Tuesday, June 25, 2013

தீயா வேலை செய்யணும் குமாரு - கதை விவாதத்தின் கதை

"தீயா வேலை செய்யணும் குமாரு" படத்தை பற்றி சிலர் நல்ல விதமாக சொல்லி இருந்ததால் படம் பார்க்க சென்றிருந்தேன். படம் நான் எதிர்பார்த்த அளவு இல்லை. படம் பார்த்ததும் படத்தின் கதை விவாதம் பற்றி எனக்கு ஒரு எண்ணம் தோன்றியது. என்ன என்று நீங்களே பாருங்கள் என பாருங்கள்.


சுந்தர் C : பாய்ஸ்! நாம இப்போ ஒரு படம் பண்ண போறோம். நான் ஒரு கல் ஒரு கண்ணாடி படம் பாத்து இன்ஸ்பையர் ஆயிட்டேன். நாம அதே மாதிரி ஒரு கதை பண்ணனும்.

உதவி இயக்குனர் 1: அதுக்கென்ன சார்? அந்த படத்தையே திரும்ப எடுப்போம். யாராச்சும் கேட்டா ரீ மேக் அப்பிடிம்போம்

சுந்தர் C : அது தப்பு. அப்படியே எடுத்து ரசிகர்களை ஏமாத்த கூடாது.  . தொட்டதும் தெரியாம சுட்டதும் புரியாத மாதிரி நேக்கா  பண்ணனும்.

உதவி இயக்குனர் 1: லேசா புரியுது சார்.

சுந்தர் C :இப்போ OK OK படத்தை எடுத்துக்குவோம். ஹீரோ எல்லா பிராட் வேலையும் செஞ்சு கடைசில ஹீரோயினை காதலிக்க வைக்கிறாரு . நம்ம படத்தோட ஒன் லைனும்  இதுதான் .

உதவி இயக்குனர் 2: சரி சார்

சுந்தர் C : OK OKல யாரு மெயின் ரோல் செஞ்சு இருப்பா?

உதவி இயக்குனர் 1 :  உதயநிதி, சந்தானம், ஹன்ஷிகா

சுந்தர் C இப்போ நாம எடுக்குற படத்துல சந்தானம், ஹன்ஷிகா இருக்காங்க உதயநிதி வேண்டாம். ஏன் சொல்றேன்னா உதயநிதியும் இருந்தா கதை நம்மதில்லைன்னு தெரிஞ்சுடும் . எப்பிடி?

உதவி இயக்குனர் 2:  சூப்பர் சார்! அனுபவஸ்தர் , அனுபவஸ்தர்தான் 

சுந்தர் C : இப்போ அடுத்து ஹீரோ பத்தி பேசலாம் . OK OKல ஹீரோ கேரக்டர் எப்பிடி?

உதவி இயக்குனர் 1: ஐயோ! பயங்கரமான ப்ராடு கேரக்டர் சார். வாயை திறந்தா பொய்தான். தெரு தெருவா பொம்பளை பின்னாடி சுத்தும். ஒரு வேலைக்கும் போகாது.

சுந்தர் C : அப்போ நம்ம ஹீரோ ஒரு அப்பாவி. பொண்ணுங்கன்னாலே பயம் . IT கம்பெனில வேலை பாக்குறாரு.

உதவி இயக்குனர்: கலக்கல் சார்!

 சுந்தர் C : OK OKல ஹீரோ குடும்பம் பத்தி சொல்லு 

உதவி இயக்குனர் 2: சின்ன குடும்பம் சார்! அப்பா, அம்மா, ஹீரோ இதுதான் அவங்க குடும்பம்.

 சுந்தர் C :இதை எப்படி மாத்தணும்னா ......

உதவி இயக்குனர் 1: சார் சார்! நானே சொல்றேன். நம்ம ஹீரோ வீட்ல அம்மா, அப்பா,அண்ணன், அக்கா, மச்சான், கொழுந்தியா இப்பிடி எல்லாம் இருக்காங்க. ஒரு கூட்டு குடும்பம்.

சுந்தர் C : இங்கதான் தப்பு பண்றீங்க. நம்ம ஹீரோ கூட்டு குடும்பத்துலதான் இருக்காரு. ஆனா அவருக்கு அம்மா,அப்பா  இல்லை.

உதவி இயக்குனர் 1: சாரி சார்!

சுந்தர் C : OK OK ல ஹீரோ லவ் பண்றது முதல்ல  சந்தானத்துக்கு பிடிக்காது. காதலை கெடுக்க பார்ப்பார் .பின்ன அவரே சேத்து வைக்க பார்ப்பார் . நம்ம கதைல இதை திருப்பி போட்டுப்போம். அதாவது சந்தானம் முதல்ல லவ்வுக்கு ஹெல்ப் பண்றாரு. ப்ராடுத்தனம் செய்ய ஐடியா தராரு . அப்புறம் அவரே கெடுக்க பாக்குறாரு.

உதவி இயக்குனர் 2: பின்னி பெடல் எடுக்கிறீங்க சார்! ஆனா சந்தானம் ஏன் அப்பிடி செய்றாரு?

சுந்தர் C :(மனதுக்குள்) அதான. ஏன் அப்பிடி செய்றாரு.

சுந்தர் C : எல்லாத்தையும் நானே சொன்னா நீங்க எதுக்கு. யோசிச்சு சொல்லுங்க.

உதவி இயக்குனர் 1: (சற்று நேரம் யோசித்து) பிடிச்சுட்டேன் சார்! சந்தானத்தோட தொழிலே  காதலை சேத்து வைக்கிறது.
 
சுந்தர் C : பிரிக்க காரணம்?

உதவி இயக்குனர் 2: சந்தானம் அவருக்கே தெரியாம தன்னோட தங்கச்சியவே லவ் பண்ண ஹீரோவுக்கு ஹெல்ப் செஞ்சுடறார் சார். அது தெரிஞ்ச அப்புறம் பிரிக்க பாக்குறார். ஓகே ஓகே ல வர மாதிரி  சந்தானத்துக்கு கை கூடாத காதலையும் வச்சுடுவோம்.

சுந்தர் C : சூப்பர்! நீங்க சீக்கிரமா டைரக்டர் ஆயிடுவீங்க.

 உதவி இயக்குனர் 2: தேங்க்ஸ் சார்.

சுந்தர் C: இப்போ ஹன்சிகா. இவங்களை ஹீரோ வேலை பாக்குற ஆபீஸ்லயே வேலை பாக்க வச்சுடுவோம். OK OK ல ஹன்சிகா அப்பா சென்னைல போலீஸ் கமிஷனர். நம்ம படத்துல ஹன்சிகா அப்பா சென்னைலயே இல்ல. நாகர்கோயில்ல வசிக்கிற ஒரு சாப்டான கேரக்டர்.

உதவி இயக்குனர் 1: இதுக்கு மேல நான் சொல்றேன் சார்! ஹன்சிகாவுக்கு பாத்த மாப்பிள்ளை கேரக்டர் ஒன்னு OK OK ல உண்டு. ரொம்ப சின்ன ரோல். நாம அந்த கேரக்டரையே நம்ம படத்துல டெவலப் பண்ணிக்கலாம் சார்.

 சுந்தர் C : குட்! நீங்க என்னையே மிஞ்சிடுவீங்க போல. இப்போ நாம புது கதை ரெடி செஞ்சுட்டோம். ஸ்க்ரீன் ப்ளே எழுதிடுங்க.

 உதவி இயக்குனர் 1: OK OK சார்


Saturday, June 22, 2013

பணம் என்ன மரத்திலா காய்க்குது?

மீபத்தில் ஒரு பிறந்த நாள் விழாவுக்கு சென்றிருந்தேன். ஒரு பிரபல ஹோட்டலின் முதல் தளத்தில்  விழா ஏற்பாடு செய்யபட்டிருந்தது. உறவினர், நண்பர்கள் என கிட்டத்தட்ட  100 பேர் வரை வந்திருந்தனர். வந்திருந்த அனைவருக்கும், இலைக்கு 200 ரூபாய் மதிப்பில் விருந்து அளிக்கப்பட்டது . கிட்டத்தட்ட ஒரு ஏழை குடும்பம், திருமணத்திற்கு செய்ய கூடிய செலவை அந்த பிறந்த நாள் விழாவுக்காக செலவு செய்திருந்தனர். இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் பிறந்த நாள் கொண்டாடியவரின்  வயது ஒன்று. அவரின் பெற்றோர்கள்  நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள்.

 'சம்பாதிக்கும்போதுதான் பணத்தின் மதிப்பு தெரியும்' என்று பெரியவர்கள் கூற கேட்டிருப்போம். ஆனால் இது போன்ற விழாக்களை பார்க்கும்போது பெரியவர்கள் கூறியது தவறோ என்று தோன்றுகிறது. எதற்காக இது போன்ற விழாக்கள்? அந்த குழந்தையின் சந்தோசத்துக்கா? ஒரு வயது குழந்தை அந்த விழாவால் என்ன சந்தோசமடையும்? அந்த குழந்தையின் சந்தோசத்துக்கு ஒரு சிறிய பொம்மை போதும். பெரியவர்கள் தங்கள் கவுரவத்தை நிலை நாட்ட இது போன்ற விழாக்கள் தேவை என்று கூறலாம். ஆனால் இது என்ன வகையான கவுரவம் என்று புரியவில்லை. தங்களின் வசதியான பொருளாதார சூழலையும், குழந்தை மேல் வைத்திருக்கும் அன்பையும் இது போல்தான் காட்ட வேண்டுமா? 


 இன்னொரு குறிப்பிடத்தக்க விஷயம் இன்றைய   திருமண விழாக்களில் நடக்கும் விருந்துகள்.  இலைக்கு இவ்வளவு என பேசிவிட்டு வகை, வகையாக பரிமாறுகின்றனர். நிச்சயம் ஒரு சாதாரண மனிதனால் இவர்கள் இலையில் பரிமாறும் அனைத்தையும் சாப்பிட முடியாது. இன்னும் சிலருக்கோ சாப்பிட ஆசை இருந்தாலும் உடல் நிலையால் பரிமாறப்படும் அனைத்தையும் சாப்பிட முடிவதில்லை. இறுதியில் எக்கச்சக்கமான உணவு பொருட்கள் குப்பை தொட்டியை சென்று சேர்கின்றன. சோமாலியாவில் உணவு இல்லாமல் மக்கள் சாகும்போது நாம் இப்படி உணவை  வீணாக்கலாமா என்றெல்லாம் யோசிக்க வேண்டாம். நாம் கஷ்டப்பட்டு சேர்த்த பணத்தை இப்படி பாழ்  செய்வது சரியா என்றாவது யோசிக்கலாமே?

செலவு செய்யத்தானே பணம்.இதை மிச்சபடுத்தி என்ன செய்யபோகிறோம் என சிலர் கேட்கலாம். இன்றைய சூழலில் பொருளாதாரம் எப்போது சுறுசுறுப்படையும்? எப்போது மந்தமடையும்? என யாருக்கும் தெரியாது. அரசாங்க ஊழியர்கள் தவிர மற்ற யாருக்கும் வேலை உத்தரவாதம் இல்லை. இப்படிப்பட்ட நிலையில் கையில் இருக்கும் பணத்தையெல்லாம் அநாவசியமாக செலவு செய்வது புத்திசாலித்தனமா?

இப்போது ஒரு சிலரே  இது போல் ஆடம்பர விழாக்கள் நடத்துகின்றனர் . இதை பார்த்து மற்றவர்களும் இதே போல் செய்ய ஆரம்பித்து இதை ஒரு அத்தியாவசிய தேவை போல் மாற்றிவிட கூடாது என்பதே என் கவலை.

Tuesday, June 18, 2013

தீர்ப்பு, குஷ்பூ, கற்பு

சென்னை உயர்நீதி மன்றம் இன்று ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கி உள்ளது. ஆணும், பெண்ணும் திருமணத்துக்கு முன்னரே உடல் ரீதியிலான உறவு வைத்து கொண்டால் அவர்கள் கணவன்-மனைவியாகவே கருதப்படுவர் என்பதே அந்த தீர்ப்பு. இந்த தீர்ப்பை கேட்டதும் சுறுசுறுப்பான குஷ்பூ "நான்தான் அப்பவே சொன்னேன்ல. நீங்கதான் கேக்கல" என்ற ரீதியில் ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார். கிட்டத்தட்ட தனது கருத்தை நீதிமன்றம் ஏற்று கொண்டதை போல அகமகிழ்ந்து உள்ளார்.

உண்மையில் இந்த தீர்ப்பு பல சந்தேகங்களை கிளப்பியுள்ளது. அவையெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். இந்த தீர்ப்பு குஷ்பூவின் கருத்தை எந்த வகையில் ஆமோதிக்கிறது என புரியவில்லை. கணவன்-மனைவி மட்டுமே உடல் ரீதியிலான உறவு கொள்ள வேண்டும் என்பதே நம் கலாசாரம். இப்போது நீதிமன்றம் சொல்லி இருப்பது உடல் ரீதியிலான உறவு கொண்டவர்கள் அவர்கள் முறைப்படி திருமணம் செய்யவில்லை என்றாலும் அவர்கள் கணவன்-மனைவியே என்று. 

இந்த தீர்ப்பின்படி திருமணத்தின் முன்னரே உறவு கொள்பவர்கள் அந்த கணத்திலிருந்து கணவன்-மனைவி ஆகிவிடுவர். கணவன்-மனைவி மட்டுமே உறவு வைத்து கொள்ள வேண்டும் அல்லது உறவு கொண்டால் அவர்கள் கணவன்-மனைவி என்று இந்த தீர்ப்பின் மூலம் உறுதியாகிறது. ஆக  கலாச்சார ரீதியில் நாம் ஏற்று கொண்டதை இப்போது நீதிமன்றம் சட்ட ரீதியிலும் அங்கீகரித்துள்ளது. தீர்ப்பின்படி லிவிங்க் டுகெதர் முறையில் வாழ்பவர்கள் கூட இனி குஷ்பூவின் கருத்துக்கு மாறாக கணவன்-மனைவியாகவே கருதப்படுவர். இதில்  குஷ்பூ மகிழ்ச்சி அடைய என்ன  உள்ளது? அவருக்கே வெளிச்சம்


Monday, June 17, 2013

.இன்னுமொரு பயங்கர பேய் கதை

"அண்ணே! அன்னைக்கு பேய் கதை சொல்றேன்னு சொல்லி ஏமாத்திடீங்க. இன்னைக்காவது ஒழுங்கா ஒரு கதை சொல்லுங்க"

"கோவிச்சுகாதேடா. அன்னைக்கு ஏதோ ஒரு ஜாலி மூட்ல உன்னை கலாய்ச்சுட்டேன். இன்னைக்கு நான் உண்மையாவே பேயை பார்த்த கதைய சொல்றேன். ஒரு நாள் ராத்திரி  முழுக்க நான் பேயால தூங்காம இருந்திருக்கேன் தெரியுமா?"

"அப்பிடியா? அந்த கதைய எனக்கு சொல்லுங்கண்ணே ப்ளீஸ்"

"அப்போ எனக்கு 14 வயசு.  எங்க மாமா புதுசா ஒரு வீடு கட்டி இருந்தாரு. ஒரு சனிக்கிழமை அன்னைக்கு அவரை பாக்குறதுக்கு   அவரோட வீட்டுக்கு . போய் இருந்தேன். அன்னைக்கு பாத்து  சரியான மழை. வீட்ல மாமா மட்டும்தான் இருந்தார். மத்தவங்க எல்லாம் ஊருக்கு போய் இருந்தாங்க."

"சரி!"

"அன்னைக்கு ராத்திரி மாமாவுக்கு ஒரு போன் வந்துச்சு. ஆபீஸ்ல அவசர வேலை இருக்குன்னு அவரை வர சொல்லிட்டாங்க. எங்க மாமா என்னை வீட்டை பாத்துக்க சொல்லிட்டு கொட்டுற மழைல ஆபீஸ் கெளம்பிட்டார். எங்க மாமா வீடு தவிர அந்த எரியால வேற வீடே கிடையாது. ஒரு 100 அடி தள்ளி ஒரு வீடு கட்டிக்கிட்டு இருந்தாங்க. அவ்ளோதான். அதனால எனக்கு அந்த வீட்ல தனியா இருக்க ரொம்ப பயம்.  என்னோட வீட்டுக்கு போகலாமுன்னாலும் அந்த ராத்திரி நேரம் பஸ் கெடைக்காது"


"உங்க மாமா கிட்ட சொல்லி இருக்கலாமுல்ல."

"சொல்லாம இருப்பேனா?  தனியா இருக்க எனக்கு ரொம்ப பயமுன்னு சொன்னேன்.  அவரு நீ பயப்படாதடா. உனக்கு ஒரு ஏற்பாடு பண்றேன்னு சொன்னாரு.  என்னை கூட்டிகிட்டு என்னை புதுசா கட்டிக்கிட்டு இருக்குற அந்த வீட்டுக்கு கூட்டிட்டு போனாரு"

"கட்டிக்கிட்டு இருக்குற வீட்ல யாரு இருப்பா?"

"நானும் அதைத்தான் யோசிச்சிகிட்டே அவர் கூட போனேன். அந்த வீட்ல யாரு இருந்தா தெரியுமா"

"சொன்னாதான தெரியும்"

"அங்க ஒரு கிழவர். 65 வயசு இருக்கும். ஒரு கயித்து கட்டில்ல படுத்துக்கிட்டு இருந்தார். அவரோட கண்ணு ரெண்டும் பாதி மூடுன மாதிரி இருந்துச்சு.  சட்டை போடாம வேட்டி மட்டும் கட்டிக்கிட்டு இருந்தார் .  அவர் கிட்ட ஒரு நாய் வேற படுத்து இருந்துச்சு . நல்ல கறுப்பு கலர்ல. அதோடே கண்ணு ரெண்டும் ரத்த சிகப்பா மின்னிகிட்டு. என்னை பார்த்ததும் பல்லை காட்டிகிட்டு ஒரு மாதிரி உறும ஆரம்பிச்சிடிச்சு.அந்த இடத்துல நிக்கவே எனக்கு ரொம்ப பயமா இருந்துச்சு."

'அய்யய்யோ! அவர் கூட உங்களை தங்க சொல்லிட்டாரா மாமா?"

"இல்லை. அவர் அந்த கிழவர் கிட்ட போய், 'சுடலை! நான் அவசர வேலையா வெளிய போறேன். இந்த தம்பி இன்னைக்கு எங்க வீட்டுல தங்கி இருப்பான். அடிக்கடி போய் பாத்துக்கோன்னுட்டார் '"

"ஓ! உங்களுக்கு செக்யூரிட்டி  மாதிரி"

"ஆமா! கிழவர் அந்த வீட்டு வாட்ச்மேன். வேற ஆளுங்களே இல்லாத ஏரியால மாமாக்கு பழக்கம் அவர் மட்டும்தான். அவர்கிட்ட சொன்னதும் தன் கடமை முடிஞ்சது மாதிரி மாமா கிளம்பிட்டார்"

"அப்புறம் என்ன ஆச்சு"

"வேற வழி? வீட்ல தனியா இருக்கலாம்னு போய்ட்டேன். லைட் எல்லாத்தையும் போட்டுட்டு கட்டில்ல படுத்துகிட்டேன் "

"ம்"

"ஆனா எனக்கு தூக்கமே வரல. சொல்ல போனா தூங்க இஷ்டம் இல்லை. எப்படியாச்சும் ராத்திரி முழுசும் தூங்காமயே இருந்திடலாம்னு என்னோட திட்டம்."

"நல்ல திட்டம்தான்'

"அப்படியே கொஞ்ச நேரம் போச்சு. நான் சாமியை மனசுல நெனச்சுகிட்டு படுத்துகிட்டு இருக்கேன். அப்போ திடீர்னு கரண்ட் போயிடிச்சு. காத்து வேற வேகமா வீச ஆரம்பிச்சது. நான் ரொம்ப பயந்துட்டேன். போர்வைய இழுத்து போர்த்தி முகத்தை மூடி கிட்டேன்."

"அப்புறம்"
 
"அப்போதான் அந்த சத்தம் கேட்க ஆரம்பிச்சது. அது ஒரு சலங்கை சத்தம். சத்தம் நெருங்கிட்டே வரது எனக்கு நல்லா தெரியுது. எனக்கு இதயம் வேகமா துடிக்க ஆரம்பிச்சிடுச்சு. கிட்ட இருக்குற ஜன்னலை எழுந்து மூடலாம்னு நெனக்கிறேன். ஆனா தைரியம் வரல "

"அச்சச்சோ அப்புறம்"

"எனக்கு வேர்க்க ஆரம்பிக்கிது. மனசுல கந்த சஷ்டி கவசத்தை சொல்லிகிறேன். இப்போ அந்த சலங்கை சத்தம் விலகி போற மாதிரி தெரியுது"

"எழுந்து பாத்தீங்களா?"

"இல்லை. மூச்சு கூட விடாம இழுத்து பிடிச்சுகிட்டு படுத்துகிட்டே இருந்தேன். கொஞ்ச நேரம் அப்படியே போச்சு. அப்புறம் திரும்பவும் அதே சலங்கை சத்தம். நான் திரும்பவும் கந்த சஷ்டி கவசம் சொல்ல ஆரம்பிச்சேன். இப்போ அந்த சத்தம் திரும்ப போற மாதிரி இல்ல. இப்போ நான் சஷ்டி கவசம் திரும்ப ரொம்ப சத்தமா சொல்ல ஆரம்பிச்சேன். இப்போ சத்தம் விலகி போறது தெரிஞ்சது. இப்போ எனக்கு கொஞ்சமா தைரியம் வந்தது. போர்வைய விலக்கி பார்த்ததும் பயந்துட்டேன்"

"ஏன்? என்ன பார்த்தீங்க?"

"வீட்டு சுவர்ல ஒரு நிழல் தெரியுது. கொஞ்ச கொஞ்சமா அந்த நிழல் சிறுசாகிட்டே போகுது. திரும்ப முகத்தை மூடிகிட்டேன் "

"அப்புறம்?"

" ஒரு வழியா கொஞ்ச நேரத்தில விடிஞ்சிடிச்சு. எந்திரிச்சு முகம் கூட கழுவாம வெளிய வந்து கதவை சாத்துனேன். சாவிய அந்த கிழவர் கிட்ட குடுத்துட்டு ஊருக்கு பஸ் ஏறிடலாமுன்னு கிழவர் இருக்குற வீட்டுக்கு போனேன்"

"அங்க அந்த கிழவர் இருந்தாரா?"

"ஆமா! அந்த கிழவரை பாத்தேன். என்னை பார்த்ததும் 'என்ன தம்பி! நேத்து நல்லா தூங்குனயா? நான் நேத்து ராத்திரி ரெண்டு தரம் வந்து பாத்துட்டு போனேன்' அப்பிடின்னார். அப்போ அந்த வீட்டுல நான் ராத்திரி கேட்ட அதே சலங்கை சத்தம். என்னனு பாத்தா அந்த கிழவர் வளக்குற நாய்  வெளிய இருந்து வீட்டுக்குள்ள ஓடி வருது. கழுத்துல ஒரு சலங்கை "

"ஹா ஹா ஹா! அப்போ கிழவர் நிழலை பாத்து பயந்து இருக்கீங்க. இதுல அந்த நாய் கழுத்துல இருந்த சலங்கை வேற உங்களை ரொம்ப பயமுறுத்தி இருக்கு"

"ஆமா"

"கதை நல்லாதான் இருந்துச்சு. ஆனா நீங்க சொன்ன மாதிரி பேய் எதுவும் வரலியே?"

"ஏன் வரல. என் மனசுல இருந்த பயம் இருந்துச்சு பாத்தியா. அதான் பேய்"

"அதுவும்  சரிதான்!"

"சரி தம்பி. நேரமாச்சு நான் வரேன்"

Saturday, June 15, 2013

ஹிந்தியர்களின் மன நிலையும், ஹிந்தி எதிர்ப்பு போராட்டமும்

"வேற்றுமையில் ஒற்றுமை  காணும் நாடு பாரதம்" என்று பள்ளியில் நமக்கு  கொடுத்து இருப்பார்கள். நானும் பல ஆண்டுகள் வரை நம்பி கொண்டிருந்தேன். ஆனால் சமீப காலங்களில் சில வட இந்தியர்களுடன் பழகும் வாய்ப்பு கிடைத்ததும் என் நம்பிக்கை தகர்ந்து விட்டது. இந்த  கட்டுரையில் நான் வட இந்தியர்கள் என்று குறிப்பிடுவது பெரும்பாலும் டெல்லி, உபி மற்றும் அதன் சுற்று வட்டார மக்கள்.

வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாட்டில் பல வட இந்தியர்கள் தங்கள் பணி  நிமித்தம் வந்து தங்கியுள்ளனர். என்னை சலனப்படுத்துவது அவர்களின் மன நிலை. அவர்களின் கருத்து என்னவென்றால் இந்தியாவில் வாழும் அனைவருக்கும் ஹிந்தி தெரிந்து இருக்க வேண்டியது கட்டாயமாம். தமிழர்கள் ஹிந்தி தெரியாமல் இருப்பது பெரிய பிழையாம். வந்து வாழும் இடத்தின் மொழியை அவர்கள் தெரிந்து கொள்ள முயற்சி கூட செய்ய மாட்டார்களாம். ஆனால் தன் வாழ்நாளில் தமிழ்நாட்டை தாண்டி எங்கேயும் செல்ல வாய்ப்பில்லாத நம் தமிழ் மக்களும் ஹிந்தி படித்து அவர்களுடன் ஹிந்தியிலேயே போலோ செய்ய வேண்டுமாம்.

தமிழ்நாட்டில் ஹிந்தி தெரிந்தவர்களும் உள்ளனர்; உங்கள் மொழியை தேவைப்படும்போது நாங்கள்  கற்று கொள்கிறோம். அனைத்து தமிழர்களும் ஹிந்தி தெரிந்து வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றாலும் கேட்பதில்லை. ஹிந்தி கற்று கொள்ளாமல் நாம் தேசிய நீரோட்டத்தில் இருந்து விலகி உள்ளோமாம். இது ஒரு சிலரின் கருத்தாக இருந்தால் கூட விட்டு விடலாம். ஆனால் நான் சந்திக்கும் பெரும்பாலான ஹிந்தியர்கள் இதே எண்ணத்தை  கொண்டவர்களாகவே இருக்கின்றனர். 


இவ்வளவுக்கும்  வட இந்தியர் ஒருவர் தமிழ் நாட்டில் மொழி தெரியாமல் தடுமாறினால், தமிழர்கள் அவர்களுக்கு பொறுமையாக உதவவே செய்கின்றனர். இருப்பினும் நம் மேல் வட  இந்தியர்கள்  ஆளுமை செலுத்தவே முயல்கின்றனர். அதுவே அவர்களை நம்மை ஹிந்தி கற்று கொள்ள சொல்ல வைக்கிறது. அவர்கள் வைக்கும் இன்னொரு வாதம் ஹிந்தி தேசிய மொழி. எனவே அனைவரும் ஹிந்தி தெரிந்து வைத்து இருக்க வேண்டும் என்பது.

சுதந்திரம் அடைந்த பின் ஒரு முறை பாராளுமன்றத்தில் ஒரு முறை தேசிய மொழியாக எதை அறிவிப்பது என்று விவாதம் நடந்ததாம். இந்தியாவில் அதிக மக்கள் பேசும் மொழியாததால் ஹிந்தியை தேசிய மொழியாக அறிவிக்க வேண்டும் என்றாராம் ஒரு வட இந்திய பிரமுகர். உடனே எழுந்த ஒரு தமிழர் அப்படியானால் இந்தியாவில் அதிகமாக இருக்கும் காக்கையை தேசிய பறவையாக அறிவிக்கலாமே? ஏன் மயிலை அறிவிக்க வேண்டும்? என கேட்டாராம். அதன் பின் தேசிய மொழியாக ஹிந்தியை அறிவிக்கும் திட்டத்தை அரசு கை விட்டதாம். இந்த சம்பவத்தை வட இந்தியர்கள் ஒருவரும் அறிந்திருக்க மாட்டார்கள் போலும்.

முன்பு ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தின் மேல் எனக்கு பெரிய அபிப்பிராயம் எல்லாம் இல்லை. வற்புறுத்தி ஹிந்தி கற்று கொள்ள செய்வதை எதிர்த்த நியாயமான போராட்டம் என்ற அளவிலேயே அதை புரிந்து வைத்து கொண்டிருந்தேன்.  ஆனால் இப்போது ஹிந்தியர்களின் பேச்சுகளை கேட்கும்போது அந்த போராட்டத்தின் மேல் இருந்த மரியாதை அதிகரிக்கிறது. அந்த போராட்டம் மொழி திணிப்பை  எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டம் என்பதை விட, வட இந்தியர்களின் குணம் கண்டு எரிச்சல் அடைந்து நடந்த போராட்டமாகவே தோணுகிறது. அவர்களின்  வசதிக்காக நாம்  ஹிந்தி  மொழியை கற்று கொள்ள ஆரம்பித்து இருந்தால் அதை விட  அடிமைத்தனமான செயல் எதுவும் இருந்திருக்க முடியாது. 

நல்ல வேளையாக ராஜபக்சே போன்ற தலைவர்கள் அப்போது ஆட்சியில்  இல்லை. போராட்டத்தின் நியாயத்தை புரிந்து கொண்டனர். அது போன்ற மன பக்குவத்தை எல்லா வட இந்தியர்களும் எப்போது பெற போகின்றனர் என தெரியவில்லை. எது எப்படியோ, ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு மிக தாமதமாக ஒரு சல்யூட்.

 குறிப்பு: எப்போதோ படித்த ஒரு சம்பவத்தை இங்கே குறிப்பிட்டுள்ளேன். பாராளுமன்றத்தில் பேசிய அந்த தமிழ் பிரமுகரின் பெயர் நினைவில்லை. யாருக்காவது தெரிந்திருந்தால் சொல்லுங்கள்.

Tuesday, June 11, 2013

ஜாதி நாய்களும் ஒரு அப்பாவியும் (U)

சின்ன வயசுல இருந்தே நாயின்னா எனக்கு பயங்க. தெருல போகும்போது வழில நாயை பாத்தா ஒரு 20 அடி தூரம் தள்ளி போயிடுவேன். இல்ல போக வேண்டிய ரூட்டையே மாத்திடுவேன். இந்த நாயோ போபியா போக என்ன வழின்னு போன வாரம் முழுக்க நான் யோசிச்சேங்க (நெஜமா யோசிச்சேங்க). அப்பிடி யோசிச்சு நான் கண்டுபிடிச்ச வழி என்னன்னா வீட்ல ஒரு நாய் வளத்தா எனக்கு  நாய் மேல இருக்குற பயம் போயிடும். இந்த முடிவு எடுத்துட்டு ஒரு வழியா நாய் விக்குற ஒருத்தரையும் தேடி கண்டு பிடிச்சேங்க. நல்ல ஜாதி நாயா வாங்குறது என்னோட ப்ளான். அவரும் நானும்  என்ன பேசிக்கிட்டோம்னு  நீங்களே பாருங்க.

"சார்! உங்களுக்கு கொஞ்ச நேரம் முன்னாடி போன் பண்ணது நாந்தாங்க"

"ஓ! அந்த நாய் பத்தி விசாரிக்க வரேன்னு சொல்லி இருந்தீங்களே. அவரா?"

"ஆமாம். அவரேதான்"

'சொல்லுங்க. எந்த இனத்து நாய் வேணும்னு முடிவு செஞ்சுடீங்களா?"

"இனமா? நல்லா குலைக்குற மாதிரி நாய் குடுங்க"

"ஹாஹஹா! சார் இந்த ஆல்பத்தை பாருங்க. இதுல என் கிட்ட இருக்குற எல்லா நாய் வகைகளோட போட்டோ இருக்கு. எது பிடிக்கிதுன்னு சொல்லுங்க". அவர் எடுத்து குடுத்த ஆல்பத்தில் 20 பக்கங்கள் இருந்திருக்கும். எடுத்து புரட்டினேன். 12வது பக்கத்தில் எனது கனவு நாயை கண்டு பிடித்து விட்டேன்

" சார்! எனக்கு இந்த நாய் பிடிச்சிருக்கு சார். இதையே முடிச்சுடலாம்"

"குட்! நல்ல செலக்சன். லாப்ரடார் இதுக்கு பேரு. நல்ல புத்திசாலி நாய்ங்க"

"ரொம்ப சந்தோசம். இது எவ்வளவு ஆகுங்க?"

"5000 ருபாய்"

எனக்கு பகீர் என்றது. நாய்க்கு போய் 5000 முதலீடு செய்வதா? இருந்தாலும் நாய் வாங்கும் ஆசையை கை விடவும் மனது இல்லை. "சரிங்க! நாளைக்கு பணத்தோட வந்து இதையே வாங்கிகிடுறேன்ங்க" என்றேன்.

"இருங்க. நீங்க புதுசா  நாய் வழக்க போறதால உங்களுக்கு சில டிப்ஸ் தர வேண்டியது என் கடமை."

"சொல்லுங்க சார்!"

"வாங்க போற நாய்க்கு என்ன சாப்பாடு போடுவீங்க"

"இது என்ன சார் கேள்வி? எங்க வீட்ல மீந்து போற பழைய சாதத்தை போட வேண்டியதுதான்"

"வாட்? பாரின்ல இருந்து வந்த நாய்ங்க இது. இதுக்கு போய் பழைய சாதம் போடுவேங்குறீங்க? பெடிக்ரீ அப்பிடின்னு கடைல ஒரு அய்ட்டம் கிடைக்கும். அதை மட்டும்தான் இதுக்கு போடணும். அப்புறம் வாரம் ஒரு நாள் கட்டாயமா சிக்கன் இல்ல மட்டன்."

"நானே 2 வாரத்துக்கு ஒரு முறைதான் நான்-வெஜ் சாப்பிடுவேன். இருந்தாலும் பரவாயில்ல. நாய்க்கு மட்டும் தனியா செஞ்சு போட்டுறேன்"

"சரி. அப்புறம் உங்களுக்கு தினமும் வாக்கிங் போற வழக்கம் இருக்கா"

"எனக்கு அதுக்கெல்லாம் எங்க சார் நேரம்."

"இனிமே நீங்க நாயை தினமும் வாக்கிங் கூப்பிட்டுகிட்டு போகணும்."

"நாய் வெயிட் போட்டாலும் எனக்கு ப்ராப்ளம் இல்ல சார். ஆனா தினமும் வாகிங் எல்லாம் கஷ்டம். காலை கடனுக்கு மட்டும் வெளிய போற மாதிரி பழக்கிடுறேன் "

"அட வெயிட் போடுறதுக்கு சொல்லலீங்க. நாய் வீட்லயே இருந்தா அதுக்கு வெறி பிடிச்சு உங்களையே கடிக்க வந்திடும்."

"அச்சச்சோ! அப்போ கட்டாயம் வாக்கிங் கூப்பிட்டுகிட்டு போறேங்க"

"நாய்க்கு தடுப்பூசி எல்லாம் சரியா போட்டுடனும். எப்போ என்ன ஊசின்னு நாங்க சீட் எழுதி குடுத்திடுவோம். மறந்திடாம அந்த ஊசிகளை போட்டுறனும். ஊசி போட போகும்போது ஒரு ஆட்டோ வச்சு நாயை கூப்டுக்கிட்டு போங்க"


நானே என் வாழ்க்கைல நாலு, அஞ்சு தடவைதாங்க ஆட்டோல போயிருப்பேன். எவ்வளவு கூடம் இருந்தாலும் பஸ்ல புட் போர்ட்தான் . நாய்க்கு போய் ஆட்டோவா அப்பிடின்னு சொல்ல நெனச்சேன். ஆனா சொல்லல. அவர் அடுத்து என்ன சொல்றாருன்னு பாத்தேன்.

"இப்போ சொல்ல போறது முக்கியமான விஷயம். நாய் வயசுக்கு வந்ததும் அதுக்கு ஜோடி சேக்கணும்."

"நாய் வயசுக்கு வந்திடுச்சானு எப்படி கண்டுபிடிக்கிறது ?"

".........."

"சாரி சார்! முறைக்காதீங்க. ஒரு சந்தேகம்....."

"நல்ல சந்தேகம். வயசுக்கு வந்ததும்னா அதுக்கு குறிப்பிட்ட வயசு ஆனதும்னு அர்த்தம்"

"புரியுது சார்! அது வளர்ந்த பின்னாட, கார்த்திகை மாசம் அதை வெளிய அவுத்து  விட்டுடுறேன். அது ஒரு ஜோடிய கண்டு பிடிச்சுக்கும். சரியா?"

"சார்! இந்த ஜாதி, கிளிண்டன் செல்லமா வளர்த்தது சார். நீங்க அதுவா போய் ஜோடி சேரும்னு சொல்றீங்க? வியாதி ஏதும் வந்தா?"

"அப்போ என்னதான் பண்றது?"

"இங்க கொண்டு வந்தா நான் அதுக்கு ஜோடி பிடிச்சு தருவேன்."

"இங்க இந்த சர்வீஸ் வேற உண்டா ? "

"ஆமா! அது மட்டுமில்லை.உங்க நாயால உருவான குட்டிகளை நீங்களே எடுத்துக்கலாம்."

"ஓகே சார்!  உங்க நேர்மை எனக்கு பிடிச்சு இருக்கு. வேற எதுவும் டிப்ஸ்."

"மத்தது நீங்க நாளைக்கு நாய் வாங்க வரும்போது சொல்றேன். நாளைக்கு நீங்க எத்தனை மணிக்கு வருவீங்க?"

"நான் நாளைக்கு வர மாட்டேன் சார். எங்க வீட்டு பக்கம் தெரு நாய் ஒன்னு குட்டிங்க போட்டு இருக்கு. நான் அதையே எடுத்து வளத்துக்குறேன்"

விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன

Tuesday, June 4, 2013

வடிவேலு! நீ எப்பய்யா வருவ??

முன்பு தமிழகத்தில் காலம் ஒன்று இருந்தது. அந்த காலத்தில் மக்கள் அனைவரும் வயது வித்தியாசமின்றி ஒருவர் சினிமாவில் பேசிய வசனங்களை தம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தி வந்தனர். மக்கள் மட்டுமில்லை. சில நேரங்களில் சினிமாகாரர்களே இவர் பேசிய வசனங்களை தமது படங்களில் பயன்படுத்தி கொண்டனர். இவ்வளவுக்கும் இவர் ஹீரோவெல்லாம் கிடையாது. யாரென்று உங்களுக்கே தெரிந்திருக்குமே. அவர்தான் வடிவேலு. (அதான் தலைப்புலயே பேரை சொல்லியாச்சே.அப்புறம் ஏன் இந்த சஸ்பெண்சுன்னு கேக்காதீங்க. எதாச்சும் முன்னுரை வேணும்ல)

வடிவேலுவுக்கு கட்டாய ஒய்வு கொடுத்த பின் சினிமா உலகம் சந்தானத்தை சரணடைந்தது. அவர் வடிவேலு போல எல்லா தரப்பினரையும் கவர்ந்தாரா என்று தெரியாது. ஆனாலும் அவர் நகைச்சுவையில் பெரிய அளவில் குறை ஒன்றும் வைக்கவில்லை. இளைஞர்களை குறி வைத்து அவர்கள் ரசிக்குமாறு  நகைச்சுவைகளை கொடுத்து வருகிறார். பெரும்பாலும் வசனங்களை வைத்தே நகைச்சுவை செய்வது இவர் பாணி. வடிவேலு அளவுக்கு பாடி லாங்குவேஜை பயன்படுத்தி நகைச்சுவை செய்வது இல்லை. அடுத்தவரை கலாய்த்து செய்யும் நகைச்சுவையே சந்தானத்தின் முக்கிய ஆயுதம்.

 
இப்படி சந்தானம், வடிவேலுவின் இடத்தை ஓரளவு நிரப்பியது போல தோன்றினாலும் தமிழ் கூறும் நல்லுலகிற்கு அது போதவில்லையோ என தோன்றுகிறது. காரணம், தமிழ் சினிமாவில் பெருகி வரும் நகைச்சுவை படங்கள். இப்போது வரும் படங்களில்  நகைச்சுவை படங்களே அதிகம் உள்ளன. அவையே வெற்றி பெறவும் செய்கின்றன. போதுமான அளவு உணவு கிடைக்காமல் தவிக்கும் ஒருவனுக்கு விருந்துக்கு அழைப்பு வைத்தால் அவன் எவ்வளவு ஆர்வமாக விருந்துக்கு வருவான்? அதே போல் போதுமான  நகைச்சுவை கிடைக்காமல் அல்லாடும் மக்கள் நகைச்சுவை படங்களை விரும்புகிறார்களோ என தோன்றுகிறது. 

இன்னொரு குறிப்பிடத்தக்க விஷயம், வடிவேலு நிஜ வாழ்வில் ரோசக்காரராக இருந்தாலும் படங்களில் தன்னைத்தானே கேலி செய்து கொண்டு நம்மை சிரிக்க வைத்தார். எனவே இவரின் வசனங்களை மக்கள் நிஜ வாழ்வில் பயன்படுத்தி சீரியசான தருணங்களையும் நகைச்சுவையாக்கி கொண்டனர்.ஆனால் சந்தானத்தின் கலாய்ப்பு வசனங்களை வாழ்க்கையில் அதிகம் பயன்படுத்தினால், பேசியவர் சீரியஸ் கண்டிஷனில் மருத்துவமனையில் சேர்க்கப்பட வாய்ப்புகள் அதிகம். எனவே மக்களின்  வாழ்வில் இருந்த நகைச்சுவை குறைந்துவிட்டது.

ஆக வெளியே தெரியாவிட்டாலும் வடிவேலு கொடுத்து வந்த நகைச்சுவை  வடை போனதால் மக்கள் தவியாய் தவிக்கின்றனர் என்பதே எனது ஆராய்ச்சி முடிவு. இப்படி  நகைச்சுவை குறைபாடு நோயால் தவித்து வரும் மக்களின் வாழ்வு வளம் பெற வேண்டுமென்றால் வடிவேலு மீண்டும் நடிக்க வந்தால்தான் உண்டு. இப்போது வடிவேலு ஒரு படம் நடித்து வருவதாக கேள்விப்பட்டேன். விரைவில் அந்த படம் வெளி வந்து சந்தானத்துக்கும், இவருக்கும் ஆரோக்கியமான போட்டி உருவாகட்டும். போட்டி இருந்தால்தானே  நமக்கும்  சிறப்பான நகைச்சுவை கிடைக்கும்.

Sunday, June 2, 2013

ஆ......சுஜாதா

 சில செய்திகள் நம்மை மிகவும் ஆச்சரியமடைய வைக்கும். அவை  விஷயங்கள் செவ்வாய் கிரகத்தில் இருக்கும் உயிரினங்களை பற்றியதாக இருக்கலாம். அல்லது மன்மோகன் சிங் ஒரு பிரச்சினை பற்றி வாய் திறந்து கருத்து  கூறியதாக இருக்கலாம். ஆனால் சில நேரங்களில் சில  சாதாரண செய்திகள் கூட நம்மை மிகவும் அதிசயிக்க வைக்கும். இன்று சுஜாதாவை பற்றி படித்த செய்தி அந்த வகை செய்தியே. தன்  வீட்டு பெண்கள் வெளியே செல்வதை கூட அவர் விரும்ப மாட்டார் என்ற செய்தி ஆச்சரியத்தின் உச்சம்.

அவரின் எழுத்துகள் என்னை வசீகரித்தது ஸ்ரீரங்கத்து  தேவதைகள் படித்த பின். அந்த புத்தகத்தை ஒரே நாளில் இரண்டு முறை படித்தேன். தன் சொந்த வாழ்க்கையில் நடந்த சாதாரண நிகழ்வுகளை இவ்வளவு நகைச்சுவையுடனும், சுவாரசியமாகவும் எழுத முடியுமா என்று தோன்றியது. அதை விட நான் வியந்த விஷயம் ஸ்ரீரங்கத்து அக்ரஹார பின்னணி கொண்ட ஒருவர் சற்றும் தயக்கமின்றி காமத்தை பற்றி எழுதுகிறாரே என்று.

அந்த புத்தகத்தை படித்த பின் அவரின் மற்ற நாவல்களையும் தேடி பிடித்து படிக்க ஆரம்பித்தேன். அவரின் புகழுக்கான காரணம் விளங்கியது. அது, இது என்று பிரிக்காமல் அறிவியல் முதல் ஆன்மிகம் வரும் அனைத்தையும் எழுதுவது அவரின் சிறப்பு. நிச்சயம் ஒரு ஜீனியசால் மட்டுமே இது போல் எழுத முடியும் என்று எண்ணி கொண்டேன். தமிழில் எழுத்தாளாராக முயலும் 75 சதவீதம் பேர் சுஜாதா போலவே ஆக முயல்கின்றனர். இவ்வளவுக்கும் எழுத்து மட்டுமே சுஜாதாவின் தொழில் கிடையாது. 


அவரின் நாவல்களில் சிறப்பு  அவரின் பெண் கதாபாத்திரங்கள். அவர்கள்  எந்த கட்டுப்பாடுகளும் கிடையாது. கணேஷிடம் தன் கொங்கைகளை பற்றி விவாதிப்பார்கள்; வசந்தை கட்டி பிடித்து முத்தம் தருவார்கள்; எதற்கும் தயங்க மாட்டார்கள்.ஒரு சமகால அமெரிக்க பெண்ணுக்கு நிகராக அவரின் நாவல்களில் வரும் தமிழ் பெண்கள் இருப்பார்கள். இவர் ஜீனியஸ் மட்டும் இல்லை. நிச்சயம் ஒரு புரட்சியாளர் என்று எண்ணி கொண்டேன். பின்னே, 60 வயதுக்கு மேலும் தமிழ் சினிமாவுக்கு ஸ்கிரிப்ட் எழுதினாரானால் தன் மனதை அவர்   எவ்வளவு இளமையாக வைத்திருக்க வேண்டும்? தன் மகனை ஒரு வெளிநாட்டு பெண்ணை மணம் செய்ய அனுமதித்தவர் எவ்வளவு பெரிய முற்போக்கு சிந்தனையாளராக இருந்திருக்க வேண்டும்?

இப்படி  சுஜாதாவை பற்றின என் பிரமிப்பு உச்சத்தில் இருந்தபோது அவர் மரணமடைந்தார். அப்போது அவர் மனைவி அளித்த ஒரு பேட்டியில், தன் கணவருக்கு கோபமே வராது என்றும் கோபம் ஒரு மனிதனின் பலவீனம் என்பது அவர் எண்ணம் என்றும் கூறியிருந்தார். திருமணமான புதிதில் அவர்  ஒரு புதிய பல்பை உடைத்து விட்டாராம். தனது கணவர் என்ன கூற போகிறார் என்று அவர் பயந்து கொண்டிருந்த போது சுஜாதா சாதாரணமாக "விடு! வேற வாங்கிக்கலாம்" என்று கூறி விட்டாராம். தன் கணவரை பற்றி சிலாகித்து கூறியிருந்தார் அந்த பேட்டியில். சுஜாதா சிறந்த எழுத்தாளர் மட்டும் இல்லை, சிறந்த மனிதராகவும் வாழ்ந்து இருக்கிறார் என எண்ணி கொண்டேன்.

ஆனால் சுஜாதாவின் மனைவியின் இன்றைய பேட்டி, சுஜாதா பற்றிய என் மன பிம்பங்களை லேசாக அசைத்து பார்த்து இருக்கிறது. மிக பெரிய ஆச்சரியத்தை எனக்கு அளித்திருக்கிறது அந்த பேட்டி. ஒரு படைப்பாளியின் தனிப்பட்ட குணங்களை அவர் படைப்புகளை வைத்து தீர்மானிக்க முடியாது என தோன்றுகிறது. இனி மேல்  படைப்பாளியை அவன் படைப்புகளிலிருந்து பிரித்தே பார்க்க வேண்டும்.

Saturday, June 1, 2013

தோனி - ஒரு அதிசயம் - நிறைவு பகுதி

T-20 உலக கோப்பை இறுதி போட்டியில் கடைசி ஓவரை தோனி  ஜோகிந்தர் சர்மாவுக்கு கொடுத்தது பலரை ஆச்சர்யப்பட வைத்தது. அந்த தொடரில் தோனியின்  வெற்றிக்கு காரணம் அவரின் துணிச்சல் என்று சிலரும், அதிர்ஷ்டம் என்று சிலரும் பேச தொடங்கினார்கள். இருந்தும் எனக்கு அவரின் வெற்றிக்கு காரணம் அதிர்ஷ்டம் என்று தோணவில்லை. காரணம், இறுதி போட்டியில் தோற்ற பின் பாகிஸ்தான் அணி தலைவர் சோயப் மாலிக் கூறிய கருத்து. இந்திய அணிக்கும், பாகிஸ்தான் அணிக்கும் உள்ள வேறுபாடு நெருக்கடியை கையாளும் விதம் என்றார் அவர். அனுபவம் மிகுந்த பாகிஸ்தான் அணியை விட இளம் இந்திய அணி சிறப்பாக நெருக்கடியை கையாண்டால் அதற்கு நிச்சயம் தோனிதான் காரணம் என்று நம்பினேன்.

அந்த T-20 உலக கோப்பை வெற்றிக்கு பின் தோனியின் மேல் நம்பிக்கை அதிகரித்தது . கால ஓட்டத்தில் டிராவிட் அணியில் இருந்து நீக்கப்பட ஒரு நாள் போட்டிகளின் கேப்டனாகவும், கும்ப்ளே ஓய்வுக்கு பின் டெஸ்ட் போட்டிகளின் கேப்டனாகவும் நியமிக்கபட்டார். அணியில் டிராவிட் இல்லாத நிலையில் தனது ஆட்ட முறையையே மாற்றி டிராவிட் போல பொறுமையாக ஆடி அணியின் இளம் வீரர்களுக்கு தங்களின் விருப்பம் போல் ஆடும் சுதந்திரத்தை ஏற்படுத்தி கொடுத்தார். 

2008ம்  ஆண்டு காமன் வெல்த் பேங்க் முத்தரப்பு  தொடர். அத் தொடர் மூன்று பைனல்களை கொண்டது. இந்தியாவும் வலிமையான ஆஸ்திரேலியாவும்  பைனலுக்கு முன்னேறின.  இறுதி போட்டிகளுக்கு  முன் பேட்டி அளித்த பாண்டிங் தன் வழக்கமான திமிருடன்,   2 பைனல்களுக்கு மேல் இந்த தொடர் நடக்காது; ஆஸ்திரேலியா முதல் 2 போட்டிகளிலேயே வென்று விடும் என்றார். அவர் கணித்தபடி  2 பைனல்களே அந்த தொடரில் நடந்தன. ஆனால் வென்றதோ இந்திய அணி. பாண்டிங் சொன்னதை, தோனி செய்து காட்டினார். ஆஸ்திரேலியாவின் ஆணவத்திற்கு சவுக்கடி கொடுத்தார். இந்தியா முதல் முறையாக ஆஸ்திரேலியாவில் ஒரு நாள் தொடரை வென்றது.

 அதன் பின் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனும் அவரும் இணைந்து அணிக்கு பல வெற்றிகளை பெற்று தந்தார்கள். கூடவே அணியை 2011 உலக கோப்பைக்கும் தயார் செய்தார்கள். இந்திய அணியின் 2011 உலக கோப்பை வெற்றிக்கு இவர்களின் முன் திட்டமிடலே காரணம்.

 
2011  உலக கோப்பை இறுதி போட்டி. தோனி சிக்ஸர் அடித்து அணியை ஜெயிக்க வைத்தார். நாடே வெற்றி களிப்பில் மிதந்தது .  ஆனால் தோனியோ அப்போதும் அதனை பெரிதாக கொண்டாடவில்லை  அத்தனை பெரிய வெற்றிக்கு பின்னும், 2007ல் ரன் எடுக்காமல் வெளியேறிய போது பார்த்த அதே சலனமற்ற முகம் . 'இதுவும் கடந்து போகும்; எப்போதும் சம நிலையை இழக்காதே' என்று எப்போதோ படித்த போதனை கதை நினைவுக்கு வந்தது. கோப்பை வாங்கிய பின்னர் அணியினரின் கொண்டாட்டத்தில் கூட பெரிய அளவில் பங்கேற்கவில்லை. வெற்றிக்கு தன் அணியினரை பொறுப்பாக்கி தான் எதுவுமே செய்யாதது போல இருந்தார் கேப்டன் கூல். ஒரு கேப்டன் எப்படி இருக்க வேண்டும் என்று உலகத்திற்கு பாடம் எடுத்தார்.

2007ல் தோனியிடம் இருந்த கூல், 2011ல் இல்லை என்பது உண்மையே. அதற்க்கு காரணம் என நான் நினைப்பது 2007ல் அவர் மேல் இருந்த எதிர்பார்ப்புகள் வேறு. 2011ல் அவர் மேல் இருந்த எதிர்பார்ப்புகள் வேறு. வென்று காட்டிய பின் அதை தொடர வேண்டிய கட்டாயம் சில நேரங்களில் அவரை மிக சிறிதளவு நிதானம் தவற செய்தது. இருப்பினும் அவர் ஒரு போதும் மைதானத்தில் கத்தியோ, முகம் சுளித்தோ பார்த்ததில்லை.

இந்திய அணியின் கேப்டனாக யார் நியமிக்கபட்டதும் தனி பட்ட முறையில் கங்குலியின் பேட்டிங் பாதிக்கப்பட்டது. சச்சின், அசாருக்கும் கூட அப்படியே. ஆனால் கேப்டனாக நியமிக்கப்பட்டும் தோனியின் பேட்டிங்கில் பெரிய அளவு பாதிப்பு ஏதும் இல்லை. ஒரு நாள் போட்டிகளில் இன்னும்  சிறப்பான சராசரியை கொண்டுள்ளார். இத்தனைக்கும்  விக்கெட் கீப்பர் பணி வேறு . அனைத்தையும் அருமையாக கையாள்கிறார்.

 அதீத நம்பிக்கை, தோல்வியையும் வெற்றியையும் ஒரே போல் எடுத்து கொள்ளும் பக்குவம், துணிச்சல் என  ஒட்டு மொத்தமாக பார்க்கும்போது தோனி எனக்கு ஒரு அதிசயமே. உங்களுக்கு?


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...