சுத்தமாக தூக்கம் வரவில்லை. .மொட்டை மாடிக்கு போகலாம் என்று எழுந்து நடந்தேன். மன நிம்மதி இழக்கும்போதெல்லாம் நான் செல்லும் இடம் மொட்டை மாடி.என் கஷ்டங்களின் பொழுது எனக்கு துணை இருப்பது மொட்டை மாடியும் அங்கே சென்று நான் கேட்கும் இளையராஜா பாடல்களும்தான்.
மொட்டை மாடிக்கு சென்றவுடன் மனம் முழுக்க வேதனையுடன் வானத்தை பார்க்க தொடங்கினேன். மின்னி கொண்டிருந்த நட்சத்திரங்கள் எனக்கு ஆறுதல் சொல்லுவது போல் இருந்தது. என் கண்ணில் இருந்து நீர் வடிய தொடங்கியது. காதலும் போய் விட்டது, மூன்று ஆண்டுகள் தேடி கண்டு பிடித்த வேலையையும் நாளையோடு இழக்க போகிறேன். நண்பர்கள் போல உடன் இருந்தவர்களே மோசம் செய்து விட்டனர். இனி எனக்கு இந்த உலகத்தில் என்ன இருக்கிறது என எண்ணி கொண்டேன். உலகத்தை விட்டே போய் விடு என்று மனம் கூற தொடங்கியது.
அப்போதுதான் நம்ப முடியாத அந்த அதிசயம் நடந்தது. வானத்தில் இருந்து ஒரு ஒளி கீழே இறங்குவது போல் தோன்றியது. எரி நட்சத்திரமா? கண்களை தேய்த்து விட்டு கொண்டேன். இல்லை, அது எரி நட்சத்திரம் போல் தெரியவில்லை. அதற்கு மேல் நான் யோசிக்க முடியாதபடி அது என் முன்னால் வந்து நின்றது. என்னால் நம்பவே முடியவில்லை. நான் கனவு காண்கிறேனா? இல்லை கனவு போல் இல்லை. மிக பெரிய குண்டான் போன்ற வடிவத்தில் ஒளி சிந்தி நின்று கொண்டிருந்த அந்த பொருள் பறக்கும் தட்டுதான். என் மயிர்கால்கள் நட்டு கொண்டன. பயமும் ஆச்சரியமும் ஒரு சேர திகைத்து நின்றிருந்தேன். உள்ளே இருந்து ஒரு உருவம் இறங்கியது.
நான் நன்கு கவனித்து பார்க்க தொடங்கினேன். உள்ளே இருந்து இறங்கிய அந்த உருவம் கிட்ட தட்ட மனிதன் போலவே இருந்தது. ஆனால் கைகளில் இரண்டு விரல்கள் மட்டுமே இருந்தன. தலை சதுரமாக இருந்தது. ஒருவேளை என்னை தாக்க போகின்றானோ? என் மூளை உஷாரானது. பாய்ந்து சென்று அருகில் இருந்த இரும்பு தடியை எடுத்தேன்.
"பயம் வேண்டாம் நண்பா!" இறங்கியவன் என்னிடம் பேச தொடங்கினான். சற்று தைரியத்தை வரவழைத்து கொண்டேன்.
"யார் நீ?" என கேட்டேன்.
"நானும் உன்னை போல் இந்த பேரண்டத்தின் ஒரு குழந்தைதான். என்னுடைய கிரகம் மட்டுமே வேறு"
"இங்கே ஏன் வந்தாய்?"
"ஏன்? நான் இங்கே வர கூடாதா? இந்த அண்டம் எல்லாருக்கும் பொதுவானது அல்லவா"
"அது சரி! எப்படி தமிழ் பேசுகிறாய்?"
"அதை நான் பின்னால் கூறுகிறேன். நான் மேலே செல்லும்போது உன் கண்களில் இருந்து நீர் வடிவதை என் பறக்கும் தட்டில் இருந்த கேமரா காட்டி கொடுத்தது. அதனாலேயே இங்கே வந்தேன்"
மிக சக்தி வாய்ந்த கேமராவை அது பயன்படுத்துவது எனக்கு புரிந்தது. "நான் அழுதால் உனக்கென்ன?" எரிச்சலுடன் கேட்டேன்.
"என்ன அப்படி கேட்டு விட்டாய். மற்றவர் துன்பப்படுவது பார்த்து சும்மா இருக்கலாமா? சொல் என்ன பிரச்சினை "
"இந்த உலகமே எனக்கு பிரச்சினைதான். எங்கே பார்த்தாலும், பொய்யும் நம் பிக்கை துரோகமும். எனக்கு எதுவுமே பிடிக்கவில்லை" , மனதில் உள்ளதை கொட்ட ஆள் கிடைத்த சந்தோசத்தில் பேச தொடங்கினேன்.
"பொய், நம்பிக்கை துரோகம் என்றால்?"
"பொய் என்றால் என்ன என்று கூடவா உனக்கு தெரியாது. உனக்கு புரியும்படி சொல்கிறேன் கேள். இங்கே நான் உன்னை பார்த்து விட்டேன். வெளியே சென்று உன்னை நான் பார்க்கவில்லை என்று சொன்னால் அது பொய். ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொல்லி உன்னை நம்ப வைத்து கடைசியில் உன்னை ஏமாற்றினால் அது நம்பிக்கை துரோகம். புரிகிறதா?"
அது சற்று யோசிப்பது போல் தெரிந்தது. "கொஞ்சம் புரிகிறது. நம்பிக்கை துரோகம் யார் செய்வார்கள்?"
"இங்கே எல்லாரும். அரசியல் தலைவர்களில் ஆரம்பித்து சாதாரண மக்கள் வரை எல்லாரும்"
"உன்னை அப்படி யாரும் நம்பிக்கை துரோகம் செய்து விட்டார்களா? அதற்குதான் அழுதாயா?"
"இது மட்டும் இல்லை. இன்னும் நிறைய உண்டு. பணம் என்றால் உனக்கு தெரியும்தானே."
"இல்லை தெரியாது."
"சொல்கிறேன் கேள். இங்கே எல்லாமே பணம்தான். பொய்கள், துரோகங்கள் எல்லாமே இந்த பணத்தாசையால் மட்டுமே நடக்கின்றன. பணம் இல்லாமல் உன்னால் இங்கே வாழ முடியாது. பணம் இல்லாமல் போனால் உன்னை ஒரு தெரு நாய் கூட மதிக்காது, அந்த பணம் என்னிடம் இல்லை. நாளை இருக்கும் வேலையும் போய் விட்டால் என் நிலைமை திண்டாட்டம்தான்."
"பணம் இல்லை என்றுதான் அழுதாயா?"
'இல்லை. என் கண்ணீருக்கு காரணம் என் காதலி ப்ரியா. உயிருக்குயிராக நேசித்தோம். கடைசியில் ஜாதியை காரணம் காட்டி எங்களை பிரித்து விட்டனர். அவளுக்கு கடந்த வாரம் திருமணம் முடிந்து விட்டது."
"ஜாதியா?"
"ஜாதி என்றால் வேறு பிரிவு வைத்து கொள்ளேன்"
"அவள் வேறு மொழி பேசுகிறவளா?"
"இல்லை அவளும் தமிழ்தான்"
"ஒரே மொழி, ஒரே இனம் பின்னே எப்படி நீங்கள் வேறு வேறு ஜாதி ஆவீர்கள்?"
"அதுதான் இந்த உலக நடைமுறை. அதற்கு மேல் எனக்கு தெரியாது"
"நீ அவளை அழைத்து கொண்டு வேறு எங்காவது சென்று வாழ வேண்டியதுதானே"
"அப்படி செய்தால் தேடி வந்து இருவரையும் கொல்வார்கள். அவளாவது வாழட்டுமே." மீண்டும் கண்களில் நீர் வழிந்தது.
"இதுதான் உன் பிரச்சனையா?"
"இல்லை, இன்னும் நிறைய. ஜாதி, மதம் என்று சொல்லி தனது இனத்தை தாமே கொலை செய்வார்கள். திருடுவார்கள். ஏமாற்றுவார்கள். எல்லாரும் சுயநலக்காரர்கள் . மொத்தத்தில் இந்த உலகமே அசிங்கம்." நிதானம் இழந்து என்னுடைய நரம்புகள் புடைக்க கத்தினேன்.
அது சற்று நேரம் அமைதியாக இருந்தது. பின் பேசியது. "நண்பா! நீ என்னுடன் வந்து விடு. நீ சொல்லும் எதுவுமே எங்கள் கிரகத்தில் இல்லை. நீ சொல்லும் பொய், பணம், ஜாதி, மதம், கொலை போன்ற எதுவுமே எங்கள் கிரகத்தில் கிடையாது. நீ அங்கே வந்தால் அரசாங்கமே உனக்கு குடி உரிமை அளித்து விடும்.உனக்கு வேலையும் அளிக்கும். அங்கேயே உனக்கு பிடித்த பெண்ணை தேடி நீ திருமணம் செய்து கொள்ளலாம்."
"உங்கள் கிரகம் என்ன கம்யூனிஸ்ட் கிரகமா?"
"கம்யூனிஸ்ட் என்றால்?"
"உனக்கு புரியாது விடு."
"சரி. நீ என்னோடு வருகிறாய்தானே? உன்னை இப்படியே விட்டு செல்ல என் மனம் கேட்கவில்லை. இந்த உலகத்தில் இருக்கவே பிடிக்கவில்லை என நீ சொன்னது மிகவும் நியாயம். என்னுடன் வா"
நான் யோசிக்க ஆரம்பித்தேன். இது மிகவும் அப்பாவியாக இருக்கிறது. இதன் கிரகம் மிகவும் நாகரீகம் அடைந்த கிரகமாக இருக்க வேண்டும். அங்கே நிச்சயம் சந்தோசமாக வாழலாம். அங்கே சென்று விடலாமா? இல்லை வேண்டாம். இது பேசுவதை பார்த்தால் அந்த கிரக மக்கள் உணர்ச்சி இல்லாமல் பொம்மைகள் போல் இருக்க வேண்டும். அங்கே சென்றால் எப்படி இருக்குமோ? என்ன வேலை தருவார்களோ? அங்கே செல்ல வேண்டாம். என் எண்ணங்கள் பலவாறு ஓட தொடங்கின.
"கிளம்பு நேரம் குறைவாக உள்ளது" என்றது.
"கொஞ்சம் பொறு. இப்போது என்னுடைய மிக பெரிய பிரச்சனை பணம். அது மட்டும் இருந்தால் நான் இங்கேயே வாழ்ந்து விடுவேன். உங்கள் சதுர தலையர்களின் கிரகம் எனக்கு தேவையே இல்லை . இப்போது அந்த பணமும், புகழும் சம்பாதிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்து விட்டது. இனி எனக்கு இங்கே எந்த பிரச்சனையும் இருக்க போவதில்லை "
"எப்படி?"
"எங்கள் பூமியில் வேற்று கிரக உயிரினத்தை பார்த்ததாக சொன்னாலே மிக பெரிய ஆள் ஆகி விடலாம். வேற்று கிரக உயிரினத்தோடு பறக்கும் தட்டையும் அவர்கள் முன் காட்டினால் ஒரே நாளில் நான் ஹீரோதான். பணமும், புகழும் தேடி வரும். நல்ல பெண்ணாக பார்த்து திருமணம் முடித்து கொள்ளலாம்."
"நீ என்ன சொல்கிறாய்?"
"புரியவில்லையா? சற்று முன்பு சொன்னேனே இங்கே மனிதர்கள் நம்பிக்கை துரோகிகள், சுயநலக்காரர்கள், வஞ்சகர்கள் என்று. அதை இப்போது புரிய வைக்கிறேன் பார்" என்று கூறியவாறே அதன் தலையில் கையில் இருந்த தடியால் விளாச தொடங்கினேன்.
விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன