நான் கிரிக்கெட் பார்க்க ஆரம்பித்து இருந்த கால கட்டம். அன்றைய நாட்கள் இந்திய கிரிக்கெட் அணிக்கு சிறப்பானதாக இல்லை. தொடர் தோல்விகளுக்கு பின் அசாருதீனிடம் இருந்து சச்சின் கேப்டன் பொறுப்பை ஏற்று இருந்தார். அணி வெற்றி பெற சச்சினின் பேட்டிங்கை மட்டுமே நம்பி இருந்தது.
அப்போதுதான் ஆரம்பித்தது டைட்டன் கோப்பை முத்தரப்பு தொடர். இந்தியா, தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா பங்கேற்றிருந்த அணிகள். அந்த மூன்று அணிகளில் தென் ஆப்ரிக்க அணி மிக மிக வலிமையான அணி.அபாயகரமான பேட்ஸ்மேன்கள் , அசுர வேக பந்து வீச்சாளர்கள், ஆல் ரவுண்டர்கள், பாய்ந்து பாய்ந்து பிடிக்கும் ஃபீல்டர்கள், திறமையான கேப்டன் என சிறந்த ஆட்டக்காரர்களை கொண்டு இருந்தது. ஆஸ்திரேலியாவும் ஓரளவு வலிமையான அணி. இந்திய அணி மட்டுமே பரிதாபமாக தோன்றியது. இருந்தாலும் சச்சின் மேல் இருந்த நம்பிக்கையால் தொடரை பார்க்க தொடங்கினேன்.
அந்த தொடர் எதிர் பார்த்தது போலவே அமைந்தது. தென் ஆப்ரிக்கா மிக எளிதாக ஃபைனலில் நுழைந்தது. இந்தியாவோ தட்டு தடுமாறி சில போட்டிகளில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி ஃபைனலுக்குள் நுழைந்தது. ஃபைனலில் தென் ஆப்ரிக்கா இந்தியாவை ஊதி தள்ளி விடும் என்றே அனைவரும் எதிர்பார்த்தனர். நானோ வழக்கம் போல ஏதோ ஒரு நம்பிக்கையில் போட்டியை பார்த்தேன்.
முதலில் ஆடிய இந்திய அணி 220 ரன்கள் எடுத்தது. அப்போதேல்லாம் இப்போது போல் 350,400 ரன்கள் எடுக்கும் கதை எல்லாம் இல்லை. 250 ரன்களே நல்ல ஸ்கோர். ஆகவே 220 ரன்களும் ஓரளவு சுமாரான ஸ்கோர்தான். இருந்தாலும் எதிர்த்து ஆடுவது தென் ஆப்ரிக்காவை. அவர்களுக்கு இதெல்லாம் ஒரு இலக்கே இல்லை. கிட்டத்தட்ட தோல்வி உறுதியான சூழலில்தான் அந்த அதிசயம் நடந்தது. அடுத்து ஆடிய தென் ஆப்ரிக்காவின் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தது. தென் ஆப்ரிக்கா 100 ரன்களை எடுப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்தது. நான் உற்சாகம் அடைந்தேன். ஆனால் அது அதிக நேரம் நிலைக்கவில்லை. 8வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சிம்காக்ஸும், ரிச்சர்ட்சனும் நின்று ஆட தொடங்கினர். கடைசி நேரத்தில் வெற்றி கை நழுவிவிடுமோ என பயப்பட தொடங்கினேன். ஆனால் ஸ்கோர் 190ஐ நெருங்கும்போது ரிச்சர்ட்சன், ராபின் சிங்கிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அடுத்த இரண்டு விக்கெட்டுகளும் அடுத்தடுத்து சரிய இந்திய அணி வெற்றி பெற்றது. நான் கிரிக்கெட் பார்க்க ஆரம்பித்தபின் இந்திய அணி வெல்லும் முதல் கோப்பை என்பதால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்.
இதற்கு பின் டெண்டுல்கரின் தலைமையில் இந்திய அணி ஒரு நாள் போட்டிகளில் இன்னும் ஒரே ஒரு கோப்பை மட்டுமே வென்றது. அது பாகிஸ்தானுக்கு எதிராக கனடாவில் நடந்த சஹாரா கோப்பை தொடர். இருந்தபோதும் தென் ஆப்ரிக்காவை வீழ்த்திய போட்டியே எனக்கு சிறந்த போட்டியாகபட்டது. அந்த ஒரு போட்டியையே நான் பார்த்ததில் சிறந்த போட்டியாக நினைத்து கொண்டு இருந்தேன்.
சில ஆண்டுகளுக்கு பின் ஒரு காலை பொழுதில் அந்த போட்டியை தென் ஆப்ரிக்கா கேப்டன் ஹன்சி குரோனி ஃபிக்ஸ் செய்து விட்டதாகவும், அந்த போட்டியின் முடிவு புக்கிகளால் தீர்மானிக்கபட்டதாகவும் செய்திகளில் பார்த்தேன். லேசாக தலை சுற்றியது. எப்படியோ ஜெயிச்சது ஜெயிச்சதுதான் என்று மனதை தேற்றி கொண்டு இந்திய அணிக்கு அடுத்த போட்டி எப்போது என்று நண்பர்களுடன் விவாதிக்க தொடங்கினேன்.
No comments:
Post a Comment