ஒரு சிறு நகரத்தின் காவல்துறை அதிகாரிக்கு ஒரு வெள்ளிக்கிழமை காலை இதை
விட மோசமாக தொடங்கி விட முடியாது. நான் எத்தனையோ விசித்திரமான வழக்குகளை பார்த்து
இருக்கிறேன். எத்தனையோ சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை தீர்த்து வைத்திருக்கிறேன்.
ஆனால் நடந்து கொண்டிருக்கும் சம்பவம் என்னையே கிறங்க வைக்கிறது.
விடியற்காலையில் கான்ஸ்டபிள் போனில் அழைத்தார். “சார்! நமக்கு ஒரு
பெரிய சிக்கல் சார்” என்றார்.
“என்ன?” என்றேன்.
“ஊரு முழுக்க ஒரே பரபரப்பா இருக்கு சார்”
“என்ன? ஏதும் இடைதேர்தல் வரப் போகுதா”
“இல்ல சார். ஊரு முழுக்க ஒரே போஸ்டரா ஒட்டி இருக்கு சார். எந்த
சுவரையும் விடல”
“புது படம் ரிலிஸ் ஆகுதா?”
“சார் அது இல்ல சார்”
“காலைலேயே போன் பண்ணி ஏன் உயிரை வாங்குற? விசயம் என்னன்னு சொல்லி
தொலையேன்”
“ஓ உலக மக்களே! இது அனைத்து
மத கடவுள்கள் உங்களுக்கு அளிக்கும் தகவல். நீங்கள் எங்கள் பெயரை சொல்லி சண்டை
போட்டுக் கொண்டிருப்பது எங்களுக்கு மிகுந்த மன வேதனை அளிக்கிறது. எனவே நாங்கள்
மனமாற்றம் வேண்டி வரும் திங்கள்கிழமை சிட்டாம்பட்டியிலே
காந்தி திடலிலே ஒரு நாள் அடையாள
உண்ணாவிரதம் இருக்கப் போகிறோம்”
“என்னய்யா இது உளர்ற”
“இதுதான் சார் அந்த போஸ்டர்ல இருக்கு”
“எவனாவது வேலையத்தவன் அடிச்சு ஒட்டி இருப்பான். எந்த பிரஸ்ல
அடிச்சதுன்னு பார்த்து அங்க போய் விசாரி”
“பிரிண்டிங் பிரஸ் பேரே இல்ல சார் போஸ்டர்ல”
“சரி விடுயா. விடிஞ்சதும் பார்த்துக்கலாம். இதை எல்லாம் பெருசா
ஆக்கிகிட்டு”
“சார் விஷயம் இதோட முடியல சார். உங்க டிவியை போட்டு பாருங்க”
டிவியை ஆன் செய்தேன். நீண்ட உதறலுக்கு பின் திரையில் ஏதோ எழுத்துகள்
தெரிந்தது. போஸ்டரில்இருந்ததாக சொன்ன அதே எழுத்துகள். எல்லா சேனலையும் மாற்றி
பார்த்தேன். ஆங்கில சேனல், ஹிந்தி சேனல் என்று எங்கும் ஒரே செய்தி.
“யோவ் என்னய்யா நடக்குது இங்க? இரு உடனே ஸ்டேஷன் வரேன்”
நான் காவல்நிலையத்தின் உள்ளே சென்றதும் ஆச்சரியம் காத்து இருந்தது.
தொகுதி MLA தனது புடை சூழ அங்கே நின்றிருந்தார்.
“என்ன சார்?சொல்லி இருந்தா நானே வந்து இருப்பேன்ல”
“இருக்கட்டும் இருக்கட்டும். என்னயா ஊரே ஒரே பரபரப்பா இருக்கு. எங்க
பார்த்தாலும் போஸ்டர். அதை யாரு ஒட்டி
இருக்காங்கன்னு கண்டுபிடிச்சாச்சா?”
“இல்ல சார். ராத்திரி ரோந்து போனவங்களை கூப்பிட்டு விசாரிக்கணும்”
“அவங்க மட்டும் கண்டுபிடிச்சு
கிழிச்சிடுவாங்க. ஸ்டேஷன் சுவர்லயே ஓட்டிட்டு போய் இருக்கானுங்க. ஜனங்க இதை அப்படியே நம்புறாங்க”
எனக்கு ஆத்திரமாக வந்தது. நல்ல வேளையாக இரண்டு பேர் உள்ளே நுழைந்தனர். MLA பேச்சை நிறுத்திவிட்டு
அவர்களை கவனிக்கத் தொடங்கினர்.
“சார்! தந்தி பேப்பர் நிருபர் நான். ஊருல யாரோ போஸ்டர் ஒட்டி
இருக்காங்களே. நெஜமாவே எல்லா மதத்து சாமிங்களும் ஊருக்கு வராங்களா?”
MLA என்னை நோக்கி
திரும்பினார். “பதில் சொல்லுய்யா. நான் இங்க நின்னா என்னை கேள்வி கேப்பாங்க. நான் வரேன். இவங்க கிட்ட
போஸ்டர் ஒட்டுனவங்களை தேடிகிட்டு இருக்கோம்னு சொல்லி முடிச்சிடு”
MLA நிருபரிடம், “அவசரமா சென்னை போக வேண்டியது இருக்கு. நான் வரேன்”
என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்.
நிருபர் என்னிடம், “என்ன சார்? நெஜமாவே சாமிங்க வராங்களா?” என்றார்.
“என்ன கேள்வி சார் இது. யாரோ ஒருத்தன் போஸ்டர் ஒட்டிட்டான்னு கேள்வி
கேக்குறீங்க”
“போஸ்டர் மட்டும் இல்ல சார். எல்லா ஊருலயும் எல்லா சேனல்லயும் இதே
மெசேஜ்தான் தெரியுது. இது எப்பிடி நடக்குதுன்னு யாருக்குமே தெரியல”
“அப்போ இது நாடு முழுக்க தெரிஞ்ச விஷயம் ஆயிடிச்சா இப்போ?”
“என்ன சார் தெரியாத மாதிரி கேக்குறீங்க”
“சரி சார். இப்போதைக்கு போஸ்டர் அடிச்சவனை தேடிகிட்டு இருக்கோம்னு எழுதிடுங்க.
அந்த டிவில மெசேஜ் வரது சைபர் கிரைம்ல வரும்னு நெனைக்கிறேன். அவங்களை போய் கேளுங்க”
சொல்லிவிட்டு எழுந்து வெளியே வந்தேன். ஊருக்குள் சென்று என்ன விசாரிக்க வேண்டும்.
வெளியே வந்து முதல் அடி எடுத்து வைத்ததும் தொலைபேசி அழைப்பு வந்தது. “நான் DSP பேசுறேன். என்னய்யா நடக்குது
உங்க ஊருல”'
“யாரோ விளையாடுறாங்க சார்”
“ஆமா. பள்ளிகூட பசங்க கோலிகுண்டு விளையாடுறாங்க. நீ போய் அவங்களை பிடி”
“.........”
“என்னய்யா? மௌனமா இருக்க? என்ன பாதுகாப்பு நடவடிக்கை எடுத்து இருக்க.
வரப்போற சாமிங்களுக்கு?”
“சார். நீங்க இதை நம்புறீங்களா?”
“நாம நம்புறோமா இல்லையாங்குறது வேற. ஆனா அது ஒரு வேளை நடந்துட்டா என்ன
பண்ணுவ. காந்தி திடலுக்கு முழு பந்தோபஸ்து போடணும். நான் ரிசர்வ் போலீஸ் படையை
அனுப்பி வைக்கிறேன்”
“சார் கோவிச்சுக்காதீங்க. அதெல்லாம் இப்போதைக்கு தேவை இல்ல. போஸ்டர்
அடிச்சவனை இன்னைக்கே கண்டு பிடிக்க ட்ரை பண்றேன். ஒரு வேளை முடியலன்னா நீங்க சொல்ற
மாதிரி”
“சரி பாரு. ஆனா இன்னும் மூணு நாளைக்கு ஊருக்குள்ள வர்ற வண்டிகளை செக்
பண்ணி அனுப்பு. காலைல இருந்தே கூட்ட கூட்டமா ஆளுங்க உங்க ஊருக்கு படை
எடுக்குறாங்க. அப்பிடி சாமி பேரை சொல்லி வரவங்களை ஊருக்குள்ள விட்டுடாத”
“சரிங்க சார்”
எனக்கு தலை சுற்றியது. என்ன மாதிரியான சோதனை இது. காலி மைதானத்துக்கு பாதுகாப்பு
கொடுப்பேனா? அல்லது இதை செய்தவன் யாரென்று தேடுவேனா? இல்லை ஊருக்குள்ளே
வருபவர்களிடம் விசாரணை நடத்தி உள்ளே விடுவேனா?
ஊர் முழுக்க சுற்றிவிட்டு மீண்டும் ஸ்டேஷனுக்குள் நுழைந்தேன். தேவையில்லாமல்
பெரிதாக்குகிறார்கள் என்று தோன்றியது. சில நிமிடங்களில் ஒரு சிறிய கூட்டம் ஸ்டேஷனுக்குள்
நுழைந்தது. எல்லா மதத்தினரும் கலந்த கூட்டம் அது.
“வாங்க வாங்க. என்ன எல்லாரும் ஒத்துமையா வந்து இருக்கீங்க”
“ஆமாங்க எங்க சாமிங்களே ஒத்துமையா இருக்கும்போது நாங்க மட்டும் ஏன்
அடிச்சுக்கணும்?” என்றார் விபூதி கீற்றுடன் நின்றிருந்த ஒருவர்
“சரிதான். இப்போ என்ன வேணும் உங்களுக்கு?”
“நம்ம ஊருக்கு சாமிங்க வருது. வசதி குறையாம பாத்துக்கனுமே. அதான்
நாங்க மூணு மதத்து ஆளும் சேர்ந்து ஒரு மேடை போட்டு குடுக்கலாம்னு இருக்கோம். நீங்க
அனுமதி குடுத்தா”
“ரொம்ப சந்தோசம். தாராளமா போட்டுக்கங்க. நீங்க ஒத்துமையா இருந்துட்டா
சரி”
அனைவர் முகத்திலும் நிஜமான சந்தோஷம்.
“மேடை மேல ஒரு சிம்மாசனம் போடணும். அவங்க சாமி அதுலதான் உக்காருமாம்.
எங்க சாமிக்காக மேடை மேல ஒரு காளை மாடு ஏத்தணும்”
“அதெல்லாம் செஞ்சுக்கோங்கய்யா”
அப்போது ஒருவர் இடை மறித்தார். “மேடை அவங்க சாமிங்களுக்கு
மட்டும்தான். நாங்க மேடை பக்கத்துல ஒரு சிலுவை வைப்போம்”
கூட்டத்தில் ஒரு சிறு சலசலப்பு எழும்பியது.
“வச்சுட்டு போகட்டுமே” என்றேன்
“அது எப்பிடிங்க. அவங்களுக்கு மட்டும் தனி இடம் குடுக்குறது. வெளிய
இதெல்லாம் சொல்லவே இல்ல. உள்ள வந்ததும் பேச்சை மாத்துறாங்க”
“இருக்கட்டுமே அதனால என்ன? அவ்ளோ பெரிய மைதானத்துல”
“அதெல்லாம் முடியாதுங்க. மேடை போட்டா எல்லாருக்கும் பொதுவாத்தான்
இருக்கணும்”
“என்னய்யா நீங்க. ஏம்பா, உங்களுக்கும் மேடைலயே இடம் குடுத்துடுறோம்”
“அதெல்லாம் முடியாதுங்க. எங்க தேவனுக்கு சிலுவை வச்சு குடுத்தாதான்
எங்களுக்கு சந்தோஷம்” என்றார் விட்டு கொடுக்காமல்.
“நீங்க ஒத்துமையா இல்லன்னா மேடை போடவே வேண்டாம்” என்றேன் .
“சரிங்க சார் ஒத்துக்குறோம்”
“நல்லது”
இப்போது அங்கே இருந்த இன்னொருவர் பேச ஆரம்பித்தார்.
“மைதானத்தை மூணா
பிரிச்சிடுவீங்கதானே. ஏன்னா நாங்க முட்டி போட்டு குனிஞ்சு எங்க இறைவனை கும்பிடுவோம்.
எங்களுக்கு அதிக இடம் தேவைப்படும் தொழுகை செய்ய”
மற்றவர்களின் கண்கள் சிவப்பதாக தோன்றியது இதை கேட்டதும்.
“அது எப்படிங்க அவங்களுக்கு மட்டும் அதிக இடம் குடுக்குறது. அப்படி
பார்த்தா நாங்களும் விழுந்து கும்பிடுவோம். ஆளுங்க எண்ணிக்கையும் எங்களுக்குதான்
அதிகம். எங்களுக்குதான் அதிக இடம் வேணும். வெளிய வரைக்கும் வேற ஒன்னை பேசிட்டு
உள்ளே வந்ததும் அப்படியே பல்டி அடிக்கிறாங்க இவங்க”
எனக்கு புது பூதம் கிளம்புவதாக
தோன்றியது. “யாருக்கும் மேடை போட அனுமதி
இல்ல. மைதானத்தை பிரிக்கவும் முடியாது. நீங்க போகலாம்”'
அவர்கள் முனகிக்கொண்டே வெளியேறினர். என்னால் இதை கையாள முடியாது என்று
தோன்றியது. பேசாமல் உயரதிகாரிகளிடம் ஒப்படைத்து விட வேண்டியதுதான்.
சில நிமிடங்களில் கான்ஸ்டபிள் என்னை நோக்கி ஓடி வந்தார். “சார்!
பஜார்ல பெரிய கலவரம் சார். எல்லா மதத்துகாரங்களும் அடிச்சுக்குறாங்க. கடை எல்லாம்
உடையுது”
வேகமாக ஜீப்பை நோக்கி ஓடினேன்
நீண்ட போராட்டத்துக்கு பிறகு மறுநாள் கலவரம் ஒருவாறாக அடங்கி விட்டது.
ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அமைச்சர் வந்து மக்களின் குறைகளை கேட்டார். போலீஸ் மேடை போட அனுமதி மறுத்து கலவரத்தை தூண்டுவதாக ஒவ்வொரு மதத்தினரும் தங்கள்
பாணியில் கதை சொன்னார்கள். பின் அமைச்சர் “முதல்
அமைச்சர் ஆணைப்படி திடலில் அரசே மேடை அமைத்து கொடுக்கும். மைதானம் மூன்று சம
பாகங்களாக பிரிக்கப்பட்டு வழிபாட்டு வசதிகள் அமைத்து கொடுக்கப்படும்” என்றார்.
மூன்று மதத்தினரும் வேறு வழி இன்றி ஒப்புக்கொண்டனர்.
ஞாயிறு அன்று நான் காவல் நிலையத்தில் அமர்ந்து நான் உத்தரவுகளை
பிறப்பித்து கொண்டிருந்தேன். “கேட்டுகோங்க. மேடை பக்கத்துல யாரும் நெருங்கிட
கூடாது. மீடியாகாரங்க பத்து பேர் மட்டும் கொஞ்சம் கிட்ட போகலாம். அந்த பத்து பேரு
போட்டோவும் உங்ககிட்ட எந்த நேரமும் இருக்கணும்”
“சார். எனக்கு ஒரு சந்தேகம்.” என்றார் சப் இன்ஸ்பெக்டர்
“சொல்லு”
“நாம மூணு மதத்துக்கு மட்டும் ஏற்பாடு பண்றோமே. இந்த புத்த,சமண
சாமிங்களை விட்டுட்டோமே”
“நீ வேற சும்மா இருய்யா. இருக்குறதையே சமாளிக்க முடியல. நாம
எதிர்பார்க்கிற எல்லா சாமியும் வந்திடணும்னு வேண்டிக்கோ. எதாச்சும் ஒரு சாமி வரல,
அப்புறம் நடக்கப்போறதை சமாளிக்க ராணுவம்தான் வரணும்”
“ஆமா சார். இப்போ எல்லாரும் அவங்க சாமியை பார்க்கணும்னு நெனைக்கிறதை விட
அடுத்தவன் சாமி வரக்கூடாதுன்னுதான் நினைக்கிறான்”
“இவங்க எல்லாம் திருந்தவே மாட்டாங்க. சாமி, இறைவன், தேவன் எல்லாரும் ஒண்ணுன்னு எப்போதான் இவங்களுக்கு புரியப்போகுதோ. ஆமா நீ நெஜமாவே சாமி வரும்னு நெனைக்கிற?”
“ஆமா சார். இது வரை போஸ்டர் யாரு ஒட்டினதுன்னு தெரியல. எப்பிடி எல்லா
சேனல்லயும் ஒரே மெசேஜ் கொண்டு வர வைக்க முடியும், அதை யாரு செஞ்சான்னு கண்டுபிடிக்கவே
முடியலையே இன்னும்”
“ஊருக்குள்ள வெளியூருகாரங்க யாரும் இல்லையே?”
“வீடு வீடா சல்லடை போட்டாச்சு. இருந்தவங்களை திருப்பி அனுப்பியாச்சு”
“ரைட். ஆமா உண்ணாவிரதம் எப்போ ஆரம்பிக்குது.”
“நேரம் தெரியல. ஆனா எட்டு மணிக்குள்ள ஆரம்பிச்சிடும்”
“எதுக்கும் ரோடு எல்லாம் கிளியர் பண்ணி வச்சுடுங்க. சாமிங்க வானத்து
வழியில வருவாங்களா, இல்ல வேற எந்த ரூட்டும் எடுத்துப்பாங்களான்னு தெரியல”
“ஓகே சார்”
திங்கள்கிழமை காலை ஆறு மணி. மைதானம் பரபரப்பாக இயங்கியது. மைதானம்
எங்கும் போலீஸ் தலைகள். அரசாங்கம் அமைத்த மேடை பிரம்மாண்டமானதாகவே இருந்தது. மைதானத்தின் மூன்று பிரிவுகளிலும் மக்கள் நிரம்பி
இருந்தார்கள்.
“என்ன எல்லா பாதுகாப்பும் சரியா இருக்குதில்ல”
“எல்லாம் பக்கா சார். வெய்டிங் பார் சாமிகள்”
அப்போது அந்த பெரும் சத்தம் கேட்டது. மக்கள் சிதறி ஓடத் தொடங்கினர்.
“என்னய்யா அது. மேடைகிட்ட ஏதோ வெடிச்ச மாதிரி”
குழம்பித் தவித்த போலீஸ்காரர்களில் சிலர் மட்டும் துணிவாக மேடையை
நோக்கி ஓடினர். நானும் ஓடினேன்.
“பாம் வச்சு இருக்காங்க சார்.”
ஒரே மாதிரியான தாமிரத் தகடுகள் அங்கே சிதறி இருப்பதை கண்டு ஒன்றை
கையில் எடுத்தேன். அதில் எழுதி இருந்த எழுத்துகளை கஷ்டப்பட்டு வாசிக்கத்
தொடங்கினேன்.
அயல்நாட்டு சதியை உண்மை என்று நம்பி மத
நம்பிக்கைகளை வளர்க்கும் அரசை கடுமையாக கண்டிக்கிறோம்.
“என்னய்யா இது? இவ்ளோ பாதுகாப்பு இருந்தும்” என்றேன் சப்
இன்ஸ்பெக்டரிடம்
“இவங்க கிட்ட இருந்து சிக்கல் வரும்னு யாருமே எதிர்பார்க்கல சார். நல்ல வேளையா பெரிய சேதம் எதுவும் இல்ல”
“சரி. இவங்க என்ன சாதிச்சாங்க இப்போ?”
“அவங்களுக்கு கடவுள் வரணும்னு ஆசை. அதே மாதிரி இவங்களுக்கு கடவுள்
வந்துடக் கூடாதுன்னு எண்ணம். அதான் வெடிக்க வச்சுட்டாங்க இப்பிடி இடமே பதட்டமா பத்தி
எரியும்போது ஒரு வேளை நெஜமாவே வரதா இருந்தாலும் கடவுள் முடிவை மாத்திப்பார்”
“இவ்ளோ கஷ்டபட்டும் கடைசில கலவரம், வன்முறைனு ஆகி போச்சேய்யா”
“வருத்தப்படாதீங்க சார். இது கை மிஞ்சி நடந்து போச்சு. இவங்கள்ல யாரும்
ஜெயிக்கல இப்போ. ஆனா நம்ம வேலைய மூணு நாளா சரியா பார்த்த திருப்தி இருக்கு பாருங்க.
அந்த திருப்தி போதும் நமக்கு”
“செய்யும் தொழிலே தெய்வம்னு சொல்றியா?”
“நான் எதுவுமே சொல்லல சார். யார் குண்டு வச்சாங்கன்னு கண்டு பிடிக்கற
வேலை இருக்கு. அதை பார்க்கலாம்னு சொல்றேன்”
நாங்கள் தடயங்களை தேட ஆரம்பித்தோம்.
வணக்கம்
ReplyDeleteநன்றாக உள்ளது உரையாடல் வடிவில் இறுதில் சொல்லி முடித்தது நன்று. த.ம 1
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ஐயோ... கடவுள் பாவம்...!
ReplyDeleteஎன்ன முடிவு சொல்லப்போறீங்கன்னு விறுவிறுப்பா படிக்க முடிந்தது... வலைச்சரம் மூலம் வந்தேன் வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி நண்பரே!!!
Delete