Tuesday, December 31, 2013

புத்தாண்டு அபத்தங்கள் - இவன் வேற மாதிரி

ரவல் கணினியில் இதை தட்டச்சு செய்து கொண்டிருக்கும்போது வெளியே புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளது. இள வட்டங்கள் தங்கள் பைக்குகளில் உற்சாகமாக ஊரை வலம் வந்து கொண்டிருக்கின்றனர். இன்னும் சிலர் அடுத்த வருடம் முதல் குடிக்க மாட்டோம் என்று எடுத்த புத்தாண்டு சபதம் எடுத்து கொண்டு கடைசிதடவையாக டாஸ்மாக் வாசலில் முண்டி அடித்து கொண்டுள்ளனர். இன்னும் சிலர் பட்டாசு கடையிலும், புத்தாண்டு இனிப்புகள் வாங்க பேக்கரி வாசலிலும் நின்று கொண்டுள்ளனர். இளம் கன்னியர் நாளை என்ன மேக் அப் போடலாம்; இரவு 12 மணிக்கு யார் யாரை வாழ்த்தலாம் என்று திட்டமிட்டு கொண்டுள்ளனர்.

புத்தாண்டு கொண்டாட்டங்கள் இயல்பானவையாகவே தெரிகின்றன. இது நமக்கு நம் வாழ்வின் கடந்த நாட்களை திரும்பி பார்க்கும் வாய்ப்பினை ஏற்படுத்தி தருகிறது.  கடந்த நாட்களின் செய்த தவறுகளை சரி செய்து கொள்ளும் வாய்ப்பினை தருகிறது. நம் வாழ்விலே ஏதாவது ஒரு தருணத்தில் நாம் "நான் 2013லே..." என்று நம் வாழ்க்கை வரலாற்றை அடுத்தவர்களிடம் எடுத்துரைக்கும் வேலையை எளிதாக்குகிறது.எல்லாவற்றுக்கும் மேலாக இளசுகளுக்கு கொண்டாடுவதற்கு ஒரு காரணத்தை தருகிறது.

இதெல்லாம் ஒரு புறம் இருந்தாலும் சில விஷயங்களை மட்டும் புரிந்து கொள்ள முடியவில்லை. புத்தாண்டு என்று காரணம் சொல்லி கொண்டு சில கோவில்களை இரவு 12 மணிக்கு திறந்து பூஜை செய்கின்றனர். ஆங்கில புத்தாண்டுக்கும், இந்து கடவுள்களுக்கும் என்ன சம்பந்தம்? அது மட்டும் இல்லாமல் இந்து நம்பிக்கைகளின்படி ஒரு நாள் என்பது காலையிலிருந்தே தொடங்குகிறது. இரவு 12 மணியில் இருந்து அல்ல. அப்படி இருக்கும்போது இரவு 12 மணிக்கு பூஜை செய்வது எந்த வகையில் சேர்த்தி? இது இந்திய நம்பிக்கைகளையும், மேற்கத்திய நம்பிக்கைகளையும் கலப்பது அல்லவா? இன்னும்   சிலர் புத்தாண்டு ராசி பலன்கள் என்று தொலைக்காட்சியிலும், செய்தித் தாள்களிலும் ஆருடம் கூறுகின்றனர். கிரகங்கள் ஆங்கில புத்தாண்டுமுதல் தமது நிலையை மாற்றி கொண்டு பலன்களை வழங்கும் என்று இந்திய ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டு இருக்க வாய்ப்பில்லை.

அதே போல் ஆங்கில  புத்தாண்டு அன்று அடிக்கடி  சிலர்  கோவிலுக்கு செல்லாதவர்கள் கூட கோவிலுக்கு செல்கின்றனர். கிரிகோரியன் காலண்டர் புத்தாண்டு நாள், இந்துக்களுக்கு எந்த வகையிலும் மத ரீதியில் முக்கியமான  நாளில்லை. ஜனவரி 1ம் தேதி அன்று கோவிலுக்கு செல்வதற்கும், 2ம் தேதி அன்று செல்வதற்கும் எந்த வேறுபாடும் இல்லை . இது நமது பிறந்த நாள் கொண்டாட்டங்களுக்கும் பொருந்தும். சுலபமான கணக்கீடுகளுக்காக பயன்படுத்த வேண்டிய ஆங்கில காலண்டரை நம்முடைய பாரம்பரியத்துடன் இணைத்து குழப்பி கொண்டுள்ளோம்.

இந்த கருத்துகளோடு சிலர் முரண்படலாம். இந்த கட்டுரையே அபத்தம் என்று நினைக்கலாம். இருந்தாலும் நீண்ட நாட்களாக மனதில் இருந்ததை சொல்லி விட்டேன். வாசகர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

*********************************************************************************

"இவன் வேற மாதிரி" பட போஸ்டர்களில் ரஜினி கடிதத்தையும்  சேர்த்து  வெளியிட்டு விளம்பரம் செய்கின்றனர்.  பெரிதாக லாஜிக் ஏதும் இல்லாமல் விறுவிறுப்பான திரைக்கதையோடு இந்த படம் 80களில் வந்த ரஜினி படங்களையே நினைவுபடுத்துகிறது . முப்பது வருடங்களுக்கு முன் இந்த கதையை யாரேனும் ரஜினியிடம் கூறி இருந்தால் தயங்காமல் ஓகே சொல்லி இருப்பார். படம் பார்த்த பின் நீண்ட இடைவேளைக்கு பின் சிறந்த மசாலா படம் பார்த்த திருப்தி கிடைக்கிறது.  இந்த படத்தின் மூலம்  இயக்குனர் சரவணன் எதிர்பார்க்க வைக்கும் இயக்குனர் ஆகி விட்டார்.



LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...