Friday, April 5, 2013

வெல்டன் "பரதேசி" பாலா

தூர்தர்ஷன் காலத்தில் ஒரு விளம்பரம் வரும். பி.டி. உஷா ஒரு மலைப்பிரதேசத்தில் ஓடி வருவார். அருகே ஒரு பெண் தேயிலை பறித்து கொண்டு இருப்பார். பி.டி. உஷா ஓடி முடித்ததும் கையில் ஒரு டீ கோப்பையை வைத்து கொண்டு "என்னை புத்துணர்ச்சியாகவைத்து இருப்பது கண்ணன்  தேவன் டீ" என்பார். தேயிலை தோட்டமும், தேயிலை பறிப்பதும் அவ்வளவு அழகாக காட்டப் பட்டு இருக்கும் அந்த விளம்பரத்தில். அந்த விளம்பரம் மனதில் ஏற்படுத்திய பிம்பத்தை அப்படியே கலைத்து விட்டது பாலாவின் "பரதேசி".

சுதந்திரத்தின் மதிப்பு அது நம் கையில் இருக்கும்போது தெரியாது. சிலர் வெள்ளையனே நம்மை ஆண்டு வந்து இருந்தால் நன்றாக இருக்கும் என கூறி கேட்டு இருக்கிறேன். அப்படி சொன்னவர்கள் தம் முடிவை இந்த படத்தை பார்த்தால் மாற்றி கொள்வார்கள். அந்த அளவு அடிமைத்தனத்தின் வலியை நமக்கு உணர வைக்கிறது படம். படத்தில் நடித்தவர்கள் யாரையும் நடிகர்களாக நினைக்க முடியவில்லை. உண்மையிலேயே அந்த கிராமத்திற்கு சென்று காமெராவை ஒழித்து வைத்து அந்த மக்களை இயல்பாக படம் எடுத்தது போல தோன்றுகிறது.  இந்த மாதிரி ஒரு கதையை கையாள பாலாவினாலேயே முடியும். குறிப்பாக மூளை சலவை செய்து  மத மாற்றம் செய்ததையும், செய்து கொண்டு இருப்பதையும் காட்டிய துணிச்சல் பாராட்ட பட வேண்டியது.

அதே போல படத்தின் பின்னணி இசையும், பாடல்களும் அற்புதம். பாடல் வரிகளிலேயே கதை சொல்லி இருக்கின்றனர். சில நேரங்களில் இசை G.V.பிரகாஷா இல்லை இளையராஜாவா என சந்தேகம் வருகின்றது. 

"அங்காடி தெரு"விலேயே அடிமைத்தனத்தை காட்டி விட்டார்களே என சிலர் கேட்கின்றனர். "அங்காடி தெரு" அடிமைகளுக்கு தப்பி செல்ல வாய்ப்பு இருந்தது. அவர்களுக்காக வாதாடவும் மனித உரிமை அமைப்புகள் இருக்கின்றன . ஆனால் இந்த "பரதேசி "களை நினைத்து கவலைப்பட சம காலத்தில்  யாருமே இல்லை. அதனாலேயே முழு கொத்தடிமைகளாக வாழ்ந்த  "பரதேசிகள்" அதிக அளவு பாதிப்பு ஏற்படுத்துகின்றனர் .

படத்தின் நாயகன் போல, இந்த காலத்திலும் தன் "கங்காணி" மேனேஜரை நியாயமாராக நம்பி பின் அப்ரைசல் வந்த பின் "எல்லாம் பாலிடிக்ஸ்ங்க" என்று  புலம்பும் கார்ப்ரேட்காரர்களும்  இந்த படம் பார்க்கலாம். தாம் ஏமாற்றப்  படுவதெல்லாம்  ஒன்றுமே இல்லை என புரிந்து கொள்வீர்கள் . 

ஒரு சில குறைகள் இருந்தாலும் அடிமை வாழ்க்கையை நம்மை உணர வைத்ததில் பாலா முழு வெற்றி அடைந்து இருக்கிறார். இவ்வளவு நாட்களாக தன் கதை நாயகனை மட்டும் விசித்திர பிறவியாக படைத்து படம் எடுத்ததை   மாற்றி , ஒரு  சமூகம்  அடைந்த பாதிப்பை சொல்லி இருக்கும் பாலா இதே போக்கை தொடருவார் என நம்புவோம். தமிழில் இப்படி ஒரு படத்தை கொடுத்ததற்காக  பாலாவிற்கு ஒரு வெல்டன்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...