Monday, May 20, 2013

தோனி - ஒரு அதிசயம் - 2

தோனியின் அந்த ஆட்டத்தை பார்த்த பின் எனக்கு அவர் மேல் உள்ள நம்பிக்கை அதிகரித்தது. இந்திய அணிக்கு ஒரு அதிரடி ஆட்டக்காரர் கிடைத்துவிட்டார் என முடிவு செய்து விட்டேன். இந்த நிலையில் இந்திய அணி ஜிம்பாப்வே சுற்று பயணம் மேற்கொண்டது. அந்த பயணத்தில்தான் தோனியின் இன்னொரு முகத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

அந்த தொடரின் ஒரு போட்டியில் முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி 250 ரன்களை சேர்த்தது. 250 ரன்கள் இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு  100 ரன்களை சேர்க்கும் முன் ஐந்து விக்கெட்டுகளை இழந்து பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டது. ஆறாவது விக்கெட்டுக்கு களம் இறங்கினார் தோனி. அவரால் அதிரடி ஆட்டம் மட்டுமே ஆட முடியும் என்று நம்பி கொண்டு இருந்தேன். ஆட்டத்தின் போக்கை உணராமல் அவசரப்பட்டு ரன் எடுக்க முயன்று அவுட்டாகிவிடுவார் என்று கணித்தேன். இந்திய அணியின் தோல்வி உறுதி என்று முடிவு செய்தே விட்டேன். இந்த முறை தோனி மீண்டும் நான் கணித்தது தவறு என்று முடிவு செய்தார். யுவராஜுடன் இணைந்து மிக கவனமாக ஆடி அணியை வெற்றி பெற செய்தார். அதிரடி ஆட்டம் மட்டுமல்ல, சூழ்நிலைக்கு ஏற்ப அணிக்கு தனது பங்களிப்பை வழங்க முடியும் என்று நிரூபித்தார்.

இந்த தொடரில் அவரின் அசுர வேக ஸ்டம்பிங்களையும் கவனித்தேன். அவரின்  கைகள், காரணமே இல்லாமல் ஸ்டம்ப்களை தட்டி விடுவது போல் இருக்கும். ஆனால் ரீப்ளே செய்து பார்க்கும்போது பேட்ஸ்மேன் கால்களை மிக சிறிய அளவு கிரீசை விட்டு வெளியே எடுத்து இருப்பது தெரியும். தோனி தனது  மின்னல் வேகத்தால் அந்த இடைவெளியை சரியாக பயன்படுத்தி இருப்பார்.

அதன் பின் நடந்த பாகிஸ்தான் தொடர் தோனியின் புகழை உச்சத்திற்கு கொண்டு சென்றது. முஷாரப் தோனியின் ஹேர் ஸ்டைலை பாராட்ட, இந்திய ரசிகர்கள் அவரை போன்றே தங்கள் ஹேர் ஸ்டைலை அமைத்து கொண்டனர். தோனி ஒரு தேசிய ஹீரோவாக இந்த தொடரின் முடிவில் மாறி போனார். இதற்கு இடையில் டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பர் பொறுப்பும் தினேஷ் கார்த்திக்கிடமிருந்து தோனியை வந்து சேர்ந்தது. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி டெஸ்ட் போட்டிகளிலும் சாதித்து காட்டினார் தோனி.


இப்படி தோனி தன்னை அணியின் தவிர்க்க முடியாத வீரராக மாற்றி கொண்டு இருந்தார். ஒரு நாள் போட்டிகளில் தன் பேட்டிங் சராசரியை 50க்கு மேலும், ஸ்ட்ரைக் ரேட்டை 100க்கு மேலும் வைத்து இருந்தார். அவரை அணியின் கேப்டனாக கூட நியமிக்கலாம் என என்ன தொடங்கினேன். அப்போது ஒரு ஆட்டத்தில் நடந்த ஒரு சம்பவம் என் எண்ணத்தை வலுவாக்கியது. ஒரு போட்டியின்போது தோனி பந்தை பௌலரிடமே திருப்பி அடித்தார். பந்தை பிடித்த பௌலர் அதை தோனியை நோக்கி எறிவது போல பாவ்லா காண்பித்தார். பேட்ஸ்மேன்களை எரிச்சலூட்டி அவர்களின் கவனம் சிதற செய்ய பௌலர்கள் கையாளும் யுக்தி இது. பொதுவாக இது போன்ற நிலையில் பேட்ஸ்மேன்கள் பயத்தில் ஸ்டம்பை விட்டு விலகி ஓடுவர். அல்லது பௌலரை முறைப்பார்கள். ஆனால் தோனி என்ன செய்தார் தெரியுமா? நின்ற இடத்திலே சிறிதும் அசைவற்று நின்று கொண்டார். பின் பௌலரை பார்த்து ஒரு தனது  வழக்கமான புன்னகையை உதிர்த்தார். "அட பாவி! நீ எதுக்குமே பயப்பட மாட்டியா" என நினைத்து கொண்டேன். அந்த சம்பவத்திற்கு பின் இவர் கேப்டனாக தகுதியானவர் என்ற என் எண்ணம் வலுப்பட்டது. 

இப்படி தோனிக்கு எல்லாம் உச்சத்தில் சென்று கொண்டு இருக்கும்போதுதான் 2007ம் ஆண்டு உலக கோப்பை தொடர் வந்தது. எந்த இந்திய கிரிக்கெட் ரசிகனாலும் எளிதில் மறக்க முடியாத தொடர் அது.

- தொடரும் 

2 comments:

  1. //பொதுவாக இது போன்ற நிலையில் பேட்ஸ்மேன்கள் பயத்தில் ஸ்டம்பை விட்டு விலகி ஓடுவர். அல்லது பௌலரை முறைப்பார்கள். ஆனால் தோனி என்ன செய்தார் தெரியுமா? நின்ற இடத்திலே சிறிதும் அசைவற்று நின்று கொண்டார்.//

    யூ ட்யூபில் தேடிப் பார்த்தால் க்ளிப்பிங்ஸ் கிடைக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. கிடைத்தாலும் கிடைக்கும் நண்பரே!! ஆனால் எவ்வளவு யோசித்தும் அது எந்த அணிக்கு எதிரான போட்டி என்று நினைவுக்கு வரவில்லை.

      Delete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...