2007ம் ஆண்டு உலக கோப்பை ஆட சென்ற இந்திய அணியின் மேல் யாருக்கும் பெரிய நம்பிக்கை எல்லாம் இருந்திருக்க வாய்ப்பில்லை.இருந்தாலும் அப்படி ஒரு தோல்வியை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.வீரர்கள், ரசிகர்கள் என அனைவரையும் கண்ணீர் விட வைத்த தொடர் அது. அந்த தொடரின் முதல் சுற்றிலேயே படு தோல்வி அடைந்து வெளியேறியது இந்திய அணி.
இந்திய அணிக்கு தொடரின் முதல் போட்டி பங்களாதேஷ் அணியுடன். அந்த போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணிக்கு பெரிய நெருக்கடி. மீதமிருந்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றால்தான் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற சூழ்நிலை. தனது இரண்டாவது போட்டியில் பெர்முடாவை நசுக்கிய இந்தியா, மூன்றாவது போட்டியில் கட்டாய வெற்றி பெற வேண்டிய சூழ்நிலையில் இலங்கையை சந்தித்தது.
அந்த போட்டியில் முதலில் ஆடிய இலங்கை 254 ரன்களை சேர்த்தது. அடுத்து ஆடிய இந்திய அணியின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிய தொடங்கின. 120 ரன்களை சேர்க்கும் முன் 5 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணிக்கும், இருந்த கடைசி நம்பிக்கை தோனி மட்டுமே. நானும் தோனி இருக்கும்வரை கவலை பட தேவை இல்லை. சற்று நேரம் ஆடினால் ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிடுவார் என்ற நினைப்பில் இருந்தேன்.
ஆட வந்த தோனி தனது முதல் பந்தை எதிர் கொண்டது முரளிதரனிடமிருந்து. அதீதமாக திசை திரும்பிய அந்த பந்து தோனியின் கால் காப்பில் பட்டது. நடுவர் விரலை தூக்கி விட ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார் தோனி. தோனியை கண்டு நான் அதிசயித்த நேரங்களில் இதுவும் ஒன்று. ஏன் என்று கேட்கிறீர்களா? அந்த அவுட் ஆனதும் மற்ற வீரர்களின் முகத்தில் தென்பட்ட சோகமோ, விரக்தியோ தோனியின் முகத்தில் சிறிதும் இல்லை. ஏதோ ஒரு கண்காட்சி போட்டியில் ஆட்டம் இழந்த வீரர் போல வழக்கமான உணர்ச்சியற்ற முகத்துடன் வெளியேறினார்.
எதற்கும் பயமும் இல்லை, கவலையும் இல்லை என்ன மாதிரியான மனிதன் இவன் என அந்த சோகமான நேரத்திலும் ஆச்சரியமடைந்தேன். கீதை குறிப்பிடும் கர்ம யோகியா இவர்? எல்லாவற்றையும் இறைவனிடம் ஒப்படைத்து விட்டாரா? இவர் போல நம்மால் ஏன் இருக்க முடியவில்லை என யோசிக்க தொடங்கினேன்.
இந்திய அணி அந்த போட்டியில் தோல்வி அடைந்து தொடரிலிருந்து வெளியேறியது. அந்த தோல்விக்கு பின் இந்திய அணி வீரர்களின் வீட்டில் கல் வீச்சு சம்பவங்கள் நடந்தன. தோனியின் வீடும் தப்பவில்லை. அதன் பின் அணிக்குள்ளே புகைந்து கொண்டிருந்த சாப்பல் பிரச்சினை வெளியே வந்தது. இந்திய அணிக்கு கடும் சோதனையான காலகட்டம் அது. அந்த பிரச்சினைகளில் இருந்து சிறிது, சிறிதாக வெளியே வந்த இந்திய அணி இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை வென்று வரலாறு படைத்தது. அப்போதுதான் வந்தது T-20 உலக கோப்பை.
T-20 உலக கோப்பை அணியிலிருந்து இளைஞர்களுக்கு வழி விட்டு விலகுவதாக அப்போதைய கேப்டன் டிராவிட், சச்சின், கங்குலி போன்ற சீனியர் வீரர்கள் அறிவித்தனர். இப்போது கிரிக்கெட் வாரியத்துக்கு வந்த பிரச்சினை இவர்களுக்கு மாற்று வீரர்களை தேடுவது. அதை விட பெரிய பிரச்சினை ஒரு புதிய கேப்டனை நியமிப்பது. சச்சினின் யோசனைப்படி தோனி கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
தோனி கேப்டனாக சரியான ஆள் என்று நினைத்து இருந்தேன். ஆனால் ஒரு விக்கெட் கீப்பரை கேப்டனாக அறிவிப்பார்களா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் எப்படியோ தோனி கேப்டனாகி விட்டார். அந்த தொடரையும் வென்று கொடுத்தார். அந்த தொடரை பார்த்த அனைவரும் அவர் சிக்கலான சூழலையும் மிக கூலாக கையாண்டதாக பாராட்டினார். ஆனால் எனக்கு ஒன்றும் அதில் வியப்பில்லை. அவர் அது போன்ற சூழ்நிலைகளில் பதட்டப்பட்டு செயல்பட்டிருந்தால்தான் எனக்கு அது ஆச்சரியம் அளித்திருக்கும்.
- ஆச்சரியங்கள் தொடரும்
romba slow
ReplyDeleteஎது?
Deleteupdate soon....waitin to eager,
ReplyDeleteupdate soon ..waitin 2 eagr
ReplyDelete