Friday, February 20, 2015

வாட்ஸ்அப் காப்பிகள் – தீர்விருந்தால் சொல்லவும்

ந்த வலைப்பூவில் எழுத ஆரம்பித்து இன்னும் சில நாட்களில் இரண்டு ஆண்டுகள் முடியப்போகிறது. பொழுதுபோக்குக்காக எதையோ கிறுக்குவோம் என்று தொடங்கி என்ன எழுதுவது  என்று தெரியாமல் என்னென்னவோ எழுதி ஒருவாறாக செட்டில் ஆகவே ஒரு வருடம் ஆகிவிட்டது. இரண்டு ஆண்டுகளில் பெரிதாக எதையும் சாதித்து விடவில்லை என்றாலும்  எழுத தொடங்கும்போது நான் கொண்டிருந்த லட்சியம் இந்த வலைப்பூவுக்கென்று   ஒரே ஒரு வாசகரையாவது பெற்று விட வேண்டும் என்பதுதான். அந்த லட்சியத்தில் நான் வெற்றி பெற்றுவிட்டேன் என்றே கருதுகிறேன். ஒவ்வொரு பதிவையும் ஆயிரம் பேர் படிக்கிறார்கள் என்றால் அதில் பத்து பேராவது இவன் எதையாவது உருப்படியாக எழுதி இருப்பானே என்று எழுதி படிக்கிறவர்கள் என்பது எனது கணிப்பு.

ஆரம்பத்தில் எல்லாம் எதையாவது எழுதி விட்டு பின்னூட்டங்கள் வந்து குவிந்து இருக்கும் என்று அடிக்கடி பார்த்து கொண்டே இருப்பேன். ஆனால் ஒரு கமெண்ட் வந்தாலே ஆச்சரியம். ஆனால் அந்த பின்னூட்டமும் பெரும்பாலும்  எழுதியதை படித்து பார்க்காமல் வந்த டெம்ப்லேட் வந்ததாகவே இருக்கும். பின்னர் போகப்போக பின்னூட்டங்களை எதிர்பார்ப்பது தவறு என்று புரிந்தது. நாமே எத்தனையோ பேரின் வலைப்பூக்களை படிக்கிறோம்;ஆனால் எத்தனை பேருக்கு பின்னூட்டம் இட்டிருப்போம் என்று மனதை சமாதானப்படுத்தி கொண்டேன். இருந்தாலும் என்னுடைய ஒரு வாசகரையாவது பெற்று விடுவது என்ற லட்சியத்தில்  வெற்றி பெற்றுவிட்டேனா  என்று எப்படி சரி பார்ப்பது என்று அறிய இயலவில்லை. பின்னர் கிடைக்கும் அத்தனை பாலோயர் விட்ஜெட்டுகளையும் வலைப்பூ பக்கத்தில் சேர்த்து ஒருவாறாக என்னுடைய லட்சியம் ஈடேறிவிட்டதை ஒருவாறாக அறிந்து கொண்டேன்.

சரி, இதற்கு ஏன் இத்தனை அலட்டல். ஏதோ இலக்கியத்தில் நோபல் பரிசு கிடைத்தது போல என்று நினைக்க வேண்டாம். இன்று காலையில் வாட்ஸ்அப்பில் வந்த ஒரு தகவலே இந்த பதிவை எழுதுவதன் காரணம். நான் ஓராண்டுக்கு முன் எழுதிய “ஒரு கார்ப்பரேட் நீதிக்கதை”என்ற பதிவு  அப்படியே ஒரு வாட்ஸ்அப் க்ரூப் மூலம் வந்திருந்தது. என்னுடைய பதிவு பல பேரை சென்றடைந்து கொண்டிருக்கிறது என்பது ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும் யோசித்து எழுதியது  வலைப்பக்கம் பெயர் குறிப்பிடப்படாமல் சுற்றி வருவது சிறிது வருத்தம்தான். இந்த வருத்தம் எப்படிப்பட்டது என்பதை காக்கா வடை திருடிய கதையை எழுதியவர் இன்றிருந்தால் அவரால் உணர முடியும். யார் கண்டது, என்னுடைய கதையும் நாளை பெயர் தெரியாதவர் எழுதியது என்று அடையாளப்படுத்தப்பட்டு பல ஆண்டுகள் தமிழகத்தை சுற்றி சுற்றி வரலாம். 

என்னுடைய பதிவுகள் அப்படியே நகல் எடுக்கப்பட்டு  பேஸ்புக்கிலும், பிற தளங்களிலும் பயன்படுத்தப்படுவதை பார்த்து இருக்கிறேன். இருந்தபோதும் வாட்ஸ்அப்பின் ரீச் அவற்றை விட மிக ஆழம். தவிர எந்த நாளில் யாரால் எங்கிருந்து ஆரம்பித்து யாரால் பரப்பப்பட்டது என்று அறிய வாய்ப்பில்லை. ஒரே நாளில் ஒரு தகவல் லட்சக்கணக்கானவர்களை அடைந்து விடும். நாளை அந்த கதையை நான்தான் எழுதினேன் என்று சொன்னாலும் “போய்யா! காமெடி பண்ணிக்கிட்டு” என்ற ரீதியில்தான் பதில் வரும். இது என்னுடைய பிரச்சினையாக மட்டும் இருக்க வாய்ப்பில்லை. பெரும்பாலான பதிவர்கள் இதே போன்ற சூழ்நிலையை சந்தித்திருக்கலாம். யாராவது தெரிந்திருந்தால் சொல்லுங்கள் இந்த பிரச்சினைக்கு தீர்வு என்ன என்று.


ஆனால் இதிலும் ஒரு சந்தோஷம். படிக்கும் வழக்கம் வெகுவாக குறைந்து வருகிறது என்று எண்ணியிருந்தேன். ஆனால் புத்தக கண்காட்சியில் விற்கும் புத்தகங்களும் இது போல் பரப்பப்படும் வாட்ஸ்அப் மூலம் தமிழில் பரப்பப்படும் தகவல்களும் என்னுடைய எண்ணத்தை மாற்றி வருகின்றன. வாசகர்களுக்கு பிடிப்பது போல எழுதினால் சுஜாதா, ராஜேஷ்குமார் போல புகழ் பெறப்போகும் எழுத்தாளர்கள் வருங்காலத்திலும் தோன்றலாம். கற்காலத்தில்  தோன்றிய  தோன்றிய மொழி டிஜிட்டல் யுகத்தில் புது அவதாரம் எடுக்கும் என்று நம்புவோம். 


5 comments:

  1. பதிவு போடுவது மக்கள் படிக்கத்தானே? எப்படியோ போய் மக்களைச் சேர்ந்தால் சரி என்று இருக்கவேண்டியதுதான்.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் ஐயா. ஆனால் பாருங்கள். இங்கே பதிவு எழுதுவதால் பொருளாதார ரீதியில் யாருக்கும் எந்த வித லாபமும் இல்லை. இருந்தாலும் பெரும்பாலானவர்கள் பதிவு எழுதுவது யாராவது வாசித்து நன்றாக இருக்கிறது என்பார்கள் என்ற சிறிய எதிர்பார்ப்பில். ஆனால் பாருங்கள் இத்தகைய காப்பிகளால் எழுதுவது யாரோ, பேர் பெறுவது யாரோ என்று ஆகிவிடுகிறது. அதுதான் பிரச்சினை.

      Delete
  2. கிட்டத்தட்ட இதேநிலைதான் என்னோடதும் . என்னோட கதையை , ஒருகுறும்படமாக எடுத்துவிட்டிருக்கிறார்கள் . கிரெடிட்ஸ் கொடுக்கவில்லையெனினும் , தன்னுடைய கதை என்று போட்டு ென்னை காண்டாக்கததால் அமைதியாய் விட்டுவிட்டேன் .

    ReplyDelete
  3. வணக்கம்
    இரண்டாண்டு பூர்த்திக்கு எனது வாழ்த்துக்கள் இன்னும் தரமான பதிவுகள் வலம்வர எனது வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. எதையும் இன்று காமெடியாக எடுத்துக் கொள்ள வேண்டும்...!

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...