Saturday, June 1, 2013

தோனி - ஒரு அதிசயம் - நிறைவு பகுதி

T-20 உலக கோப்பை இறுதி போட்டியில் கடைசி ஓவரை தோனி  ஜோகிந்தர் சர்மாவுக்கு கொடுத்தது பலரை ஆச்சர்யப்பட வைத்தது. அந்த தொடரில் தோனியின்  வெற்றிக்கு காரணம் அவரின் துணிச்சல் என்று சிலரும், அதிர்ஷ்டம் என்று சிலரும் பேச தொடங்கினார்கள். இருந்தும் எனக்கு அவரின் வெற்றிக்கு காரணம் அதிர்ஷ்டம் என்று தோணவில்லை. காரணம், இறுதி போட்டியில் தோற்ற பின் பாகிஸ்தான் அணி தலைவர் சோயப் மாலிக் கூறிய கருத்து. இந்திய அணிக்கும், பாகிஸ்தான் அணிக்கும் உள்ள வேறுபாடு நெருக்கடியை கையாளும் விதம் என்றார் அவர். அனுபவம் மிகுந்த பாகிஸ்தான் அணியை விட இளம் இந்திய அணி சிறப்பாக நெருக்கடியை கையாண்டால் அதற்கு நிச்சயம் தோனிதான் காரணம் என்று நம்பினேன்.

அந்த T-20 உலக கோப்பை வெற்றிக்கு பின் தோனியின் மேல் நம்பிக்கை அதிகரித்தது . கால ஓட்டத்தில் டிராவிட் அணியில் இருந்து நீக்கப்பட ஒரு நாள் போட்டிகளின் கேப்டனாகவும், கும்ப்ளே ஓய்வுக்கு பின் டெஸ்ட் போட்டிகளின் கேப்டனாகவும் நியமிக்கபட்டார். அணியில் டிராவிட் இல்லாத நிலையில் தனது ஆட்ட முறையையே மாற்றி டிராவிட் போல பொறுமையாக ஆடி அணியின் இளம் வீரர்களுக்கு தங்களின் விருப்பம் போல் ஆடும் சுதந்திரத்தை ஏற்படுத்தி கொடுத்தார். 

2008ம்  ஆண்டு காமன் வெல்த் பேங்க் முத்தரப்பு  தொடர். அத் தொடர் மூன்று பைனல்களை கொண்டது. இந்தியாவும் வலிமையான ஆஸ்திரேலியாவும்  பைனலுக்கு முன்னேறின.  இறுதி போட்டிகளுக்கு  முன் பேட்டி அளித்த பாண்டிங் தன் வழக்கமான திமிருடன்,   2 பைனல்களுக்கு மேல் இந்த தொடர் நடக்காது; ஆஸ்திரேலியா முதல் 2 போட்டிகளிலேயே வென்று விடும் என்றார். அவர் கணித்தபடி  2 பைனல்களே அந்த தொடரில் நடந்தன. ஆனால் வென்றதோ இந்திய அணி. பாண்டிங் சொன்னதை, தோனி செய்து காட்டினார். ஆஸ்திரேலியாவின் ஆணவத்திற்கு சவுக்கடி கொடுத்தார். இந்தியா முதல் முறையாக ஆஸ்திரேலியாவில் ஒரு நாள் தொடரை வென்றது.

 அதன் பின் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனும் அவரும் இணைந்து அணிக்கு பல வெற்றிகளை பெற்று தந்தார்கள். கூடவே அணியை 2011 உலக கோப்பைக்கும் தயார் செய்தார்கள். இந்திய அணியின் 2011 உலக கோப்பை வெற்றிக்கு இவர்களின் முன் திட்டமிடலே காரணம்.

 
2011  உலக கோப்பை இறுதி போட்டி. தோனி சிக்ஸர் அடித்து அணியை ஜெயிக்க வைத்தார். நாடே வெற்றி களிப்பில் மிதந்தது .  ஆனால் தோனியோ அப்போதும் அதனை பெரிதாக கொண்டாடவில்லை  அத்தனை பெரிய வெற்றிக்கு பின்னும், 2007ல் ரன் எடுக்காமல் வெளியேறிய போது பார்த்த அதே சலனமற்ற முகம் . 'இதுவும் கடந்து போகும்; எப்போதும் சம நிலையை இழக்காதே' என்று எப்போதோ படித்த போதனை கதை நினைவுக்கு வந்தது. கோப்பை வாங்கிய பின்னர் அணியினரின் கொண்டாட்டத்தில் கூட பெரிய அளவில் பங்கேற்கவில்லை. வெற்றிக்கு தன் அணியினரை பொறுப்பாக்கி தான் எதுவுமே செய்யாதது போல இருந்தார் கேப்டன் கூல். ஒரு கேப்டன் எப்படி இருக்க வேண்டும் என்று உலகத்திற்கு பாடம் எடுத்தார்.

2007ல் தோனியிடம் இருந்த கூல், 2011ல் இல்லை என்பது உண்மையே. அதற்க்கு காரணம் என நான் நினைப்பது 2007ல் அவர் மேல் இருந்த எதிர்பார்ப்புகள் வேறு. 2011ல் அவர் மேல் இருந்த எதிர்பார்ப்புகள் வேறு. வென்று காட்டிய பின் அதை தொடர வேண்டிய கட்டாயம் சில நேரங்களில் அவரை மிக சிறிதளவு நிதானம் தவற செய்தது. இருப்பினும் அவர் ஒரு போதும் மைதானத்தில் கத்தியோ, முகம் சுளித்தோ பார்த்ததில்லை.

இந்திய அணியின் கேப்டனாக யார் நியமிக்கபட்டதும் தனி பட்ட முறையில் கங்குலியின் பேட்டிங் பாதிக்கப்பட்டது. சச்சின், அசாருக்கும் கூட அப்படியே. ஆனால் கேப்டனாக நியமிக்கப்பட்டும் தோனியின் பேட்டிங்கில் பெரிய அளவு பாதிப்பு ஏதும் இல்லை. ஒரு நாள் போட்டிகளில் இன்னும்  சிறப்பான சராசரியை கொண்டுள்ளார். இத்தனைக்கும்  விக்கெட் கீப்பர் பணி வேறு . அனைத்தையும் அருமையாக கையாள்கிறார்.

 அதீத நம்பிக்கை, தோல்வியையும் வெற்றியையும் ஒரே போல் எடுத்து கொள்ளும் பக்குவம், துணிச்சல் என  ஒட்டு மொத்தமாக பார்க்கும்போது தோனி எனக்கு ஒரு அதிசயமே. உங்களுக்கு?


6 comments:

 1. மிகவும் சரியான அலசல்.தோனியின் மனநிலை, நெருக்கடியான சமயங்களில் முடிவு எடுக்கும் திறன் அனைத்தும் அபாரம். உலகக் கோப்பை போட்டியில் கடைசி வின்னிங் ஷாட் அடித்து விட்டு, ஒரு தேர்ந்த ஞானியைப் போல எந்தவித உணர்ச்சி வெளிப்பாடுமின்றி ஒரேயொரு ஸ்டம்பை மாத்திரம் எடுத்துக்கொண்டு சென்றது அனைத்தும் இன்னும் நினைவில் நிற்கிறது.தொடர்ந்து எழுதுங்கள் இது போல...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி நண்பரே

   Delete
 2. நிறைவாகத்தான் இருக்கிறது. ஆனால் தொடர்ந்து எழுதுங்கள், அதிசயங்களையும் கூடவே டோனியையும்

  ReplyDelete
  Replies
  1. நிச்சயம் நண்பரே. எழுதியதை விட எழுதாமல் விட்டதே அதிகம். நேரம் வரும்போது அவற்றையும் எழுதுகிறேன். உங்கள் தொடர் வருகைக்கும், கருத்துகளுக்கும் நன்றி.

   Delete
 3. //தோனி எனக்கு ஒரு அதிசயமே. உங்களுக்கு//
  அதேதான்.

  ReplyDelete
 4. //தோனி எனக்கு ஒரு அதிசயமே. உங்களுக்கு?//

  எனக்கும்தான்

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...