Saturday, June 7, 2014

வினோதினி, கணேஷ் மற்றும் ஜனா

வினோதினி! ஒரு முக்கியமான விஷயம் பேசணும். கதவு சாத்தி இருக்கா”

“என்ன சொல்லுங்க.”

“அதுக்கு முன்னாடி கொஞ்சம் மனசை தைரியமா வச்சுக்க”

“என்ன ஆச்சு உங்களுக்கு. வேலை போயிடிச்சா? விடுங்க.வேற வேலை தேடிக்கலாம்”

“அதை விட முக்கியம். ஜனான்னு என் கூட வேலை செய்யுற பொண்ணு. உனக்கு கூட தெரியுமே. நம்ம கல்யாணத்துக்கு வந்து இருந்தா”

“நியாபகம் இல்லை. அவளுக்கு என்ன?”

“அவ இப்ப கர்ப்பமா இருக்கா”

“சரி! இப்போ என்ன அதுக்கு. விஷயத்த சொல்லுங்க. ஏன் மென்னு முழுங்குறீங்க”

“அவ கர்ப்பத்துக்கு நான்தான் காரணம்.”

“என்ன விளையாடுறீங்களா?”

“இல்லை நிஜம்தான். கல்யாணத்துக்கு முன்னாடியே எங்க ரெண்டு பேருக்கும் பழக்கம். அதை காதல்னு சொல்ல முடியாது. ஒரு ஈர்ப்பு. நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் அவ கிட்ட நெருங்க கூடாதுன்னுதான் நெனச்சேன். ஆனா முடியல”

“கொஞ்சம் என்னை பார்த்து பேசுறீங்களா?”

“இல்லை என்னால முடியாது வினோ.”

“மேல சொல்லுங்க”

“இரண்டு மாசம் முன்னாடி கொஞ்சம் கவனக்குறைவா இருந்துட்டோம். இப்போ அவ கன்சீவ் ஆயிட்டா”

“பணம் கொடுத்து அபார்ட் பண்ண சொல்லலியா”

“அவ கேட்க மாட்டேங்குறா . குழந்தை செண்டிமெண்டாம்  அவளுக்கு. ரொம்ப வற்புறுத்தினா ஆபீஸ் மாடில இருந்து குதிப்பேன்னு மிரட்டுறா. நான் அவளை கல்யாணம் செஞ்சுக்கணுமாம்”

“என்ன செய்ய போறீங்க. அவளையும் கூட்டிகிட்டு வந்து குடும்பம் நடத்தப் போறீங்களா இந்த அந்தப்புரத்துல”

“வினோதினி! புரிஞ்சுக்கம்மா. கல்யாணம் ஆகி இந்த ரெண்டு மாசத்துல நாம ரொம்ப சந்தோசமா இருந்திருக்கோம். நீ என்னோட மனைவியா  வந்தது என்னோட அதிர்ஷ்டம்னு நான்  நெறைய நாள் நெனைச்சு இருக்கேன். ஆனா இப்போ என்னோட நிலைமைக்கு உன்னை டைவர்ஸ் செஞ்சுட்டு அவளோட வாழறதை தவிர எனக்கு வேற வழி இல்லை.”

“ஒரு வேளை நானும் கன்சீவா இருந்திருந்து மாடில இருந்து குதிக்க போறேன்னு மிரட்டுனா என்ன செய்வீங்க?”

“நீ அப்படி செய்ய மாட்டடா! நீ மெச்சூரான பொண்ணு. எதையும் யோசிப்ப. ஆனா அவ அப்பிடி இல்லை. அவ ஒரு பைத்தியம். உனக்கு எவ்வளவு பணம் வேணும்னாலும் குடுக்குறேன். அடுத்து வேற பையனா பார்த்து  கல்யாணம் செஞ்சு வைக்கிறேன். ப்ளீஸ் ஹெல்ப் மீ டா.”

“கணேஷ்! எனக்கு நல்ல வேலை இருக்கு. உங்களை நம்பித்தான் வாழணும்னு எனக்கு அவசியம் இல்லை. இனி நீங்களே சொன்னாலும்  என்னை ஏமாத்துன உங்களோட என்னால சேர்ந்து வாழவும் முடியாது. என்ன முகத்துல லேசா சிரிப்பு வருது”

“இல்லடா! நீ எனக்கு கிடைச்சது என்னோட அதிர்ஷ்டம். என்னை எந்த அளவு புரிஞ்சு வச்சிருக்கே நீ”

“சரி! இப்போ தூங்குங்க! நாளைக்கு காலைல மத்ததை பத்தி  பேசலாம்”

“டாக்டர்! அந்த ஜனாவை  இவர் இன்னும் மறக்கல. அவளை பத்தி அடிக்கடி பேசுறார். என்னை அவரோட மனைவின்னு வேற நெனச்சுக்கிட்டு இருக்கார்”

“பொறுமையா இரு வினோதினி. அவர் உன்கிட்ட தப்பா எதுவும்"

"அதெல்லாம் இல்லை. ஜனா, ஜனான்னு புலம்பும்போது என்னை அவரோட மனைவியா கற்பனை செஞ்சுகிறார் அவ்வளவுதான்"

"அப்போ அவர் வழிலேயே போ. ஒரு நர்ஸா அவரை கவனமா பார்த்துக்கோ. அந்த ஜனா தற்கொலை செஞ்சதை உணர்ந்து சீக்கிரம் குணம் ஆகிடுவார்”

“நானும் அதைத்தான் எதிர்பாக்குறேன் டாக்டர்.”

சில நிமிடங்களுக்கு பின் வினோதினி தன்னுடைய தோழிக்கு அனுப்பிய வாட்ஸ்அப் செய்தி.

“அந்த கணேஷ் ஜனாவை ஏமாத்தி கர்ப்பம் ஆக்கி சாக அடிச்சிட்டு தற்கொலைக்கு தூண்டுன கேசுல பைத்தியக்காரன் வேஷம் போட்டு இருக்கான். ஆனா அவன் கேட்ட நேரம் என்னோட ஹாஸ்பிடல்லயே வந்து அட்மிட் ஆகிட்டான். அவனை எப்பவுமே இங்க இருந்து வெளிய போக விட மாட்டேன். அவனை உண்மையிலேயே பைத்தியக்காரனா மாத்துவேன். இது நம்ம ஃப்ரண்ட் ஜனா மேல சத்தியம்” 

4 comments:

 1. வணக்கம்
  கதை தொடக்கம் முதல் முடிவு வரை நல்ல உறையாடல் வடிவில் உள்ளது.. வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பரே!

   Delete
 2. நிறைய திருப்பங்களுடன் கடைசி வரி வரை அட்டகாசம்... SUPER

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பரே! நீங்கள்தானே அம்புலி பட இயக்குனர் Hareesh Narayan?

   Delete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...