Wednesday, July 24, 2013

தனுஷ் - ஒரு சிறிய அலசல் (அல்லது) நான் தனுஷ் ரசிகனான கதை

னுஷை நான் கவனிக்க ஆரம்பித்தது 'காதல் கொண்டேன்' படத்திலிருந்து. ஒல்லி உடல்வாகு, கறுத்த நிறம், ஒட்டிய கன்னம் ஆனால் இவை  அனைத்தையும் மீறி அவர் வெளிப்படுத்திய அபார நடிப்பு என்னை கவர்ந்தது. ஆனாலும் அந்த மெலிந்த உருவத்தோடு, பள்ளிக்கூடபையனாக எத்தனை படங்களில் இவரால் நடிக்க முடியும் என நினைத்து கொண்டேன். மற்ற ஹீரோக்கள் நடிக்கும் கதைகள் இவருக்கு  பொருந்தாது என்பது அப்போது என்னுடைய எண்ணம். என்னுடைய அந்த கணிப்பை தனது அடுத்த படமான 'திருடா திருடி'யிலேயே தகர்த்தார் தனுஷ். 

'திருடா திருடி' படத்தை திரையரங்கில் பார்த்தேன். அந்த படத்தில் அவர் முகத்தை முதல் முறை திரையில் காட்டியபோது ரசிகர்கள் எழுப்பிய ஆரவாரம் என்னை திகைக்க வைத்தது. 2 படங்கள் மட்டுமே நடித்து ஒரு சிறிய நகரத்தில் இதனை ரசிகர்களை சம்பாதித்து விட்டாரே என ஆச்சரியப்பட்டேன். அந்த படத்தில் அவர் ஏற்று நடித்து இருந்த குறும்புக்கார இளைஞர் வேடம் அவரை நோக்கி மேலும் நகர்த்தியது.

அந்த கால கட்டத்தில் 'திருடா திருடி' வெற்றியோடு சேர்த்து வரிசையாக 3 வெற்றி படங்கள் கொடுத்து இருந்தார் தனுஷ். அப்போது சரியான வழிகாட்டுதல் இல்லாமலோ அல்லது வேறு எந்த காரணத்தாலோ வரிசையாக படங்களை ஒப்பு கொண்டார். ஆனால் அத்தனை படங்களுக்கும் நேரம் ஒதுக்க முடியாமல் கால்ஷீட் பிரச்சனையில் சிக்கி  கோர்ட் படி  ஏறினார் இப்படி ஒரு நல்ல காரணம், ஒரு மோசமான காரணம் இரண்டும் சேர்ந்து அவரை மீடியா டார்லிங்காக மாற்றி இருந்தது. அந்த நேரத்தில் அவர் டிவியில் அவர் அளித்த பேட்டிகள் அனைத்தையும் ஒன்று விடாமல் பார்த்தேன். அவர் பேச்சில் இருந்த முதிர்ச்சி என்னை அசர அடித்தது. 


இத்தகைய சூழலில் வெளி வந்த படம்தான் தனுஷ் முதல் முதலாக நடித்த ஆக்சன்(!!) படம் 'சுள்ளான்'. பறந்து பறந்து அடித்தும் பஞ்ச் வசனம் பேசியும் தன்னால் ஆக்சன் படமும் நடிக்க முடியும் என நிரூபித்தார் தனுஷ். படம் அத்தனை மோசமில்லை என்றாலும் தனுஷ் அடித்தால் அவர் கீழே விழாமல் அடி வாங்கியவர் கீழே விழுகிறார் என்பதை தமிழ் ரசிகர்களின் இயற்பியல் அறிவு ஏற்று கொள்ளாமல் போனதால் அந்த படம் தோல்வி அடைந்தது. அதற்கு பின் தனுஷ் அது போன்ற கதையில் இன்று வரை நடிக்கவில்லை. அந்த படம் என்னை பெரிதாக கவர தவறினாலும், அந்த படம் வெளி வந்த சமயம் தனுஷின் வாழ்வில் நடந்த ஒரு முக்கியமான விஷயம் தனுஷ் ரசிகனாக மாறுவதில் இருந்த ஒரு சிறிய மன தடையையும் நீக்கியது. அது தனுசின் திருமணம். தலைவரின் பெண்ணையே திருமணம் செய்து கொண்டு தலைவரின் உறவாக மாறிவிட்டவரை குழப்பமே இல்லாமல் ஏற்று கொள்ளலாம்தானே?

அதற்கு பின் 'திருவிளையாடல் ஆரம்பம்', 'யாரடி நீ மோகினி' போன்ற படங்களில் நடித்து தனக்கு காமெடி நடிப்பும் வரும் என்று நிரூபித்தார். 'அது ஒரு கனா காலம்', 'பொல்லாதவன்' போன்ற படங்களில் நடித்து தன்னை ஒரு க்ளாஸ் நடிகனாகவும் நிரூபித்தார். 'ஆடுகளம்' அவருக்கு தேசிய விருது பெற்று தந்தது. 'ஓய் திஸ் கொல வெறி' மிக பெரிய புகழ்  பெற்று தந்தது. இப்போது 'ராஞ்ச்னா' அவரை இந்தியா முழுவதும் கவனிக்கும் ஒரு நடிகனாக மாற்றியுள்ளது. இந்த வளர்ச்சி நான் எதிர் பாராதது. உண்மையில் தனுஷே எதிர் பார்த்திருக்க மாட்டார்.

வேறு எந்த தமிழ் ஹீரோவும் இத்தனை படம் நடிக்கவில்லையா? புகழ் பெறவில்லையா? தனுஷ் மட்டும் என்ன அதிசயம் என்கிறீர்களா? நிச்சயம் அதிசயம்தான். தனுஷ்  ரசிக்கத்தக்க மாஸ் ஆக்சன் படமோ, வசூலை அள்ளி குவிக்கும் பெரிய வெற்றி படமோ குடுத்து புகழ் அடையவில்லை. இந்தியாவே கொண்டாடும் கமலுக்கு கூட அவ்வப்போது ஆக்சன் படங்கள் தேவைப்பட்டது. ஆனால் தனுஷ்  முழுக்க முழுக்க நடிப்பு திறனை மட்டுமே வைத்து இதனை சாதித்து உள்ளார். ஏதோ ஒரு வகையில் பெரும்பாலான ரசிகர்கள் தன்னையே தனுஷ் திரையில் பிரதிபலிப்பதாக எண்ணி கொண்டனர். இதுவே தனுஷின் வெற்றிக்கு இன்னொரு காரணம். 

கடந்த வாரம் நான் 'மரியான்' பார்க்க சென்றிருந்த போதும் தனுஷை திரையில் காட்டியதும் ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். ஆனால் இந்த முறை நான்  ஆச்சரியப்படவில்லை. ஏனென்றால் ஒரு ரசிகனின் உணர்வுகளை மற்றொரு ரசிகன் புரிந்து கொள்ள முடியும்தானே?

பின்குறிப்பு:

'மயக்கம் என்ன', '3', 'மரியான்' இந்த மூன்று படங்களையும் பார்த்த பின் திரை அரங்கை விட்டு மன உளைச்சலுடனே வெளியே வந்தேன். அதற்கு காரணம் தான் திரையில் காட்டிய உணர்வுகளை ரசிகர்களுக்கு கடத்தும் தனுஷின் நடிப்பாற்றலா? அல்லது இயக்குனர்களின் திறமையா என சொல்ல தெரியவில்லை. எப்படியானாலும் தனுஷ் தொடர்ச்சியாக இது போன்ற படங்களில் நடிக்காமல் சற்று இடைவெளி விடுவது நல்லது என தோன்றுகிறது.9 comments:

 1. தனுஷ் அடித்தால் அவர் கீழே விழாமல் அடி வாங்கியவர் கீழே விழுகிறார் என்பதை தமிழ் ரசிகர்களின் இயற்பியல் அறிவு ஏற்று கொள்ளாமல் போனதால் அந்த படம் தோல்வி அடைந்தது. \\இரசித்தேன்!!

  ReplyDelete
 2. adult padangal-la nadichu thaane indha level-kku vandhu irukkar :)

  NOTHING SPECIAL

  ReplyDelete
  Replies
  1. அடல்ட் படம் நடிச்சா பெரிய ஆள் ஆகலாம்னா S.J. சூர்யா தனுஷை விட பெரிய ஆளா வந்து இருக்கணுமே??

   Delete
 3. payama irundha andha comment-ai poda vendam :)

  1000 hit koduttha kuda still he started @ ADULT MOVIES :) thulluvadho ilamai :)

  ReplyDelete
  Replies
  1. இதுல என்னங்க பயம் இருக்கு? துள்ளுவதோ இளமை மட்டுமா அடல்ட் படம். காதல் கொண்டேன், திருடா திருடி, புதுக்கோட்டையிலிருந்து சரவணன், ட்ரீம்ஸ் எல்லாமே அடல்ட் கன்டென்ட் ஜாஸ்தியா இருக்குற படம்தான்.

   Delete
 4. தனுசிடம் நானும் வியந்த விடையம் அவரின் இந்த எதிர்பாராத வளார்ச்சி. ஆனாலும் அந்த வளர்ச்சிக்கு ஏற்ற திறமை அவரிடம் அபடிமிதமாகவே இருக்கிறது.

  ReplyDelete
 5. வேங்கை, படிக்காதவன் இதெல்லாம் உங்கள் பார்வையில் படவில்லையா?

  //தனுஷ் அடித்தால் அவர் கீழே விழாமல் அடி வாங்கியவர் கீழே விழுகிறார் என்பதை தமிழ் ரசிகர்களின் இயற்பியல் அறிவு ஏற்று கொள்ளாமல் போனதால் அந்த படம் தோல்வி அடைந்தது. அதற்கு பின் தனுஷ் அது போன்ற கதையில் இன்று வரை நடிக்கவில்லை.

  ReplyDelete
  Replies
  1. 'படிக்காதவன்' படத்தில் ஒரு காட்சி. தனுஷ் வில்லனின் அடியாட்களை அடித்து நொறுக்குவார். சண்டை முடிந்த பின் அது கனவு என்று தனுஷுக்கு தெரிய வரும். அந்த காட்சியில் வரும் ஒரு வசனம் 'யாருக்கு என்ன வருமோ அதை செய்யணும்'.

   'வேங்கை' ஆக்சன் கதைதான். ஆனால் சுள்ளான் அளவுக்கு தனுஷை சூப்பர் ஹீரோவாக எல்லாம் காட்டவில்லை.

   'சுள்ளான்' படத்துக்கு பின் தனுஷ் சண்டை காட்சிகளில் நடிக்காமல் இல்லை. அவர் நடிக்கும் சண்டை காட்சிகள் முடிந்த அளவு எல்லை மீறி போகாமல் பார்த்து கொள்கின்றனர். மற்ற ஹீரோக்களின் படத்தில் வரும் சண்டை காட்சிகளை தனுஷின் சண்டை காட்சிகளோடு ஒப்பிட்டு பார்த்தால் நீங்களே உணரலாம்.

   Delete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...