Sunday, September 29, 2013

ஓநாயும், ஆட்டு குட்டியும் - மிஷ்கின் முத்திரை

சினிமா என்பது ஒரு மொழி. அந்த மொழியை சாதாரணமான  பேச்சு வழக்குக்கும் பயன்படுத்தலாம்;  அதை பயன்படுத்தி அழகாக கவிதைகளும்  எழுதலாம். மிஷ்கின் வழக்கமாக கவிதை எழுத முயற்சிப்பவர். நேர்த்தியான காட்சி அமைப்புகள், வித்தியாசமான கேமரா கோணங்கள், இயல்பான நடிப்பை தரும் நடிகர்கள், மயங்க வைக்கும் பின்னணி இசை என ஒவ்வொரு பிரேமையும் ரசித்து ரசித்து செதுக்கி உள்ளார் தன்னுடைய   ஓநாயையும் ஆட்டு குட்டியையும்.

படத்தின் கதை மிக சாதாரண திருடன், போலீஸ் கதைதான். சாலையில் குண்டு  அடிபட்டு கிடக்கும் ஒருவனுக்கு மருத்துவ கல்லூரி மாணவன் ஒருவன் உதவுகிறான். காப்பற்றப்பட்ட மனிதன் தப்பி ஓடிய பின்னரே தான் உதவியது ஒரு கொலைகாரனுக்கு என்று அந்த மாணவனுக்கு  தெரிகிறது. தப்பி ஓடிய கொலைகாரனை பிடிக்க வைக்கப்பட்ட பொறியில்  காவல்துறை அந்த மாணவனையே ஆட்டு குட்டியாக பயன்படுத்துகிறது. பொறியில் ஓநாய் சிக்கியதா? ஆட்டுக்குட்டி என்ன ஆனது? என்பதே மீதி கதை.

இந்த கதையை படத்தை மிஷ்கின்  காட்சிப்படுத்தி இருக்கும் விதம்தான் படத்தை சிறந்த படங்களின் வரிசையில் சேர வைக்கிறது. பிரேமை விட்டு நடிகர்கள் விலகிய பின்னரும் அசையாத கேமரா, சீரியசான காட்சிகளுக்கு நடுவில் வரும் மெல்லிய நகைச்சுவை என படம் நெடுக மிஷ்கின் முத்திரை. படத்தின் முக்கிய பலம் இளையராஜா. எத்தனை வயது ஆனாலும் ராஜா ராஜாதான் என்று நிருபித்துள்ளார். நடிகர்கள் ஒவ்வொருவரும் தங்கள் கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக செய்துள்ளனர். படத்தின் நிறைகள், குறைகளை முற்றிலும் மறைத்து விடுகின்றன

'ஒரு கல் ஒரு கண்ணாடி', 'தீயா வேலை செய்யணும் குமாரு' போன்ற படங்களை மக்கள் விரும்பும் இந்த நேரத்தில் இந்த படம் ஓடுமா என்று தெரியவில்லை. ஆனால் ஓடினால்தான் தமிழ் சினிமாவுக்கு நல்லது. எது எப்படியானாலும் இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர்கள் வரிசையில் மிஸ்கின் இடம் பிடித்து விட்டார்.


Tuesday, September 24, 2013

உங்களை எல்லாம் ஆயிரம் பெரியார் வந்தாலும்

மென்பொருள் நிறுவன ஊழியர்கள் இருவரிடையே நடந்த உரையாடலை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது. சிறிதளவு கற்பனை கலக்கப்பட்டுள்ளது. 


"ஏண்டா! நம்ம ப்ராஜெக்ட் க்ரிட்டிகல் ஸ்டேஜ்ல இருக்குன்னு உனக்கு தெரியும்ல. அப்புறம் ஏண்டா  நேத்து ஆபீஸ் லீவ் போட்ட?"

"நேத்து எனக்கு நேரமே சரி இல்ல மச்சி. எல்லாமே தப்பு தப்பா நடந்துச்சு."

"அப்பிடி என்ன ஆச்சு? எதாச்சும் பெரிய பிரச்சனையா?"

"பெரிய பிரச்சனை ஏதும் ஆகிட கூடாதுன்னுதான் லீவ் போட்டேன்"

"சரி! என்னதான் ஆச்சு? விஷயத்தை சொல்லு"

"நேத்து காலைல எந்திரிச்சேனா "

"சரி எந்திரிச்ச"

"வழக்கப்படி எழுந்த உடனே டிவில மியூசிக் சானல் போட்டேன். போட்ட உடனே கரண்ட் போயிடிச்சு"

"தமிழ்நாட்ல கரண்ட் போறதெல்லாம் ரொம்ப சாதாரணம். எப்போ வரும் எப்போ போகும்னு யாருக்குமே தெரியாது. இதெல்லாமா பிரச்சனை "

"நான் கூட அப்பிடிதான் மச்சான் நெனைச்சு குளிக்க போனேன். குளிச்சிட்டு வந்து  ஹேங்கர்ல தொங்குற சட்டைய எடுக்க போனா சட்டை அப்பிடியே கைல இருந்து தவறி கீழ இருந்து விழுந்திடிச்சு. ரெண்டாவது  சகுனத் தடையா போச்சு ."

"சட்டை கைல இருந்து கீழ விழுந்ததுக்கு காரணம் உன்னோட கவன குறைவு. இது ஒரு சகுனத்தடைன்னு லீவ் போட்டியா?"

"இல்ல. நான் அதை கூட பெருசா எடுத்துக்கல. கீழ விழுந்த சட்டையை எடுத்து மாட்டிகிட்டு ஆபீஸ் கிளம்பிட்டேன்."

"அப்புறம் ஏன் ஆபீஸ் வரல?"

"என்னோட வீட்டு பக்கத்துல ஒரு கோவில் இருக்குன்னு உனக்கு தெரியும்ல?"

"ஆமா"

"நான் வெளிய வந்து அந்த கோவில்ல க்ராஸ்  செஞ்சப்பதான் அந்த சம்பவம் நடந்துச்சு. அந்த சம்பவத்தை பார்த்த பின்னாடி எனக்கு ஆபீஸ் வர எண்ணமே சுத்தமா போயிடிச்சு."

"அப்பிடி என்னடா சம்பவம்?"

"நான் அந்த கோவிலை கடக்குற நேரம்.  சரியா அந்த நேரம் பாத்து கோவிலுக்கு  வந்தவர் அவரோட கைல அர்ச்சனை செய்ய வச்சு இருந்த தேங்காயை கீழ போட்டுட்டார். இப்பிடி மூணாவது சகுன தடைக்கு அப்புறமும்  நான் எப்பிடி ஆபீஸ் வரது."

"அடப்பாவி. முதல்ல சொன்ன ரெண்டுலயாவது ஒரு லாஜிக் இருந்துச்சு. இப்போ யாரோ ஒருத்தன் அவன் கைல இருந்த தேங்காயை கீழே போட்டது உனக்கு சகுன தடைன்னு சொல்றியே."

"போ மச்சான்! அதெல்லாம் உனக்கு தெரியாது. அது சகுன தடைதான். இதெல்லாம் நாம கரெக்டா புரிஞ்சுகிட்டாதான் பெரிய பிரச்சனை எதையும் சந்திக்காம தப்பிக்க முடியும்."

"உன்னை சொல்லி குத்தம் இல்லை. கோடி கோடியா கொட்டி பெரிய பெரிய கட்டடமா  கட்டி அதுல உன்னை  வேலைக்கு வச்சவனை  சொல்லணும். உங்களை எல்லாம் ஆயிரம் பெரியார் வந்தாலும் திருத்த முடியாதுடா."

இந்த பதிவு பிடித்திருந்தால் 'Like' செய்யவும். இது பதிவை பற்றிய உங்களின் கருத்தை எளிதில் அறிய உதவும்.


Saturday, September 21, 2013

கணவன்-2023

 கஷ்டப்பட்டு அந்த முகவரியை தேடி கண்டு பிடித்து விட்டேன். இந்த அபார்ட்மெண்டின் மூன்றாவது மாடியில்தான் நான் தேடி வந்த நபர் இருக்கிறார். லிப்டில் ஏறி மூன்றை அழுத்தினேன். மூன்றாவது மாடியை அடைந்ததும் முகவரியில் இருந்த கதவு எண்ணை நோக்கி நடந்து அழைப்பு மணியை அழுத்தினேன். சில நொடிகளில் அருகில் இருந்த திரை ஒளி பெற்று  ஒரு அழகிய இளம் பெண்ணின் முகம்  தோன்றியது.

"யார் நீங்கள்?"

"நான் டோசிமோ கம்பெனியில் இருந்து வருகிறேன். உங்களின் ஹப்பி-2023 மாடல் ரோபோ சரியாக இயங்கவில்லை என்று நீங்கள்  புகார் அனுப்பியிருந்தீர்கள். அதை சரி செய்ய என்னை இங்கே அனுப்பி இருக்கிறார்கள்."

கதவு திறந்தது.

"உள்ளே வாருங்கள்."

"என்ன பிரச்சினை?"

"நேற்றில் இருந்து இது சரியாகவே இல்லை. அங்கே இங்கே அசையாமல் ஒரே இடத்தில் இருக்கிறது. கூப்பிட்டால் திரும்ப கூட மாட்டேன் என்கிறது" என்றாள்.

"கவலைப்படாதீர்கள். சரி செய்ய கூடிய பிரச்சினையாகவே இருக்கும்" என்றேன்.

"எப்படியாவது  சரி செய்து விடுங்கள். ஒரே மாதத்தில் என்னுடைய வாழ்க்கையை ஆக்கிரமித்து விட்டது. இது இல்லாமல் என்னால் இருக்க முடியாது." சொன்னவளின் முகத்தில் கவலை தெரிந்தது

நான் அதை சோதிக்க ஆரம்பித்தேன். சில நிமிடங்களில் என்ன பிரச்சினை என்று தெரிந்து விட்டது.

"கவலைப்பட தேவை இல்லை. வைரஸ் பிரச்சினைதான். எளிதில் சரி செய்து விடலாம்"

"வைரஸா?  கடைசியாக இரண்டு நாட்கள் முன் இதனுடன் இணைந்து  சந்தோசமாக  இருந்தேன். அந்த வைரஸ் எனக்கும் பரவி இருக்குமா?"

 
"சே சே ! நீங்கள் நினைப்பது போன்ற வைரஸ் இல்லை. மென்பொருள் வைரஸ்தான். உங்களுக்கு எந்த பாதிப்பும் வராது"

"நல்லவேளை. நான் பயந்து விட்டேன். ரோபோவை சரி செய்வது கஷ்டமா?"

"இல்லை. ஸ்கேன் ப்ரோக்ராமை  ஓட விட்டு விட்டேன். வைரஸை நீக்கி  விடும். ஆனால் இது முடிய சற்று நேரம் ஆகும்". அந்த ரோபோவை விட்டு விலகினேன்.

"எவ்வளவு நேரம்?"

"அதிக பட்சம் ஒரு மணி நேரம். அது வரை வெளியே சென்று விட்டு வருகிறேன்."

"நீங்கள் இங்கேயே வேண்டுமானாலும் காத்து இருக்கலாம். எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. உட்காருங்கள், உங்களுக்கு காப்பி எடுத்து வருகிறேன்." என்னுடைய பதிலை எதிர்பார்க்காமல் சமையலறையை நோக்கி சென்றவள் சில நிமிடங்களுக்கு பின் கையில் ஒரு கோப்பையுடன் வந்தாள்.

"எடுத்து கொள்ளுங்கள். ரோபோ இல்லாமல் நேற்றிலிருந்து நானே எல்லா வேலைகளையும் செய்ய வேண்டியாதாகி விட்டது." 

நான் கோப்பையை கையில் எடுத்து கொண்டேன்.

" சுயமாக சிந்திக்கும் ரோபோக்களை உங்கள் கம்பெனி எப்போது தயாரிக்கும்?"

"இன்னமும் ஆராய்ச்சி நிலையிலேயே இருக்கிறது. இன்னும் ஒரு சில ஆண்டுகள் ஆகலாம். அதற்கு முன் வேறு எந்த கம்பெனியாவது அப்படி ஒரு ரோபோவை தயாரிக்கவும் வாய்ப்பு இருக்கிறது. ஏன்? சிந்திக்கும் ரோபோ வந்தால் இந்த ரோபோவுக்கு பதில் அதை அப்கிரேட் செய்து கொள்ளலாம் என நினைக்கிறீர்களா?"

"இல்லை இல்லை. அதற்கு நான் நிஜ மனிதனையே திருமணம் செய்து கொண்டு விடுவேன்." சொல்லிவிட்டு சத்தமாக சிரித்தாள்.

"அப்படியென்றால் உங்களுக்கு திருமணம் செய்து கொள்ளும் திட்டமே இல்லையா? கடைசிவரை ரோபோவுடனே வாழ்ந்து விட போகிறீர்களா?"

"திருமணம் எதற்கு தேவை? என்னிடம் பணம் இருக்கிறது. நான் ப்ரோடெக்ட் என்ற ஒரு வார்த்தையை உச்சரித்து விட்டால் போதும். இதை மீறி என்னை யாரும் தொட கூட முடியாது. அந்த அளவு ஒரு ஆணால் கூட தர முடியாத அளவு பாதுகாப்பை இது எனக்கு கொடுக்கிறது.  கூடவே ஒரு ஆண் கொடுக்ககூடிய மற்ற எல்லா சந்தோசங்களையும் இந்த ரோபோ எனக்கு கொடுக்கிறது. இதற்கு மேல் என்ன வேண்டும்."

"இதனால் குழந்தை தர முடியாது."

"குழந்தை பெற்று கொள்ள கிராமப்புற பெண்கள் நிறைய பேர் இருக்கின்றனர்." அவள் குரலில் அலட்சியம் தெரிந்தது. அதற்கு மேல் அவளுடன் அதை பற்றி   பேச எனக்கு பிடிக்கவில்லை. எழுந்து ரோபோவை நோக்கி நடந்தேன். 

ஜப்பான்காரன் இந்த ரோபோவை இந்தியாவுக்கு கொண்டு வந்ததும் கொண்டு வந்தான். எவனுக்கும் திருமணம் செய்ய பெண் கிடைக்க மாட்டேன் என்கிறது. வெறும் முப்பது கட்டளைகளை மட்டும் புரிந்து கொள்ளும் இந்த ரோபோதான் ஆண்களை விட பெண்களுக்கான அத்தியாவசிய தேவையாகிவிட்டது. இந்த ரோபோவினால் ஆண்களுக்கு கிடைத்த ஒரே லாபம் என்னை போன்ற ஒரு நூறு பேருக்கு வேலை கிடைத்ததுதான்.

"வேலை  முடிந்ததா?" என்னுடைய சிந்தனையை கலைத்தாள்

"வைரஸை நீக்கி விட்டேன். சரியாக இயங்குகிறதா என சோதித்து கொள்கிறேன்." சொல்லிவிட்டு அதை பரிசோதிக்க தொடங்கினேன். கட்டளைகளை சரியாக புரிந்து கொண்டது.

"மேடம்! நான் சோதித்த அளவு இது நன்றாக வேலை செய்கிறது. மற்ற செயல்பாடுகளும் சரியாக இருக்கிறதா என நீங்கள் தனி அறையில் சென்று பரிசோத்து கொள்ளுங்கள்"

"தேவை இல்லை. நன்றாக இயங்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. நான் இன்று இரவு பரிசோதித்துவிட்டு ஒரு வேளை பிரச்சினை இருந்தால் நாளை கூப்பிடுகிறேன்"

"ஓகே"

"இது போன்ற பிரச்சினைகள் எதிர்காலத்தில் வராமல் எப்படி தடுப்பது?"

"உங்கள் ரோபோவுடன் வெளியே செல்லும்போது டேட்டா ட்ரான்ஸ்பர் ஆப்சனை ஆப் செய்து விடுங்கள். மற்ற எலக்ட்ரானிக் சாதனங்களில் இருந்து இந்த வைரஸ் பரவுவது தடுக்கப்படும்"

"சரி அப்படியே செய்கிறேன்"

"நான் வருகிறேன். ஏதேனும் பிரச்சனை என்றால் அழையுங்கள்."

"நிச்சயம். மிக்க நன்றி"

அவளின் வீட்டை விட்டு வெளியே வந்து நடக்க தொடங்கினேன்.   எளிதில் சரி செய்ய முடியாத அளவு ஒட்டு மொத்த கணவன் ரோபோட்டுகளின் செயல்பாட்டை முடக்க போகும் வைரஸ் அவள் ரோபோவிருந்தே தன்னுடைய கணக்கை தொடங்கப் போகிறது என அவள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அப்படிப்பட்ட வைரஸை உருவாக்கி அவளின் ரோபோவில் செலுத்திய திருப்தியுடன் நடக்க தொடங்கினேன்


Wednesday, September 18, 2013

விஜய்-அஜீத் ரசிகர்கள் மோதல் ஏன்?

மீப காலமாக சமூக வலைதளங்களில் நடந்து வரும் விஜய்- அஜித் ரசிகர்களின் சண்டையை கவனித்து வருகிறேன். எதற்காக அந்த இரு நடிகர்களின் ரசிகர்களும் இப்படி அடித்து கொள்கிறார்கள் என்றே புரியவில்லை. விஜய் ரசிகர்கள் அஜித்தை மோசமான வார்த்தைகளால் அர்ச்சிக்கின்றனர். பதிலுக்கு அவர்கள் மிக கேவலமாக  விஜயை கேலி செய்கின்றனர். 

தமிழ் சினிமாவில் நடிகர்களுக்கு இடையேயான போட்டி ஒன்றும் புதியதல்ல. MGR-சிவாஜி ரசிகர்கள் செய்யாததையோ, ரஜினி-கமல் ரசிகர்கள் செய்யாததையோ இவர்கள் செய்யவில்லைதான். ஆனால் நான் ஆச்சரியப்படும் விஷயம் விஜய்- அஜித் இடையேயான போட்டி எங்கிருந்து உருவானது? அது இயற்கையாக உருவானதா அல்லது உருவாக்கப்பட்டதா என்பதுதான்.

MGR-சிவாஜி இவர்களுக்கு இடையேயான போட்டியை எடுத்து கொண்டால் இவர்கள் திரை வாழ்விலும் சரி, அரசியல் வாழ்விலும் சரி இவர்கள் இரு துருவங்கள். ஒருவர் படத்தில் பணியாற்றும் கலைஞர்கள் மற்றவர் படத்தில் பணியாற்ற முடியாத அளவு இவர்களுக்கு இடையேயான போட்டி இருந்தது. இவர்கள் ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த நடிகர்கள் மேல் கொண்ட அபிமானத்தால் மற்ற நடிகர்கள் மேல் வெறுப்பு கொள்வது மிக இயல்பானது. 

ரஜினி-கமல் ரசிகர்களுக்கு இடையேயான மோதல்களை பற்றி சொல்லி தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. சில வருடங்கள் இவர்களில் ஒருவரின் படம் வெளி வந்தால் போதும். இன்னொருவரின் ரசிகர்கள் மாட்டு சாணமும் கையுமாக கிளம்பி விடுவார்கள். எங்கெல்லாம் அந்த படத்தின் போஸ்டர்கள் ஒட்டபட்டுள்ளதோ அங்கெல்லாம் சென்று சாணி அடித்து விட்டு வந்து விடுவார்கள். இதை காரணமாக வைத்து மறுநாள் இரு தரப்பு ரசிகர்களுக்கும் மோதல் மூளும். மோதல் என்றால் இப்போது நடப்பது போல பேஸ்புக் மோதல்கள் இல்லை. ரத்தம் வர அடித்து கொள்ளும் சண்டை அது. இந்த மோதல்கள் முற்றும்போது ரஜினியும் கமலும் சேர்ந்து புகைப்படம் எடுத்து கொண்டு நாங்கள் நண்பர்கள்தான் என்று அறிக்கை கொடுப்பார்கள். இருந்தாலும் ரசிகர்கள் ஓய மாட்டார்கள். 

ரஜினியும், கமலும் நண்பர்கள்தானே? அவர்களின் ரசிகர்கள் ஏன் மோதி கொள்ள வேண்டும்? என்று யோசித்தால் நமக்கு கிடைக்கும் விடை இவர்கள் ரசிகர்கள் இவர்கள் மேல் கொண்ட பேரபிமானம். தாங்கள் விரும்பும் நடிகரே மற்றவரை விட பெருந்திறமை கொண்டவர் என்று இவர்கள் நம்பியதும் அதை மற்றவர்களும் நம்ப வேண்டும் என்று இன்னொரு நடிகரை மட்டம் தட்ட எடுத்த முயற்சிகளுமே இத்தகைய மோதல்களுக்கு காரணம். சம காலத்தில் தமிழ் திரையுலகில் இவர்களுக்கு இணையான  திறமை கொண்ட நடிகர்கள் எவரும் இல்லாததால் தங்கள் அபிமான நடிகர்களை உயர்த்தி பிடிக்க முயற்சித்த இவர்களின் முயற்சி புரிந்து கொள்ள கூடியதே.


இப்போது  விஜய்-அஜித் போட்டிக்கு வருவோம். ரஜினி படம் நடிப்பதை குறைத்து கொண்டிருந்த சமயம். கமலோ ஆளவந்தான், மருதநாயகம்  போன்ற படங்களில் அதிக நேரத்தை செலவழித்து கொண்டிருந்தார். விஜயகாந்த் ஒரே மாதிரியான கதைகளில் நடித்து கொண்டிருந்தார். அது போன்ற சூழ்நிலையில் தமிழ் சினிமாவில் ஏற்பட்டு இருந்த வெற்றிடத்தை நிரப்புவது போல் விஜய், அஜீத், பிரசாந்த், அருண் விஜய் போன்றவர்களின் படங்கள் வெளி வந்து கொண்டிருந்தன. விஜய் அவருடைய தந்தையின் வழி காட்டுதலால் சிலவெற்றி படங்களை கொடுத்து படிப்படியாக முன்னேறி கொண்டிருந்தார்.  அஜீத்தும் சில வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்களை சம்பாதித்து வைத்திருந்தார். அப்போதே விஜய்க்கு காதல் பற்றி வசனம் மட்டுமே பேச தெரியும், நடிக்க தெரியாது என அஜீத் ரசிகர்களும், அஜீத்துக்கு விஜய் அளவு நடனம் ஆட தெரியாது,  பாட தெரியாது என விஜய் ரசிகர்களும் விவாதம் செய்ய ஆரம்பித்து இருந்தனர்.

இது போன்ற விவாதங்கள் சிறிது காலத்தில் திறமையான  புது நடிகர்கள் வரவின்போது முடிந்து போய் இருக்கும்.  ஆனால் அப்படி முடிய விடாமல் அதை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றார் விஜய். சில வருடங்கள் முன் அஜீத்தின் தீனா படம் வெளி வந்தது. அஜீத்துக்கு  தல  என்று பேர் சூட்டிய படம் அது. அந்த படத்திற்கு அடுத்து வந்த தன்னுடைய படத்தில்(தமிழன்??)  விஜய் 'உன்னோட தலை, வாலு எல்லாத்தையும் வர சொல்லு' என்று வசனம் பேசுவார். அடுத்தடுத்து வந்த படங்களிலும் இதே போன்ற தாக்குதலை தொடர்ந்தார். ஒரு கட்டத்தில் அஜீத்தும் தன்னுடைய படங்களில் பதில் தாக்குதலை ஆரம்பிக்க ஆட்டம் சூடு பிடித்தது. உண்மையிலேயே விஜயும், அஜீத்தும் ஜென்ம விரோதிகள் என்று எண்ணி கொண்டு அவர்களின் ரசிகர்கள் மோதி கொண்டார்கள்.  பின்னாளில் சில காரணங்களுக்காக விஜய்  அஜீத்தை  தன்னுடைய நண்பராக காட்டி கொள்ள முயன்ற போதும் ரசிகர்கள் தங்களுக்கு இடையிலான மோதலை விடவில்லை. அதன் காரணம் இவர்களின் மோதல் தங்களுக்கு பிடித்த நடிகர்கள் மீதான அபிமானத்தால் உருவானதில்லை. மாறாக மற்ற நடிகர் மேலான வெறுப்பினால் உருவானது.

அது சரி, விஜய் ஏன் அஜீத்தை தாக்கி வசனம் வைக்க வேண்டும்? அவர் கூட வாய்க்கால் தகராறா? இல்லை, இவரின் பட  வாய்ப்புகளை அஜீத் கைப்பற்றி எடுத்து கொண்டாரா?   இரண்டுமே இல்லை. அது விஜய் பின் பற்றிய ஒரு யுக்தி. அருமையாக திட்டமிடப்பட்டு கட்டமைக்கப்பட்ட தன் திரை  வாழ்க்கையில் தன்னுடைய முன்னேற்ற திட்டத்தின் ஒரு பகுதியாக அஜீத்தை தன்னுடைய எதிரியாக விஜய் சித்தரித்து கொண்டார். இதனால் அஜீத்தும் ஓரளவு பயனடைந்தார். கடைசியில் திரைக்கு வெளியே நடந்த நாடகத்தை உண்மை என நம்பி இன்றும் மோதி கொண்டிருப்பவர்கள் ரசிகர்கள்தான்.

நினைவுகளில் இருந்து எழுதப்பட்டது. விஜயும், அஜீத்தும் எப்போது தங்களை எதிரிகளாக காட்டி கொண்டனர் என்று தரப்பட தகவலில்  ஏதேனும் தவறு இருப்பதாக யாரேனும் நிறுவினால் இந்த பதிவை எடுத்து விடுகிறேன்.
Sunday, September 15, 2013

மோடி- மீட்பரா? ஹிட்லரா?

மோடிதான்  பிரதமர் வேட்பாளர்ன்னு பிஜேபி சொன்னதும் நாடே பரபரப்பு ஆயிடுச்சுங்க. மோடிய இந்தியாவ மீட்க வந்த மீட்பர்னு சிலரும், ஹிட்லர்ன்னு சிலரும் சொல்றாங்க. எல்லாத்தையும் கேட்டும், படிச்சும், கொஞ்சமா இருக்குற சொந்த புத்திய வச்சு ஆராய்ச்சி செஞ்சும் பார்த்தா கடைசில எந்த விடையும் கிடைக்கலை. புரிஞ்ச ஒரே ஒரு விஷயம் மோடியோட தலைமையை குறை சொல்ல வேற எந்த விஷயமும் இல்லாததால இந்த ஹிட்லர் கோஷத்தை வச்சுதான் காங்கிரஸ் தேர்தலை சந்திக்கப் போகுது.

இந்தியாவை பொருத்தவரைக்கும் நம்மகிட்ட நல்ல தலைவர்கள்னு சொல்ல ரொம்ப பேரெல்லாம் இல்ல. சுதந்திரம் வாங்கின காலத்துல இருந்து இன்னைக்கு வரைக்கும் சுயநலம் இல்லாத சேவை மட்டுமே செய்ய அரசியலுக்கு வந்த தலைவர்களை விரல் விட்டு எண்ணிடலாம். இதுக்காக  யாரையும் குறை சொல்லிட முடியாது. காரணம் நம்ம கலாசாரமே அப்பிடி. நம்ம மக்களுக்கு அவங்க வேலை சரியா முடிஞ்சா போதும். அடுத்தவங்களை பத்தி எல்லாம் கவலை இல்லை. 
 

ஒரு தடவை   டிரெய்ன்ல டிக்கெட் பண்ணேன். அந்த டிரெய்ன் வேற ஒரு ஊருல இருந்து கிளம்புற டிரெய்ன். அது அந்த ஊருல இருந்து நான் புக் பண்ண ஸ்டேஷன் வரதுக்கு ரெண்டு மணி நேரம் ஆகும். நான் அந்த டிரெய்ன்ல ஏறி என்னோட பெர்த் போய் பாக்கும்போது பெர்த்ல எனக்குன்னு ஒதுக்குன தலகாணிய காணோம். கீழ படுத்துட்டு இருந்தவர்கிட்ட கேட்டா பக்கத்து பெர்த்காரர் அந்த தலகாணிய எடுத்து வச்சு இருக்கார் அப்பிடிங்கிறார். நான் அவரை எழுப்பி தலகாணிய  கேக்கலாம்ன்னு பார்த்தா அவர் போர்வையை நல்லா இழுத்து போத்திகிட்டு படுத்துகிட்டு இருக்கார். எப்பிடி எப்பிடியோ எழுப்பி பார்த்தும் கடைசி வரை போர்வையை விலக்கி எந்திரிக்கவே இல்லை. அப்புறம் என்ன செய்ய? கையை தலைக்கு வச்சுக்கிட்டு பட்டனத்தார் மாதிரி தூங்கிகிட்டு வந்தேன். இது நம்ம மக்களோட மனசுக்கு ஒரு உதாரணம்.

டிரெய்ன்  கதையை முடிச்சாச்சு. அடுத்து பஸ் கதை. ஒரு நாள் ஒரு ட்ராவல்ஸ்ல மதுரை வழியா போய்கிட்டு இருந்தேன். ட்ராவல்ஸ்காரன் விடியற்காலை நாலு மணிக்கு மதுரை சிட்டிக்குள்ள டீசல் போட வண்டிய நிறுத்துனான். உடனே வண்டில இருந்த நம்ம ஆளுங்க இறங்கி பக்கத்துல இருந்த பள்ளிக்கூட வாசல் கிட்ட சிறுநீர் கழிக்க ஆரம்பிச்சுட்டாங்க. அவங்களுக்கு என்ன கவலை? அவங்க பிள்ளைங்கதான் அந்த பள்ளிகூடத்துல படிக்கலியே. பொதுவாவே நாம இப்பிடிதான். அடுத்தவங்களை பத்தி நமக்கு எந்த கவலையும் கிடையாது.

இப்போ மேல சொன்ன மாதிரி சின்ன விசயங்களை விட்டுடுவோம். அடுத்த கட்டத்துக்கு வருவோம். இந்த பெரும்  பணக்காரங்க இருக்காங்களே, அவங்களுக்கு யார் ஆட்சி பண்றாங்கன்னு பெரிய கவலை எல்லாம் இல்லை. அதனால அவங்களை விட்டுடுவோம். நம்ம மாச சம்பளம் வாங்குற மிடில் கிளாஸ் மக்களை எடுத்துப்போம். அரசியல்வாதிங்க சரி இல்லை, ஆட்சி சரி இல்லன்னு ஆயிரம் குத்தம் சொல்லுவாங்க. ஆனா இன்கம்டாக்சை குறைக்க என்னென்ன டூப்ளிகேட் பில் தர முடியுமோ அத்தனை பில்லையும் தருவாங்க. கேட்டா நாம இன்கம்டாக்ஸ் காட்டுனா எவனோ அமுக்க போறான்னு விளக்கம் தருவாங்க. இவங்க இவங்களால முடிஞ்ச அளவு அரசாங்கத்தை ஏமாத்துனா, அரசியல்வாதிங்க  அவனால முடிஞ்ச அளவு அரசாங்கத்தை ஏமாத்ததானே செய்வாங்க?

இப்பிடிப்பட்ட சமூக சூழ்நிலைல இருந்து வர்ற அரசியல் தலைவர்கள் பெரிய தியாகியா இருக்கணும்ன்னு எதிர் பார்க்க முடியாது. மீறி மக்களுக்கு சேவை மட்டுமே செய்யுறதை நோக்கமா வச்சிக்கிட்டு யாராவது அரசியலுக்கு வந்தாலும் அவங்களால தாக்கு பிடிக்க முடியாது. ஒரு கார்ப்பரேட் கம்பெனியிலேயே நேர்மையா இருக்கிறது கஷ்டமாகி போன காலத்துல எப்பிடி அரசியல்ல நேர்மையா இருக்க முடியும்?

இதையெல்லாம் மீறி இந்தியாவுக்கு ஒரு நல்ல தலைவர் கிடைப்பரான்னு யோசிச்சா மோடி மட்டும்தான் நினைவுக்கு வரார். நம்ம  நாட்ல இவரை மாதிரி  தொலைநோக்கு பார்வை கொண்ட, மக்களோட வளர்ச்சிக்காக சிந்திக்க கூடிய ஒரு தலைவர் கிடைக்கிறது ரொம்ப ரொம்ப  கஷ்டம். இவர் இங்கிலாந்து போய் பெரிய பெரிய படிப்பெல்லாம் படிச்சவர் கிடையாது. மக்களோட மக்களா இருந்து வந்தவர். மக்களோட கஷ்டத்தை புரிஞ்சவர். பெரிய தேச பக்தர். இந்தியாவுக்கு என்ன தேவைன்னு அவருக்கு சரியா தெரியும். இவர் நிச்சயம் ஆட்சியை மக்களுக்காக நடத்துவாரே தவிர  தன்னோட சொந்த இலாபத்துக்காக நடத்த மாட்டார். ஏற்கனவே தன்னோட நிர்வாக திறமையை தேசத்துக்கு காட்டியும் இருக்கார்.  இதுதான் இவர் பக்கமா என்னை சாய வைக்குற விஷயம்.

ஆனா மோடியை பத்தி இப்பிடி ஒரே அடியா நல்லவிதமா சொல்லிட்டு போயிட முடியல. அரசியல்வாதியா அவருக்கு ஒரு சித்தாந்தம் இருக்கலாம். அவர் ஹிந்துத்துவவாதியா இருக்கலாம். ஆனா ஆட்சில இருக்கும்போது அவரோட முக்கிய கடமை மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்கிறது. கலவரத்தப்போ அவர் அப்படிபட்ட ராஜதர்மத்தோடு நடக்கணும்ன்னு  வாஜ்பாயே சொன்னதுதான் உறுத்துது. ஒரு வெள்ளை துணில பட்ட மை  மாதிரி மோடியோட ஒட்டு மொத்த நல்ல பேருக்கும் களங்கமா இருக்குது அந்த கலவரம்.

அவரோட ஆட்சியில எல்லா எல்லா மக்களுக்கும் பாதுகாப்பு உறுதி செய்யப்படுதுன்னா அவருக்கு ஓட்டு போடுறதுல யாருக்கும் எந்த பிரச்சனையும் இருக்காது. எந்த காரணத்தை கொண்டும் காங்கிரஸ்க்கு வோட்டு போட முடியாத சூழ்நிலைல இப்போதைக்கு தேசத்துக்கு இருக்குற ஒரே நம்பிக்கையும்  அவருதான். இருந்தாலும் இப்போதைக்கு மோடி மேல இருக்குற விமர்சனங்கள் மாதிரியே  மனசும் ரெண்டு பக்கமா சாஞ்சுகிட்டு ஒரு dilemmaலயே இருக்கு.  முடிஞ்சா நீங்க சொல்லிட்டு போங்க அவர் இந்தியாவை மீட்க வந்த மீட்பரா? இல்லை ஹிட்லரான்னு?


Friday, September 13, 2013

தமிழ்நாட்டிலிருந்து -> செவ்வாய் கிரகத்துக்கு

செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் குடியேற திட்டம் - செய்தி 

 
"ஏங்க!  இங்க எல்லாத்தையும் விட்டுட்டு நாம கட்டாயம் செவ்வாய் போய்தான் ஆகணுமா?'

"சுதா! இவ்வளவு பணம் கொடுத்த அப்புறம் கேக்குற கேள்வியா இது. நாம கட்டாயம் செவ்வாய் கிரகம் போறோம். இது என்னோட கனவு."

"அதுக்கு இல்லைங்க. முன்ன பின்ன தெரியாத ஒரு கிரகத்துக்கு போய் நாம என்ன பண்றது"

"பைத்தியம். நமக்கு மட்டும்  இல்ல. அங்க போக எல்லாருக்குமே அது புது கிரகம்தான். இது வரைக்கும் நாம பார்த்தது, கேட்டது எல்லாத்தையும் மறந்துட்டு புதுசா வாழ்க்கையை தொடங்கதான்  நாம அங்க போறதே. இப்போவே அங்க இருக்குற நிலத்தை எல்லாம் ஆக்கிரமிப்பு செஞ்சுட்டா நாளைக்கு ரியல் எஸ்டேட் பிசினஸ் ஆரம்பிச்சு நெறையா சம்பாதிக்கலாம். அங்க வரதுல உனக்கு என்ன கஷ்டம்"

"இதுல என்ன கஷ்டமா? சின்ன வயசுல இருந்து நான் அமாவாசை விரதம் இருப்பேன். அதை எப்பிடி விடுறது"

"உன்னை யாரு விட சொன்னா? அங்க ஒன்னுக்கு ரெண்டு நிலா இருக்கு. நீ தாராளமா அமாவாசை அன்னைக்கு விரதம் இருக்கலாம்."

"நம்ம  பசங்க படிப்பு?"

"நம்ம குழந்தைங்க படிப்பு செலவு எல்லாத்தையும் அங்க வரப் போற   அரசாங்கமே ஏத்துக்கும்"

"வாரத்துக்கு ஒரு  படம் பாப்பேன். அங்க தியேட்டர் இருக்கா?"

"தியேட்டர் எல்லாம் செவ்வாய் கிரகத்துக்கு வர இன்னும் நாள் ஆகும் செல்லம். ஆனா அடுத்த மாசம் பவர் ஸ்டார் அங்க ஷூட்டிங் வராராம். இன்னும் நெறைய பேர் படம் எடுக்க அங்க வர போறாங்களாம். சோ  சீக்கிரமாவே தியேட்டர் வந்துடும்."

"பண்டிகை வந்தா ஒரு வடை, முறுக்கு கூட செஞ்சு சாப்பிட முடியாதேங்க."

"முறுக்கு இல்லாட்டி என்ன. தமிழ்நாடு அரசாங்கம் அங்க டாஸ்மாக் கிளை  திறக்க திட்டம் போட்டு இருக்காங்க. எனக்கு சரக்கு பஞ்சம் இல்லாம கிடைக்கும்."

"எனக்கு மருதாணி ரொம்ப பிடிக்கும்ங்க. அது அங்க கிடைக்காதே."

"ஹஹஹா! அந்த கிரகமே சிகப்பு கிரகம்தான். அந்த மண்ணுல விழுந்து உருண்டா நீ நல்லா சிகப்பா ஆகிடுவ. அப்புறம் எதுக்கு மருதாணி?"

"சரிங்க! நான் செவ்வாய் கிரகம் வர சம்மதிக்கிறேன். நம்ம முதல்வரும், கலைஞருமே அங்க கிளம்பி வரும்போது எனக்கு என்ன?"

"என்னது முதல்வரும், முன்னாள் முதல்வரும் அங்க வராங்களா? என்னடி சொல்ற?"

"ஆமா. இன்னைக்கு நீங்க பேப்பர் படிக்கலையா? அவங்க ரெண்டு பேரும் அங்க வந்து கட்சி ஆரம்பிக்க போறாங்களாம்."

"அட பாவமே! அப்போ நம்ம ட்ரிப் கேன்சல்"

Wednesday, September 11, 2013

கோச்சடையான் - சில எண்ணங்கள்

னக்கு ரஜினியை எந்த வயதிலிருந்து பிடிக்க ஆரம்பித்தது என்று சரியாக நினைவில்லை.குழந்தை பருவத்திலிருந்தே நான் ரஜினி ரசிகன் ஆகி விட்டேன். சிறிய வயதில் என்னை  வசீகரித்த எத்தனையோ விஷயங்கள் நாளடைவில் சாதாரண விஷயங்கள் ஆகிவிட்டன. ஆனால் ரஜினி மீதான ஈர்ப்பு மட்டும் வயது ஏற ஏற அதிகரித்ததே தவிர சிறிதும் குறையவில்லை. அதுதான் ரஜினி மேஜிக். படம் பார்க்க வருபவர்களை தன்னை நோக்கி ஈர்த்து கொள்ளும் காந்தம் அவர்.

'சிவாஜி' படம் வெளிவந்த போது ரஜினி மாநில எல்லைகளை கடந்து ஒட்டு மொத்த இந்தியாவுக்கும் சூப்பர் ஸ்டார் ஆகி போனார். அந்த படம் தயாரிப்பில் இருந்த நேரம் 'சுல்தான் தி வாரியர்' என்ற அனிமேஷன் படத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த்  இயக்கி கொண்டிருந்தார். அந்த படத்தின் டீசர் 'சிவாஜி' படத்தோடு  வெளியிடப்பட்டது. உண்மையிலேயே அந்த டீசர் அற்புதமாக வடிவமைக்கப்பட்டிருந்தது. ரஜினி போன்ற உருவம் கொண்ட ஒரு பொம்மையே சினிமாவின் வசூல் சாதனைகள் அனைத்தையும் முறியடிக்க போகிறது என்று எண்ணி கொண்டேன். 'சிவாஜி' ஜூரம் ஒட்டு மொத்த தேசத்திலும் அடித்து கொண்டிருந்த அந்த நாளில் அந்த படம் வெளிவந்து இருந்தால் அதுதான் நடந்து இருக்கும்.

இப்படி அதிரடியாக ஆரம்பிக்கப்பட்ட 'சுல்தான்' பின்னாளில் எதனால் கைவிடப்பட்டது என்று தெரியவில்லை. சௌந்தர்யா படம் தயாரித்து நஷ்டம் அடைந்தது ஒரு காரணமாக இருக்கலாம். அல்லது வேறு சில  காரணங்களும் இருக்கலாம். சௌந்தர்யா படம் எடுத்து பட்ட கடன்களை அடைத்த ரஜினி அவருக்கு திருமணம்  முடித்து வைத்தார். இந்த நிலையில் சுல்தானை ஏறக்குறைய எல்லாரும் மறந்தே விட்டனர். 

ரஜினியின் உடல் நல குறைவுக்கு பின் 'கோச்சடையான்' என்று மீண்டும் ஒரு அனிமேஷன் படம் ஆரம்பித்தனர். சரி, சுல்தானை தூசி தட்டுகிறார்கள் போலும் என்று நினைத்தேன். ஆனால் இந்த படத்துக்கும் சுல்தானுக்கும் சம்பந்தம் இல்லை என்று சௌந்தர்யா பேட்டி கொடுத்தார். எது எப்படி இருந்தால் என்ன ,தலைவர் படம் வந்தால் போதும் என்று எண்ணி கொண்டேன். படம் விறுவிறுப்பாக தயாரானது. ரஜினி நடனமாடும் அட்டகாசமான ஸ்டில் வேறு வெளியானது. K.S. ரவிகுமார் படத்தில் இணைந்து கொண்டதும் எனது எதிர்பார்ப்பு அதிகமானது. 'ஜீன்ஸ்' ராஜு சுந்தரம் போலி ஐஸ்வர்யா ராயை ஆட்டுவிப்பது போல, 'கோச்சடையான்' நடிகர்கள் அனைவரும் உடலில் இறுக்கமான ஆடை அணிந்து கொண்டு தங்கள் 3டி மாதிரிக்கு உயிர் கொடுக்கும் மேகிங் வீடியோ பார்த்ததும் எதிர்பார்ப்பு உச்சத்திற்கு போனது.

 
ரஜினி கடந்த ஆண்டு தீபாவளிக்கு படம் வெளிவரும் என்று பேட்டி கொடுத்தார். தயாரிப்பு நிறுவனமோ தீபாவளிக்கும் முன்னரே படம் வெளிவரும் என்றது. ஆனால் எதிர்பார்த்தது போல் எதுவும் நடக்கவில்லை. ஆண்டு ஒன்று ஓடிப்போனது. ரஜினிக்கு படத்தில் திருப்தி இல்லை; படம் கைவிடப்பட்டு விட்டது என பேச்சு எழ தொடங்கியது. ஆனால் விநாயகர் சதுர்த்தி அன்று டீசர் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டதும் வதந்திகள் அடங்கி விட்டன. சொன்னபடி டீசரும் வெளியானது.

கடந்த திங்கள் அன்று ஆவலோடு முதல் முறையாக டீசர் பார்க்க ஆரம்பித்தவனுக்கு அதிர்ச்சி. டீசர் 'சுல்தான்' பட டீசரை விட மோசமாக தெரிந்தது. என்ன காட்சிகள் ஓடுகிறது என்றே புரியவில்லை. இந்த தரத்தில் படம் எடுக்கவா இதற்கா இத்தனை நாட்கள் என திகைத்தேன். ஒரு வேளை கேன்ஸில் ரஜினி படத்தின் ட்ரைலரை வெளியிட விடாமல் தடுக்க இதுதான் காரணமோ என எண்ணினேன். அப்போதுதான் யூ ட்யூபில் இருந்த அந்த கமெண்டை கவனித்தேன்.

டீசரை 1080 hd தரத்தில் பார்க்கவும் என்று பரிந்துரைத்து இருந்தது அந்த கமெண்ட். அங்கே குறிப்பிட்டு இருந்தபடி வீடியோ  குவாலிட்டி மாற்றி பார்த்த பின்தான் மனம் ஓரளவு ஆறுதல் அடைந்தது. உண்மையிலேயே படத்திற்காக நிறைய மெனக்கெட்டு உள்ளனர். சில காட்சிகள் நன்றாகவே உள்ளன. ஒரே ஒரு குறை ரஜினியின் முகத்தை இன்னும் சற்று துல்லியமாக வடிவமைத்து இருக்கலாம். தந்தை ரஜினியின் முகம் ரஜினி போலவே இல்லை. மகன் ரஜினியின் முகமோ உடலை விட்டு வித்தியாசமாக, ஒட்டப்பட்டது போல தெரிகிறது. ரஜினியின் முகத்தை மட்டும் துல்லியமாக வடிவமைத்து இருந்தால் அது மற்ற எல்லா குறைகளையும் மறைத்து இருக்கும். ரஜினியின் முகத்துக்காக படம் பார்க்க வருபவர்கள்தானே அதிகம்.

இந்த டீசரை பார்த்து பலர் இந்த படம் தோல்வி அடையும் என்று சிலர்  கணித்து இருப்பார்கள். ஆனால் எனக்கு என்னவோ இந்த படம் சூப்பர் ஹிட் ஆகும் என்று தோன்றுகிறது. ஒரு வேளை மெகா ஹிட் ஆனாலும் ஆகலாம். ஏனெனில் எதையும் நடத்தி காட்டுவதுதானே ரஜினி மேஜிக்.

 

Wednesday, September 4, 2013

ஒரு குட்டி நீதி கதை

ரு தோப்பில் ஒரு மயில் வசித்து வந்தது.  அந்த மயிலுக்கு தன் அழகை எண்ணி அதிக பெருமை. தன் ஒரு நாள் அந்த தோப்புக்கு எங்கிருந்தோ வந்து சேர்ந்தது குரங்கு ஒன்று. அந்த குரங்கிடம் தன் தோகையை காட்டி பெருமைப்பட்டு கொண்டது மயில். அதற்கு குரங்கோ,"மயிலே! இந்த தோகையையும் அதை விரித்து நீ ஆடுவதையும் பார்க்க மனிதர்கள் உன்னை தேடி வர வேண்டும். ஆனால் அந்த குயிலை பார். தினமும் பறந்து மனிதர்கள் இருக்கும் பகுதிக்கு செல்கிறது. அழகாக பாடி மனிதர்களை சந்தோசப்படுத்துகிறது. மனிதர்கள் தங்கள் வீட்டுக்குள் இருந்தே அதன் அழகிய குரலை கேட்டு மகிழ்கின்றனர். அவர்களை சந்தோசப்படுத்தி விட்டு மீண்டும் மாலையில் தன் கூட்டுக்கு வந்து விடுகிறது. உன்னை விட அந்த குயிலே இறைவனின் அற்புத படைப்பு " என்றது.

இதை கேட்டு ஆத்திரமடைந்த மயில் மறுநாள் மனிதர்கள் வாழும் பகுதிக்கு சென்று கத்த தொடங்கியது. அதன் கர்ண கொடூர சத்தம் பொறுக்க முடியாமல் மனிதர்கள் அந்த மயிலை அடித்து தோப்புக்குள் விரட்டினார்கள் .

நீதி: பிரபுதேவாவால் SPB போல பாட முடியாது. SPBயால் பிரபுதேவா போல ஆட முடியாது. உங்கள் திறமையை பற்றி  நீங்கள் அறிந்து கொண்டால் போதும். அடுத்தவர்கள் உங்களை பற்றி என்ன சொல்கிறார்கள் என்று கவலைப்பட தேவையில்லை.

Inspired by:  உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் பாடல் 
நன்றி: கவிஞர் வாலி

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...