Tuesday, October 29, 2013

தியாகராய நகரில் ஒரு நாள்

"என்னடா மச்சான்?  நம்ம ஊரு திருவிழால கூட இத்தனை ஜனம் பாத்ததில்லை. எவ்வளவு கூட்டம்?" ரங்கநாதன் தெருவை பார்த்து வியந்து போய் கேட்டான் என் நண்பன். நான் முதல் முறை இந்த தெருவை பார்த்தபோது அடைந்த அதே உற்சாகம் அவன் கண்களில் தெரிந்தது. 

"இதெல்லாம் ஒரு கூட்டமாடா? தீபாவளி, பொங்கல் மாதிரி சீசன் நேரத்துல கூட்டம் வரும் பாரு. நீயெல்லாம் உள்ள சிக்குன வெளிய வர வழி கண்டு பிடிக்க தெரியாது உனக்கு."  ஒரு வருடம் சென்னையில் வாழ்ந்த திமிரோடு அவனுக்கு பதில் சொன்னேன்.

"மச்சான்! இந்த தெருவதான அங்காடி தெரு படத்துல காட்டினாங்க?"

"ஆமாண்டா"

"டேய்! இப்பிடி நிக்காம போய்கிட்டே இருக்கியே. எதாவது கடைக்குள்ள போகலாம்டா."

"கூட்டிகிட்டு போறேன். ஆனா எதையாவது வாங்கணும்னு ஆசை இருந்தா உன்னோட காசுல இருந்துதான் வாங்கணும். என் கிட்ட காசு கேக்க கூடாது. நியாபகம் வச்சுக்கோ. நான் உன்னை ஷாப்பிங் கூட்டிகிட்டு வரல. முதல் தடவை சென்னை வந்து இருக்க. ஊருக்கு போக மெட்ராஸ்ல நாலு இடம் காமிக்கலாம்னுதான் கூட்டி வந்தேன்"

"நான் போறது வாங்குறதுக்கு இல்லை. அஞ்சலி மாதிரி சேல்ஸ் கேர்ள் இருக்காங்களான்னு பாக்கத்தான்."

"அஞ்சலி எப்போவோ ஆந்திரா பக்கம் போயாச்சு.  நீ வேணும்னா உனக்கு எத்த மாதிரி வேற எதாச்சும் சுண்டெலி கிடைக்குதான்னு பாரு."

சொல்லிவிட்டு அருகில் இருந்த கடைக்குள் அவனை அழைத்து சென்றேன்.

"எத்தனை மாடிடா இந்த கடைக்கு." அவன் ஆச்சரியம் அந்த கடையை பார்த்ததும் அதிகரித்தது.

"அஞ்சு மாடி இருக்கும்டா. நீ பட்டிகாட்டான் மிட்டாய் கடையை பார்த்தது மாதிரி பாக்காம எதாச்சும் துணிய பார்த்து வாங்க போறது மாதிரி பாவ்லா காமிச்சுக்கிட்டு இரு. கொஞ்ச நேரம் இங்க  இருந்துட்டு வெளிய போய் டீ குடிச்சிட்டு வீட்டுக்கு போகலாம்."



"என்ன அதுக்குள்ளயா? என்னை லிஃப்ட்ல மேல கூட்டிகிட்டு போய் காமிடா." 

அவன் கேட்டதை என்னால் மறுக்க முடியவில்லை. பாவம் எப்போதோ ஒரு முறை சென்னைக்கு வருகிறான். அவனை அழைத்து கொண்டு மூன்றாவது மாடிக்கு சென்றேன்.

"லிஃப்ட்ல ஏறிட்ட? இப்போ திருப்தியா"

"திருப்திதான்."

"இங்க கொஞ்ச நேரம் இருந்துட்டு வீட்டுக்கு போகலாம் வா."

"இங்க வேணாம்டா. நாலாவது மாடிக்கு போகலாம்"

"ஏன்?'

"இங்க ஒரே பொம்பளைங்க சமாச்சாரமா இருக்கு.. இங்க எப்பிடி நிக்கிறது."

"டேய்! இதே மத்த நேரம்னா இங்கதான் நிக்கணும்ன்னு சொல்லுவ.  இப்போ லிப்ட்ல ஏறணும்னு நல்லவன் வேஷம் போடுறியா?" சொன்னதை கேட்டு முறைத்தான். அவன் சொன்னதும் வாஸ்தவம்தான். இந்த தளத்தில் எங்களால் அதிக நேரம் நிற்க முடியாது. நான்தான் கவனிக்காமல் இங்கே இறங்கி விட்டேன். மீண்டும் லிப்டில் நான்காவது மாடிக்கு சென்றோம்.

"டேய்! அந்த பக்கம் எல்லாம் பொம்மையா இருக்குடா, துணிக்கடைல இதெல்லாமா விப்பாங்க." கேட்டுவிட்டு பொம்மைகளை நோக்கி நடந்தான். நான் அமைதியாக பின் தொடர்ந்தேன்.

"பக்கத்து வீட்டு பாப்பாக்கு அது மாதிரி பொம்மை வாங்கலாம்னு பாக்குறேன்." மேலே இருந்த ஒரு கரடி பொம்மையை கை காட்டினான்.

"டேய்! அதெல்லாம் நல்லா வளர்ந்த பணக்கார வீட்டு பாப்பாங்க கட்டி பிடிச்சு தூங்குறது. நமக்கு கட்டுபடியாகாது." நான் சொல்லி முடிக்கும் முன் அவனே அந்த பொம்மையின் விலையை கவனித்து இருந்தான். அதை வாங்கும் முடிவை மாற்றி கொண்டான் என்று அவன் முகத்தை பார்த்ததும் தெரிந்தது.

மற்ற பொம்மைகளை பார்க்க தொடங்கியவன் திடீரென "மச்சான்!"  என பெருங்குரலுடன் என்னை பிடித்து உலுக்கினான்.

"என்னடா?"

"அங்க நிக்குறது நடிகை அமோகினி தான?" அவன் காட்டிய பெண்ணை உற்று பார்த்தேன். அமோகினி மாதிரியும் தெரிந்தது. இல்லாததும் மாதிரியும் இருந்தது.

"சரியா தெரியலடா."

"என்னடா இப்பிடி சொல்ற. ரெண்டு வருஷம் முன்னாடி நம்ம ஊருல இவங்களோட முதல் படம் 'அன்பு காதலி' பார்த்தோமே. நீ கூட அவங்க போட்டோ வந்த பேப்பரை எல்லாம் தேடி தேடி கண்டு பிடிச்சு அவங்க படத்தை வெட்டி எடுத்து கணக்கு  நோட்டு முழுக்க ஒட்டிகிட்டயே "

"அதெல்லாம் அப்போ செஞ்சு இருப்பேன். அப்புறம் புதுசு புதுசா எத்தனையோ பேரு வந்தாச்சு. இவங்க நடிச்சே ரொம்ப நாள் ஆகுது. அதான் சரியா சொல்ல தெரியல"

"அவங்கதான்டா. நான் வேணும்னா போய் கேட்டுகிட்டு வரேன் பாரு" சொன்னவன் என் பதிலை கூட எதிர் பாராமல் அந்த பெண்ணை நோக்கி நடந்தான். சில நிமிடங்கள் கழிந்த  பின் ஏமாற்றம் அடைந்த முகத்துடன் திரும்பினான்.

"என்னடா ஆச்சு"

"அவங்க தான் அமோகினி இல்லன்னு சொல்றாங்க"

"சரி விடு"

"இல்லடா. அவங்க பொய் சொல்றாங்க. நான் அவங்க எதிர் பார்க்காத நேரத்துல அவங்களை அமோகினினு கூப்பிடுறேன். திரும்புவாங்க பாரு"

"நீ மட்டும் கூப்பிட்ட உன்னை கொன்றுவேன். இது சென்னைடா. நீ சினிமால பார்த்த எல்லாரும் இந்த ஊருலதான் இருக்காங்க. நீயே பாரு. இங்க எத்தனை பேரு இருக்காங்க. யாராச்சும் அவங்களை கண்டுகிட்டாங்களா. நீதான் தேவை இல்லாம போய் பேசி அவமானப்பட்டுட்ட. இப்போ இன்னொரு தடவை வேற அவமானப்பட பாக்குற." 

அவன் பதில் ஏதும் சொல்லவில்லை.  அந்த பின் பெண் சில நிமிடங்களுக்கு  அங்கிருந்து சென்று விட்டாள். நாங்களும் வீடு திரும்பினோம். என் நண்பன் மறுநாள் ஊர் திரும்பிவிட்டான்.

ரு வாரத்திற்கு பின் ஒரு காலையில் என் நண்பன் தொலைபேசியில் அழைத்தான்.

"நியூஸ் பாத்தியா?"

"இல்லை. ஏன்?"

"அமோகினி தற்கொலை செஞ்சுகிட்டாங்களாம்."

"ஓ!" என்றேன் அசுவாரசியமாக.

"டேய்! நாம அன்னைக்கு பேசி இருந்தா அவங்களை காப்பாத்தி இருக்கலாம்"

'என்னடா சொல்ற?"

"அவங்க லெட்டர்ல என்ன எழுதி இருக்காங்க தெரியுமா. 'முதல் படத்திற்கு பின் திரை உலகமும் ரசிகர்களும் என்னை தலையில் வைத்து கொண்டாடினர். அதன் பின் இரண்டே படங்களில் யாருக்கும் தேவை இல்லாதவளாக, அடையாளம் தெரியாதவளாக ஆகி போனேன். சினிமாவுக்காக எத்தனையோ இழந்தேன். ஆனால் என்னை திரை உலகம் ஒதுக்கி விட்டது' அப்பிடின்னு"

"டேய்! அவங்களுக்கு சான்ஸ் கிடைக்காட்டி நாம என்ன பண்றது?"

"இல்லடா. பேப்பர்ல போட்டு இருக்கான். அவங்க கடந்த சில நாளா சின்ன ரோல்லயாவது சான்ஸ் வேணும்னு ரொம்ப ட்ரை செஞ்சு இருக்காங்க . கடைசில விரக்தி ஆகி, போன வாரம் பைத்தியம் மாதிரி சென்னை முழுக்க சுத்தி இருக்காங்க. ஒரு காலத்துல அவங்களை தலைல தூக்கி வச்சுகிட்டு ஆடுன ரசிகர்கள் யாருமே அவங்களை கண்டுகிடலன்னுதான் அவங்களுக்கு மன அழுத்தம் ரொம்ப ஜாஸ்தி ஆகிடுச்சாம்."

"பைத்தியக்காரத்தனம்"

"புகழோட உச்சத்துல இருந்து கீழ வர்றதோட வலி அதை அனுபவிச்சு பார்த்தாதான் தெரியும்."

"நீ பேசுனியே?"

"நான் நீங்க அமோகினியானு கேட்டேன். அதுதான் அவங்களை ரொம்ப பாதிச்சு இருக்கும். எப்பிடி இருக்கீங்க அமோகினின்னு கேட்டு இருந்தா சந்தோசப்பட்டு இருக்கலாம்"

"நடிகைங்க தற்கொலை செஞ்சுக்குறது ரொம்ப சாதாரணமா நடக்குற விஷயம். .நீ எதையாவது போட்டு குழப்பிக்காத. விடு. நாளைக்கு பேசுறேன்."

சொல்லிவிட்டு தொடர்பை துண்டித்தேன். என் நண்பன் கூறியது சரிதான் என்று தோன்றியது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் அந்த  பெண் அன்று வந்தது போல கடைக்கு சென்று இருந்தால் ஒட்டு மொத்த கூட்டமும் அவள் மேலே பாய்ந்து இருக்கும். கால ஓட்டத்தில் அவள் ரசிகர்களால்  மறக்கப்பட்டுவிட்டாள். அந்த புறக்கணிப்பே அவளுக்கு மன வேதனை தந்திருக்கும். அந்த நடிகையின் வாழ்க்கையையும், அவனை அன்று அவளிடம் பேச விடாமல் தடுத்ததையும் எண்ணி வருத்தப்பட தொடங்கினேன். 

திரட்டிகள் வழியாக அல்லாமல் நேரடியாக தளத்துக்கு வரும் வாசகர்கள் கவனத்துக்கு. அடுத்த பதிவுக்கு ஒரு வாரம் ஆகலாம். அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.

Saturday, October 26, 2013

தீபாவளி, கோயம்பேடு , தலை தீபாவளி

மேலே படிக்கும் முன் ராமும், நந்தினியும் யாரென்று முதலில் தெரிந்து கொள்ளுங்கள். ராமின் சொந்த . ஊர் ராஜபாளையம். நந்தினி மதுரை. இருவரும் மென்பொருள் நிறுவனத்தில் பெட்டி தட்டுவதற்காக சென்னை வந்த இடத்தில் காதலித்து வீட்டின் எதிர்ப்பையும் கடந்த கார்த்திகை மாதம் பதிவு திருமணம் செய்து கொண்டார்கள். இந்த விசயம் தெரிந்தும் நந்தினியின் அப்பா எல்லா படங்களிலும் நாம் பார்த்தது போலவே "அவ என் பொண்ணே கிடையாது. அவளை தலை முழுகியாச்சு"என்று சொல்லிவிட்டார். பின்னர் அவராகவே சமாதானம் ஆகி இப்போது அவர்களை தலை தீபாவளிக்கு வீட்டுக்கு அழைத்துள்ளார். இப்போது மதுரைக்கு செல்வதற்காக கோயம்பேடு ஜனத்திரளுக்குள் நின்று கொண்டு இருக்கிறார்கள்.

"உங்க அப்பாவுக்கு சமாதானம் ஆக வேற நேரமே கிடைக்கலியா? கரெக்டா தீபாவளிக்கு ரெண்டு நாள் முன்னாடிதான் சமாதானம் ஆகணுமா?" இந்த கேள்வியை கேட்ட பொழுது முகத்தை சற்று கடுமையாக வைத்து கொண்டான்  ராம்.

"என்ன பேசுற ராம். அவர் இனிமே என்னோட மூஞ்சிலேயே முழிக்க மாட்டாருன்னு நெனச்சேன். அவரே இறங்கி வந்து நம்மை தலை தீபாவளிக்கு கூப்பிட்டு இருக்கார். நீ சந்தோசப்படாம சலிச்சிக்குற." என்று அவனின்  கோபத்தை சிறிதும் சட்டை செய்யாமல் கூறினாள் நந்தினி.

"இருக்குற கூட்டத்தை பாரு.   இப்பவே நாம பஸ் ஸ்டாண்ட் வந்து மூணு மணி நேரம் ஆச்சு. நாம கடைசி வரைக்கும் பஸ் ஏற மாட்டோம். உங்க அப்பாவுக்கு போன் போட்டு சொல்லிடு. நாம அடுத்த வாரம் உங்க வீட்டுக்கு போயிட்டு வந்திடுவோம்."

"அடுத்த வாரம் வரை தீபாவளி இருக்குமா? நாம வர்றோம்னு எத்தனை சந்தோசமா எல்லாம் தயார் செஞ்சு வச்சு இருப்பாங்க. நாம இப்போ டிக்கெட் இல்ல வரலன்னு சொன்ன தப்பா எடுத்துக்க மாட்டாங்களா?" இதை சொன்ன நந்தினியின் முகம் சற்று வாடி இருந்தது."

"நந்தினி! நீயே பாரு. இத்தனை பெரிய பஸ் ஸ்டாண்ட்ல நிக்கிறதுக்கு கூட இடம் இல்லை. வர்ற எல்லா பஸ்சும் புல்லா வருது. நான் மட்டும் இருந்தா எப்படியாச்சும் ஏறிடுவேன். உன்னையும் கூட்டிகிட்டு"


 "இதுக்குதான் நேத்தே  தட்கல் டிக்கெட் போடலாமுன்னு சொன்னேன்."

"ஆமா. ஓபன் பண்ண ஐஞ்சே நிமிசத்தில எல்லாம் தீர்ந்துடுது. அது கூட ஃப்ளைட், டாக்சி, ட்ராவல்ஸ்  எல்லாத்துலயும்  பாத்துட்டேன். ஒரு டிக்கெட் கூட இல்லை. இங்க குடுத்த டோக்கனை யாரும் மதிக்கிற மாதிரி தெரியல. கடைசி நேரத்துல எங்க போறது?"

"எக்மோர் போய் ஸ்பெஷல் ட்ரைன் இருக்குதான்னு."

"பஸ்லயே இப்பிடி. ரயில்வே ஸ்டேஷன் போனோம் தொலஞ்சோம்"

இதை ராம் சொல்லி முடிக்கும் முன் நந்தினி இடை மறித்தாள். "ராம்! அங்க ஒரு பஸ் வருது. மதுரை மாதிரிதான் தெரியுது. இடம் கிடைக்குதான்னு பாரு"

இதை கேட்டு ராம் ஓட ஆரம்பிக்கும் முன்னரே ஒரு 50 பேர் அந்த பஸ்ஸை நோக்கி ஓட ஆரம்பித்தனர். ராம் ஒரு வழியாக அந்த பஸ்ஸில் ஏறி காலியாக கிடந்த ஒரு சீட்டை நோக்கி பாய்ந்தான்.

"பாஸ்! துண்டு போட்டு இருக்கோம் தெரியல." தலையில் கர்சீப் கட்டிய ஒருவன் ராமை நோக்கி குரல் கொடுத்தான்.

"மூணு சீட்லயுமா ஆளு வருது?"

"ஆமா ஆமா. வேற இடம் பாருங்க." அதற்கு பின் வேறு எங்கே இடம் பார்ப்பது? பேருந்து நிரம்பி விட்டது. ராம் பேருந்தில் இருந்து இறங்கி நந்தினியை நோக்கி நடந்தான்.

"சீட் இல்லையா ராம்?" நந்தினி ஏமாற்றமாக கேட்டாள்.

"இல்லை."

"எல்லாரும் கீழ உக்காந்து கிட்டு போறாங்க பாரு. அது மாதிரி போய்டலாமா?"

"எட்டு மணி நேர ட்ராவல் நந்தினி. உன்னோட உடம்பு அசந்துடும். அப்புறம் நீ வீட்டுக்கு போய் படுத்துப்ப, இப்பவே மணி 11 ஆச்சு. திரும்பிடலாம் நந்தினி. "

இப்பொழுது நந்தினியின் கண்களில் நீர் முத்து போல் தெரிந்தது. 

"சரி அழாத. என்னதான் படிச்சு பெரிய வேலையில இருந்தாலும் இப்பிடி அழுகுறதை மட்டும் நிறுத்த மாட்டீங்களே." ராம் சொல்லிவிட்டு அங்கே இருந்த ஒரு கண்டக்டரை நோக்கி நடந்தான்.

"சார்! எப்படியாச்சும் ஒரே ஒரு சீட் அட்ஜஸ்ட் செய்ய முடியுதான்னு பாருங்க சார்"

"சார்! நான் உங்க கிட்ட திரும்ப திரும்ப சொல்லிட்டேன். இது ரிசர்வேசன் செஞ்ச பஸ். எல்லா சீட்டும் புல்லு."

"புரியுது சார்!  கடைசில யாராவது வராம போய்ட்டா நாங்க ஏறிக்கலாம்னு."

"வராம போக வாய்ப்பே இல்ல சார்." சொல்லிவிட்டு அவர் சற்று யோசித்தார்.

"ஒன்னு செய்யலாம் சார்! டிரைவர் பின்னாடி இருக்குற சீட்ல இருக்குறவங்களை அட்ஜஸ்ட் பண்ணி உக்கார சொல்றேன். உங்க வொய்ப் ஏறிக்கட்டும். நீங்க பின்னாடி ஏதாவது ஒரு வண்டிய பிடிச்சு வந்துடுங்க"

"நானும் இதுலயே கீழ உக்காந்து வந்துடறேனே"

"பஸ் ஸ்டாண்ட் உள்ள அப்பிடி கீழ உக்கார சொல்லி ஆளு எத்த முடியாது சார். இதே தாம்பரம் போய்ட்டா அப்பிடி ஏத்திக்குவோம். உங்க வொய்ப்  மட்டும் ஏற சம்மதம்னா சொல்லுங்க "

ராம் நந்தினியிடம் இந்த யோசனையை கூறினான்.

"அதெல்லாம் சரி வராதுங்க.கல்யாணம் செஞ்சுட்டு முதல் தடவை வீட்டுக்கு போற பொண்ணு தனியா போனா நல்லா இருக்காது."

ராமுக்கு எரிச்சலாக வந்தது. நான்கு மணி நேரம் பேருந்துக்கு பின்னால் இப்படியும் அப்படியும் ஓடி கொண்டு கண்டவனிடமும் கெஞ்சி கொண்டும் சண்டை போட்டு கொண்டு இருக்கிறேன். கால் வேறு கடுமையாக வலிக்கிறது. இவள் கொஞ்சமும் புரிந்து கொள்ளாமல் அடம் பிடிக்கிறாள். அவனின் சிந்தனையை ஒரு குரல் கலைத்தது.

"சார்! மதுரையா?'

"ஆமா"

"வெளிய ட்ராவல்ஸ் பஸ் நிக்கிது. 1800 ரூபாய் டிக்கெட். சரின்னா சொல்லுங்க"

ராம் பேரம் பேசும் நிலையில் இல்லை. நந்தினியை கூட்டி கொண்டு வெளியே நடந்தான். அந்த பஸ் அரசாங்க பேருந்தை விட மோசமான நிலையில் இருந்தது.

 "காசை கொடுங்க சார்"

ராம் எடுத்து கொடுத்தான்.

"மேடம் நாலாம் நம்பர் சீட்ல உக்காரட்டும். நீங்க 25ம் நம்பர் சீட் காலியா இருக்கும் அதுல உக்காரலாம்."

 அந்த பேருந்து உளுந்தூர்பேட்டை அருகே ஒரு மோட்டலில் நின்றது.ராம் வெளியே சென்று இயற்கை உந்துதலை தீர்த்து கொண்டு மீண்டும் சீட்டில் வந்து அமர்ந்தான்.

"அநியாயமா கொள்ளை அடிக்கிறாங்க. ஒரு தோசை அறுவது ரூவாய் சார்." ராமின் பக்கத்துக்கு சீட்காரர் அவனிடம் புலம்பும் குரலில் கூறினார்.

"இங்க எப்பவுமே இப்படிதான் சார்."

"நீங்களும் 1500 ரூபாய்க்கு டிக்கெட் எடுத்தீங்களா?"

"இல்ல 1800." ராம் கூறிய பதிலை கேட்டதும் அவர் முகத்தில் ஒரு திருப்தி தெரிந்தது.

"ரொம்ப ஜாஸ்தி சார். தீபாவளி நேரம்னு கொள்ளை அடிக்கிறாங்க"

"என்ன சார் பண்றது. ஊருக்கு போயே ஆகணுமுன்னு பொண்டாட்டிங்க ஒத்தை கால்ல நிக்கிற வரைக்கும் இவனுங்களுக்கு கொண்டாட்டம்தான்," கொட்டி தீர்க்க ஆள் கிடைத்த சந்தோசத்தில் ராம் தன் மன எரிச்சலை வெளிப்படுத்தினான்.

"ஏழு மணிக்கு கோயம்பேடு வந்தோம் சார். வீட்டுக்கு போகலாம்னு சொன்னாலும் கேக்காம, முன்னாடி போ பின்னாடி வரோம்னு சொன்னாலும் கேக்காம. இவங்க எப்பவுமே இப்பிடித்தான் சார்."

"பொம்பளைங்க அப்படித்தான் சார். அவங்க உலகமே வேற. நமக்கு சின்ன விசயமா தெரியுறது அவங்களுக்கு பெரிய விஷயம். நமக்கு பெரிய விஷயம் அவங்களுக்கு சின்ன விஷயம்."

 "சரிதான் சார்! நாளைக்கு வீட்டுக்கு போனதும் அவ முகத்துல ஒரு சந்தோசம் தெரியும் பாருங்க. அதை பாக்குறதுக்கு இன்னும் ரெண்டு நாள் கூட பஸ் பின்னாடி ஓடலாம்" சொல்லிவிட்டு ராம் சிரித்தான். 

அந்த சிரிப்பு சத்தம் கேட்டு நந்தினி பின்னாள் திரும்பி பார்த்து விட்டு தன் அருகில் இருந்த பெண்ணிடம் கூற தொடங்கினாள். "பாருங்க அக்கா! பஸ் ஏறதுக்கு பெரிசா அலுத்துகிட்டார் . இப்போ இன்னும் தூங்காமா யாரு கூடயோ ஜாலியோ பேசி விளையாண்டுகிட்டு இருக்கார். நாளைக்கு மாமனார் வீட்டுக்கு போனதும் தூங்கி வழிவார். இந்த ஆம்பளைங்களே இப்படிதான் அக்கா. எது முக்கியமோ அதை விட்டுட்டு மத்ததை எல்லாம் செய்வாங்க."

Friday, October 25, 2013

விஜய் சேதுபதி,ஷாம் மற்றும் வெற்றி

வாழ்க்கையில் வெற்றி பெற எது தேவை? இந்த கேள்வியை நம்மிடம் கேட்டால் நம் பதில் என்னவாக இருக்கும்?  சிலர் கடின உழைப்பு என்பீர்கள். சிலர் விடா முயற்சி என்பீர்கள். சிலரின் பதிலோ இரண்டுமே என்பதாய் இருக்கும். எல்லாவற்றையும் விட அதிர்ஷ்டமே தேவை என சிலர் கூற கூடும். உண்மையில் கொக்ககோலா ஃபார்முலாவை விட வெற்றியின் ஃபார்முலா ரகசியமானது. புதிரானதும் கூட.

 
சமீபத்தில் வெளி வந்த இரண்டு படங்களின் நாயகர்களை எடுத்து கொள்வோம். முதலில் 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' விஜய் சேதுபதி. இந்த படத்தில் இவர் பேசும் ஒவ்வொரு வசனத்திற்கும் விசில் அள்ளுகிறது. விரல் விட்டு எண்ணி விட கூடிய அளவிலேயான படங்களில் நடித்து இருந்தாலும் ஒரு மாஸ் ஹீரோவுக்கான ஓபனிங் கிடைக்கிறது. இத்தனைக்கும் இவர் ஆக்சன் ஹீரோ இல்லை. கடினமான நடன அசைவுகளை செய்து மக்களை கவரவும் இல்லை.சினிமா சார்ந்த குடும்ப பின்னணியும் கிடையாது. தான் நடித்த அத்தனை படங்களிலும் ஒரு இயல்பான நாயகனாகவே தோன்றியுள்ளார்.

விஜய் சேதுபதியின் இந்த அளவு சாதித்ததற்கு என்ன காரணம்? இந்த கேள்விக்கு நாம்  கூறக்கூடிய பதில் உழைப்பும், முயற்சியும் என்பதாகவே  இருக்கும் . குறும்படங்களில் நடித்து வந்தவர் அதிலேயே திருப்தி அடைந்து விடாமல் தொடர்ந்து திரை உலகில் வாய்ப்பு தேடி கிடைத்த சிறு சிறு வேடங்களில் நடித்து இன்று எல்லோராலும்  விரும்பப்படும் நடிகராக திகழ்கிறார் என்றால் அது எத்தனை பெரிய விஷயம். நாளை திரைத்துறையில் நுழைய விரும்பவர்கள் இவரையே முன்னுதாரணமாய் எடுத்து கொள்ளும் நாளும் வரலாம். விஜய் சேதுபதி அதற்கு தகுதியானவரும் கூட.


அப்படியானால்  இவரைப் போல திறமையும், உழைப்பும் இருந்தால் முன்னேறி விடலாமா? 'ஆறு மெழுவர்த்திகள்' ஷாமை பற்றி நினைத்தால் அப்படி தோன்றவில்லை. ஆரம்ப காலத்தில் சாக்லேட் பாயாக அறியப்பட்ட ஷாம் நடித்த எந்த படமும் பெரிய வெற்றி பெறவில்லை. இருந்த போதும் விடா  முயற்சியோடு தமிழ் திரை உலகில் தன்னை நிலை நிறுத்த  தன்னுடைய உழைப்பை கொட்டி நடித்த இந்த படமும் வணிக ரீதியில் வெற்றி படமாக தோன்றவில்லை. இந்த படத்திற்காக தூங்காமல் கண்களை வீங்க வைத்து பட்ட கஷ்டமெல்லாம் அதற்கு ஏற்ற பலனை பெறாமலேயே போய் விட்டது எனலாம். இவரின் உழைப்பிற்கு பரிசாக சில பாராட்டுகள் கிடைக்கலாம். அவ்வளவுதான்.

ஷாம் செய்த தவறுதான் என்ன? சரியான கதையை தேர்வு செய்யவில்லையா? அல்லது படம் வெளியான நேரம் சரி இல்லையா? சொல்ல போனால் சில குறைகள் இருந்தாலும் 'ஆறு மெழுவர்த்திகள்' ஒரு நல்ல படம். எந்த நேரத்தில் வெளியாகி இருந்தாலும் ஓடி இருக்க வேண்டும். இருந்தாலும் இந்த படம் சரியான வரவேற்பு பெறாமால் போனதற்கு அதிர்ஷ்டம் இல்லை என்று சொல்வதை விட வேறு எந்த காரணமும் கிடைக்கவில்லை.

இப்படி கடினமாக உழைத்தும், திறமை இருந்தும் வெற்றி பெறமுடியாத ஷாம்கள் நம்மிடையே எத்தனையோ பேர் இருக்கின்றனர். அதிர்ஷ்ட தேவதையை போல நாமும் அவர்களை கண்டுகொள்வதில்லை. இறுதியில்  விஜய் சேதுபதிகளின் வாழ்க்கை வரலாறாக பதியப்படுகிறது. ஷாம்கள் அறியப்படாமலேயே போகின்றனர்.  அவர்களோடு சேர்த்து வெற்றியின் ஃபார்முலாவும்  நம்மால் புரிந்து கொள்ள முடியாமலேயே போகின்றது.
 

Monday, October 21, 2013

மாட்டிகிட்டேண்டா மாப்பிள்ளை! ( சிரிப்பு கதை)

ணமக்கள் யாரையும் தெரியாத ஒரு திருமணத்தில் கலந்து கொள்வது சற்று சங்கடமான விஷயம். இருந்தாலும் மணமகன் எனக்கு மிகவும் பழக்கம் என்பதால் அந்த திருமணத்திற்கு சென்றிருந்தேன். நான்காம் வரிசையில் ஒரு ஓரமாக இடம் பார்த்து அமர்ந்தேன். சில நிமிடங்களுக்கு பின் என்னருகில் ஒரு பருமனான நடுத்தர வயது நபர் வந்து அமர்ந்தார்.

"வணக்கம் தம்பி!" பேச்சு கொடுக்கிறார். அப்படியே கிளம்பும்வரை இவரை பிடித்து கொள்ள வேண்டும். இல்லையெனில் ஆடு திருட வந்தவன் போல தனியாக முழித்து கொண்டிருக்க வேண்டியதுதான்.

"வணக்கம் சார். எப்படி இருக்கீங்க?"

"நான் நல்லா இருக்கேன். தம்பி யாருன்னு தெரியலயே"

"நான் மாப்பிள்ளையோட நண்பன்"

"நான் மாப்பிளைக்கு ஒன்னு விட்ட மாமா முறை. அங்க கல்யாண மேடையில பச்சை புடவை கட்டி இருக்கிறது என்னோட சம்சாரம்." மேடையில் பார்த்தேன். அங்கே இவரை விட பருமனான ஒரு பெண் பச்சை புடவையில் இருந்தார்.

"ஆனா பாருங்க. இத்தனை செலவு செஞ்சு கல்யாணம் வச்சாலும் கல்யாண பொண்ணுக்கு போட்ட மேக்-அப்பே சரியில்ல. என்னோட பொண்டாட்டி கூட பொண்ணை விட அழகா தெரியுறா." நான் கல்யாண பெண்ணின் மேக்-அப்பை கவனித்தேன். அப்படி ஒன்றும் மோசமில்லை. இருந்தாலும் அவர் கூறியதற்கு பதில் சொல்ல வேண்டுமே. ஏதாவது நகைச்சுவையாக பதில் அளித்தால்தானே  என்னை கலகலப்பானவன் என எண்ணி தொடர்ந்து பேசுவார்

"ஆமா சார்! நானும் அதையேதான் நெனச்சேன். கொண்டையா இது. உள்ள போய் குருவி கூடு கட்டினாலும் தெரியாது போல"

இதை நான் சொல்லி முடித்ததும் அவர் இடியென சிரிக்க தொடங்கினார். நான் அவ்வளவு பெரிய காமெடி செய்து விட்டேனா? என யோசித்து கொண்டே இருக்கும்போது அவர் சிரிப்பு சத்தம் மேலும் அதிகரித்தது. 

"ஹஹஹஹாஹா." மண்டபத்தில் இருக்கும் பேச்சு குரல்களையும் மீறி அவர் சிரிப்பு ஒலிக்க தொடங்கியது.

"சார்! நார்மல் ஆகுங்க சார். எல்லாரும் நம்மளையே பாக்குறாங்க பாருங்க"

நான் சொன்னதையே அவர் கண்டு கொண்டதாக தெரியவில்லை. இப்போது வயிற்றை பிடித்து கொண்டு சிரிக்க தொடங்கியிருந்தார். அவர் சிரிப்பு இப்போது எனக்கு பயத்தை உண்டாக்கியிருந்தது. அந்த சிரிப்பு சத்தத்தை கேட்டு அவர் மனைவி மண மேடையிலிருந்து இறங்கி எங்களை நோக்கி ஓடி வர தொடங்கினார். அவரின் சிரிப்பு இன்னும் நிற்கவில்லை. திடீரென தரையில் விழுந்து உருண்டு உருண்டு சிரிக்க தொடங்கினார். 

"என்னங்க!" மூச்சு இரைக்க ஓடி வந்த அவரது மனைவி அவரை நெருங்கி அவரை எழுப்ப முயற்சி செய்து கொண்டிருந்தார்.

"என்னங்க ஆச்சு இவருக்கு?" மிக மெல்லிய குரலில் அவர் மனைவியிடம் கேட்டேன்.

"நான் கேக்க வேண்டியதை நீங்க கேக்குறீங்க." அவர் குரலில் கோபம் அப்பட்டமாக தெரிந்தது.

"இல்லைங்க சும்மா தமாஷ் பண்ணேன். கேட்டதும் சிரிக்க ஆரம்பிச்சுட்டார்" வார்த்தைகளை விழுங்கி விழுங்கி ஒருவாறாக சொல்லி முடித்தேன்.

"என்னது  தமாஷ் பண்ணீங்களா? எங்க உங்களுக்கு கொஞ்சமாச்சும் அறிவு இருக்கா? அவருக்கே சிரிக்கிற வியாதி இருக்கு. அவர் கிட்ட போய் தமாஷ் செஞ்சேன்னு சொல்றீங்களே"

எனக்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை. அதென்ன புதிதாக சிரிக்கிற வியாதி. அந்த நபரோ இது எதையும் கண்டு கொள்ளாமல்  சிரித்து கொண்டே தரையில் உருண்டு கொண்டிருந்தார். . அவர் கண்களில் நீர் வழிந்து கொண்டிருந்தது. இதற்குள் எங்களை சுற்றி திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் சிலர் சூழ்ந்து விட்டனர்.

"என்னங்க இங்க தாலி கட்டுற நேரத்தில" என்றார் அதில் ஒரு பெரியவர்.

"இவன் என்னமோ சொல்லி இவரை சிரிக்க வச்சுட்டாங்க."  அந்த பெண்ணின் வார்த்தைகளில் மரியாதை மிகவும் குறைந்து விட்டது. கண்ணில் நீர் அணைகட்டாக தேங்கி எப்போதும் உடைந்து விடும் நிலையில் இருந்தது.

"சரி! இப்போ என்னம்மா செய்றது?" என்றார் அந்த பெரியவர்.

"இவரை இப்போவே ஹாஸ்பிடல் தூக்கிட்டு போகாட்டி இப்படி சிரிச்சு சிரிச்சே செத்துடுவார்."

அந்த பெண் சொல்லியதை கேட்டதும் எனக்கு தூக்கி வாரி போட்டது. அப்படி ஏதாவது நடந்தால் இந்த பெண் நிச்சயம் போலீசில் கம்ப்ளைன்ட் செய்து என்னை கொலை வழக்கில் உள்ளே தள்ளாமல் விட மாட்டாள். புது விதமான சோதனையில் அல்லவா சிக்கி கொண்டேன்.

"என்னம்மா கல்யாண வீட்ல அப சகுனமா பேசிக்கிட்டு. யப்பா சிரிக்க வச்ச தம்பி. இவரை ஹாஸ்பிடலுக்கு தூக்கிகிட்டு போப்பா." அந்த பெரியவர் கூறிய பதிலில் அக்கறையை விட எங்கள் மூவரையும் வெளியில் அனுப்பிவிடும் ஆர்வமே தெரிந்தது. எப்படியாவது இங்கிருந்து  நழுவி விடலாம் என பார்த்தால் கிழம் நன்றாக மாட்டி விட்டு விட்டது. 

"சரிங்க. கூட்டிகிட்டு போறேன். ஆனா யாராவது கூட கை கொடுத்து இவரை ஆட்டோ வரைக்கும் கூட்டிகிட்டு வந்து விடுங்க."

ரு வழியாக மூன்று பேர் சேர்ந்து சிரமப்பட்டு அவரை ஒரு ஆட்டோவில் ஏற்றினோம். நான் அவரின் ஒரு புறம் ஒடுங்கி கொண்டேன். அவர் மனைவி ஒரு புறம் அமர்ந்து கொண்டார். பாவி. அந்த ஆசாமி சிரிப்பதை கொஞ்சம் கூட குறைக்கவில்லை.

"இவருக்கு அடிக்கடி இப்படி வருமா"

நான் கேட்ட கேள்விக்கு அந்த பெண்ணிடம் இருந்து ஒரு முறைப்பு மட்டுமே பதிலாக வந்தது. ஆட்டோவில் ஏற்றியதற்கு பதில் ஆம்புலன்சில் ஏற்றி இருக்கலாம். கடைசியில் மருத்துவமனையில் அவரை சேர்ப்பித்து அந்த பெண்ணிடம் சிறிது பணம் கொடுத்து விட்டு ஊர் திரும்பினேன்.

து  நடந்து சில நாட்களுக்கு பின் என்னுடைய நண்பனிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. நிச்சயம் அந்த ஆசாமி தன்னுடைய சிரிப்புக்கான காரணத்தை இவனிடம் சொல்லி இருப்பார். இவனின் மனைவி கொண்டையை பற்றி பேசியதற்காக என்னை நாக்கை பிடுங்கும்படி நான்கு கேள்வி கேட்க போகிறான். தயக்கத்துடன் மொபைலை எடுத்தேன்.

"மச்சி!  சாரிடா என்னால மேடைய விட்டு இறங்க முடியல"

"அது பரவாயில்லைடா.  அப்புறம் என்ன ஆச்சு அவருக்கு"

"அவருக்கு மயக்க மருந்து கொடுத்து தூங்க வச்சுடாங்க. எந்திரிச்சதும் சரி ஆகிட்டார்"

"என்ன வியாதி அவருக்கு?"

"சிரிக்கிற வியாதின்னு கேள்விப்பட்டு இருக்கியா? சிரிக்க மாட்டாங்க. சிரிக்க ஆரம்பிச்சா நிறுத்த மாட்டாங்க. பத்து கோடி பேருல ஒருத்தருக்கு அந்த வியாதி இருக்குமாம்."

"அந்த பத்து கோடில ஒருத்தன் ஏன் கிட்டவா வந்து உக்காரணும்." நான் சொல்லியதும் அவன் சிரிக்க தொடங்கினான்.

"சிரிக்காதே. யாரு சிரிச்சாலும் பயமா இருக்கு."

"டேய்! அதை பத்தி பேசாத விடுடா." சொல்லிவிட்டு மீண்டும் சிரித்தான். இப்போது எனக்கு பயம் சற்று குறைந்து இருந்தது.அவன் மனைவியின் கொண்டை பற்றி ஜோக் அடித்ததற்கு அவனிடம் மன்னிப்பு கேட்க முடிவு செய்தேன். என்னதான் அவன் பெருந்தன்மையாக அதை பற்றி பேச வேண்டாம் என்று கூறினாலும் மன்னிப்பு கேட்பதுதானே முறை.

"மாப்பிள்ளை! உங்க மாமா எதுக்கு சிரிச்சார்ன்னு உன்கிட்ட சொல்லிட்டாரா." தயக்கத்தோடு கேட்டேன்.

"அவர் எப்படி சொல்லுவாரு. அவர்தான் சிரிக்க ஆரம்பிக்கும்போதே எதுக்கு சிரிக்கிறோம்னு மறந்துடுவாராச்சே." அவன் சொல்லி முடித்ததும் நான் தொடர்பை துண்டித்து விட்டு தரையில் விழுந்து உருண்டு உருண்டு சிரிக்க தொடங்கினேன்.


Thursday, October 17, 2013

ஒரு கார்ப்பரேட் நீதி கதை

ரு ஊரில் வியாபாரி ஒருவன் வாழ்ந்து வந்தான். தனது ஊரிலிருந்து தினமும் சரக்கு மூட்டைகளை  கொண்டு   சென்று  பக்கத்து ஊர் சந்தையில் விற்பது அவனது தொழில். இதற்காக மாட்டுவண்டி ஒன்றை அவன் வைத்து இருந்தான்.

ஒரு நாள் அவன் வண்டியில் பூட்டும் மாடு அவனிடம் வந்து "எஜமான்! இரண்டு ஆண்டுகளாக நான் உங்களிடம் வேலை செய்கிறேன். ஆனால் நான் செய்யும் வேலைக்கு  நீங்கள் எனக்கு சாப்பிட கொடுக்கும் புல்லின் அளவோ மிக குறைவு. தயவு செய்து எனக்கு நீங்கள் கொடுக்கும் புல்லின் அளவை அதிகரியுங்கள்" என்றது. மாடு சொன்னதை கவனமாக கேட்ட வியாபாரி "மாடே! நீ கடினமாக உழைப்பது உண்மையே. ஆனால் பக்கத்துக்கு வீட்டுக்காரன் மாடு 25 மூட்டைகளை தன்  வண்டியில்  சுமக்கிறது. ஆனால் நீயோ தினமும் 20 மூட்டைகளை மட்டுமே சுமக்கிறாய். நீ அதிக மூட்டைகளை சுமந்தால் உனக்கு புல்லின் அளவைஅதிகரிப்பதை பற்றி யோசிக்கிறேன்" என்றான். பக்கத்து வீட்டு மாடு பஞ்சு மூட்டைகளை மட்டுமே சுமக்கிறது என்பதை அறியாமல் இந்த மாடும் அதிக மூட்டைகளை சுமக்க ஒப்பு கொண்டது.

இப்படியே ஓராண்டு சென்றது. மாடு மீண்டும் சென்று வியாபாரியிடம் புல்லின் அளவை அதிகரிக்க கேட்டது. அதற்கு வியாபாரி "மாடே! அதிக பாரம் ஏற்றியதால் நம்முடைய பழைய வண்டி பாதிப்பு அடைந்து விட்டது. எனவே நான் இப்போது புது வண்டி செய்ய சொல்லியுள்ளேன். அதற்கு ஆகும் செலவை வேறு நான் பார்க்க வேண்டும். இன்னும் சற்று நாள் பொறுத்துக் கொள். நான் புல்லின் அளவை நிச்சயம் அதிகரிக்கிறேன்" என்றான். வேறு வழியின்றி மாடும் ஒத்து கொண்டது.

 புது வண்டி வந்த ஆறு மாதங்களுக்கு பின் மாடு மீண்டும் வியாபாரியிடம் சென்று வழக்கமான கோரிக்கையை வைத்தது. இப்போது வியாபாரி, "மாடே! இப்போதெல்லாம் உன்னுடைய வேகம் மிக குறைந்து விட்டது. பக்கத்துக்கு ஊருக்கு செல்ல முன்பை விட அதிக நேரம் எடுத்து கொள்கிறாய். இதனால் நான் வியாபாரம் செய்ய கூடிய நேரம் குறைந்து விட்டது. எனவே உனக்கு அதிக புல் தருவது இப்போதைக்கு சாத்தியமில்லை" என்றான். கோபமடைந்த மாடு "எஜமான்! இந்த புது வண்டியின் பாரம் பழைய வண்டியை விட மிக அதிகம்.  இந்த கனத்தையும் சேர்த்து இழுக்க வேண்டியதாலேயே என்னால் முன்பு போல விரைவாக செல்ல முடியவில்லை" என்றது. அதற்கு வியாபாரி "மாடே! நீ என்ன காரணம்  சொன்னாலும் உன்னால் எனக்கு அதிக லாபத்தை பெற்று தர முடியவில்லை. நான் உன் மேல் ஏற்றும் மூட்டைகளின் எண்ணிக்கையை வேண்டுமானால்  குறைத்து விடுகிறேன். ஆனால் நீ அதிக புல் கேட்காதே" என்றான். தன் இத்தனை ஆண்டு உழைப்பும் வீணாகி விடும் என்று பயந்த மாடு "வேண்டாம் எஜமான். நான் எப்படியாவது வேகமாக சென்று உங்களுக்கு அதிக லாபம் பெற்று தந்து விடுகிறேன்" என்று கூறியது.

மறுநாள் முதல் மாடு தன் சக்தியெல்லாம் திரட்டி வேகமாக ஓட ஆரம்பித்தது. மீண்டும் முன்பு எடுத்து கொண்ட அதே நேரத்திலேயே பக்கத்துக்கு ஊருக்கு சென்று வியாபாரியை சேர்க்க தொடங்கியது. ஆனால் மிக கடின உழைப்பால் ஒரே மாதத்திலேயே நோயுற்று படுத்த படுக்கையானது. வழக்கமாக சாப்பிடும் புல்லை கூட அதனால் சாப்பிட முடியவில்லை.  சில நாட்கள் அதற்கு நோய் குணமாக மருந்து கொடுத்த  வியாபாரி ஒரு நாள் அதனிடம் "மாடே! உன்னை நல்ல விலைக்கு ஒருவர் கேட்கிறார். அவரிடம் உன்னை விற்று விட போகிறேன்" என்றான். "எஜமான்! நான் இப்போது இருக்கும் நிலைமையில் என்னால் எந்த வேலையும் செய்ய முடியாது. என்னை ஏன் அவர்கள் விலைக்கு கேட்கிறார்கள்?" என்றது. வியாபாரி அதற்கு "அவர்கள் உன்னை வேலை செய்ய சொல்ல வாங்கவில்லை. உன்னை கொன்று உன் தோலை எடுக்கவே உன்னை விலைக்கு கேட்கிறார்கள்" என்றான்.

வியாபாரி சொன்ன பதிலை கேட்டதும் மாட்டிற்கு கண்களில் நீர் வர தொடங்கியது. "எஜமான்! நீங்கள் செய்வது அநியாயம். உங்கள் பேச்சை நம்பி மாடாய் உழைத்தாலேயே நான் நோயுற்றேன். இல்லாவிடில் நான் நீண்ட காலம் ஆரோக்கியமாக இருந்திருப்பேன். நீங்கள் செய்தது துரோகம்" என்றது. அதை கேட்ட வியாபாரி, "நான் செய்தது துரோகம் இல்லை. ஒரு எஜமானனின் லட்சியம் தன் தொழிலாளியிடம் முடிந்த அளவு அதிக வேலை வாங்கி லாபம் பெறுவது. நான் அதையே செய்தேன். உன்னால் ஐந்து ஆண்டுகளில் சம்பாதிக்க வேண்டிய பணத்தையும் மூன்றே ஆண்டுகளில் சம்பாதித்து விட்டேன். இப்போது உன்னை விற்பதன் மூலமும் பணம் சம்பாதிக்க போகிறேன். என்னுடைய அதிக லாபம் பெரும் நோக்கம் நிறைவேற உன்னுடைய ஆசையை மூலதனமாக்கி கொண்டேன். நீ முதல் முறையிலேயே சுதாரித்து கொண்டிருந்தால் தப்பித்து விட்டு இருக்கலாம்" என்றான். மாடு தன் முட்டாள் தனத்தை எண்ணி நொந்து கொண்டது.

நீதி:  நிர்வாகத்தின் நோக்கம் ஊழியர்களிடம் இருந்து எவ்வளவு வேலை வாங்க முடியுமோ அவ்வளவு வேலை வாங்குவது. இதற்காக அவர்கள் பொய்யான வாக்குறுதிகளையும் தரலாம். ஊழியர்கள்தான் விழிப்புடன் இருக்க வேண்டும்.



Wednesday, October 9, 2013

அவசரமாய் சில காதல்கள்

ப்படி இரவு முழுக்க ஆஃபீசில் அமர வேண்டியது வரும் என்று எதிர்பார்க்கவே இல்லை. என்னுடைய தளம் முழுவதும் காலியாக இருந்தது. இன்று இரவு யாராவது இருக்க வேண்டியது இருக்கும் என்று எங்கள் டீம் லீட் சொன்னதுதான் தாமதம். சுதா முதல் ஆளாக என்னை நோக்கி ஓடி வந்தாள்.

"ஜே! உனக்கே தெரியும் எனக்கு ஒரு வயசுல குழந்தை இருக்கு. நான் எப்படி நைட் முழுக்க இங்க ஸ்டே பண்ண முடியும்?"

"ஆமா. நீங்க இருக்க முடியாதுதான்" என்றேன். வேறு என்ன சொல்ல முடியும். ஆனால் அவள் ஏன் அதை என்னிடம் சொன்னாள் என்று எனக்கு சில நிமிடங்கள் பின்புதான் புரிந்தது. இப்போது என்னை நோக்கி வந்தவன் ஆண்டனி.

"ஜே! எனக்கு கல்யாணம் முடிஞ்சு பத்து நாள்தான் ஆகுது. அதுக்குள்ள ராத்திரி வீட்டுக்கு போகாட்டி பொண்டாட்டி சாமி ஆடிடுவா." என்றான்.

"சரி. நீ வீட்ல போய் வேலை பாரு" என்று பதில் சொன்னதற்கு முறைத்து விட்டு பின்னர் நன்றி சொன்னான். ஆக இன்று இரவு பலி கடா ஆக போவது நான்தான் என்பது உறுதி ஆகிவிட்டது.

உண்மையில் இப்போது எனக்கு   செய்ய வேண்டிய வேலை என்று ஏதும் பெரிதாக இல்லை. நாங்கள் உருவாக்கிய மென்பொருளை அமெரிக்காக்காரன் இப்போது சோதித்து பார்க்க போகிறான். ஏதேனும் பிரச்சினை என்றால் மெயில் அனுப்புவான். அப்படி அவன் ஏதேனும் அனுப்பினால் அந்த பிரச்சினையை சரி  செய்து தர வேண்டும். அவ்வளவுதான். இப்படி வேலை ஏதும் இல்லாமலே தனிமையில் அமர்ந்திருப்பது மனதை மேலும் சோர்வாக்கியது. இணையத்திலேயே இரவு முழுவதும் கழிக்க வேண்டுமே என்ற வெறுப்புடன் அமர்ந்திருந்த போதுதான் யாரோ நடந்து வரும் சத்தம் கேட்டது.

மெதுவாக தலையை தூக்கி பார்த்தேன். ஒட்டு மொத்த மன சோர்வும் ஒரு நொடியில் காணமல் போனது. அங்கே வந்து கொண்டிருந்தவள் ஒரு பெண் என்று சொன்னால் அது மிக சாதாரண வார்த்தை. வந்து கொண்டிருந்தவள் ஒரு பேரழகி. கட்டான உடல். உடல் அமைப்பை எடுத்து சொல்லும் உடை. பளிச்சென்ற களையான முகம். அவள் நடந்து வந்த விதம் 'F' டிவியில் பார்த்த மாடல்களை நியாபகப்படுத்தியது. இதுவரை அவளை ஆபீசில் பார்த்ததே இல்லை. நைட் ஷிப்டில் வேலை பார்ப்பவள் போலும். வந்தவள் எனக்கு இரண்டு நான்கு சீட் தள்ளி அமர்ந்து தன்னுடைய கணினியை ஆன் செய்தாள்.

திருட்டுத்தனமாக பார்வையை திருப்பி அவளையே பார்க்க தொடங்கினேன். இறைவன் நமக்கு கஷ்டங்களை அளிப்பது போல வாய்ப்பையே அளிக்கிறான் என்று யாரோ சொன்னது நினைவுக்கு வந்தது.  இன்று இரவுக்குள் எப்படியும் இவளிடம் பேசி இவள் மனதில் இடம் பிடித்து விட வேண்டும்  விட வேண்டும். நானும் எத்தனை ஞாயிற்றுகிழமைகளைதான்  தூங்கியே கழிப்பது? எனக்கும் ஒரு அழகிய பெண்ணை கூட்டி கொண்டு சினிமாவுக்கும், பீச்சுக்கும் போக வேண்டும் என்று ஆசை இருக்காதா?ஆசை தீர காதலித்த பின் இவளையே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று உறுதி எடுத்து கொண்டேன். இப்பொழுதே போய் பேசி விடலாமா? வேண்டாம். வந்த உடன் பேசினால் தவறாக நினைப்பாள். ஒரு அரை மணி நேரம் போகட்டும்.

நான் மணியையே பார்த்து கொண்டிருந்த இருபதாவது நிமிடம் ஒரு குரல் கேட்டது.

"ஹாய்! ஐ ஆம் சந்தியா" பேசியது அவளேதான்.

"ஹாய்" குழறிய நாக்கை கட்டுப்படுத்தி கொண்டு அவளுக்கு பதில் சொன்னேன். இவளுடன் பேசும்போதே இதயம் இப்படி வேகமாக துடிக்கிறதே. 

"நீங்க இன்னைக்கு நைட் ஷிப்ட்டா?"

"ஆமா"

"தேங்க் காட். இன்னைக்கு என்னோட டீம் மேட் அமலா லீவ். தனியா இருக்கணுமேன்னு பயந்துகிட்டே வந்தேன். நல்ல வேளை நீங்க கம்பெனிக்கு இருக்கீங்க." சொல்லிவிட்டு அழகாக சிரித்தாள். பழம் நழுவி  பாலில் விழுவது என்றால் என்ன என்று புரிந்தது.

"நானும் தனியா இருக்கணும்னுதான் நினைச்சேன்". பொத்தாம் பொதுவாக ஒரு பதிலை சொல்லி வைத்தேன்.

"நான் கீழ காஃபி சாப்பிட போகணும். நீங்க என் கூட வர முடியுமா?"

"கட்டாயம் வரேங்க."

கேன்டீன் இருக்கும் முதல் தளத்தை அடைய இருவரும் நடந்து சென்று லிப்டில் ஏறினோம். இரவு நேரம் ஒரு அழகிய பெண்ணுடன் தனியாக லிப்டில் போவது மனதுக்கு கிளர்ச்சியூட்டுவதாய் இருந்தது.

"நீங்க எந்த ஊரு?" என்றாள்.

"மதுரை பக்கம். நீங்க"

"நான் கோயம்புத்தூர். ஆனால் வளர்ந்தது, படிச்சது எல்லாம் பாம்பே."

"எப்படி நைட் ஷிப்ட் பார்க்க ஒத்துக்கிடீங்க"

"நான்  ஈவ்னிங் மாடலிங்  செய்ய போய்டுவேன். எனக்கு நைட் ஷிப்ட்தான் சரி." அவள் சொல்லி முடிக்கவும் முதல் தளம் வரவும் சரியாக இருந்தது. கேன்டீன் சென்று இருவரும் காஃபி வாங்கி கொண்டோம். காஃபி குடித்து முடிக்கும் முன் காதலை மறைமுகமாகவாவது சொல்லி விட வேண்டும் என முடிவு செய்தேன்.

"பாம்பேல இருந்தேன்னு சொன்னீங்களே. குடும்பத்தோட இங்க வந்தாச்சா?" என கேட்டேன். அவள் சொல்லும் பதிலை வைத்து அவள் குடும்பத்தில் ஒருவனாக நான் விரும்புவதை எப்படியாவது உணர்த்தி விடுவது ஏன் திட்டம்.

"இல்லை. நான் மட்டும்தான் இங்க" சொல்ல வந்ததை பாதியிலேயே நிறுத்தி விட்டு தன் கையில் இருந்த காபி கோப்பையை கீழே வைத்து விட்டு எழுந்து ஓட தொடங்கினாள். எங்கே போகிறாள் என நானும் எழுந்து வேகமா பின்னே சென்றேன். அவள் வாஷ் பேசினை நெருங்கி சென்று வாந்தி எடுக்க தொடங்கினாள். வாந்தி எடுத்து முடித்த பின் தன் முகத்தை கழுவி கொண்டாள். பின் நிதானமாக என்னை நோக்கி வந்தாள்.

"உடம்பு சரி இல்லையா?" என்றேன்.

"ஆமா"

"மாத்திரை போட்டுக்க வேண்டியதுதானே"

"மாத்திரை போட மறந்ததுதான் சிக்கலே." சொல்லிவிட்டு கண் சிமிட்டினாள்

"ஒண்ணுமே புரியல"

"எனக்கு ஒன்னும் இல்ல. வீக் எண்ட் ஹாஸ்பிடல் போய் கிளீன் செஞ்சுகிட்டா சரி ஆகிடும்"அவள் சொன்ன பதிலில்  எனக்கு தூக்கி வாரி போட்டது.

"என்ன இவ்வளவு சாதாரணமா சொல்றீங்க?"

"லிவிங் டு கெதர்ல இதெல்லாம் சாதாரணம்தான். எப்பவாச்சும் கேர்லெஸ்ஸா இருந்திட்டா இப்படி ஆகிடும்." அடுத்த குண்டை சாதாரணமாய் வீசினாள்.

"அப்போ உங்க குடும்பம்"

"அவங்க பாம்பேல. நான் இங்க சுதீப் கூட லிவிங் டு கெதர்ல."

"ஆனா நேத்துதான் சுதீப்பும் நானும் செட் ஆகாது, பிரிஞ்சுடலாம்னு முடிவு எடுத்தோம். நான் இப்போ  வேற ஆளை தேடிகிட்டு இருக்கேன்."

"ஓ!"

"நாம சீட்டுக்கு போகலாமா?"

"ம்"

சீட்டுக்கு திரும்பினோம். இரவு முழுவதும் அவளிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. விடிந்ததும் அவளை  திரும்பி கூட பார்க்காமல் நடையை கட்டினேன்.

Saturday, October 5, 2013

நான் பிரதமராக போகிறேன்

இந்த கதையில் வரும் சம்பவங்கள், பாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே. பிறந்த, பிறக்காத மனிதர்களையோ நடந்த, நடக்கப் போகும் சம்பவங்களையோ குறிப்பது போல் தோன்றினால் அது தற்செயல் ஆனது

டதடவென அவர்கள்  அந்த   ஸ்கார்பியோவில் இருந்து இறங்கி என்னை தூக்கி செல்வார்கள் என நான் எதிர்ப்பார்க்கவில்லை. அவர்கள் நான்கு பேரும் ஒரே மாதிரி சஃபாரி உடையில் இருந்தனர். அதில் ஒருவன் "முதல்ல அவன் மொபைலை பிடுங்குடா" என கட்டளையிட்டான். அவர்களின் வலுவான பிடியை எதிர்த்து போராடும் அளவு என் உடலில் பலம் இல்லை. மெதுவாக மயங்க தொடங்கினேன்.

நான் கண்களை திறக்கும்போது என் முன்னால் நின்று கொண்டிருந்தான் ஒரு சஃபாரி சட்டை. நான் அமர்ந்து இருந்த இடம் ஒரு அலுவலகம் போல இருந்தது.

"சிரமத்துக்கு மன்னிக்கவும் சார். விமான பயணத்தின்போது நீங்கள் மற்ற பயணிகளுக்கு தொல்லை தர கூடாது என்ற காரணத்துக்காக உங்களை மயக்கமடைய செய்து விட்டோம்." 

"என்னது விமான பயணமா? நான் இப்போ எங்க இருக்கேன்?"

"நீங்கள் இப்போது இருப்பது டெல்லியில்"

"அடப்பாவிங்களா. எதுக்குடா என்னை கடத்தி டெல்லிக்கு கொண்டு வந்தீங்க?"

"இன்னும் சற்று நேரத்தில் மேடம் வருவார்கள் சார். அவர்கள் சொல்வார்கள்"

"மேடமா? யாரு அது?"

அவன் பதில் சொல்லாமல் என்னை அந்த அறையில் விட்டு விலகினான். எனக்கு குழப்பமும் பயமும் அதிகரித்தது. யார் இவர்கள்? என்னை ஏன் விமானத்தில் எல்லாம் வைத்து கடத்த வேண்டும். நந்தினி வேறு என்னை தேடி கொண்டிருப்பாள். 

நான் சிந்தனையில் மூழ்கி இருந்தபோது அந்த அறையின் கதவு திறக்கும் சத்தம் கேட்டது. உள்ளே வந்தவர் ஒரு பெண். அவர் கண்ணியமாக உடை அணிந்து இருந்தார். இவரை எங்கேயோ பார்த்து இருக்கிறேனே. எங்கே? ஆங், நினைவுக்கு வந்து விட்டது. இவர் அவரேதான். தொலைக்காட்சியில் பல முறை பார்த்த முகம்தான். இருந்தாலும் நேரில் சற்று வித்தியாசமாக இருந்தது. மெதுவாக நடந்து வந்து அவர் எனக்கு முன் போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்தார். என்னை பார்த்து ஒரு புன்முறுவல் பூத்தார். நடப்பதை எல்லாம் என்னால் நம்பவே முடியவில்லை. என்ன நடக்கிறது இங்கே? ஒரு சாதாரண மனிதனை கூட்டி வந்து ஒரு சர்வ வல்லமை படைத்த பெண்மணி என்ன பேச போகிறார்? 

"வணக்கம்! எப்படி இருக்கிறீர்கள்?" அவர் மெதுவாக பேச்சை தொடங்கினார். அவர் கண்கள் கூர்மையாக என்னை கவனித்தது. என்னுடைய எண்ணங்கள் முழுவதையும் பார்வையாலேயே அளந்து விடுவது போல் இருந்தது.

"மேடம்! நீங்கள்" வார்த்தை வராமல் தடுமாறினேன்.

"நீங்கள் அதிர்ச்சியிலும் குழப்பத்திலும் இருக்கிறீர்கள் போல் உள்ளது. பயப்பட வேண்டாம். நான் சொல்வதை மட்டும் கவனமாக கேட்டு கொள்ளுங்கள். நான் உங்களுக்கு தரப்போவது மிக பெரிய வாய்ப்பு. உங்களால் அதை மறுக்கவே முடியாது."

"சொல்லுங்கள் மேடம்." இப்போது சற்று சுதாரித்து இருந்தேன். மிக மென்மையாக பேசுகிறார். இப்போதைக்கு ஆபத்து ஏதும் இருப்பதாக தெரியவில்லை

"நேராக விஷயத்திற்கு வருகிறேன். இந்த முறை தேர்தலில் எங்கள் கட்சி மிக பெரிய வெற்றி பெற்றுள்ளது உங்களுக்கு தெரியும்தானே?"

"நாட்டில் நடந்த தேர்தலை பற்றி   கூட தெரியாமல் எப்படி இருப்பேன்?"

"நல்லது. நாங்கள் வெற்றி பெற்று விட்டோம். ஆனால் யாரை பிரதமராக்குவது என்ற குழப்பம் எங்களுக்கு"

"என்ன மேடம் இது. நீங்கள் பிரதமராக போவதாகத்தானே தேசமே எதிர்பார்க்கிறது"

"உண்மைதான். ஆனால் நான் பிரதமராவதில் நடைமுறை சிக்கல்கள் நிறைய உள்ளன."

"புரியவில்லை மேடம்"

"உங்களுக்கு இப்போது ஏதும் புரிய தேவை இல்லை. நான் இப்போது சொல்லபோவது ஒன்றே ஒன்றுதான். நீங்கள்தான்  இந்த தேசத்தின் அடுத்த பிரதமர்."

"மேடம்!" நான் உதிர்த்த இந்த வார்த்தையில் என்ன மாதிரியான உணர்ச்சி இருந்தது என சொல்ல தெரியவில்லை.

"என்ன அதிர்ச்சியா? மகிழ்ச்சியா?"

"இரண்டுமே. ஆனால் அதை விட குழப்பம்தான் அதிகம்"

"என்ன குழப்பம். கேளுங்கள்"

"யாரோ ஒரு தெருவில் போவனை பிடித்து பிரதமராக்குவது எதற்கு?"

"உங்களை எப்படி தேர்ந்தெடுத்தோம் என்று சொல்கிறேன். முதலில் ஒரு மென்பொருள் பணியாளனைத்தான் பிரதமராக்குவது என்று  தீர்மானித்தோம்"

"அது ஏன்?"

"அவர்கள்தான் நிர்வாகத்திடம் அதிகம் கேள்வி கேட்க மாட்டார்கள்."

"அதன் பின் இந்தியாவின் பெரிய மென்பொருள் நிறுவனங்கள் மூன்றை தேர்வு செய்தோம். அதில் இருந்த ஊழியர்களை கண்காணிக்க தொடங்கினோம். அமெரிக்கா செல்ல வேண்டும் என்ற லட்சியம் கொண்ட ஊழியர்களை விட்டு விட்டோம். எந்த லட்சியமும் இல்லாத, நாங்கள் எதிர் பார்த்த பிற தகுதிகளுடனும்  30 பேர் கடைசியில் மிஞ்சினர்"

"அந்த முப்பதிலும் நான் எப்படி?"

"இருங்கள். அதற்குதான் வருகிறேன். அந்த 30 பேரிலும் மென்மையானவர் நீங்கள்தான். கொடுத்த வேலை அனைத்தையும் பதில் பேசாமல் செய்வீர்கள். உங்களிடமிருந்து நன்றாக வேலை வாங்கிய பின் மேனேஜர் கொடுக்கும் திட்டுகளையும் எதிர்த்து பேசாமல் வாங்கி கொண்டீர்கள். கிட்டதட்ட ஒரு பேசா மடந்தை போல எல்லா சூழ்நிலையிலும் பொறுமை காக்கிறீர்கள்."

"...."

"இந்த தகுதிகள்தான் நாங்கள் எதிர்பார்ப்பது."

"ஆனால் எனக்கு அரசியல் தெரியாதே"

"உங்களுக்கு அது தெரிந்தால்தான் பிரச்சினை"

" உங்கள் கட்சியினர் எப்படி திடீரென வந்த ஒருவனை ஏற்று கொள்வார்கள்."

"அவர்களை ஏற்று கொள்ள வைக்கும் வித்தை எனக்கு தெரியும். நீங்கள் செய்ய வேண்டியது யார் கட்சி பற்றி உங்களிடம் கேட்டாலும் நீங்கள் பரம்பரை பரம்பரையாக எங்கள் கட்சியில் இருப்பதாக கூற வேண்டும். இனிமேல் நீங்கள் அதிகம் கேள்வி கேட்க கூடாது.  சுற்றி என்ன நடந்தாலும் பெரிதாக எடுத்து கொள்ள கூடாது. அவ்வளவுதான்."

"அதற்கு இல்லை மேடம்."

"உங்களுக்கு எந்த கவலையும் வேண்டாம். எல்லாவற்றையும் நான் பார்த்து கொள்கிறேன். நீங்கள் குடும்பத்தோடு டெல்லிக்கு வர தயாராகுங்கள்." சொல்லிவிட்டு எழுந்து சென்று விட்டார். நான் மகிழ்ச்சியில் மிதக்க ஆரம்பித்தேன். நான் இந்த தேசத்தின் பிரதமர். நான் செய்ய வேண்டிய ஒரே வேலை எதுவும்  பேசாமலே இருக்க வேண்டியதுதான். யார் என்ன விமர்சித்தாலும் உணர்ச்சி எதையும் முகத்தில் காட்டாமல்  கேட்டு கொள்ள வேண்டியதுதான். அதுதான் எனக்கு கை வந்த கலை ஆயிற்றே.. எனக்கு ராஜ யோகம் இருக்கிறது போலும். பிரதமர் ஆனதும் தாடி வைத்து கொள்வோம். பார்வைக்கு சிறப்பாக இருக்கும்.அதன் பின் என்னுடைய மேனேஜர் சேர்த்து வைத்த சொத்துக்கள் அனைத்தையும் தேசிய சொத்து என அறிவித்து விடுவோம். என்னையா எதற்கும் லாயக்கில்லை என்றான்?

நான் கண்களை திறந்தபோது எதிரில்  நந்தினி நின்று இருந்தாள். "நந்தினி! நான் எப்போ டெல்லியில் இருந்து வந்தேன்?"

"இப்படிதான் டாக்டர். நேத்து இருந்து ஒரே புலம்பல். டெல்லிங்குறார், பிரதமராக போறேங்குறார்." நந்தினி அருகே நின்று இருந்த முகம் தெரியாத மனிதரிடம் பேசினாள்.

"நீங்க ஒன்னும் கவலைப்பட வேண்டாம். நான் அவரை முழுசா ஹிப்னடைஸ் செஞ்சு பேசியாச்சு. அவர் மேனேஜர் அவரை ஏதோ சொல்லி திட்டி இருக்கார். அதை இவர் மனசுக்குளேயே வச்சு ரொம்ப புழுங்கிகிட்டே இருந்து இருக்கார். அப்புறம் நியூஸ் சேனல் எல்லாம் நிறைய பார்த்து இருக்கார். இதெல்லாம் சேர்ந்து அவர் மண்டைக்குள்ள போய் இருக்கு. கடைசில அவர் தனக்கு பிரதமர் ஆகுற தகுதி இருக்கிறதா நம்ப ஆரம்பிச்சுட்டார்."

"இப்போ என்ன டாக்டர் செய்றது?" என்றாள் நந்தினி.

"நீங்க பயப்பட வேண்டாம். கொஞ்ச நாள் இவரை வேலைக்கு அனுப்பாதீங்க. பேப்பர், டிவி நியூஸ் ஏதும் பார்க்காம பாத்துக்கங்க. அவராவே சரி ஆகிடுவார். இப்போ இவரை வீட்டுக்கு கூப்பிட்டுகிட்டு போகலாம்"

நந்தினி என் கையை பிடித்து என்னை கூட்டி கொண்டு நடக்க தொடங்கினாள். வெளியே மேடத்தின் ஆட்கள் எங்களை டெல்லிக்கு கூட்டி செல்ல காத்திருப்பது அவளுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...