்று புரிந்து கொள்ளும் முன் மண்டை காய்கிறது. சில நாட்களுக்கு முன் கட்டி தழுவி கொண்டவர்கள் இப்போது கட்டி உருள்கிறார்கள். தமிழ்நாட்டில் மட்டுமே இப்படி என்றால் ஒட்டுமொத்த இந்தியாவிலும் நிலைமை எப்படி இருக்கும் என்று சொல்ல வேண்டியதே இல்லை.

இதில் கேப்டன் வழி தனி வழி. கூட்டணி பேச்சு வார்த்தைக்காக மற்ற கட்சிகள் ஏங்கும் மோஸ்ட் வான்டட் தலைவர். தொண்டர்களிடம் கூட்டணி வேண்டுமா என்று கேட்டு கொண்டார். யாருடனும் கூட்டணி இல்லை என்றார். கூட்டணிக்காக ஒட்டு மொத்த தமிழ்நாடும் அவரை தேடி கொண்டிருக்கும் நேரத்தில் வெளிநாடு சென்று விட்டார். எதற்கு என்று கேட்டால் மகனுக்கு லொகேஷன் பார்க்க சென்றேன் என்கிறார். ஆனால் சும்மா சொல்ல கூடாது. அரசியல் வியூகங்களில் தமிழ்நாட்டையே கலங்கடிக்கிறார். அவருடைய  ராஜதந்திரங்கள் எல்லாம் அவருடைய பேச்சை விட மிரட்டலாக உள்ளன.


இன்றைய தேதியில்  கூட்டணிகள்  ஓரளவு முடிவு செய்யப்பட்டு விட்டன. அரசியல்வாதிகளுக்கு பிரசாரத்தின்போது யாரை திட்டுவது என்று தெளிவாக  தெரிந்து விட்டது.  அவர்களின் பிரச்சினை தீர்ந்து விட்டது. ஆனால் மக்களின் பிரச்சினை? தேர்தலுக்கான கூட்டணி இப்போது முடிவாகி விட்டது என்று தெளிவாக ஓட்டு போட முடியாது. ஏனென்றால் தேர்தலுக்கு பின் பதவிக்கான கூட்டணி எப்படி அமையும் என்று யாருக்கும் தெரியாது. யாரோ ஆட்சி அமைக்க வேண்டும் என்று நினைத்து நாம் ஓட்டு போட்டால் ஓட்டு வாங்கிய கூட்டணி கட்சி தேர்தலுக்கு பின்  வேறு யாருக்கோ ஆதரவு கொடுத்து விடுவார்கள். கட்சி தாவல் தடை சட்டம் போல கூட்டணி தாவல் தடை சட்டம் கொண்டு வந்தால்தான் இது போல வாக்கு அளித்தவர்கள் ஏமாறுவது தடுக்கப்படும்.


எந்த ஒரு கொள்கையும் இல்லாமல் பதவியை மட்டும் நோக்கமாக கொண்டு அமைக்கப்படும் கூட்டணிகள் நாட்டுக்கு எந்த வகையிலும் நன்மை அளிக்காது. இருந்தாலும் என்ன செய்ய? துரோகம் இல்லாத அரசியலையும், கூட்டணி இல்லாத தேர்தலையும் நம்மால் எப்போதும்  கற்பனை செய்து கூட பார்க்க முடியாது.


Wednesday, March 5, 2014

தேவதை பெண்

மீண்டும் நேர்முகத் தேர்வில் தவறிய விரக்தியில் எரிச்சலுடன் வீட்டுக்குள் நுழைந்தேன். பழைய நிறுவனம் என்னை வேலையில் இருந்து  எடுத்த  பின் நான் கலந்து கொண்ட எட்டாவது நேர்முக தேர்வு இது.

கதவை மூடி விட்டு கண்ணாடி முன் நின்று என்னை நானே பார்த்து கொண்டேன். இனி எனக்கு வேலை கிடைக்க வேண்டுமென்றால் யாராவது வரம் கொடுத்தால்தான் உண்டு என்று தோன்றியது.

“ஆண்டவா! காப்பாத்து” மேலே பார்த்து கொண்டு கத்தினேன். மனம் சற்று லேசானது.

“மானுடா!” யாரோ அழைப்பது போல இருந்தது.

என்ன இது? பூட்டிய வீட்டுக்குள் பெண் குரல். குரல் வந்த திசையில் திரும்பினேன். ஒரு பெண் நின்று கொண்டிருந்தாள். என்ன கனவு காண்கிறேனா?

மீண்டும் அந்த பெண்ணை நன்றாக பார்த்தேன். ஜீன்ஸ்,டீ ஷர்ட்டில் மிக அழகாக இருந்தாள். ஒட்டு மொத்த உடலும் கச்சிதமாக அளவெடுத்து செய்தது போல இருந்தது.

“யார் நீங்க? இங்க எப்பிடி வந்தீங்க”

“நானொரு தேவதை. சிறிய வயதில் தேவதை கதைகளில் படித்தது இல்லையா? கஷ்டப்படுபவர்களுக்கு தேவதை வந்து உதவும் என்று.” சொல்லிவிட்டு பளிச்சென்று ஒரு சிரிப்பு சிரித்தாள் அந்த பெண் . மனதுக்குள் மின்னல் அடிப்பது போல இருந்தது.

“நம்பவே முடியலையே”

“என்னை நன்றாக பார். நீயே நம்புவாய்” என்றாள். நான் கண்களை அகல திறந்து கொண்டேன். அந்த பெண் புன் சிரிப்பு மாறாமல் என்னை பார்த்து கொண்டிருந்தாள். அவள் முதுகின் பின்னால் இருந்து எதுவோ விரிவது போல தெரிந்தது. அட அது இறக்கை. இத்தனை நேரம் இதை மடக்கி வைத்து இருந்தாளா? நான் யோசித்து  கொண்டிருக்கும்போதே அவள் தன் இறக்கைகளை பட படவென அடித்து கொண்டு மேலே எழும்ப தொடங்கினாள். சரியாக என் தலைக்கு நேராக அவள் பாதங்கள் வரும் உயரம் எழும்பி சென்று என்னை பார்த்து சிரித்தாள்.

“என்ன நம்புகிறாயா?”

“நம்புறேன் மேடம். கீழ வாங்க. கழுத்து வலிக்குது”

மெதுவாக கீழே இறங்கினாள்.

“தேவதை ஜீன்ஸ்ல வருமா?”

“தேவதைகள் காலத்துக்கு ஏற்ப மாறக் கூடாதா?”

“மாறலாம்தான். சொல்லப்போனால் தேவதை அணிந்தால்தான் ஜீன்சுக்கே மரியாதை”

“சரி சொல் மானிடனே. உனக்கு என்ன வரம் வேண்டும்?”

“வரமா?”

“ஆம். அதற்குதானே வந்திருக்கிறேன். ஆனால் ஒரே ஒரு வரம்தான். அதற்கு மேல் கேட்கக்கூடாது”

“போதும் போதும். ஒன்றுக்கு மேலே வேண்டாம் என்று அரசாங்கமே  பிரசாரம் செஞ்சு  இருக்கு ”

“சரி மானுடா! வரத்தை கேள்.”

“கேட்கிறேன் மேடம். அதுக்கு முன்னாடி ஒரு சந்தேகம். ரொம்ப காலமா உங்கள மாதிரி தேவதைங்க பூமிக்கு வந்து யாருக்கும் வரம் கொடுக்கலியே.ஏன்?”

“மனிதர்கள் சுய நலவாதிகள். அவர்களுக்கு உதவ கூடாது என்று நாங்கள் முடிவு செய்து இருந்தோம். அதனால்தான்.”

“இப்போது எனக்கு மட்டும் உதவ காரணம்?”

“இத்தனை காலத்தில் மனிதர்கள் பண்பட்டிருப்பார்கள் என்பதுஎன் நம்பிக்கை. அதனால்தான் மீண்டும் கஷ்டப்படும் மனிதர்களுக்கு  உதவி செய்ய முடிவு செய்து முதல் ஆளாக உன்னை தேர்வு செய்தேன்.”

“சந்தோஷம்”

“சரி வரம் கேள் சீக்கிரம்.”

தேவதை அவசரப்படுத்த ஆரம்பித்தாள். என்ன கேட்பது என்று எனக்கு குழப்பமாக இருந்தது.

“மேடம். தப்பா நினைக்காதீங்க. என்ன கேக்குறதுன்னு எனக்கு தெரியல”

“செல்வம்தானே  வழக்கமாக கேட்பீர்கள்?”

“நீங்க வேற. அது ராஜா காலத்துல. இப்போ திடீர்னு பணம் வந்தா அரசாங்கம் கணக்கு கேட்கும். பணம் இருந்தும் செலவழிக்க முடியாது. சிக்கல்”

“அப்படியென்றால் நல்ல சம்பளத்தில் வேலை வாங்கி கொடுக்கவா?”

“நீங்க இன்னைக்கு  வேலை வாங்கி குடுப்பீங்க. நாளைக்கே அவன் என்னை வேலைல இருந்து தூக்கிடுவான் தேவையா இது?”

“அரசாங்க வேலை?”

“கிடைக்காம கிடைச்ச  வரத்தை வச்சு வேலை வாங்குறது எனக்கு புத்திசாலிதனமாப்படல ”

“இந்த நாட்டுக்கு பிரதமர் ஆக்கவா?”

“அது தொல்லை பிடிச்ச வேலைங்க. சுதந்திரமா இருக்க முடியாது. யார் யாரோ சொல்றதை கேட்டு ஆடணும்.”

“அமெரிக்க அதிபர்?”

“எனக்கு இங்கிலீஷ் வராதே. அமெரிக்கா போனா கஷ்டப்படுவேன்”

“என்ன மானிடா? வரம் கேட்க கூட இப்படி யோசிக்கிறாய்.”

தேவதை சலித்து கொண்டாள். அவளுக்கென்ன? ஒரு வரம் தந்துவிட்டு போய் விடுவாள். பின் வரத்தை வைத்து கொண்டு நான்தானே வாழ வேண்டும்.

“மேடம்! ஒரு வேண்டுகோள். நான் சற்று யோசிக்க வேண்டும். எனக்கு கொஞ்சம் நேரம் கொடுங்கள். நாளைக்கு  காலைல நான் கேட்குறேன்.”

“அது கடினம். நான் இப்போது சென்றால் மீண்டும் உன்னை சந்திக்க வர முடியாது.”

“சென்றால்தானே? இன்னைக்கு ராத்திரி இங்கயே இருங்க. நாளைக்கு வரம் குடுங்க”

“இல்லை. முடியாது.”

“ப்ளீஸ் மேடம். எனக்கு வரம் கிடைக்காம போனா நான் ரொம்ப ஏமாந்து போயிடுவேன்”

தேவதை யோசித்தாள்.

“சரி இருக்கிறேன். ஆனால் நாளை காலை எழுந்ததும் வரம் கேட்டு விட வேண்டும். தாமதம் ஆனால் நான் பறந்து சென்று விடுவேன்.”

“சரி”

தேவதை அங்கே இருந்த நாற்காலியில் அமர்ந்தாள்.

“மேடம்! நீங்க இந்த கட்டில்ல படுத்துகோங்க. நான் கீழ படுத்துக்குறேன். எதாச்சும் சாப்பிடுறீங்களா?”

“பசும்பால் இருக்கிறதா? எனக்கு மிகவும் பிடிக்கும். சாப்பிட்டுதான் அதிக நாட்கள் ஆகிவிட்டது.”

“இருக்கு. இதோ கொண்டு வரேன்.”

சமையல் அறைக்கு சென்று பாலை காய்ச்ச ஆரம்பித்தேன். உள்ளே நின்று கொண்டு அவள் என்ன செய்கிறாள் என்று கவனித்தேன். நாற்காலியில் இருந்து எழுந்து சென்று கட்டிலில் சென்று படுத்தாள். பின் உடலை வளைத்து நெளித்து சோம்பல் முறித்தாள். பறந்து வந்த களைப்பு போலும். நான் கண் இமைக்காமல் பார்த்தேன். இப்படி ஒரு அழகா? அப்போதுதான் எனக்கு அந்த எண்ணம்  தோன்றியது. அந்த பொடியை எடுத்து பாலில் கலக்கினேன். பால் கோப்பையோடு அவளை நெருங்கினேன்.

“எடுத்து கொள்ளுங்கள்”

“நன்றி”

சற்று நேரத்தில் அவள் மயங்கினாள். நான் அவளை நெருங்கினேன்.

திகாலையில் விசும்பல் ஒலி கேட்டது. எதிர்பார்த்ததுதான். கண்களை திறந்து பார்த்தேன். தேவதை அழுது கொண்டிருந்தாள்.

“மானிடா! என்ன காரியம் செய்தாய்”

“எல்லாம் நல்ல காரியம்தான்”

“என்னுடைய புனிதமே போய் விட்டது. இனி என்னால் என்னுடைய உலகம்  போகவே முடியாது.”

“அதற்குதானே செய்தேன்.”

தேவதையின் விசும்பல் அதிகரித்தது.

“ஏன் இப்படி  அழுற? உன் இறக்கையைதான வெட்டினேன். பொண்ணுங்களுக்கு  இறக்கை எல்லாம் இருக்க கூடாது”

“உனக்கு வரம் கொடுக்கத்தானே வந்தேன்.”

“என்ன வரம் கொடுத்துட போற. மிஞ்சி போனா பணம் குடுப்ப. ஆனா உன்னை மாதிரி அழகி எங்க கிடைப்பா. பேசாம என்னை கல்யாணம் செஞ்சுகிட்டு இங்கயே இரு.”

“நீங்கள் மாறவே மாட்டீர்களா?”

“நாங்கள் எத்தனை மாறினாலும், நீங்கள் எப்போதும் நாங்கள் சொல்வதை கேட்டு அடங்கியே இருக்க வேண்டும்.”


தேவதை பெருங்குரலெடுத்து அழத் தொடங்கினாள். நேரம் ஆக ஆக அவளின் குரல் குறைந்து கொண்டே சென்றது. 


Wednesday, February 26, 2014

குற்றவாளிகளா ஐடி நிறுவனங்கள்?

மா மகேஸ்வரி கொலையில் கொலையாளிகளை பிடித்து விட்டதாக அறிவித்து விட்டனர். பத்திரிக்கைகள் இன்னும் இரண்டு நாளுக்கு பின் இது சம்பந்தமான செய்திகளை பெட்டி செய்தி அளவுக்கு சுருக்கி விடுவார்கள். நாமும் இப்படி ஒரு சம்பவம் நடந்ததை மறந்து விடுவோம்.

இந்த சம்பவம் பற்றி வந்த பெரும்பாலான கட்டுரைகளும், செய்திகளும்  உமா மகேஸ்வரி பணியாற்றிய நிறுவனமும் நடந்த கொலைக்கு ஒரு  காரணம் என்ற ரீதியில் எழுதி வருகின்றனர் சிலர். நிறுவனத்தில் வாகன வசதி செய்து கொடுத்து இருந்தால் குற்றம் நடந்து இருக்க வாய்ப்பில்லையாம். உண்மைதான். அலுவலக வாகனத்தில் வீடு திரும்பி இருந்தால் அந்த பெண் பாதுகாப்பாக வீடு திரும்பி இருக்கலாம். ஆனால் அந்த பெண்ணின் மரணத்திற்கு காரணம் அந்த நிறுவனம் ஊருக்கு வெளியே இருந்ததோ, அல்லது அந்த நிறுவனம் வாகனம் தராததோ மட்டும் அல்ல. உண்மையான காரணம் நமது சமூகம்தான்.

இருட்டிய பிறகு தனியாக  எந்த பெண்ணும் தெருவில் இறங்கி நடக்க கூடாது என்று சொல்வது போல இருக்கிறது இந்த சம்பவம். கிமு ஆக இருந்தால் என்ன? கிபி ஆக இருந்தால் என்ன? பெண்களின் நிலைமை இதுதான் என்று அழுத்தம் திருத்தமாக மீண்டும் ஒரு முறை பதிவு செய்து விட்டோம். இதை மாற்றும் வழி என்ன என்று சிந்திப்பதே இது போன்ற பிரச்சினைகளை நிரந்தரமாக தடுக்கும் வழி. அதை விட்டு விட்டு ஐடி நிறுவனங்களை சார்ந்த பிரச்சனையாக மட்டும் பார்ப்பது சரி இல்லை. இது ஐடி நிறுவனங்கள் தங்களை சரி செய்து கொண்டால் தேசத்தின் ஒட்டு மொத்த பெண்களுக்கும் பாதுகாப்பு கிடைத்து விடும் என கூறுவது போல் உள்ளது.


ஹிந்து பத்திரிக்கையில் ஒரு கட்டுரை எழுதி இருந்தார்கள். திருமணமான பெண்களுக்கு ஐடி துறையில் பணி உயர்வும், சம்பள உயர்வும் கிடைப்பது கடினமாக இருக்கிறது என்று ‘சேவ் தமிழ்ஸ்’ நடத்திய கருத்து கணிப்பில் தெரிய வந்திருப்பதாக கூறி இருக்கின்றனர்.


ஐடி துறையில் தொழிலாளர் உரிமைகள் மறுக்கப்படுகிறது என்பதில் இரு வேறு கருத்தே இல்லை. ஆனால் திருமணமான பெண்கள் தங்களுக்கு திறமை இருந்தாலும் பதவி உயர்வு மறுக்கப்படுகிறது என்பதெல்லாம் அபத்தம். உண்மையில் ஆணோ, பெண்ணோ திருமணமான பின் பொறுப்புகள் அதிகரிக்கின்றன. திருமணத்திற்கு முன்பு வேலை செய்ததை போல திருமணத்திற்கு பின் வேலை செய்ய முடிவதில்லை. குடும்ப பொறுப்புகள் வேலையில் அவர்களின் கவனத்தை குறைப்பது இயற்கையே. அதனால் ஒப்பீட்டளவில் பார்க்கும்போது அவர்களால் திருமணம் செய்யாதவர்களை போல விரைவில் பதவி உயர்வோ, ஊதிய  உயர்வோ பெற முடியவில்லை.

ஒரு உதாரணத்தை எடுத்து கொள்வோம். இரண்டு பெண்கள்  இருபத்தி இரண்டு வயதில் வேலைக்கு சேர்கின்றனர் என்று வைத்து கொள்வோம் . அவர்களில் ஒருவர்  மணம் செய்து கொண்டு இருபத்தி ஏழு வயதில் தாயாகி விடுகிறாள். குழந்தையின் உடல் நலம் காரணமாக  அடிக்கடி விடுப்பு எடுக்கிறாள்.  வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை. அதே நேரம் இன்னொருத்திக்கு திருமணம் ஆகவில்லை. கடினமாக உழைக்கிறாள். அந்த வருடம் யாரோ ஒருவருக்கு மட்டுமே பதவி உயர்வு தர முடியும் என்ற சூழலில் நிர்வாகம் மணமாகாத பெண்ணுக்கு பதவி உயர்வு தருகிறது. அதுதானே நியாயம். இப்போது ஒருவேளை மணமான பெண்ணுக்கு பதவி உயர்வு கொடுத்தால், மணமாகாத பெண்ணால் தொடர்ந்து  எப்படி சிறப்பாக வேலை செய்ய முடியும்?

பின்னர் ஏன்  திறமை இருந்தாலும் பதவி உயர்வு மறுக்கப்படுவதாக கூறுகின்றனர்? அதுதான் மனித சுபாவம். உங்கள் நிறுவனம் உங்கள் திறமைக்கு ஏற்ற ஊதியமும், பதவி உயர்வும் அளிக்கிறதா என  எந்த துறையிலும் பணிபுரியும்  ஊழியர்களிடம்  கேட்டு பாருங்கள். எண்பது சதவீதம் பேர் இல்லை என்றே சொல்வார்கள். நிர்வாகம் தங்களை பயன்படுத்தி கொண்டு தங்களுக்கு நியாயமாக தர வேண்டியதை தரவில்லை என்றே சொல்வார்கள். இந்த கருத்து கணிப்பில் சொல்லியதை போல.

ஐடி நிறுவனங்கள் தர்மப்படி நடப்பதாக சொல்லவில்லை. இருந்தாலும் எதற்கெடுத்தாலும் அவர்களை மட்டுமே  குற்றம் சொல்வது சரியில்லை என்றே சொல்கிறேன். 


Saturday, February 22, 2014

ஒரு கூட்டணி பேச்சு வார்த்தை

“என்னை எதற்காக இப்படி அடைத்து வைத்து இருக்கிறீர்கள். என்னை வெளியே விடுங்கள்.” தடியாக இருந்த அந்த மனிதனிடம் கேட்டேன்.

“கொஞ்சம் பொறுமையாக இருங்கள் சார்! தலைவர் வந்து விடுவார்.” சொல்லிவிட்டு முகத்தை திருப்பி கொண்டான். எனக்கு அடி வயிறை முட்டி கொண்டு ஒன் பாத்ரூம் வந்தது. அவனிடம் கேட்கலாமா? 

வேண்டாம். தவறாக நினைத்து கொள்வான். முன் பின் தெரியாதவர்களின்  காரில் ஏறியது எத்தனை பெரிய தவறு என்று தெரிந்தது. கூட வந்து முகவரி  காண்பிக்க சொல்லி அவர்கள் முகவரிக்கு என்னை கடத்தி விட்டார்களே.

அந்த வீட்டை சுற்றி பார்க்க ஆரம்பித்தேன். சுவர் முழுக்க அரசியல் தலைவர்களின் படங்கள். அது கட்சி அலுவலகம் போல தெரிந்தது. எந்த கட்சி என்பதும் ஓரளவு அந்த படங்களை பார்த்ததும் புரிந்தது.

“தலைவர் வருகிறார்”

யார் தலைவர். ஆர்வத்தோடு பார்த்தேன். அவர் மெதுவாக மாடிப்படிகளில் இறங்கி வந்தார். வெள்ளை சட்டை, வெள்ளை வேட்டி. பளிசென்ற முகம். இவரா? இவரை அடிக்கடி டிவியில் காமிப்பார்கள். செய்தி சானல்களின் லைவ் நிகழ்ச்சிகளில் அடிக்கடி வருவார்.

அவர் வந்து என் முன் இருந்த நாற்காலியில் அமர்ந்தார்.

“வணக்கம்! நான் யாரென்று உனக்கு தெரிந்து இருக்கலாம்.”

“நன்றாக தெரியும்”

“அப்போது நான் எந்த கட்சியின் மாநில தலைவர் என்றும் தெரிந்து இருக்குமே?”

“அதுவும் தெரியும்”

“நல்லது. உன்னை எதற்காக அழைத்து வந்திருக்கிறோம் தெரியுமா?”

“அழைத்து வரவில்லை. கடத்தி வந்திருக்கிறீர்கள்.”

“ஹாஹாஹா” பலமாக சிரித்தார். மொக்கை ஜோக்குக்கெல்லாம் சிரிக்கிறார். என்னால் இவர்களுக்கு ஏதோ வேலை ஆக வேண்டியிருக்கிறது என புரிந்து கொண்டேன்.

“பாருங்கள். எங்கள் கட்சி இந்தியாவின் மிகப் பெரிய தேசிய கட்சி. ஆனால் இங்கே தமிழ்நாட்டில் மட்டும் எங்களுக்கு செல்வாக்கு மிக குறைவு.”

“தமிழ்நாட்டில் மட்டும் இல்லை. தென் இந்தியா முழுக்கவே உங்களுக்கு செல்வாக்கு குறைவுதான்.” சொல்லிவிட்டு நாக்கை கடித்து கொண்டேன்.

“உண்மைதான். நீங்கள் வெளிப்படையாக பேசுகிறீர்கள்.”

“எப்பொழுதுமே நான் அப்படிதான். இதற்கும் என்னை பிடித்து வந்ததற்கும் என்ன சம்பந்தம்.”

“சம்பந்தம் இருக்கிறது. எங்கள் கட்சி ஆட்சியை பிடிக்க வேண்டுமென்றால் தமிழகத்தில் சில தொகுதிகளாவது கிடைக்க வேண்டும். தனியாக நின்றால் எங்களால் ஒரு தொகுதியில் கூட ஜெயிக்க முடியாது. கூட்டணி பலம் வேண்டும்.”

“அதற்கென்ன? நீங்கள் அழைத்தால் கூட்டணிக்கு வர எல்லாரும் வரிசையில் நிற்க போகிறார்கள்.”

“அதுதான் இல்லை. நாங்கள் கூட்டணிக்கு அழைத்தாலே எல்லாரும் தூர ஓடி போகின்றனர். நாங்கள் மதவாதிகளாம். இதை மற்ற யாரும் சொன்னால் கூட பொறுத்து கொள்வோம். சொல்பவர் ஒரு ஜாதி கட்சி தலைவர். ஜாதியை வைத்து அரசியல் செய்பவர்களே எங்களை மதவாதிகள் என்றால் என்ன செய்வது? எப்படியோ ஒரே ஒரு கட்சி மட்டும் எங்களுடன் சேர ஒத்து கொண்டது. ஆனால் அவர்களை மட்டும் வைத்து கொண்டு ஜெயிக்க முடியாது என தலைமை நினைக்கிறது. இன்னும் கூட்டணி பலம் வேண்டுமாம்” அவர் குரலில் விரக்தி தெரிந்தது.

“புதிதாக ஒரு கட்சி வந்திருக்கிறதே. நீங்கள் அந்த கட்சி தலைமையுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்துவதாக பேப்பரில் படித்தேனே?”

“அந்த ஆளா? அவர் காலையில் எங்களுடன் பேசுகிறார். மாலையில் கட்சி தனித்து போட்டியிடும் என்கிறார். மறுநாள் மீண்டும் எங்களுடன் பேசுகிறார். அவர் எப்போது என்ன செய்வார் என்றே தெரியவில்லை நாங்கள் வெறுத்து போய் விட்டோம்”

“உங்கள் கஷ்டத்தை புரிந்து கொள்ள முடிகிறது சார். ஆனால் நான் உங்களுக்கு எவ்வாறு உதவ முடியும்.”

“நிச்சயம் முடியும். நாங்கள் இப்போது ஒரு பரிதாபமான நிலையில் இருக்கிறோம். இங்கே எங்களை சீண்டுவார் இல்லை. அதனால் உங்கள் கட்சியுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ளோம். இப்போது உங்களுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்த போகிறேன்.”

“சார்! நீங்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள். நான் எந்த கட்சியின் தலைவரும் கிடையாது. நான் ஒரு சாதாரண..”

“நீங்கள் கட்சி தலைவரில்லை. ஆனால் ஒரு சங்க தலைவர்தானே?”

“ஆமாம். ஆனால்...”

“அது போதும். உங்கள் சங்கத்தில் எத்தனை பேர் இருக்கிறார்கள்?”

“தமிழகம் முழுக்க ஆயிரம் பேர் வரை இருக்கிறார்கள்”

“அது போதும் எங்களுக்கு. இந்த நிமிடம் முதல் உங்கள் சங்கம்  எங்கள் கட்சியுடன் கூட்டணி வைத்து கொள்ள போகிறது. நாளை பிரஸ் மீட் வைத்து அறிவித்து விடுவோம். நீங்கள் எங்கள் கட்சி சின்னத்திலேயே போட்டியிட போகிறீர்கள். உங்களுக்கு பத்து தொகுதிகள். சம்மதம்தானே? ”

“ஆனால் கொள்கை ஒன்றாக இருந்தால்தானே கூட்டணி அமைக்க முடியும்?”

“எல்லா கட்சிகளின் ஒரே கொள்கை பதவிதான். அதற்காக யாரும் யாரிடமும் கூட்டணி வைத்து கொள்ளலாம். சம்மதம் சொல்லுங்கள்”

“நீங்கள் சொல்வது சரிதான். ஆனால்...”

“தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். ஒரு கட்சியை கூட உன்னால் கூட்டணிக்கு சேர்க்க முடியவில்லையா என்று மேலே இருந்து எனக்கு குடைச்சல் கொடுக்கிறார்கள். நான் இன்னும் இரண்டு நாட்களில் யாரையாவது கூட்டணிக்கு சேர்த்தே ஆக வேண்டும். என் கஷ்டத்தை புரிந்து கொள்ளுங்கள்”

“புரிகிறது. ஆனால்...”

“என்ன தயக்கம்? தொகுதி போதாதா? இன்னும் நான்கு தொகுதிகளை தருகிறேன். தேர்தல் செலவுக்கு முப்பது  கோடி பணம்  தருகிறேன். இன்னும் என்ன வேண்டும்?”

நான் பதில் பேசவில்லை.

“ராமதாஸ்! அதை கொண்டு வா”

ராமதாஸ் என்று அழைக்கப்பட்டவர் ஒரு பெட்டியை கொண்டு வந்து என் முன்னால் வைத்தார்.

“இதில் அறுபது லட்சம் இருக்கிறது. இது உங்களுக்கு மட்டும்.”

என் கண்கள் விரிந்தன. அறுபது லட்சமா?

“இது அட்வான்ஸ்தான். தேர்தல் சமயத்தில் இன்னும் எதிர்பார்க்கலாம்”

“எனக்கு சம்மதம் சார். நாளை மறுநாள் நல்ல நாள். அன்றே நம் கூட்டணியை அறிவித்து விடலாம்.”

“மிக்க மகிழ்ச்சி. நான் சாதித்து விட்டேன்” அவர் முகத்தில் மகிழ்ச்சி அப்பட்டமாக தெரிந்தது. பதவி தப்பி விட்ட நிம்மதியும்.

நான் எழுந்து கொண்டேன். “சார்! ஒரு முக்கியமான விஷயம்.”

“சொல்லுங்கள்”

“நான் ஒன் பாத்ரூம் போக வேண்டும்.”

வலது பக்கம் ஒரு அறையை காட்டினார். உள்ளே சென்று வேலையை முடித்து விட்டு கொண்டு வந்தேன்.

“நான் வருகிறேன் சார்”

“நன்றி”

அந்த வீட்டை விட்டு வெளியே வந்தேன். இது என்ன கனவா? கூட்டணி பேச்சு வார்த்தை. கையில் அறுபது லட்சம். அரசியலில் எதுவும் நடக்கும் என்பது இதுதானா?”

பாவம் அந்த மனிதர். குழப்பத்தில் என்ன செய்வது என்றே தெரியவில்லை அவருக்கு. நேபாளத்து கூர்க்கா சங்க தலைவரை கூப்பிட்டா கூட்டணி பேச்சு வார்த்தை நடத்துவது? எங்கள் சங்கத்தில் யாருக்கும் இந்தியாவில் ஓட்டே கிடையாது. அவரை நினைத்து சிரிப்பதா? அழுவதா? என்றே தெரியவில்லை.

நேபாளத்துக்கு அடுத்த விமானம் எப்போது என்று விசாரிக்க மொபைலை வெளியே எடுத்தேன்.



LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...