Thursday, March 19, 2015

விஜய் டிவி வழங்கும் - "பந்தை காத்துல விடுறான்"

சில ஆண்டுகளுக்கு முன் ராஜ் டிவியில்  ஒரு கிரிக்கெட் தொடரை தமிழ் வர்ணனையில் ஒளிபரப்பினார்கள். வர்ணித்தது வானொலி வர்ணனையாளர்கள். தொலைக்காட்சியில் வர்ணனை கூறுவதற்கும், வானொலியில்  வர்ணிப்பதற்கும் உள்ள வேறுபாடுகளை அறியாமல் வானொலி போலவே பந்து வீச்சாளர்  பந்தை எடுத்து கொண்டு வேகமாக  ஓடி வருகிறார் என்று கூறி கொண்டிருப்பார்கள். நல்ல நேரம்,ஒரு சில தொடர்களோடு கிரிக்கெட் ஒளிபரப்பும் வேலையை ராஜ் டிவி நிறுத்தி விட்டது. விஜய் டிவி அந்த மாதிரி எதுவும் செய்து தொலைத்து விடுவார்களோ என்ற சந்தேகமும் இருந்தது. கிரிக்கெட் நுணுக்கங்களை வானொலி வர்ணனையாளர்களால் நுணுக்கமாக வர்ணிக்க முடியாது என்று விஜய் டிவி நினைத்திருக்கலாம் அந்த எண்ணமும் சரிதான். இருந்தாலும் அதற்காக விஜய் டிவி செய்த காரியம் வானொலி வர்ணனையாளர்களே எவ்வளவோ மேல் என்று சொல்ல வைத்து விட்டது..

ஸ்ரீராம் என்று ஒருவர் இந்திய அணிக்காக கிரிக்கெட் ஆடினார் என்று எத்தனை பேருக்கு நினைவிருக்கும்? அதே போலத்தான் ஹேமங் பதானி. திறமையான வீரர்தான். ஆனால்  அவர் சர்வதேச கிரிக்கெட் ஆடியது அவர் நினைவுகளிலேயே சரியாக இருக்காது. அவர்களை எல்லாம் பிடித்து போட்டார்கள் விஜய் டிவிகாரர்கள். அந்த வீரர்களும் சந்தோசமாக பணியை ஏற்று கொண்டனர். அதன் விளைவு என்ன என்றால், தாங்கள் இந்திய அணிக்காக மோசமாக கிரிக்கெட் ஆடியபோது கூட சந்திக்காத விமர்சனத்தை இந்த வீரர்கள் சந்தித்து வருகின்றனர்.

இவர்களை குற்றம் குறை கூறும் முன் இவர்களின் சங்கடங்களையும், குழப்பங்களையும் புரிந்து கொள்ள வேண்டும். பந்தை அஸ்வின் நன்றாக ப்ளைட் செய்கிறார் என்றால் “இது என்ன ஆங்கில  வர்ணனையா?” என்று கேட்கிறார்கள். சரியென்று அவர்கள் சற்று யோசித்து அஸ்வின் பந்தை காற்றில் தூக்கி போடுகிறார் என்றால் சிரிக்கிறார்கள்.  இப்படி எல்லாம் கேட்டால் எந்த மொழியில் எப்படித்தான் அவர்கள் வர்ணனை செய்வது? ஆனால் நமது வர்ணனையாளர்கள் இதையெல்லாம் சிந்தித்து  “பேஷா ஆடுறான்” என்று சமஸ்கிருத வர்ணனை செய்ய ஆரம்பித்து விட்டனர்.

இந்தியா ஆடும் போட்டிகளில்  இவர்கள் நிலைமை  சற்று பரவாயில்லை. குட்டி அணிகள் ஆடிய போட்டிகளின் பொது சில சமயங்களில் என்ன பேசுவது என்று அவர்களுக்கே தெரிவதில்லை. வாங்கிய காசுக்கு எதையாவது பேச வேண்டும் என்று பேசுவது போல தெரிகிறது UAE  ஆடிய ஒரு போட்டியின்போது ஸ்ரீராம் பந்து வீச்சாளரை பார்த்து “இவர பார்த்தா அற்புதமான ஸ்விங் பவுலர் மாதிரி இருக்கு” என்கிறார். ரமேஷ் பதிலுக்கு “நீங்க பில்ட் அப் தர மாதிரி எதுவும் இல்ல. அவர் ஆறு ஓவர் போட்டு ஐம்பது ரன் கொடுத்தாச்சு” என்று ஸ்ரீராமின் காலை வாறுகிறார். இதெல்லாம் வர்ணனையா?

இப்போது இதை எல்லாம் பார்த்தால் கிரிக்கெட் ஆடினால் மட்டும் நேராக போய் வர்ணனை செய்து விட முடியாது  என்று தோன்றுகிறது. ஹர்ஷா போக்லே எப்போது சர்வதேச கிரிக்கெட் ஆடினார்? பேசாமல் விஜய் டிவி திவ்யதர்ஷினி, கோபிநாத்  கையில்  மைக்கை கொடுத்திருக்கலாம். கிரிக்கெட் நுணுக்கங்களை பேசுகிறார்களோ இல்லையோ மந்தமான போட்டிகளை கூட சுவாரசியமாக்கி இருப்பார்கள். ஆனாலும் தமிழில் சுவாரசியமாகவும் அதே  நேரத்தில் நுணுக்கமாகவும்  வர்ணனை செய்ய ஆட்களே இல்லையோ என்ற கேள்வி இன்னும் தொக்கி நிற்கிறது.

1 comment:

  1. ரமேஷ் அவர்கள் சிறிது நகைச்சுவையாக பேசுகிறார்...

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...