Saturday, January 4, 2014

ஆதலால் காதல் செய்வீர்!

வேலை இல்லாமல் சுற்றிய நாட்களில் அந்த பூங்காவுக்கு தினசரி விஜயம் செய்வதை ஒரு கடமையாகவே செய்து கொண்டிருந்தேன்.இந்த கதையின் நாயகரையும்  அந்த பூங்காவே எனக்கு அறிமுகம் செய்து வைத்தது. அவருக்கு நாற்பது வயது இருக்கலாம். ஒவ்வொரு சனிக்கிழமையும் தவறாமல்  பூங்காவுக்கு வந்து விடுவார் . கையில் கொண்டு வரும்  புத்தகத்தை வைத்து படித்து கொண்டு இருப்பார். நான் அவருடன் பேசியதில்லை. இருந்தாலும் அவரை பார்க்கும்போதெல்லாம் அவருடன் பேச வேண்டும் என்று நினைப்பேன். அதற்கு காரணம் அவர் முகத்தில் தெரிந்த கார்ப்பரேட் களை. எப்படியாவது யாரையாவது பிடித்து வேலை வாங்கி விட வேண்டும் என்று எனக்கு இருந்த உத்வேகம்.

இந்த வாரமும்  வழக்கம் போல அவர் வந்திருந்தார். நான் அமர்ந்த அதே பெஞ்சிலேயே அவரும் வந்து அமர்ந்தார். அவருடன் பேசி விட முடிவு எடுத்தேன். சொல்ல முடியாது. கடவுள் எனக்கு உதவி செய்ய அனுப்பிய தேவதூதன் இவராகவும் இருக்கலாம். மெதுவாக பேச்சை தொடங்கினேன்.

"வணக்கம் சார்"

"வணக்கம் நீங்க"

"என்னை உங்களுக்கு தெரியாது. நான் உங்களை அடிக்கடி இந்த பார்க்கில் பார்த்து இருக்கிறேன்"

புன்னகை செய்தார்.

"நீங்க படிக்கிறீங்களா?"

"இல்லை. எஞ்சினீரிங் படிச்சுட்டு  வேலை தேடி திரிஞ்சுகிட்டு இருக்கேன்"

"அப்படியா. உங்க ரெஸ்யூம் எனக்கு அனுப்புங்க. ஏதாவது செய்ய முடியுமான்னு பாக்குறேன்". ஒரு அட்டையை எடுத்து நீட்டினார்.

"நிச்சயம் சார். ரொம்ப நன்றி."

மீண்டும் ஒரு புன்னகை. எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது . ரொம்ப சிரமப்படுத்தாமல் அவரே உதவி செய்ய ஒத்து கொண்டார்.  அப்படியே கழண்டு கொண்டால் மரியாதையாக இருக்காது. ஓரிரு நிமிடங்கள் தொடர்ந்து பேசலாம்.

"நீங்க எந்த ஊரு?" அவர் குரல் என் சிந்தனையை கலைத்தது.

"மதுரை பக்கம்"

அவர் முகத்தில் ஒரு மகிழ்ச்சி பரவுவதை கவனித்தேன்.

"நானும் தேனிதான்"

அவர் சொன்னதும் எனக்கும் மகிழ்ச்சிதான். இவர் மூலம் எனக்கு வேலை கிடைக்க போவதாக உள்ளுணர்வு கூறியது. எனக்குஎன்ன பதில் கூறி பேச்சை வளர்ப்பது என்று தெரியவில்லை. இது போன்ற சமயங்களில் நான் வழக்கமாக கேட்கும் கேள்வியை கேட்க முடிவு செய்தேன்."அப்போ அடுத்த வாரம் பொங்கலுக்கு ஊருக்கு போறீங்களா?"

"இல்லை."

"இங்கேயே செட்டில் ஆகிட்டீங்களா?"

"கிட்டத்தட்ட" 

"கிட்டத்தட்ட என்றால்?"

அவர் முகம் மாறியது. தவறாக கேட்டுவிட்டதை உணர்ந்து உதட்டை கடித்தேன்.

"என்னுடைய உறவு எல்லாமே அங்கேதான் உள்ளது. ஆனால் அவர்களுக்கு நான் உறவில்லை."

மீண்டும் குழப்பமாகவே பதில் சொன்னார்.

"எனக்கு புரியவில்லை சார்"

"நான் காதலித்து திருமணம் செய்ததால் வீட்டுக்குள் வர கூடாது என்று ஏன் தந்தை கூறி விட்டார். எந்த உறவினரும் என்னை சேர்த்து கொள்ளவும்  மாட்டார்கள் "

"புரிந்துவிட்டது சார் .என்றாவது ஒரு நாள் சமாதானம் ஆகிவிடுவார்கள்"

"இல்லை. எப்போதுமே ஆக மாட்டார்கள்."

"அப்படியில்லை சார். இப்போது காதலை யாரும் பெரிதாக எதிர்ப்பதில்லை. எதிர்த்தாலும் கோபம் அதிக நாள் தாங்காது"

"பெரிதாக என்றால் எந்த அளவு? வேறு ஜாதி பெண்ணை ஏற்று கொள்ளும் அளவா?"

"ஆம். ஜாதிதானே காதலின் முதல் எதிரி. ஆனால் இப்போது ஜாதி மாறி செய்யும் திருமணத்தை ஏற்று கொள்ளும் பக்குவம் சிறிது சிறிதாக வந்து கொண்டுள்ளது."

நான் அதிகம் பேசுவது போல் தோன்றியது. ஆனால் எப்படி உரையாடலை முடிப்பது என்று தெரியவில்லை.

"சரி. ஜாதி மாறி திருமணம் செய்து கொண்டால் ஏற்று கொள்வார்கள். நான் கேரளத்து  பெண்ணை திருமணம் செய்து கொள்ள போகிறேன்  என்றால்"

"இதை ஏற்று கொள்வது கடினம்தான். வரப்போகும் மருமகளுடன் தம்முடைய மொழியில் பேசிக்கொள்ள முடியாது என்பது பெரிய பிரச்சினை. இருந்தாலும் இப்போது தங்கள் பிள்ளைகளை  வெளிநாட்டு பெண்ணை திருமணம் செய்து கொள்ள அனுமதித்தவர்களையே எனக்கு தெரியும்"

"உண்மைதான். ஆனால் ஆங்கிலேய பெண்ணை ஏற்று கொள்பவர்களால், இன்னும் தங்கள் மகன் ஒரு கேரளத்து முஸ்லிம் பெண்ணை திருமணம் செய்வதை அதிகம் பேர் ஏற்று கொள்வதில்லை."

அவர் எந்த உணர்ச்சியும் இல்லாமல் சொன்னார். புலி வாலை பிடித்தது போல் உணர்ந்தேன்.

"அப்படி சொல்ல முடியாது சார். நீங்கள் சற்று முயன்றால் சமாதானப்  படுத்தலாம்"

"நானும் ஆயிஷாவை திருமணம் செய்யும் முன்னரே அவர்களை  சமாதானம் செய்ய முயன்றேன்."

"முஸ்லீம் என்பதால் மறுத்து விட்டார்களா?"

"இல்லை. முஸ்லீம் என்பதை கூட ஒரு கட்டத்தில் பொறுத்து கொண்டனர். ஆனால்அவள் என்னை விட மூத்தவள், விவாகரத்து ஆனவள் என்பதையும், அவளுக்கு ஒரு பெண் குழந்தை உண்டு என்பதையும் அவர்களால் தாங்கி கொள்ளவே முடியவில்லை."

அவர் கூறியதை என்னாலும் தாங்கி கொள்ள முடியவில்லை. என்ன மனிதர் இவர்? தங்கள் பெற்றோருக்கு இப்படி ஒரு அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறார். அவர்கள் தன்னை ஏற்று கொள்ள மாட்டார்கள் என்று தெரிந்தும் ஒரு பெண்ணுக்காக அவர்களை விட்டு வந்து இருக்கிறார். எல்லாம் ஒரு பெண் உடல் மேல் இருக்கும் மயக்கத்திற்காக. அவர் மேல் இருந்த மரியாதை போய் கோபம் வந்தது.

"இது உங்களுக்கே தப்பா தெரியலையா சார். நம்ம சமூகம் இதை எப்படி எத்துக்கும்."

"சமூகம் எதுக்கு இதை ஏத்துக்கணும்.  ஆயிஷா மாதிரி என்னை யாராலும் பார்த்து கொள்ள முடியாது. என் மேல் அன்பு செலுத்த முடியாது. அது போதும் எனக்கு. அவளின் மதமோ, வயதோ , அவள் ஏற்கனவே மணமானவள் என்பதோ எனக்கு தேவை இல்லை. அவள் ஒரு பெண். அதிலும் எனக்கு பிடித்த பெண். அவளை நான் திருமணம் செய்து கொள்ள இதை விட எனக்கு எந்த காரணமும் தேவை இல்லை."

அவர் சலனம் இல்லாமல் கூறி முடித்தார்.

"இப்போ எல்லாரும் உங்களை ஒதுக்கி வச்சுட்டாங்களே. உங்களுக்கு வருத்தம் இல்லை?"

"வருத்தம்தான். ஆனால் உங்களை நினைத்து வருத்தம். தமக்காக  வாழாமல், அடுத்தவர்கள் என்ன நினைப்பார்கள் என்று எண்ணியே வாழ்வை கழிக்கும் உங்களை நினைத்து வருத்தம். ஜாதி, மத வேறுபாடு இல்லாத சமூகம்  வேண்டும் என்று வாய் கிழிய பேசுகிறீர்களே? எந்த அரசியல் சித்தாந்தமும் சமூக மாற்றம் கொண்டு வராது. அதற்கு பதில் இனி காதல் திருமணங்களுக்கு மட்டுமே அனுமதி என்று சட்டம் கொண்டு வந்து பாருங்கள். சமூக மாற்றம் தானாக வரும்."

சொல்லி விட்டு எழுந்தார்.

"பார்க்கலாம்"

"பார்க்கலாம் சார்"

"நீ ஆயிஷாவை பார்க்கிறாயா?" சொல்லி கொண்டே தன் பர்சை விரித்து ஒரு புகைப்படத்தை காட்டினார். கேரளா என்றதும் நான் கற்பனை செய்து வைத்து இருந்த ஆயிஷாவுக்கும், அவர் காட்டிய ஆயிஷாவுக்கும் சம்பந்தமே இல்லை. சுமாருக்கும் கீழான அழகு.

"அழகாக இருக்கிறார்கள். உங்களை போலவே"

அவர் தன் வழக்கமான புன்னகையை உதிர்த்து விட்டு நடக்க தொடங்கினார். அவரின் காதல்  சரியா, தவறா என்று என்னால் கூற இயலவில்லை. ஆனால் சமூக மாற்றத்தை காதலால் மட்டுமே கொண்டு வர முடியும் என்பது மட்டும் புரிந்தது.


2 comments:

  1. நல்ல உரையாடல்... ஆனால் அவர் சமூக மாற்றம் பற்றி சொன்னதை சிந்திக்க வேண்டும்...

    ReplyDelete
  2. சமூக மாற்றம் வேண்டுமென்றால் அவர் காதல் சரிதானே ?
    +2

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...