Wednesday, April 2, 2014

வழி அறியா பூக்கள்

காயத்ரி! மீட்டிங் ரூமுக்கு வா”

என்னுடைய மேனேஜர் அழைத்தது என்னுடைய மூளையில் ஏற சில நொடிகள் பிடித்தது. சுதாரித்து கொண்டு எழுந்தேன். மற்ற சிந்தனைகள் விலகி என்னை எதற்காக அழைக்கிறார் என்ற ஒரே சிந்தனையோடு மீட்டிங் ரூமை நோக்கி மேனேஜரின் பின்னே நடக்க ஆரம்பித்தேன்.

மீட்டிங் ரூமின்  உள்ளே சென்றதும் அவர் அறையின்  கதவை மூடினார்.

“உட்கார் காயத்ரி”

அமர்ந்தேன்.

“காயத்ரி! நான் எதுக்காக உன்னை கூப்பிட்டேன்னு தெரியுமா?”

“தெரியாது ரூபிணி”

“கொஞ்ச நாளா ஜாப்ல உன்னோட பெர்பார்மன்ஸ் எங்களுக்கு திருப்தி இல்லை. உன்னோட ப்ரொஜெக்ட்ல எக்கச்சக்கமா தப்பு வருது. இப்பிடியே போனா உன்னை வேலைய விட்டு தூக்குறது தவிர எங்களுக்கு வேற வழி இல்லை. இதை சொல்லி  உன்னை வார்ன் செய்யத்தான் இந்த மீட்டிங்.”

“சரி பண்ணிக்கிறேன் ரூபிணி”

“சரி நீ போகலாம்.”

எழுந்து கதவை நோக்கி நடக்க தொடங்கினேன்.

“காயத்ரி! கொஞ்சம் நில்லு. திரும்ப வந்து உட்கார்.”

முகத்தில் கேள்விக்குறியுடன் மீண்டும் வந்து அமர்ந்தேன்.

“இப்போ நான் கொஞ்ச நேரம் ஒரு பொண்ணா உன்கிட்ட பேசலாம்னு நெனைக்கிறேன் காயத்ரி. நாலு மாசம் முன்னாடி டீம்லயே ரொம்ப டேலன்டட் பெர்சன் நீதான். ஆனா இப்போ வேலையையே இழக்க போற பொசிசன்ல இருக்க. ஆபிஸ்ல யாரு கூடவும் சரியா பேசுறது இல்ல. எப்போ பார்த்தாலும் எதையோ யோசிச்சுகிட்டு இருக்க. சொல்லு என்ன ஆச்சு உனக்கு?”

எனக்கு எரிச்சலாக வந்தது. இதெல்லாம் இவளுக்கு எதற்கு. பிடிக்கவில்லை என்றால் வேலையை விட்டு எடுக்க வேண்டியதுதானே. ஏன் தேவை இல்லாமல் பேசுகிறாள்?

“அது பெர்சனல் ப்ராப்ளம் ரூபிணி. நான் போகலாமா?”

சில நொடிகள் அமைதியாக இருந்தார்.

“பெர்சனல் ப்ராப்ளம் அப்பிடின்னு எனக்கு நல்ல தெரியும், அதனாலதான் கேக்குறேன். என்னை உன்னோட அக்கா மாதிரி நினைச்சு சொல்லுமா?”

நான் பதில் சொல்லவில்லை.

“ஓகே காயத்ரி! நீ போகலாம்”

அந்த நொடியில் நான் எப்படி உடைந்தேன் என்று தெரியவில்லை. கண்களில் நீர் கட்டுப்படுத்த முடியாமல் வழிந்தது.

“என்னம்மா ஆச்சு? அழாதே.”

“ரூபிணி! நான் லவ் மேரேஜ் செஞ்சது உங்களுக்கு தெரியும்தானே?”

“ஆமா. வீட்ல சண்டை போட்டுக்கிட்டு ரிஜிஸ்டர் மேரேஜ் செஞ்சீங்கதானே. எனக்கு நியாபகம் இருக்கு.”

“கல்யாணம் முடிஞ்சதும் ஒரே மாசம்தான். அவனுக்கு காதல் கசந்து போச்சு. தொட்டதுக்கெல்லாம் சண்டை. பிரச்சனை. காதலிக்கும்போது என்னோட ஒரு நாள் கூட பேசாம இருக்க முடியாதுன்னு சொன்னான். இப்போ நாங்க பேசிகிட்டே பத்து நாள் ஆகுது. ஒரே வீட்ல இருந்துகிட்டு இப்பிடி இருக்கிறது எத்தனை கஷ்டம் தெரியுமா? தினமும் குடிச்சுட்டு வரான். என்னன்னு கேட்டா பொண்டாட்டி சரியில்ல. அதான் குடிக்கிறேன்னு சொல்றான்”

“காயத்ரி! கல்யாணத்துக்கு பின்னாடி இதெல்லாம் சகஜம்மா! இதே மாதிரி நானும் என்னோட புருஷன் கூட நாள் கணக்கா பேசாம இருந்திருக்கேன். அப்புறம் யாராவது ஒருத்தர் விட்டு கொடுத்து பேசிக்குவோம். நீயும் கவுரவத்தை விட்டு பேசிடேன்.”

“பேசவா சொல்றீங்க. நீ இல்லாம என்னால இருக்க முடியாதுடான்னு நான் அவனை கட்டி பிடிச்சு அழுதேன். என்னை விலக்கி விட்டுட்டு போயிட்டான். . போன வாரம் நான் உடம்பு சரி இல்லாம ராத்திரி முழுக்க இருமினப்போ கூட ஒரு வார்த்தை என்னன்னு கேக்கல. அவனுக்கு என்னோட உடம்பு சலிச்சு போச்சு ரூபிணி. ஏமாந்துட்டேன்னு பயமா இருக்கு”

“ரொம்ப கஷ்டமா இருந்தா டிவர்ஸ் செஞ்சுடுமா”

“எப்பிடி? எங்க வீட்டுக்கும் என்னால இனிமே போக முடியாது. வாழ்க்கை முழுக்க தனியா வாழ்ற அளவு எனக்கு தைரியம் இல்ல”

“அப்போ இப்பிடியே இவன் கூட இன்னும் எத்தனை நாள் இருப்ப. உங்க அப்பா, அம்மாகிட்ட பேசு. புரிஞ்சுப்பாங்க. அவனை விட்டு பிரிஞ்சுடு.”

“அவங்க புரிஞ்சுப்பாங்க. ஆனா என்னால அவனை விட்டு பிரிஞ்சு வாழ முடியாது ரூபிணி”

அவர் சிரித்தார்.

“ஐடி கம்பெனில வேலை செய்யுற மாடர்ன் பொண்ணு மாதிரி பேசாம கிராமத்து கிழவி மாதிரி பேசுறம்மா. ஒன்னு செய்யலாம். நீ கூடவே இருக்குறதால உன்னோட அருமை அவனுக்கு தெரியலன்னு நெனைக்கிறேன். நீ அவனை விட்டு பிரிஞ்சு கொஞ்ச நாள் இருந்து பாரேன்”

“பிரிஞ்சு எங்க போறது? எனக்கு யாரையும் தெரியாதே”

“ நீ ஆபீஸ்க்கு ஒரு மாசம் லீவ் போடு. நானே லீவ் அப்ரூவ் செய்றேன். ப்ராஜெக்ட் விஷயமா வெளியூர் போறேன்னு உன்னோட புருசனுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பு. பெங்களூர்ல என்னோட பிரண்ட் ஒருத்தி இருக்கா. அவ கூட தங்கிட்டு வா. ஒரு மாறுதல் இருந்தா உனக்கும் நல்லது. தெளிவா யோசிப்ப. பின்னாடி என்ன செய்யுறதுன்னு திரும்பி வந்த அப்புறம் யோசிக்கலாம்.”

“உங்க பிரண்ட் வீட்ல நான் எப்பிடி?”

“அவளுக்கு கல்யாணம் ஆகல. தனி வீட்லதான் இருக்கா. நீ தாராளமா அவ கூட தங்கலாம். என்ன யோசிச்சு சொல்றியா?”

“நாளைக்கே நான் பெங்களூர் கிளம்பலாமா?”

- தொடரும் 

இந்த வலைப்பூ பற்றிய  உங்கள் கருத்தை மேலே உள்ள வாக்கு பெட்டி மூலம் தெரிவிக்கவும் 


3 comments:

  1. சுவாரஸ்யம்... தொடருகிறேன்... வாக்கு 1+1

    ReplyDelete
  2. தொடர்ச்சி.....?

    ReplyDelete
    Replies
    1. தொடர வேண்டும். சில சொந்த பிரச்சினைகளாலும், போதிய வரவேற்பு இல்லாததாலும் அதிகம் எழுத முடியவில்லை. தங்களை போன்றவர்களின் ஆதரவுடன் விரைவில் மீண்டும் எழுத ஆரம்பிப்பேன் என்று நம்புகிறேன்.

      Delete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...