Saturday, July 4, 2015

பேய்களை பிடித்த தமிழ் சினிமா !!!

மிழ் சினிமாவை இப்போது பேய் பிடித்து இருக்கிறது. அது என்ன காரணமோ, தமிழ் படங்களில் மட்டும் ஒரு காலகட்டம் முழுதும் ஒரு குறிப்பிட்ட வகையான படங்கள் தொடர்ந்து வெளிவந்து சலிப்பூட்டுகின்றன. 80களில் பழி வாங்கும் கதை படங்கள், பின்னர் கிராமத்து பின்னணி கதைகள். அந்த வகையில்  இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் தொடர்ந்து ரவுடிகளை நாயகனாக கொண்ட கதையாக எடுத்து தள்ளினர். ‘ரெட்’ அஜித், ‘பாபா’ ரஜினி என்று அந்த காலகட்டத்தில்  ரவுடியாக மாறாத நாயகர்களே இல்லை. ஒரு வேளை நாயகன் ரவுடியாக இல்லாவிட்டாலும்  வில்லன் மிகப்பெரிய  ரவுடியாக இருப்பான். ‘சொர்ணக்கா’ போன்று மிகப் பெரிய  பெண் ரவுடிகளையும் தமிழ் சினிமா உருவாக்கிய காலம் அது.

‘கேங்ஸ்டர்’ கதைகளை அடித்து துவைத்த  கொஞ்ச காலம் கழித்து  ரௌடி நாயகர்கள் மனம் திருந்தி காவல்துறை அதிகாரிகளாக பொறுப்பேற்று கொண்டனர்.   ‘ஆஞ்சநேயா’ அஜித், ‘காக்க காக்க’ சூர்யா, ‘சாமி’ விக்ரம்  என்று காக்கிசட்டையில் ஒரு கடமை தவறாத  போலீஸ் அதிகாரியாக பொறுப்பெடுத்து கொண்டனர். ஒரு கட்டத்தில் இந்த கதைக்களம் ஓவர் டோஸாக மாறி  படம் பார்க்க சென்றவர்கள் திரை அரங்கிற்கு பதில்  காவல் நிலையம் செல்லத் தொடங்கி விட்டனர். நம் இயக்குனர்களும் போலீசை இதற்கு மேல் தொந்தரவு செய்ய விரும்பாமல் அடுத்த களத்தை தேடினர்.

அடுத்த  சீசனில் தமிழ் சினிமாவின் கையில் மாட்டியது மதுரை. தொடர்ந்து மதுரை படங்களாக எடுத்து தள்ளினர். ஆனால் எல்லா படங்களின்  கதைக்கரு  கிட்டத்தட்ட ஒன்றுதான். மதுரை மக்கள் எந்த நேரமும் லுங்கி கட்டி கொண்டு கையில் அரிவாளோடு சுற்றுபவர்கள். எந்த நேரமும் மதுரையில் சண்டை நடந்து கொண்டே இருக்கும். இந்த இரண்டு வரிகளை அடிப்படையாக கொண்டு மதுரையில் விளையாடத் தொடங்கியது தமிழ் சினிமா. ஒரு கட்டத்தில் மதுரை மக்களே நொந்து போய் ‘நாங்கள் அப்படி எல்லாம் இல்லை’ என்று அடிக்கடி தன்னிலை விளக்கம் குடுக்க வேண்டிய சூழ்நிலை. நல்ல வேலையாக தமிழ் சினிமாவை அடுத்த நோய் பற்றிக் கொண்டது.

சிரிப்பது நல்லதுதான். அதற்காக எந்நேரமும் சிரித்து கொண்டே இருந்தால்? தொடர்ந்து வந்த காமெடி படங்கள் மக்களை தொடர்ந்து சிரிக்க சொல்லி துன்புறுத்தின. கதை என்று எதுவும் தேவை இல்லை. மொக்கையான காமெடி காட்சிகள் நான்கு இருந்தால் போதும். இந்த trend சற்று அதிக காலம் நீடித்தது. வடிவேலுவின் வனவாசத்தால் ஏற்பட்ட காமெடி வறட்சி கூட இந்த நிலைக்கு காரணமாக இருந்து இருக்கலாம். அதன் பின் காமெடியுடன் ஹாரர் என்னும் புதிய கதைக்களத்தில் படங்கள் வெளிவந்தன. இப்போது  முக்கால்வாசி சினிமாவை முழுக்க பேய் ஆக்கிரமித்து விட்டது. பேய் படங்களுக்கு அதிக செலவு இல்லை. ஒரு வீடும், நான்கு மனிதர்களும் இருந்தால் போதும் ஒரு சிறிய முதலீட்டு படத்தை எடுத்து விடலாம் என்பது கூட இதற்கு காரணமாக இருக்கலாம். 2001 முதல் 2012 வரை வந்த பேய் படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். ஆனால் இப்போதோ எங்கே பார்த்தாலும் பேய்.

இப்படி ஹாரர் காமெடி என்று வெளிவரும் படத்தின் கதைகள் கொடுமையிலும் கொடுமை. சமீபத்தில் வெளிவந்த ஒரு படத்தின் கதை இது. வழக்கப்படி நாயகனும், நாயகியும் ஒரு தனிமையான பங்களாவிற்கு குடி வருகின்றனர். நாயகியை பேய் பிடித்து விடுகிறது. அந்த பேய், தான் தற்கொலை செய்து கொண்டு பேயாக மாறியதற்கு காரணம் தனது கணவன் தன்னை சீரியல் பார்க்க விடாமல் தடுத்ததுதான் என்கிறது. உடனே நாயகன் டிவி கம்பெனிக்கு சென்று அந்த சீரியல் கேசட்டை வாங்கி அந்த பேயை பார்க்க விடுகிறான். பேய் விலகி விடுகிறது. இந்த கதையை சிறுகதையாக எழுதினாலே போர் அடிக்கும். ஆனால் இதை வைத்து ஒரு படமே எடுத்து விட்டார்கள்.

அடிப்படையில் பேய் படங்கள் எடுப்பது சற்று சிக்கலான விஷயம். படம் பார்ப்பவர்களை சிரிக்க வைப்பது,  அழ வைப்பதை விட பயமுறுத்துவது சற்று கடினம். பின்னணி இசை, கேமரா கோணங்கள் என்று எல்லாமே சரியான விகிதத்தில் இருந்தாலே பயம் வரும். ஆனால் இப்போது வரும் பேய் படங்களில் அந்த பயம் மிஸ்ஸிங். 13ம் நம்பர் வீடும் , மை டியர் லிசாவும் கேமரா உத்திகளிலும், மேக்அப்களிலும் காட்டிய பயத்தை இன்றைய கிராபிக்ஸ் பேய்கள் காட்டுவதில்லை.


அடுத்து ஒரு புதிய trend ஆரம்பித்து எல்லாரும் அந்த ட்ரெண்டை பின் பற்றும் வரை இந்த பேய் மோகம் தொடரவே செய்யும். அந்த ட்ரெண்டை தொடங்கப் போகும் படத்தை எடுக்கப்போகும் பேயோட்டி யார் என்பதே கேள்வி.


1 comment:

  1. சுத்தர் C-யோடு முடிந்து விடலாம்...!

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...