Tuesday, December 29, 2015

தூ - ஆதரவு அளிக்காதீர்கள்

சென்னை வெள்ளத்திற்கு முன்புவரை ஆளும்கட்சியின் மீது பெரிய அதிருப்தி எதுவும் இல்லை. கடந்த தேர்தல் பிரசாரத்தின்போது அறிவித்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்றபோதும் ஆட்சியாளர்கள் மேல் கோபம் கொள்ள காரணம் எதுவும் இருக்கவில்லை. இத்தனைக்கும் ஆட்சிக்கு வந்தவுடன் பேருந்து கட்டணம், பால் விலையை உயர்த்தினார்கள். கடந்த முறை அதிமுக ஆட்சியோடு ஒப்பிட்டால் சட்டம் ஒழுங்கும் மோசம்தான். ஊழல் வழக்கில் ஜெயலலிதா தண்டனை பெரும் வரை அதிமுகவுக்கு எதிராக எதுவும் இல்லை. ஒரு வகையில் ஜெயலலிதா பெற்ற தண்டனையும் வெகுஜனங்களுக்கு அவர் மேல் ஒரு பரிதாபத்தையே ஏற்படுத்தியது. ஆனால் அவர் பதவி இழந்ததில் தொடங்கி அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள் ஆட்சிக்கு மிகப் பெரிய அளவில் அதிருப்தியை கொடுத்து விட்டது. ஜாஸ் சினிமா, ஸ்டிக்கர், கோவன் கைது  என்று அரை டஜன் சம்பவங்கள். அதிலும் ஒன்றுதான்  விமர்சனங்களை எதிர்க்கொள்ளும் விதம்.

ஆனந்த விகடனில் ஒரு கட்டுரை எழுதுகிறார்கள். ஆட்சியாளர்கள் சொன்னது என்ன? செய்தது என்ன? என்று. மக்களுக்கு  ஒரு நினைவூட்டல் குடுக்கிறார்கள். அவர்கள் எழுதியதில் பிழை இருந்தால் ஆட்சியாளர்கள் என்ன செய்ய வேண்டும்? ஒரு குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரபூர்வமாக  பதில் கூறி ஒரு மறுப்பு அறிக்கை குடுத்து அதை அவர்கள் பத்திரிக்கையிலேயே வெளியிட செய்து இருக்கலாம். அப்படி செய்து இருந்தால் தவறான தகவல் கொடுத்ததாக பத்திரிக்கையே மன்னிப்பு கேட்டு இருப்பார்கள். ஆனால் குற்றம் கூறியதற்காக பத்திரிக்கை மேல் அவதூறு வழக்கு போடுகிறார்கள். பேரிடரில் மாநிலமே தவிக்கும்போது முதல்வர் குறைந்தபட்சம் அவரது கட்சி தொலைக்காட்சியிலாவது  மக்களுக்கு அறிக்கை விட்டு இருக்கலாம். ஆனால்  அவருக்கு ஊடகங்கள் மேல் என்ன கோபமோ, வாட்ஸ்அப்பிலே மக்களுக்கு தகவல் அளிக்கிறார்.

முத்ல்வராவது பரவாயில்லை. பிடிக்காதவர்களை தவிர்த்து விடுகிறார். எதிர்க்கட்சித் தலைவர் அதற்கும் மேல். நேரடியாகவே ஊடகங்களின் மேல் துப்புகிறார் அல்லது  தூக்கி அடிப்பேன் என்கிறார். ஜனநாயகத்தின் நான்காவது தூண் மேல் அவருக்கு அப்படி என்ன அதிருப்தியோ?அரசியலில் இருப்பவர்கள் ஊடகங்களை ‘தவிர்ப்போம், அவமதிப்போம்’ என்ற கொள்கையுடன் நடந்து கொண்டால் அவர்களை வேறு யார்தான் கேள்வி கேட்பது? 

ஊடகங்களை சந்திக்காமல் விட்டுவிடுவது கூட பயம் காரணமாக என்று எடுத்து கொள்ளலாம். ஆனால் அவமதிப்பது கண்டிக்கத்தக்கது. ஊடகங்களின் மேல் அரசியல்வாதிகளுக்கு உள்ள பயமே இன்னும் ஜனநாயகத்தை கட்டி காப்பாற்றுகிறது. இந்த பயத்தை கணக்கில் எடுக்காமல் துரதிர்ஷ்டவசமாக விஜயகாந்தின்  செயலுக்கு ஆதரவு குடுத்து தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றனர் சிலர். இது அரசியல்வாதிகளுக்கு உள்ள பயத்தை போக்கும் செயல். மக்கள் ஊடகங்களுக்கு எதிரானவர்கள் என்று அரசியல்வாதிகள் நினைக்கத் தொடங்கிவிட்டால் நாளை அவர்களை கேள்வி கேட்க ஆளில்லாமல் போகும் ஊடகங்களை எதிர்கொள்ள இதே பாணியை அனைத்து அரசியல்வாதிகளும் பின்பற்ற தொடங்கினால் மக்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் தொடர்பே இல்லாமல் போகும். ஊடகங்களை எதிர்க்கிறோம் என்று விஜயகாந்தை ஆதரிப்பது சட்டிக்கு பயந்து அடுப்பில் குதிப்பதற்கு சமானம்.

விஜயகாந்த் சொல்வது போல அனைத்து ஊடகங்களும் ஜெயலலிதாவுக்கு ஆதரவாகவும் இல்லை. ஊழல் வழக்கில் தீர்ப்பு வந்ததும் பெரும்பாலான  ஊடகங்கள்  அதிலிருந்த பிழையை சுட்டிக் காட்டின. செம்பரம்பாக்கம் நீர் திறப்பு விவகாரத்தில் நடந்த குழப்பங்களை தொடர்ந்து  விவாதித்தும் வருகின்றன. இது தவிர உச்சகட்ட பாதுகாப்பில் இருக்கும் முதல்வரை சுற்றி வளைத்து நேரடியாக கேள்வி கேட்பதுதான் நடுநிலை என்கிறாரா?


1 comment:

  1. பதிவின் கருத்தோடு உடன்பாடு என்ற போதிலும் உச்சகட்ட பாதுகாப்பு எனற அளவுக்கு அவருக்கு யார் எதிரிகள்? ஒரு பில்டப் மாதிரியே தெரிகிறது. பொதுவாக ஊடக நிருபர்களுக்கு கருத்து சொல்லாவிட்டாலும் அவரது பாதுகாப்பு வசதிகளோடு ஊடகங்களை அழைத்து கேள்விகளுக்கு பதில் சொல்வது முதல்வராக அவரது ஜனநாயக கடமை. வாக்குக்கு மட்டும் மக்கள் பதவிக்கு சர்வாதிகாரம்,யாருக்கும் பதில் சொல்ல கடமைப்பட்டவரில்லை எனபது சரியல்ல.

    இன்னும் எளிதாக கேள்விகளை முன்பே வாங்கி கொண்டும் கூட பதில் சொல்லும் வழிகள் உள்ளன. ஊடகம் கலைஞரை அணுகுவது எளிது என்ற விதத்தில் கலைஞர் மேலொங்கி நிற்கிறார்.

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...