Thursday, January 30, 2014

ஆணாதிக்க சமூகம்

ன்னுடைய கல்லூரி இறுதி நாட்களின் போது கூட படித்த நண்பர்களில் சிலர் ஆட்டோகிராப் புத்தகத்தில் மற்றவர்களை பற்றி தகவல் திரட்டி கொண்டிருந்தனர் . பெயர், முகவரி, விறுப்பு வெறுப்புகள், லட்சியம் என்று ஒரு பக்கம் முழுக்க தகவல்களை மற்றவர்களிடம் இருந்து வாங்கி இருந்தான் ஒரு நண்பன். இது போன்ற விஷயங்களில் எனக்கு விருப்பம் இல்லை என்றாலும் ஒரு நாகரீகத்திற்காக நானும் எதையோ நிரப்பி கொடுத்தேன்.

அப்போது தற்செயலாக இல்லை, இல்லை ஒரு ஆர்வத்தில் பக்கங்களை புரட்டி மற்றவர்கள் என்ன எழுதி  இருக்கிறார்கள் என்று பார்த்தேன்.குறிப்பாக பெண்கள் என்ன எழுதி இருக்கிறார்கள் என்று. இது முறையற்ற செயல் என்று சிலருக்கு தோன்றலாம். ஆனால் மாணவிகளை மாணவர்கள் பார்த்தாலே கூப்பிட்டு எச்சரிக்கை விடும் கல்லூரியில் படித்த எனக்கு உடன் படித்த பெண்களை பற்றி தெரிந்து கொள்ள வேறு வழி தெரியவில்லை. திருட்டுத்தனமாக பெண்கள் பக்கம் சென்று வந்த அந்த நோட்டு புத்தகத்தை நபடிப்பது தவறு இல்லை என்று என்னை நானே சமாதானம் செய்து கொண்டேன்.  உண்மையை சொல்லுங்கள். உங்களுக்கே அவர்கள் என்ன எழுதி இருந்தனர் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருக்கிறதுதானே?

ஒவ்வொரு பக்கமாக பார்த்து கொண்டு வந்த பொழுது அவர்கள் லட்சியம் என்று எழுதி இருந்ததை பார்த்து எனக்கு சிரிப்பதா, அழுவதா என்றே தெரியவில்லை. கிட்டத்தட்ட அனைவரும் ஒரே போல் நல்ல தாயாக இருக்க வேண்டும், நல்ல மனைவியாக இருக்க வேண்டும் என்று எழுதி இருந்தனர்.  அதில் சில புத்திசாலிகள் பெண்களும் அடக்கம்.அடிப் பாவிகளா! லட்சக்கணக்கில் செலவு செய்து படித்து விட்டு நல்ல வேலைக்கு சென்று சம்பாதிக்க வேண்டும் என்று இன்னொரு வரியை சேர்த்து எழுத தோன்றவில்லையே என்று நொந்து கொண்டேன். ஏனென்றால் அந்த புத்தகத்தில் எழுதி இருந்த மாணவர்களின்  லட்சியம் பெரும்பாலும் ஒரு பெரிய மென்பொருள் நிறுவனத்தில் சேர்ந்து பணியாற்றுவதாகவே இருந்தது. இந்த பெண்களை குற்றம் சொல்லி என்ன செய்வது? காலம் காலமாக அவர்கள் மனதில் விதைக்கப்பட்டதைதான் அவர்கள் எழுதி இருக்கிறார்கள் என்று புரிந்தது. 

தென் தமிழகத்தில் இருக்கும் நிலைமை இதுதான். பெண்களை நன்கு படிக்க வைப்பது. பின் வெளியூரில் வேலைக்கு அனுப்ப தயக்கம் காட்டி சிறிது நாள் வீட்டிலேயே வைத்து இருந்து பின்  திருமணம் செய்து வைப்பது.  அதற்கு எதற்கு அவர்களை படிக்க வைக்க வேண்டும்?  இந்தியா போன்ற புத்திசாலிதனத்தை மூலதனமாக கொண்டு வளர்ந்து வரும் நாட்டுக்கு இது மிக பெரிய  இழப்பு அல்லவா? இந்த அரிய கருத்தை  பக்கத்தில் இருந்த நண்பனிடம் சொன்னேன்.

"அட போடா!பொண்ணுங்க  வேலைக்கு போறதாலதான் பசங்களுக்கு வேலை கிடைக்க மாட்டேங்குது. இவளுக வீட்லயே இருந்துட்டா அந்த வேலை ஒரு பையனுக்கு கிடைச்சு அவன் குடும்பத்தை காப்பாத்துவான்" என்றான் அவன்.

ஆணாதிக்க சிந்தனை  என்றால் என்ன என்று புரிய ஆரம்பித்த நாள் அது.

- தொடரும் 

Friday, January 24, 2014

கொஞ்சம் மாத்தி யோசி!

ன்று அலுவலகம் முடிந்து வீட்டுக்கு கிளம்பியபோது அவன் மிகவும் களைத்து போயிருந்தான். இன்னும் இரண்டு நாட்கள் வீட்டில்அவனை தவிர யாரும் இருக்க மாட்டார்கள் என்ற எண்ணம் அவனை மேலும் சோர்வு கொள்ள செய்தது. போதாக்குறைக்கு மழை வேறு சேர்ந்து கொண்டு அவனை மிகவும் சிரமப்படுத்தியது.   உடல் அசதி மிகுந்து இருந்ததால் நேராக படுக்கைக்கு சென்று விட முடிவு செய்துகொண்டான்.

மூடி கிடந்த கதவை திறந்து, வீட்டுக்குள் நுழைந்து கதவை சாத்தியவனால் கதவை சரியாக மூட முடியவில்லை. அந்த ஒற்றை கதவு நிலையில் பொருந்த மறுத்தது. தன்னுடைய பலத்தை எல்லாம் கொடுத்து மீண்டும் தள்ளி பார்த்தான். நிலைக்கு மயிரிழை தூரம் முன் நின்று கொண்டு நகராமல் அடம் பிடித்தது. மழைக்கு கதவு இறுகிவிட்டது என்று அவனுக்கு தோன்றியது. மீண்டும் தனது மொத்த பலத்தையும் பிரயோகித்து கதவை தள்ள முயன்று தோற்றான்.

அவனுக்கு தூக்கம் கண்ணை சுழற்ற ஆரம்பித்தது. கதவை மூடாமல் தூங்குவது பாதுகாப்பில்லை என்று உணர்ந்தான். வேறு வழியின்றி பாயை எடுத்து கொண்டு வந்து தன் கால்களால் கதவுக்கு முட்டு கொடுத்து கொண்டு தூங்க ஆரம்பித்தான். வீட்டினுள் பஞ்சு மெத்தை இருக்கும்போது வாசலுக்கு நேரே படுத்து தூங்கும் தன் தலை விதியை நொந்து கொண்டான்.




மறு நாள் விடிந்ததும் எழுந்து முதல் வேலையாக கதவை மூட முடிகிறதா என்று பார்த்தான். ஒன்றும் வேலைக்காவது போல தெரியவில்லை. கதவை மூடாமல் அலுவலகம் செல்ல இயலாது. இப்போதிருக்கும் சூழ்நிலையில் அலுவலகத்தில் விடுப்பு எடுப்பதும் கடினம். என்ன செய்வது என்று தெரியாமல் சிறிது நேரம் குழம்பி தொலைபேசியில்  அலுவலகத்துக்கு அரை நாள் விடுப்பு சொல்லிவிட்டான். பின்னர் தனது நண்பனை தொலைபேசியில் அழைத்து அவனுக்கு தெரிந்த ஆசாரியின் தொலைபேசி எண்ணை வாங்கினான்.  மதியம் அலுவலகம் செல்லும்போது தன்னை கசக்கி பிழிய போகின்றனர் என்ற பயம் அவனுக்கு வயிற்றில் புளியை கரைத்தது .

ஒரு மணி நேரத்தில் வருவதாக சொன்ன ஆசாரி சொன்னது போலவே வந்து விட்டார்.  அவரிடம் கதவை காட்டி தன் பிரச்சினையை சொன்னான். அவர் கதவை உள்ளே இருந்து மூடி பார்த்தார். அவராலும் மூட முடியவில்லை. பின் வெளியே சென்று வெளிப்  பக்கமாக மூட முயன்றார். பயனில்லை.

"மழையில நல்லா இறுகிடிச்சு"

"தம்பி எங்க வேலை செய்றேன்னு சொன்னீங்க?" 

"கம்ப்யூட்டர் கம்பெனியில"

"நினைச்சேன்." 

"சீக்கிரம் சரி பண்ணிடுங்க. எவ்வளவு செலவு ஆகும்."

"500 ரூபா கொடுங்க"

"சரி வேலைய ஆரம்பிங்க"

அவன் சொன்னதும் அவர் குனிந்தார். கதவுக்கும், நிலைக்கும் இடையே இருந்த அந்த சிறிய கல்லை எடுத்து தூர எறிந்தார். கதவை மூடினார். அது அழகாக நிலையில் பொருந்தி நின்றது.

"சரி வேலை முடிஞ்சது. பணத்தை எடுங்க"

"என்னங்க அநியாயமா இருக்கு. ஒரு கல்லை எடுத்து போட்டதுக்கு இத்தனை காசா?"

"எடுத்து போட்டதுக்கு மட்டும் இல்ல. கல்லை பார்த்ததுக்கும். பிரச்சனை பண்ணாம காசை எடுங்க"

அவன் வெறுப்போடு பணத்தை எடுத்து நீட்டினான்.

"தம்பி! நேத்தே நீங்க வெளிய போய் கதவை தள்ளி பார்த்து இருந்தா அந்த கல்லு உங்க கண்ணுல பட்டு இருக்கும். உள்ளேயே நின்னுகிட்டு தள்ளிகிட்டே இருந்ததால கதவு அந்த கல்லை மறைச்சுகிட்டு, கடைசிவரை கல்லு உங்க கண்ணுல படல."

"உண்மைதான். பிரச்சனை வந்ததும் அது பெருசாதான் இருக்கும்னு  நெனச்சுகிட்டேன். பதட்டப்படமா வேற மாதிரி யோசிச்சா இதை சுலபமா தீர்க்க முடியும்னு நான் நினைக்கல. என்ன பண்றது? பிரச்சினை வந்தா கவலை வருது. அது சிந்திக்க விடாம செஞ்சுடுது. பெரும்பாலான பிரச்சனைகள் லேசா தீர்க்க கூடியதுதான். அதை நம்ம மனசுதான் பெருசாக்கி நம்மை பயமுறுத்தி பிரச்சினையை  தீர்க்க விடாம செஞ்சுடுது."

"இது உங்க பிரச்சினை மட்டும் இல்ல. பெரும்பாலான மனுசங்க பிரச்சினை. இந்த பணத்தை பிடிங்க. இது எனக்கு வேண்டாம்."

பணத்தை அவன் கையில் திணித்து விட்டு நடக்க தொடங்கினார் ஆசாரி.  

Saturday, January 18, 2014

மண்ணில் இந்த காதல் இன்றி

லகில் நடக்கும் பெரும்பாலான விஷயங்கள் ஒரு லாஜிக்கின் அடிப்படையிலேயே நடக்கிறது. ஒட்டு மொத்த பிரபஞ்ச இயக்கத்தையும் சில இயற்பியல் விதிகளின் மூலம் விளக்க முடியும். ஆனால் பிரபஞ்சத்தில் சில விஷயங்கள் எந்த ஒரு லாஜிக்கையும் பின்பற்றுவதில்லை. அதில் முக்கியமானது காதல். இந்த உயிரியல் விஷயத்தை எந்த இயற்பியல் கோட்பாட்டாலும் விளக்க முடியாது. காதல் என்றால் என்ன? உண்மையில் அப்படி ஏதும் இருக்கிறதா இல்லை அது முற்றிலும் உடற்கவர்ச்சி சார்ந்த விஷயமா என எத்தனை ஆராய்ந்தாலும் யாராலும் ஒரு திருப்திகரமான பதில் அளிக்க முடிவதில்லை. இருந்தாலும் இதை பற்றி எல்லாம் யோசிக்காமல் எல்லாரும் காதலித்து கொண்டே இருக்கிறோம். காதலும் காரணம் இல்லாமல் கண்டபடி வந்து கொண்டும், சென்று கொண்டும் இருக்கிறது.

இளங்கோ(பெயர் மாற்றப்பட்டுள்ளது) பள்ளியில் என்னுடன் படித்தவன். என்னுடைய தெருவும் கூட. பத்தாவது முடித்ததும் பாலிடெக்னிக் பக்கம் சென்று படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டான். வேலைக்கு செல்லாமல் சுற்றி கொண்டிருந்த நாட்களில் திடீரென வீட்டில் சென்று கம்ப்யூட்டர் கோர்ஸ் சேரப்போகிறேன் என்று சொல்லி இருக்கிறான். பயலுக்கு திடீரென்று படிப்பில் என்ன அக்கறை என்றெல்லாம் யோசிக்காமல் அவர்களும் சேர சொல்லி பணம் கொடுத்து அனுப்பி இருக்கின்றனர்.

ரம்யாவின்   (கற்பனை பெயர்) பூர்விகம் எங்கள் ஊர்தான். இன்னும் சொல்ல போனால் அவள் எனது தெருதான். அவளது தந்தை பிழைப்புக்காக குடும்பத்துடன்  வட இந்தியாவுக்கு சென்று விட்டார். அவர்   +2 படிக்கும்போது அவர் காலமாகிவிட்டதால் ரம்யா தனது தாயுடன் மீண்டும் சொந்த ஊருக்கே வந்து விட்டாள்; பார்க்க களையாக வேறு இருப்பாள். தெருவில் பாதி பையன்கள் அவளை கவனிக்க தொடங்கி இருந்தனர்.நமது ஹீரோ இளங்கோவையும் சேர்த்து.அவள் விடுமுறைக்கு கம்ப்யூட்டர் கோர்ஸ் சேர்ந்து இருந்தாள். 

மற்ற பையன்கள் போல் ரம்யாவின் தெரு முனையிலேயே நிற்காமல் இளங்கோ ஸ்மார்ட் வொர்க் செய்து ரம்யாவுடன் கம்ப்யூட்டர் படிக்க சேர்ந்து விட்டான். அவனது திட்டப்படியே ரம்யா அவனை கவனிக்க தொடங்கினாள். வழக்கப்படியே நட்பில் தொடங்கி ஒரு கெட்ட நாளாக பார்த்து தனது காதலையும் சொல்லி விட்டான். அவளும் அதை ஏற்று கொள்ள காதல் தீப்பந்தம் கொழுந்து விட்டு ஏறிய தொடங்கி விட்டது.

காதல் நன்றாக போய் கொண்டு இருந்த போது இளங்கோவுக்கு ஒரு பிரச்சினை. கம்ப்யூட்டர் சென்டரில் இருக்கும் இரண்டு மணி நேரம் தவிர்த்து மீதமுள்ள 22 மணி நேரம் ரம்யாவுடன் பேச முடியவில்லை என்பதுதான் அது. தவிர இன்னும் சில நாட்களில் கோர்ஸ் முடிந்து விடும். எப்போதும் தொடர்பிலேயே இருக்க என்ன செய்வது என யோசித்த அவன் அவளுக்கு ஒரு செல்போன் பரிசளிக்க முடிவு செய்தான். முதல் முறை காதலிக்கு அளிக்கும் பரிசு.குறைந்த விலையில் கொடுத்தால்  அவள் தவறாக எடுத்து கொள்வாளோ என நினைத்து நல்ல, விலை உயர்ந்த போன் அளிக்கலாம் என முடிவு செய்தான். சரி, பணத்துக்கு என்ன செய்வது? வழக்கப்படி தனது தந்தையின் கஜானாவில் கை வைத்து விட்டான். எப்போதும் போல யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள் என எண்ணி விட்டான். மொபைலை வாங்கி பரிசு அளித்தும் விட்டான். அந்த பெண்ணும் வேண்டாம் என சொல்லாமல் வாங்கி கொண்டு தனது தாயிடம் ஏதோ பொய் சொல்லி சமாளித்து விட்டாள்.

இளங்கோவின் தந்தை பெரிய தொகை தனது கையிருப்பில் குறைவதை கண்டு பிடித்து விட்டார். இளங்கோவை கூப்பிட்டு விசாரிக்க ஒரு கட்டத்தில் தனது திருமண தேதி நெருங்கி விட்டதாக நினைத்து உண்மையை சொல்லி விட்டான். அதிர்ச்சி அடைந்த தந்தை இதை 'டீல்' செய்யும்  பொறுப்பை இளங்கோவின் தாயிடம் விட்டு விட்டார்.

இளங்கோவின் தாய் கூந்தலை முடிந்து கொண்டு நேராக ரம்யாவின் வீட்டு வாசலுக்குசென்றுஇருக்கிறார். தனக்கு தெரிந்த, தான் இதுவரை பயன்படுத்திய, பயன்படுத்தாத எல்லாகெட்ட வார்த்தைகளையும் பயன்படுத்த இது போன்ற ஆட்களை இது வரை பார்த்திராத ரம்யாவின் தாய்க்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. ஒட்டு மொத்த தெருவும் வேடிக்கை பார்த்த அவமானமும், தனது பெண் மேல் வைத்திருந்த நம்பிக்கை பொய்த்த ஏமாற்றமும் சேர்ந்து கொள்ள கண்ணில் நீர் வழிய நின்று கொண்டு இருந்திருக்கிறார். இளங்கோவின் தாய் திட்டி முடித்து விட்டு சென்ற சில மணி நேரத்துக்குள் தற்கொலை செய்து கொண்டார்.

மரணத்துக்கு வந்த ரம்யாவின் உறவினர்கள் நடந்த விஷயம் அறிந்ததும் ஆவேசம் அடைந்து இருக்கிறார்கள். அவர்களில் சிலர் இளங்கோவை கொலை செய்யும் வெறியுடன் அவன் வீட்டுக்கு சென்று இருக்கிறார்கள். இளங்கோ சுதாரித்து தப்பித்து ஓட முயன்றபோது தெருவிலேயே வைத்து அவனை கத்தியால் குத்தி விட்டார்கள். ரத்த வெள்ளத்தில் கிடந்த இளங்கோவை எப்படியோ அவனது வீட்டார் காப்பாற்றி மருத்துவமனை கொண்டு சென்று இருக்கிறார்கள். இப்போது தந்தை, தாய் இல்லாமல் ரம்யா; உயிருக்கு போராடி கொண்டு இளங்கோ.

மேற்கூறிய சம்பவங்கள் நடந்து இப்போது சில வருடங்கள் ஓடி விட்டன. இப்போது இளங்கோ வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு தந்தையும் ஆகி விட்டான். தாயின் மரணத்துக்கு பின் உறவினர் வீட்டுக்கு சென்று விட்ட ரம்யாவுக்கும் இப்போது திருமணம் ஆகி  குழந்தை இருக்க வேண்டும். கடைசியில் இவர்களின் காதல் ஒரு உயிரை பறித்ததுதான் மிச்சம். 

'ராட்டினம்' என்றொரு படம்.  ரம்யா-இளங்கோவின் கதையை மீண்டும் நினைவுபடுத்தியது. இந்த லாஜிக் இல்லாத காதல் இன்னும் எத்தனை ரம்யா-இளங்கோக்களை உலகத்தில்உருவாக்க போகிறது என தெரியவில்லை. மண்ணில் இந்த காதல் இன்றி வாழ முடியுமா? என யோசித்து கொண்டே இருக்கிறேன்.




Saturday, January 4, 2014

ஆதலால் காதல் செய்வீர்!

வேலை இல்லாமல் சுற்றிய நாட்களில் அந்த பூங்காவுக்கு தினசரி விஜயம் செய்வதை ஒரு கடமையாகவே செய்து கொண்டிருந்தேன்.இந்த கதையின் நாயகரையும்  அந்த பூங்காவே எனக்கு அறிமுகம் செய்து வைத்தது. அவருக்கு நாற்பது வயது இருக்கலாம். ஒவ்வொரு சனிக்கிழமையும் தவறாமல்  பூங்காவுக்கு வந்து விடுவார் . கையில் கொண்டு வரும்  புத்தகத்தை வைத்து படித்து கொண்டு இருப்பார். நான் அவருடன் பேசியதில்லை. இருந்தாலும் அவரை பார்க்கும்போதெல்லாம் அவருடன் பேச வேண்டும் என்று நினைப்பேன். அதற்கு காரணம் அவர் முகத்தில் தெரிந்த கார்ப்பரேட் களை. எப்படியாவது யாரையாவது பிடித்து வேலை வாங்கி விட வேண்டும் என்று எனக்கு இருந்த உத்வேகம்.

இந்த வாரமும்  வழக்கம் போல அவர் வந்திருந்தார். நான் அமர்ந்த அதே பெஞ்சிலேயே அவரும் வந்து அமர்ந்தார். அவருடன் பேசி விட முடிவு எடுத்தேன். சொல்ல முடியாது. கடவுள் எனக்கு உதவி செய்ய அனுப்பிய தேவதூதன் இவராகவும் இருக்கலாம். மெதுவாக பேச்சை தொடங்கினேன்.

"வணக்கம் சார்"

"வணக்கம் நீங்க"

"என்னை உங்களுக்கு தெரியாது. நான் உங்களை அடிக்கடி இந்த பார்க்கில் பார்த்து இருக்கிறேன்"

புன்னகை செய்தார்.

"நீங்க படிக்கிறீங்களா?"

"இல்லை. எஞ்சினீரிங் படிச்சுட்டு  வேலை தேடி திரிஞ்சுகிட்டு இருக்கேன்"

"அப்படியா. உங்க ரெஸ்யூம் எனக்கு அனுப்புங்க. ஏதாவது செய்ய முடியுமான்னு பாக்குறேன்". ஒரு அட்டையை எடுத்து நீட்டினார்.

"நிச்சயம் சார். ரொம்ப நன்றி."

மீண்டும் ஒரு புன்னகை. எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது . ரொம்ப சிரமப்படுத்தாமல் அவரே உதவி செய்ய ஒத்து கொண்டார்.  அப்படியே கழண்டு கொண்டால் மரியாதையாக இருக்காது. ஓரிரு நிமிடங்கள் தொடர்ந்து பேசலாம்.

"நீங்க எந்த ஊரு?" அவர் குரல் என் சிந்தனையை கலைத்தது.

"மதுரை பக்கம்"

அவர் முகத்தில் ஒரு மகிழ்ச்சி பரவுவதை கவனித்தேன்.

"நானும் தேனிதான்"

அவர் சொன்னதும் எனக்கும் மகிழ்ச்சிதான். இவர் மூலம் எனக்கு வேலை கிடைக்க போவதாக உள்ளுணர்வு கூறியது. எனக்குஎன்ன பதில் கூறி பேச்சை வளர்ப்பது என்று தெரியவில்லை. இது போன்ற சமயங்களில் நான் வழக்கமாக கேட்கும் கேள்வியை கேட்க முடிவு செய்தேன்.



"அப்போ அடுத்த வாரம் பொங்கலுக்கு ஊருக்கு போறீங்களா?"

"இல்லை."

"இங்கேயே செட்டில் ஆகிட்டீங்களா?"

"கிட்டத்தட்ட" 

"கிட்டத்தட்ட என்றால்?"

அவர் முகம் மாறியது. தவறாக கேட்டுவிட்டதை உணர்ந்து உதட்டை கடித்தேன்.

"என்னுடைய உறவு எல்லாமே அங்கேதான் உள்ளது. ஆனால் அவர்களுக்கு நான் உறவில்லை."

மீண்டும் குழப்பமாகவே பதில் சொன்னார்.

"எனக்கு புரியவில்லை சார்"

"நான் காதலித்து திருமணம் செய்ததால் வீட்டுக்குள் வர கூடாது என்று ஏன் தந்தை கூறி விட்டார். எந்த உறவினரும் என்னை சேர்த்து கொள்ளவும்  மாட்டார்கள் "

"புரிந்துவிட்டது சார் .என்றாவது ஒரு நாள் சமாதானம் ஆகிவிடுவார்கள்"

"இல்லை. எப்போதுமே ஆக மாட்டார்கள்."

"அப்படியில்லை சார். இப்போது காதலை யாரும் பெரிதாக எதிர்ப்பதில்லை. எதிர்த்தாலும் கோபம் அதிக நாள் தாங்காது"

"பெரிதாக என்றால் எந்த அளவு? வேறு ஜாதி பெண்ணை ஏற்று கொள்ளும் அளவா?"

"ஆம். ஜாதிதானே காதலின் முதல் எதிரி. ஆனால் இப்போது ஜாதி மாறி செய்யும் திருமணத்தை ஏற்று கொள்ளும் பக்குவம் சிறிது சிறிதாக வந்து கொண்டுள்ளது."

நான் அதிகம் பேசுவது போல் தோன்றியது. ஆனால் எப்படி உரையாடலை முடிப்பது என்று தெரியவில்லை.

"சரி. ஜாதி மாறி திருமணம் செய்து கொண்டால் ஏற்று கொள்வார்கள். நான் கேரளத்து  பெண்ணை திருமணம் செய்து கொள்ள போகிறேன்  என்றால்"

"இதை ஏற்று கொள்வது கடினம்தான். வரப்போகும் மருமகளுடன் தம்முடைய மொழியில் பேசிக்கொள்ள முடியாது என்பது பெரிய பிரச்சினை. இருந்தாலும் இப்போது தங்கள் பிள்ளைகளை  வெளிநாட்டு பெண்ணை திருமணம் செய்து கொள்ள அனுமதித்தவர்களையே எனக்கு தெரியும்"

"உண்மைதான். ஆனால் ஆங்கிலேய பெண்ணை ஏற்று கொள்பவர்களால், இன்னும் தங்கள் மகன் ஒரு கேரளத்து முஸ்லிம் பெண்ணை திருமணம் செய்வதை அதிகம் பேர் ஏற்று கொள்வதில்லை."

அவர் எந்த உணர்ச்சியும் இல்லாமல் சொன்னார். புலி வாலை பிடித்தது போல் உணர்ந்தேன்.

"அப்படி சொல்ல முடியாது சார். நீங்கள் சற்று முயன்றால் சமாதானப்  படுத்தலாம்"

"நானும் ஆயிஷாவை திருமணம் செய்யும் முன்னரே அவர்களை  சமாதானம் செய்ய முயன்றேன்."

"முஸ்லீம் என்பதால் மறுத்து விட்டார்களா?"

"இல்லை. முஸ்லீம் என்பதை கூட ஒரு கட்டத்தில் பொறுத்து கொண்டனர். ஆனால்அவள் என்னை விட மூத்தவள், விவாகரத்து ஆனவள் என்பதையும், அவளுக்கு ஒரு பெண் குழந்தை உண்டு என்பதையும் அவர்களால் தாங்கி கொள்ளவே முடியவில்லை."

அவர் கூறியதை என்னாலும் தாங்கி கொள்ள முடியவில்லை. என்ன மனிதர் இவர்? தங்கள் பெற்றோருக்கு இப்படி ஒரு அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறார். அவர்கள் தன்னை ஏற்று கொள்ள மாட்டார்கள் என்று தெரிந்தும் ஒரு பெண்ணுக்காக அவர்களை விட்டு வந்து இருக்கிறார். எல்லாம் ஒரு பெண் உடல் மேல் இருக்கும் மயக்கத்திற்காக. அவர் மேல் இருந்த மரியாதை போய் கோபம் வந்தது.

"இது உங்களுக்கே தப்பா தெரியலையா சார். நம்ம சமூகம் இதை எப்படி எத்துக்கும்."

"சமூகம் எதுக்கு இதை ஏத்துக்கணும்.  ஆயிஷா மாதிரி என்னை யாராலும் பார்த்து கொள்ள முடியாது. என் மேல் அன்பு செலுத்த முடியாது. அது போதும் எனக்கு. அவளின் மதமோ, வயதோ , அவள் ஏற்கனவே மணமானவள் என்பதோ எனக்கு தேவை இல்லை. அவள் ஒரு பெண். அதிலும் எனக்கு பிடித்த பெண். அவளை நான் திருமணம் செய்து கொள்ள இதை விட எனக்கு எந்த காரணமும் தேவை இல்லை."

அவர் சலனம் இல்லாமல் கூறி முடித்தார்.

"இப்போ எல்லாரும் உங்களை ஒதுக்கி வச்சுட்டாங்களே. உங்களுக்கு வருத்தம் இல்லை?"

"வருத்தம்தான். ஆனால் உங்களை நினைத்து வருத்தம். தமக்காக  வாழாமல், அடுத்தவர்கள் என்ன நினைப்பார்கள் என்று எண்ணியே வாழ்வை கழிக்கும் உங்களை நினைத்து வருத்தம். ஜாதி, மத வேறுபாடு இல்லாத சமூகம்  வேண்டும் என்று வாய் கிழிய பேசுகிறீர்களே? எந்த அரசியல் சித்தாந்தமும் சமூக மாற்றம் கொண்டு வராது. அதற்கு பதில் இனி காதல் திருமணங்களுக்கு மட்டுமே அனுமதி என்று சட்டம் கொண்டு வந்து பாருங்கள். சமூக மாற்றம் தானாக வரும்."

சொல்லி விட்டு எழுந்தார்.

"பார்க்கலாம்"

"பார்க்கலாம் சார்"

"நீ ஆயிஷாவை பார்க்கிறாயா?" சொல்லி கொண்டே தன் பர்சை விரித்து ஒரு புகைப்படத்தை காட்டினார். கேரளா என்றதும் நான் கற்பனை செய்து வைத்து இருந்த ஆயிஷாவுக்கும், அவர் காட்டிய ஆயிஷாவுக்கும் சம்பந்தமே இல்லை. சுமாருக்கும் கீழான அழகு.

"அழகாக இருக்கிறார்கள். உங்களை போலவே"

அவர் தன் வழக்கமான புன்னகையை உதிர்த்து விட்டு நடக்க தொடங்கினார். அவரின் காதல்  சரியா, தவறா என்று என்னால் கூற இயலவில்லை. ஆனால் சமூக மாற்றத்தை காதலால் மட்டுமே கொண்டு வர முடியும் என்பது மட்டும் புரிந்தது.


Friday, January 3, 2014

இது அவங்களுக்கே அநியாயமா தெரியாதா?

வாரத்தின் முதல் நாள் அலுவலகத்தின் உள்ளே நுழைந்ததும் என்னுடைய கண்கள் பவித்ராவை தேடின. அவளின் நாற்காலி காலியாக இருந்தது .அவள் அலுவலகம் வரவில்லை என்று புரிந்தது. இன்றைய  பொழுது மிகவும் மெதுவாக போகப்போகிறது என்று மனம் சொன்னது.

பவித்ராவுக்கு  ஊர் மதுரை பக்கம். அவள்  பெரிய அழகு எல்லாம் இல்லை.  ஆனால் இந்த அலுவலகத்தில் சேர்ந்த சில நாட்களிலேயே எல்லாருக்கும் பிடித்தவள் ஆகிவிட்டாள். கலகலப்பான பேச்சு, எப்போதும் சிரித்த முகம் என்று அனைவரையும் கவர்ந்து விட்டாள். வேலை அதிக மன அழுத்தம் அளிக்கும்போதேல்லாம் எல்லாரும் தேடி செல்வது அவளைத்தான். அவளின் நகைச்சுவை பேச்சிலே மன அழுத்தம் குறைகிறது என்று எல்லாரும் கிட்டத்தட்ட அவளின் ரசிகர்கள் ஆகிவிட்டோம். இதோ இப்போது ஒரு நாள் அவள் இல்லை என்றதுமே இங்கே பலரது முகம் வாடி விட்டது.

"ராம்! பவித்ரா வரலியா?"

"அவ அம்மாவுக்கு உடம்பு முடியல அப்பிடின்னு லீவ் சொல்லிட்டா"

அவன் சொன்னதை கேட்டதும் அதிர்ந்தேன். கடந்த வெள்ளிதானே அவள் அம்மா ஊரில் இருந்து வருவதாக சொன்னாள்.வந்தவுடன் உடம்பு சரி இல்லாமல் போய் விட்டதா?

"என்ன உடம்புக்குன்னு சொன்னாளா?"

"அதெல்லாம் நான் கேட்டுகல."

சொல்லிவிட்டு கணிப்பொறி திரையை வெறிக்க தொடங்கினான். நான்  என்னை அறியாமல் மொபைலை எடுத்து பவித்ராவின் எண்ணை அழைத்தேன். அவள் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் இருப்பதாக பதிவு செய்யப்பட குரல் குரல் கூறியது. 

 ஏதேனும் பிரச்சினையில் மாட்டி இருப்பாளோ? யோசித்து கொண்டே  என்னுடைய நாற்காலியில் சென்று அமர்ந்தேன். வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை. மனம் பவித்ராவை சுற்றி வந்து கொண்டே இருந்தது. அவள் அருகில்தான்  அவளின் அக்காவுடன் வீடு எடுத்து தங்கி இருப்பதாக சொல்லி இருக்கிறாள். கவிதாவுக்கு அவள் வீடு தெரியும் .  விசாரித்து விட்டு நேரே சென்று பார்த்து விடலாமா? அதுதான் சரி. பழகிய பழக்கத்துக்கு இது கூட செய்யாவிட்டால் எப்படி? முடிவு எடுத்துவிட்டு அவளின் வீட்டுக்கு கிளம்பினேன்.

விதா கூறிய அடையாளங்களை வைத்து கிண்டியில் அந்த சிறிய  அபார்ட்மெண்டின் முதல் மாடியில் கடைசி வீட்டை கண்டு பிடிப்பது பெரும்பாடாக ஆகிவிட்டது. அழைப்பு மணியை அழுத்திய சில வினாடிகளில் கதவை பவித்ராவே திறந்தாள்.

"ஹை பவி!"

என்னை எதிர்பார்த்திராத அவள் ஒரு நொடி திகைத்து பின் சமாளித்தாள்.

"உள்ளே வாங்க"

வீட்டின் உள்ளே சென்றேன்.

"அம்மாவுக்கு உடம்பு சரி இல்லையாமே. என்ன ஆச்சு ?"

"BP ஜாஸ்தி ஆயிடுச்சு. உள்ளே இருக்காங்க. வா பார்க்கலாம்."

"எதனால?"

"அவங்க கிட்டயே கேளுங்க. நேத்து இருந்து ஒரே புலம்பல். அதுல BP ஏறி படுத்து இருக்காங்க. முடிஞ்சா அவங்களை சமாதானப்படுத்துங்க "

சொல்லிக்கொண்டே அந்த அறை உள்ளே அழைத்து சென்றாள் . கட்டிலில் பவித்ரா ஜாடையில் அவளின்  அம்மா படுத்து இருந்தார். இவர் BP அதிகரிக்கும் அளவு புலம்பி இருக்கிறார் என்றால் அப்படி என்ன நடந்து இருக்கும்?

"அம்மா! இவர் ஏன் கூட வேலை செய்யுறவர்"

அந்த அம்மா என்னை பார்த்தார்.

"இப்போ எப்படிமா இருக்கு உடம்பு?" முடிந்த அளவு குரலில் பரிவை சேர்த்து கேட்டேன் .

"அது இருக்கட்டும்பா. நான் கேக்குறதுக்கு பதில் சொல்லு முதல்ல. நீயும் இங்கே பெட்டி தட்டுற வேலை பாக்குறவன்தான"

"என்னது?" நான் பவித்ராவை பார்த்தேன்.

"அவங்க கம்ப்யூட்டரை சொல்றாங்க"

"ஆமா. நானும் ஐடி வேலைதான் பாக்குறேன்"

"ஏம்பா! இவ நான் ஊருல இருந்து வந்ததும் பீனிக்ஸ் மாலு அப்பிடின்னு சொல்லிட்டு எங்கேயோ கூட்டிகிட்டு போனா. பெரிய பெரிய கடை கண்ணி எல்லாம் பார்த்துகிட்டு ரொம்ப நேரம் நடந்து  வந்ததுல  பசிக்கிதுன்னு சொல்லிட்டேன். உடனே கல்யாண வீடு விருந்து மாதிரி எல்லாம் கும்பல் கும்பலா உக்காந்து சாப்பிட்டுகிட்டு இருந்த இடத்துக்கு என்னை கூட்டிகிட்டு போய்   ரெண்டு பூரி வாங்கி தந்தா."

எனக்கு புரிந்து விட்டது. பூரி இவருக்கு ஒத்து கொள்ளவில்லை போலும். தன் மகளை குறை சொல்ல போகிறார்.

"எண்ணெய்  சாப்பிட்டது ஒத்துக்கலியா?"

"அது இல்லப்பா. அந்த பூரி நல்லாவே இல்ல.  ஒரு மாதிரி சப்புன்னு இருந்தது . குருமா கொஞ்சம் பரவாயில்ல"

"இங்க உங்க ஊருமாதிரி இல்லம்மா. எல்லாம் சுமாராதான் இருக்கும்"

"சுமாரா இருந்தா பரவாயில்ல. அது எவ்வளவுன்னு கேளு"

"எவ்வளவு"

"இத்துனூண்டு இத்துனூண்டா ரெண்டு பூரி 150 ரூபாயாம். அதை அப்பிடி என்ன பெட்ரோல்லயா சமைக்கிறாங்க. அதை வாங்க அவ்வளவு கூட்டம் வேற "

அந்த அம்மாவின் குரல் அதிகரித்தது.

"விடுங்கம்மா. இங்க பெரிய பெரிய மால்ல எல்லாம் அப்பிடித்தான்"

"இந்த காசுல ஒரு குடும்பமே ஒரு நாளைக்கு சாப்பிடலாம். இத்தனை விலை வைக்கிறது அவங்களுக்கே அநியாயமா படல. இப்பிடியா கொள்ளை அடிக்கிறது. இதை யாருமே தட்டி கேக்க மாட்டாங்களா "

எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. இந்த அம்மா நேற்று பார்த்தது இந்தியாவின் இன்னொரு முகம். பணத்தை பற்றி கவலை இல்லாத, வறுமை என்றால் அர்த்தம் அறியாத மக்கள் இவருக்கு விசித்திரமாய் படுகிறார்கள் .  பணம் என்பது சேமிக்க என்றும், அது மதிப்பு மிகுந்தது என்றும் சொல்லி கொடுக்கப்பட்டு வளர்ந்தவருக்கு கிரெடிட் கார்டை தேய்த்து கொண்டு, பணத்தை அலட்சியமாக  வீசி எறிந்து கொண்டு  இருக்கும்  இன்னொரு சமுதாயம் அதிர்ச்சி அளிக்கிறது. 

"சரி! நீங்க ரெஸ்ட் எடுங்க. இனிமே நீங்க அங்க போகாதீங்க. அவ்வளவுதான்"

சொல்லிவிட்டு வெளியே வந்தேன்.

"எப்போ அதை மறக்க போறாங்கன்னு தெரியல. இப்பிடி புலம்புனா எத்தனை டேப்லெட் போட்டாலும் யூஸ் இல்ல  " பவித்ரா சொல்லிவிட்டு தெற்று பல் தெரிய சிரித்தாள்.

"சரி நான் வரேன்"

வீட்டை விட்டு வெளியேறி அலுவலகம் வந்த பின்னும்  அந்த அம்மா கேட்டது மனத்தில் ஓடி கொண்டே இருந்தது. 

"இது அவங்களுக்கே அநியாயமா தெரியாதா? இதை யாருமே தட்டி கேட்க மாட்டாங்களா?"

நிச்சயம் மாட்டார்கள். மனதில் இந்த பதிலை பதிய வைத்து கொண்டு வேலையில் கவனம் செலுத்த தொடங்கினேன்.

புத்தாண்டு அன்று பீனிக்ஸ் மாலில் 150 ரூபாய்க்கு ரெண்டு பூரி வாங்கிய பாதிப்பில் எழுதிய கற்பனை கதை.




LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...