Friday, January 3, 2014

இது அவங்களுக்கே அநியாயமா தெரியாதா?

வாரத்தின் முதல் நாள் அலுவலகத்தின் உள்ளே நுழைந்ததும் என்னுடைய கண்கள் பவித்ராவை தேடின. அவளின் நாற்காலி காலியாக இருந்தது .அவள் அலுவலகம் வரவில்லை என்று புரிந்தது. இன்றைய  பொழுது மிகவும் மெதுவாக போகப்போகிறது என்று மனம் சொன்னது.

பவித்ராவுக்கு  ஊர் மதுரை பக்கம். அவள்  பெரிய அழகு எல்லாம் இல்லை.  ஆனால் இந்த அலுவலகத்தில் சேர்ந்த சில நாட்களிலேயே எல்லாருக்கும் பிடித்தவள் ஆகிவிட்டாள். கலகலப்பான பேச்சு, எப்போதும் சிரித்த முகம் என்று அனைவரையும் கவர்ந்து விட்டாள். வேலை அதிக மன அழுத்தம் அளிக்கும்போதேல்லாம் எல்லாரும் தேடி செல்வது அவளைத்தான். அவளின் நகைச்சுவை பேச்சிலே மன அழுத்தம் குறைகிறது என்று எல்லாரும் கிட்டத்தட்ட அவளின் ரசிகர்கள் ஆகிவிட்டோம். இதோ இப்போது ஒரு நாள் அவள் இல்லை என்றதுமே இங்கே பலரது முகம் வாடி விட்டது.

"ராம்! பவித்ரா வரலியா?"

"அவ அம்மாவுக்கு உடம்பு முடியல அப்பிடின்னு லீவ் சொல்லிட்டா"

அவன் சொன்னதை கேட்டதும் அதிர்ந்தேன். கடந்த வெள்ளிதானே அவள் அம்மா ஊரில் இருந்து வருவதாக சொன்னாள்.வந்தவுடன் உடம்பு சரி இல்லாமல் போய் விட்டதா?

"என்ன உடம்புக்குன்னு சொன்னாளா?"

"அதெல்லாம் நான் கேட்டுகல."

சொல்லிவிட்டு கணிப்பொறி திரையை வெறிக்க தொடங்கினான். நான்  என்னை அறியாமல் மொபைலை எடுத்து பவித்ராவின் எண்ணை அழைத்தேன். அவள் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் இருப்பதாக பதிவு செய்யப்பட குரல் குரல் கூறியது. 

 ஏதேனும் பிரச்சினையில் மாட்டி இருப்பாளோ? யோசித்து கொண்டே  என்னுடைய நாற்காலியில் சென்று அமர்ந்தேன். வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை. மனம் பவித்ராவை சுற்றி வந்து கொண்டே இருந்தது. அவள் அருகில்தான்  அவளின் அக்காவுடன் வீடு எடுத்து தங்கி இருப்பதாக சொல்லி இருக்கிறாள். கவிதாவுக்கு அவள் வீடு தெரியும் .  விசாரித்து விட்டு நேரே சென்று பார்த்து விடலாமா? அதுதான் சரி. பழகிய பழக்கத்துக்கு இது கூட செய்யாவிட்டால் எப்படி? முடிவு எடுத்துவிட்டு அவளின் வீட்டுக்கு கிளம்பினேன்.

விதா கூறிய அடையாளங்களை வைத்து கிண்டியில் அந்த சிறிய  அபார்ட்மெண்டின் முதல் மாடியில் கடைசி வீட்டை கண்டு பிடிப்பது பெரும்பாடாக ஆகிவிட்டது. அழைப்பு மணியை அழுத்திய சில வினாடிகளில் கதவை பவித்ராவே திறந்தாள்.

"ஹை பவி!"

என்னை எதிர்பார்த்திராத அவள் ஒரு நொடி திகைத்து பின் சமாளித்தாள்.

"உள்ளே வாங்க"

வீட்டின் உள்ளே சென்றேன்.

"அம்மாவுக்கு உடம்பு சரி இல்லையாமே. என்ன ஆச்சு ?"

"BP ஜாஸ்தி ஆயிடுச்சு. உள்ளே இருக்காங்க. வா பார்க்கலாம்."

"எதனால?"

"அவங்க கிட்டயே கேளுங்க. நேத்து இருந்து ஒரே புலம்பல். அதுல BP ஏறி படுத்து இருக்காங்க. முடிஞ்சா அவங்களை சமாதானப்படுத்துங்க "

சொல்லிக்கொண்டே அந்த அறை உள்ளே அழைத்து சென்றாள் . கட்டிலில் பவித்ரா ஜாடையில் அவளின்  அம்மா படுத்து இருந்தார். இவர் BP அதிகரிக்கும் அளவு புலம்பி இருக்கிறார் என்றால் அப்படி என்ன நடந்து இருக்கும்?

"அம்மா! இவர் ஏன் கூட வேலை செய்யுறவர்"

அந்த அம்மா என்னை பார்த்தார்.

"இப்போ எப்படிமா இருக்கு உடம்பு?" முடிந்த அளவு குரலில் பரிவை சேர்த்து கேட்டேன் .

"அது இருக்கட்டும்பா. நான் கேக்குறதுக்கு பதில் சொல்லு முதல்ல. நீயும் இங்கே பெட்டி தட்டுற வேலை பாக்குறவன்தான"

"என்னது?" நான் பவித்ராவை பார்த்தேன்.

"அவங்க கம்ப்யூட்டரை சொல்றாங்க"

"ஆமா. நானும் ஐடி வேலைதான் பாக்குறேன்"

"ஏம்பா! இவ நான் ஊருல இருந்து வந்ததும் பீனிக்ஸ் மாலு அப்பிடின்னு சொல்லிட்டு எங்கேயோ கூட்டிகிட்டு போனா. பெரிய பெரிய கடை கண்ணி எல்லாம் பார்த்துகிட்டு ரொம்ப நேரம் நடந்து  வந்ததுல  பசிக்கிதுன்னு சொல்லிட்டேன். உடனே கல்யாண வீடு விருந்து மாதிரி எல்லாம் கும்பல் கும்பலா உக்காந்து சாப்பிட்டுகிட்டு இருந்த இடத்துக்கு என்னை கூட்டிகிட்டு போய்   ரெண்டு பூரி வாங்கி தந்தா."

எனக்கு புரிந்து விட்டது. பூரி இவருக்கு ஒத்து கொள்ளவில்லை போலும். தன் மகளை குறை சொல்ல போகிறார்.

"எண்ணெய்  சாப்பிட்டது ஒத்துக்கலியா?"

"அது இல்லப்பா. அந்த பூரி நல்லாவே இல்ல.  ஒரு மாதிரி சப்புன்னு இருந்தது . குருமா கொஞ்சம் பரவாயில்ல"

"இங்க உங்க ஊருமாதிரி இல்லம்மா. எல்லாம் சுமாராதான் இருக்கும்"

"சுமாரா இருந்தா பரவாயில்ல. அது எவ்வளவுன்னு கேளு"

"எவ்வளவு"

"இத்துனூண்டு இத்துனூண்டா ரெண்டு பூரி 150 ரூபாயாம். அதை அப்பிடி என்ன பெட்ரோல்லயா சமைக்கிறாங்க. அதை வாங்க அவ்வளவு கூட்டம் வேற "

அந்த அம்மாவின் குரல் அதிகரித்தது.

"விடுங்கம்மா. இங்க பெரிய பெரிய மால்ல எல்லாம் அப்பிடித்தான்"

"இந்த காசுல ஒரு குடும்பமே ஒரு நாளைக்கு சாப்பிடலாம். இத்தனை விலை வைக்கிறது அவங்களுக்கே அநியாயமா படல. இப்பிடியா கொள்ளை அடிக்கிறது. இதை யாருமே தட்டி கேக்க மாட்டாங்களா "

எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. இந்த அம்மா நேற்று பார்த்தது இந்தியாவின் இன்னொரு முகம். பணத்தை பற்றி கவலை இல்லாத, வறுமை என்றால் அர்த்தம் அறியாத மக்கள் இவருக்கு விசித்திரமாய் படுகிறார்கள் .  பணம் என்பது சேமிக்க என்றும், அது மதிப்பு மிகுந்தது என்றும் சொல்லி கொடுக்கப்பட்டு வளர்ந்தவருக்கு கிரெடிட் கார்டை தேய்த்து கொண்டு, பணத்தை அலட்சியமாக  வீசி எறிந்து கொண்டு  இருக்கும்  இன்னொரு சமுதாயம் அதிர்ச்சி அளிக்கிறது. 

"சரி! நீங்க ரெஸ்ட் எடுங்க. இனிமே நீங்க அங்க போகாதீங்க. அவ்வளவுதான்"

சொல்லிவிட்டு வெளியே வந்தேன்.

"எப்போ அதை மறக்க போறாங்கன்னு தெரியல. இப்பிடி புலம்புனா எத்தனை டேப்லெட் போட்டாலும் யூஸ் இல்ல  " பவித்ரா சொல்லிவிட்டு தெற்று பல் தெரிய சிரித்தாள்.

"சரி நான் வரேன்"

வீட்டை விட்டு வெளியேறி அலுவலகம் வந்த பின்னும்  அந்த அம்மா கேட்டது மனத்தில் ஓடி கொண்டே இருந்தது. 

"இது அவங்களுக்கே அநியாயமா தெரியாதா? இதை யாருமே தட்டி கேட்க மாட்டாங்களா?"

நிச்சயம் மாட்டார்கள். மனதில் இந்த பதிலை பதிய வைத்து கொண்டு வேலையில் கவனம் செலுத்த தொடங்கினேன்.

புத்தாண்டு அன்று பீனிக்ஸ் மாலில் 150 ரூபாய்க்கு ரெண்டு பூரி வாங்கிய பாதிப்பில் எழுதிய கற்பனை கதை.
1 comment:

  1. பணத்தின் அருமை அவருக்கு தெரிந்திருக்கிறது... ஆனாலும் 150 ரூபாய்க்கு ரெண்டு பூரி - அநியாயம்... ரொம்பவே அநியாயம்...

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...