Saturday, November 16, 2013

சுமதி டீச்சரின் மாணவர்கள்

லைமை ஆசிரியரின் அறைக்குள் சென்று வந்த பின் சுமதி டீச்சர் ஒரு மாதிரியாக இருந்தார். கண்கள் சிவந்து இருந்தன. அநேகமாக அழுது இருந்திருக்க கூடும்.

“டேய்! நீ செஞ்ச வேலைதான் காரணம் போலடா. செம திட்டு வாங்கி அழுதுகிட்டு இருக்காங்க பாரு” அருகில் அமர்ந்திருந்த சிவகுமாரை பார்த்து கூறினேன்.

“நல்லா அழனும்டா இவ. கிளாஸ்ல அத்தனை பொண்ணுங்க முன்னாடி என்னை எப்படி எல்லாம் திட்டி அடிச்சு அவமானபடுத்தி இருப்பா.” அவன் சிறிதும் அலட்டி கொண்டது போல தெரியவில்லை.

சில நிமிடங்களுக்கு சுமதி டீச்சர் நாற்காலியை விட்டு எழுந்தார்.

“பசங்களா! இப்போ நான் வீட்டுக்கு போறேன். அமைதியா உக்காந்து படிச்சுகிட்டு இருங்க. இனிமே வேற யாராவது வருவாங்க” கூறிவிட்டு வகுப்பறையை விட்டு வேகமாக வெளியேறினார். அவரின் மனம் மிகுந்த காயம் அடைந்து இருக்க வேண்டும். சுமதி டீச்சருக்கும், ராமநாதன் சாருக்கும் தொடர்பு இருப்பதாக பள்ளி கழிப்பறையில் எழுதி விட்டேன் என்று சிவா கூறியதுமே எனக்கு பதறி விட்டது. அப்படியென்றால் டீச்சருக்கு எப்படி இருக்க வேண்டும்? தலைமை ஆசிரியர் விசாரிக்கும்போது கூனி குறுகி நின்றிருப்பார். இருந்தாலும் சிவா ரொம்ப மோசம். இனிமே இவனிடம் இருந்து விலகி விட வேண்டும் என முடிவு எடுத்தேன். தெளிவாக திட்டமிட்டு இருட்டிய பிறகு கழிப்பறையில் எழுதி இருக்கிறான் என்றால் எத்தனை சாமர்த்தியம் வேண்டும்.

“நாந்தான் செஞ்சேன்னு உனக்கு மட்டும்தான் தெரியும். எவன் கிட்டயாச்சும் மூச்சு விட்ட உன்னை தொலைச்சுடுவேன்” என்றான்.

“நீ எழுதுனதை அழிச்சுட்டாங்க போலடா”

“தெரியும். காலைல முதல் ஆளா ஹெட்மாஸ்டர் வந்து இருப்பான். அதை படிச்சுட்டு யாரையாவது கூப்பிட்டு அழிக்க சொல்லி இருப்பான். இவ எப்ப வருவான்னு பாத்துகிட்டே இருந்து வந்ததும் கூப்டு  ராவி இருக்கான்.” வில்லத்தனமாக சிரித்தான்.

ரு வாரம் கடந்தது. சுமதி டீச்சர் பள்ளிக்கு வருவது போல தெரியவில்லை. திடீரென குள்ளமாக, கண்ணாடி போட்ட ஒருவர் வகுப்புக்கு வந்து அவரை  எங்களின் புது வகுப்பாசிரியர் என சொல்லி கொண்டார்.

“டீச்சர் வேலைய விட்டுட்டு போய்ட்டாங்க போலடா.” நான்
சிவகுமாரிடம் சொன்னேன்.

“அவ அப்படி எல்லாம் போக மாட்டா. நாளைக்கே வந்து நிப்பா பாரு”

“இல்லடா. எல்லாரும் அவங்க வேலைய விட்டு போயிட்டதா சொல்றாங்க.  நான் வாட்ச்மேன் தாத்தாகிட்ட கூட கேட்டேன். அவரும் அப்பிடிதான் சொன்னாரு.”

சிவாவின் முகம் மாறியது.

“நல்லா விசாரிச்சாயா?”

“இன்னும் என்ன விசாரிக்கறது. இப்போ ஸ்கூல் முழுக்க அவங்களை பத்தி தப்பு தப்பா வேற பேச ஆரம்பிச்சுட்டாங்க. இந்த அவமானத்துக்கு அப்புறம் அவங்களால எப்பிடி பசங்களுக்கு நடுவுல நின்னு பாடம் எடுக்க முடியும். அநியாயமா அவங்களை வேலையை விட்டு துரத்திட்டியேடா. அவங்க குடும்பம் வேற கஷ்டப்படுற குடும்பமாம்.  வாட்ச்மேன் தாத்தா சொன்னார்..”

“இல்லடா. அவ வேலைய விட்டு போவாங்கன்னு நினைக்கவே இல்லை. லேசா அழ வச்சு பாக்கலாம்னு நெனச்சேன். ஆனா இந்த அளவு போகும்னு” அவன் முகத்தில் உண்மையான வருத்தம் தெரிந்தது.

“சரி விடு. இதை மறந்துடு”

“எப்பிடி மறக்குறது. அவங்க வீடு எங்க இருக்குன்னு தெரியுமா?”

“அவங்க இந்த ஊரே இல்ல. பக்கத்து ஊரு. ஏன் கேக்குற?”

“அவங்க கிட்ட நாந்தான் எழுதுனேன்னு மன்னிப்பு கேக்கணும்.
“என்னடா சொல்ற. நீ செஞ்சது மன்னிக்கிற விஷயமா? பேசாம மூடிகிட்டு இரு.” சொல்லிவிட்டு திரும்பிக்கொண்டேன்.

டுத்த திங்கள் கிழமை சிவா சற்று உற்சாகமாக தெரிந்தான். என்னை பள்ளி மைதானத்தில் இருந்த மரத்தின் கீழ் அழைத்து சென்று பேச தொடங்கினான்.

“எப்படியோ டீச்சர் விலாசம் கண்டுபிடிச்சு அவங்க கிட்ட போய் மன்னிப்பு கேட்டுட்டேன்டா. இப்போதான் மனசு லேசா இருக்கு”

“நீ நெஜமாவே தைரியசாலி. டீச்சரை பத்தி எழுதுனதுலயும் சரி. மன்னிப்பு கேட்டதும் சரி.”

“நேத்து அவங்க வீட்டுக்கு போய் பார்த்தா  நெறைய கூட்டம். ஏதோ விஷேசம் போல. எப்பிடியோ டீச்சரை பிடிச்சு பேசிட்டேன்”

“அத்தனை பேரு மத்தியிலா?”

“இல்ல. தனியா பேசணும்னு சொன்னதும் என்னை கொல்லைக்கு கூட்டிகிட்டு போய்ட்டா.”

“அப்புறம்”

“விசயம் சொன்னதும் அடிச்சா. ரெண்டு அறை வேகமா. ஆனா மூணாவது அறை  செல்லமா தட்டுனா. அதுக்குள்ள யாரோ வந்து நேரமாச்சுன்னு சொல்லவும் வீட்டுக்குள்ள போய்ட்டாங்க. வீட்ல சொல்லி என்னை அடிக்க ஆளு கூட்டிக்கிட்டு வருவாளோன்னு பயந்தேன். அப்பிடி எதுவும் செய்யல. ரொம்ப நல்லவடா அவ. இல்ல இல்ல அவங்க”

உணர்ச்சிவசப்பட்ட குரலில் பேசினான். இவன் நல்லவனா, கெட்டவனா?

“அப்புறம் இன்னொரு விஷயம். நேத்து அவங்க வீட்டுல கூட்டமா இருந்ததே ஏன் தெரியுமா? அவங்களை பொண்ணு பாக்க வந்து இருந்தாங்க. மாப்பிள்ளை ராமனாதன் சார்.”

“என்ன?”

“உண்மைதான். வாயை பிளக்கதா. அவங்க பேரு ரொம்ப கெட்டு போயிடிச்சுன்னு  ராமநாதன் சாரே அவங்களை கல்யாணம் செய்ய முடிவு செஞ்சு இருப்பார் போல. எப்பிடியோ நான் செஞ்ச வேலையால டீச்சருக்கு கல்யாணம் ஆக போகுது” பெருமிதத்துடன் கூறினான்.

ரு வாரத்துக்கு பின் வாட்ச்மேன் தாத்தா ஒரு நாள் பள்ளிக்கு விடுப்பு எடுத்து இருந்தார். நிறைய அவர் வந்ததும் அவரிடம் சென்று பேச்சு குடுத்தேன்.

“எங்க தாத்தா போயிருந்தீங்க நேத்து?”

“சுமதி டீச்சருக்கு நேத்து கல்யாணம். உனக்கு தெரியாதா?”

“இல்லையே. யாரு கூட?” அப்பாவி போல கேட்டேன்

“ராமநாதன் சார். நெறைய வாத்தியாருங்களும் வந்து இருந்தாங்களே” 

“அப்பிடியா. அந்த டீச்சரை பத்தி எல்லாம் தப்பா பேசிக்கிட்டு இருந்தாங்க. நல்ல வேளை. ராமநாதன் சார் அவங்களை கல்யாணம் செஞ்சுகிட்டார்”

“தப்பா எல்லாம் பேசலவே. எல்லாரும் சரியாத்தான் பேசுனாங்க. பள்ளிக் கூடத்துல ரெண்டு பெரும் சேர்ந்து கொஞ்ச நஞ்ச கூத்தா அடிச்சாங்க. ஹெட்மாஸ்டர் இது தெரிஞ்சதும் சாமி ஆடிட்டார். அந்த பொண்ணு டெம்ப்ரவரியா வேலைல இருந்ததால அப்பவே வீட்டுக்கு அனுப்பிட்டார். ராமநாதனை ஒன்னும் செய்ய முடியாம கண்டிச்சு  விட்டுட்டார். இனிமே பள்ளிகூடத்துல கௌரவமா இருக்கணும்னா சுமதி டீச்சரை கல்யாணம் செஞ்சுக்குறதுதான் ஒரே வழின்னு ராமநாதன் அவசர கல்யாணம் செஞ்சு கிட்டான்”

சொல்லி கொண்டே போனார் தாத்தா. எனக்கு புரிய சற்று நேரம் பிடித்தது.

“ஆனா தாத்தா. பாத்ரூம்ல யாரோ எழுதி வச்சதாலதான் இது வெளிய தெரிஞ்சதுன்னு சொன்னாங்க”

தாத்தா ஒரு மாதிரியாக பார்த்தார்.

“இந்த பிரச்சனை புகைய ஆரம்பிச்ச நேரம் பார்த்து பாத்ரூம்ல எவனோ கரிய வச்சு கிறுக்கி இருந்தான். ஆனா அதை நான் அன்னைக்கு ராத்திரி  பார்த்த உடனே அழிச்சுட்டேன். யாரும் அதை படிச்சு இருக்க வாய்ப்பே இல்லையே.”

உளறி விட்டேன் என்று தோன்றியது. “வகுப்பு ஆரம்பிக்க போகுது வரேன் தாத்தா” என்று கூறி விட்டு நகர்ந்தேன்.

வகுப்பில் நுழைந்ததும் சிவா, “ஏண்டா லேட்” என்றான் 

வாட்ச்மேன் தாத்தா உடன் பேசி கொண்டிருந்தேன் என்று சொன்னேன். என்ன பேசினேன் என்று சொல்லவில்லை. பாவம். சுமதி டீச்சருக்கு தன்னால்தான் திருமணம் ஆனது என்று அவன் நம்பிக்கொண்டு இருக்கட்டும்.
 

8 comments:

  1. நடக்கக் கூடிய கற்பனை தான். டீச்சர்கள் உஷாராகத்தான் இருக்கவேண்டும். இன்றைய மாணவர்கள் அப்படி! - சிறப்பாக எழுதினீர்கள். வாழ்க! - கவிஞர் இராய செல்லப்பா (இமயத்தலைவன்) , சென்னை

    ReplyDelete
  2. ரசித்தேன். நல்ல கற்பனை.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...