Wednesday, June 4, 2014

கோச்சடையான் – சில கருத்துகள் மட்டும்

கோச்சடையான் வெளிவந்து பத்து நாட்களுக்கும் மேல் ஆகிவிட்டது. இரண்டாம் நாளே படம் பார்த்து விட்டேன். இதற்கு மேல் படத்தை பற்றி எழுத வேண்டுமா என்ற எண்ணம் தோன்றினாலும் படத்தின் ட்ரைலர், பாடல்கள் பற்றி எல்லாம்  எழுதிய பின்பு படத்தை பற்றி எழுதவில்லை என்றால் ஒரு குறையாகவே இருக்கும் என்பதால் எழுதுகிறேன்.

படம் சூப்பர்பா, ரஜினி குரல் மட்டுமே போதும், ரவிக்குமார் கதை சூப்பர், ரஹ்மான் மியூசிக் என்னமா இருக்கு, நாகேஷ் அருமை  என நல்ல விதமான விமர்சனங்களும் ஏன் நடக்கும்போது எல்லோரோட காலும் வளைஞ்சு இருக்கு, ரஜினி பல்லை நல்லா காட்டி இருக்கலாம், தீபிகா படுகோன் மூஞ்சி படு கோணையா இருக்கு, சரத்குமார் எந்த கேரக்டர்ல வராருன்னே கண்டுபிடிக்க முடியல, தொட்டதுக்கெல்லாம் பாட்டு, கார்ட்டூன் நெட்வொர்க்ல கூட இத விட நல்லா அனிமேஷன் படம் போடுவாங்க, இதை மட்டும் லைவ் ஆக்சன்ல எடுத்து இருந்தா பிச்சுகிட்டு ஓடி இருக்கும் இப்போ சுமார்தான்  என்று நெகடிவ் விமர்சனங்களும் இன்று வரை  வந்து கொண்டே இருக்கின்றன.  இப்படி ஒரு படம் வந்து இத்தனை நாளுக்கு பின்னும் நம்மால் விவாதிக்கப்படுகிறது என்றால் அது ரஜினி படமாக மட்டுமே இருக்க முடியும். பொம்மை படம் என்று யாராலும் எளிதில் ஒதுக்கித் தள்ளி விட்டு சென்று விட முடியவில்லை. அந்த வகையில் கோச்சடையான் சந்திரமுகி, எந்திரன் போல வெற்றி படமே.


படம் ஹாலிவுட் தரத்தில் இல்லை என்று சொன்னாலும் ஒரு சில விஷயங்கள் கவனிக்கப்பட வேண்டும். இந்த படத்தை கிட்டத்தட்ட ஒரு பரிசோதனை முயற்சி என்று கொள்ளலாம். காரணம் படத்தின் சில காட்சிகளில் கதாபாத்திரங்களின் உருவங்களும், அசைவுகளும் தத்ரூபமாகவும் சில காட்சிகளில் அமெச்சூர்தனமாகவும் இருப்பதுதான். படத்தின் இரண்டாம் பாதியில் வரும் காட்சிகள், முதல் பாதியில் வரும் காட்சிகளை விட நன்றாக வடிவமைக்கப்பட்டு இருந்தன. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் தீபிகாவின் முகம்  சில காட்சிகளில் நன்றாகவும், சில காட்சிகளில் மிக வித்தியாசமாகவும் இருப்பதை கவனித்தால் உணரலாம். அதே போல  இறுதிக்காட்சியில் வரும் சேனாவின் முகம் ராணா,கோச்சடையான் முகத்தை விட சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருந்தது. இரண்டாம் பாகம் எடுக்கும் பட்சத்தில் முதல் பாகத்தின்  தவறுகளை அவர்களின் அனுபவம் திருத்தி இருக்கும் என நம்பலாம். ஆனால் அப்போதும் தமிழ் சினிமா பட்ஜெட்டில் ஹாலிவுட் தரம் எல்லாம் சாத்தியம் இல்லை. சரி, பின்னர் எதற்கு இப்படி படம் எடுக்க வேண்டும் என்று யோசித்தால் கிடைக்கும் பதில், நம்ம ஊரில்தான் நாடகம் இருக்கிறதே பின்னர் எதற்கு சினிமா என்று ‘கீசக வதம்’ எடுக்கும்போது யோசித்து இருந்திருந்தால் இன்று தமிழ் சினிமாவே இருந்திருக்காது.

படம் பார்க்கும்போது தோன்றிய இன்னொரு விஷயம் ரஜினிக்கு படையப்பா பாணியில் பில்டப் காட்சிகள் வைத்து இருக்கலாம் என்பது. ஆனால் இத்தனை செலவு பிடிக்கும் முறையில் கதைக்கு தேவை இல்லாத காட்சிகளை திரைக்கதையில் கொண்டு வருவது சாத்தியம் அல்ல என்று பின்னர் தோன்றியது. படம் தொடங்கியது முதல் இறுதிவரை கதையில் மட்டுமே பயணிப்பதால் மட்டுமே இது சிறந்த திரைக்கதை என்று பாராட்டப்படுகிறது. இந்த திரைக்கதை மற்ற தொழில்நுட்ப குறைபாடுகளை மறக்க செய்து விடுகிறது. நடிப்பு பதிவாக்க முறையில் இருக்கும் ஒரு பிரச்சினையே படத்துக்கு ஒரு வகையில் பலமாகிவிட்டது.


ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது தமிழுக்கு ஒரு புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்திவிட்டார்கள் நல்ல முன்னெடுப்பு என்று தோன்றினாலும் இன்றைய சூழ்நிலையில் ரஜினியை தவிர மற்ற யாரை வைத்தும் இந்த தொழில்நுட்பத்தில் படம் எடுத்து விட முடியாது. ஏனென்றால் ரஜினி தவிர வேறு யாரால் குரல்  மட்டும் கொடுத்து நூறு கோடிக்கு மேல் வசூலை  குவிக்க முடியும்? பின்னர் மற்றவர்களுக்கு இந்த புதிய தொழில் நுட்பத்தின் பயன்தான் என்ன? காலம் மட்டுமே பதில் சொல்ல முடியும். 

2 comments:

  1. வணக்கம்

    தங்களின் பார்வையில் பட விமர்சனம் நன்று படத்தை பார்த்து விட்டேன்...பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. புதியதொரு முயற்சியை மனதார வரவேற்போம்...

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...