Sunday, July 5, 2015

விடிவதற்குள் ஆம்பூர் வா!!!

“விடிவதற்குள் வா” என்று  சுஜாதா ஒரு புதினம் எழுதி இருக்கிறார். முதலில் கல்கியில் தொடர்கதையாக வந்துள்ளது. மண்டைக்காடு கலவரத்தை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட இந்த நாவலில் ஊர் பெயரை மட்டும் மணல்காடு என்று மாற்றி விட்டார். மற்றபடி இந்துக்களுக்கும் கிறிஸ்தவ மீனவர்களுக்கும் இடையிலான மோதல் என்று மற்ற எல்லா விஷயங்களும் வெளிப்படையாகவே எழுதப்பட்டுள்ளது.

கத்தி மேல் நடப்பது போன்ற கதைக்களம். ஏதாவது இரண்டு பிரிவினரில் ஏதேனும் ஒருவருக்கு ஆதரவாக இருப்பது போல் எழுதி  இருந்தால் மிகப் பெரிய எதிர்ப்பை சுஜாதா சந்தித்திருக்க கூடும். ஆனாலும் கதையை முடிந்தவரை  மிகத் திறமையாக balance செய்துள்ளார். ஒரு அத்தியாத்தில் இந்துக்கள் கிறிஸ்தவர்கள் மேல்தான் தவறு என்று கூறுவது போல் எழுதி இருப்பார். அடுத்த அத்தியாத்தில் கிறிஸ்தவர்கள் தங்கள் தரப்பு நியாயத்தை கூறுவார்கள். அன்றைய நாட்களில்  இந்த தொடர்கதையை எதிர்த்து  யாரும் போராடாமல் இருந்தது ஆச்சரியமே.

இந்த நாவலின் கதை இதுதான். வெளிநாட்டில் வேலை பார்க்கும் ஒருவன் விடுமுறையில் மணல்காட்டுக்கு வரும்போது அவன் மனைவியை காணவில்லை. ஏற்கனவே கலவரத்துக்கு நேரம் பார்த்து கொண்டிருந்த அந்த ஊரில் இந்த சம்பவம் பதட்டத்தை அதிகப்படுத்தி மிகப் பெரிய கலவரத்தை ஏற்படுத்துகிறது. காவல்துறை ஒரு பக்கம் கலவரத்தை முனைப்புடன் கட்டுப்படுத்த, மறுபக்கம் அந்த பெண்ணைத் தேட என்று சுறுசுறுப்பாகிறது. கதையில் கலவரத்துக்கு காரணமாக பல விஷயங்கள் சொல்லப்பட்டிருந்தாலும் கலவரத்தை தொடங்குவது காணாமல் போன அந்த பெண்ணே. காவல்துறையும் அந்த பெண் கிடைத்தால் இந்த கலவரம் அடங்கிவிடும் என்றே நம்புகிறது. கதை முழுவதும் அந்த பெண்ணையும், அவள் கணவனையும் வைத்தே நகர்கிறது.

ஆம்பூரில் நடக்கும் சம்பவங்களை படிக்கும்போது ஏனோ இந்த கதை  நியாபகம் வந்தது. அதே போல் காணமல் போன பெண், கலவரம், பெண்ணைத் தேடும் காவல்துறை என்று எக்கச்சக்க ஒற்றுமைகள். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் “விடிவதற்குள் வா” புதினத்தில் கூறப்பட்ட  பெண் காணாமல் போன சம்பவம் சுஜாதாவின் கற்பனை. மண்டைக்காடு கலவரத்தில் அது போன்ற பெண் காணாமல் போன சம்பவம் எதுவும் நடந்ததாக தெரியவில்லை. இணையத்தில் தேடி பார்த்து விட்டேன்.


அன்று சுஜாதா மண்டைக்காடு கலவரத்திற்கு கற்பனையாக சொன்ன காரணம், இன்று ஆம்பூரில் கலவரத்திற்கு நிஜமான காரணம் ஆகிவிட்டது. சரி நாவலில் அந்த பெண் கிடைத்தாளா என்று கேட்கிறீர்களா? அதை இன்றைய செய்திகளை படித்து தெரிந்து கொள்ளவும். இன்று கதையாக எழுதப்படுபவைதான்  நாளை  செய்தியாக மாறுகிறது போலும்.


No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...