Sunday, September 28, 2014

ஒரு அப்பாவி உளவாளி!!!

காலையில் கதவு தட்டப்படும் ஓசை கேட்டதும் எரிச்சலாக இருந்தது. இந்த நேரத்தில் யாராக இருக்கும். எரிச்சலுடன் கதவை திறந்தவன் அதிர்ந்தேன். நான்கு போலீஸ்காரர்கள் விரைப்பாக நின்று கொண்டிருந்தனர்.

“நாங்க போலீஸ். கொஞ்சம் விசாரிக்கணும்.” என்னிடம் சொல்லிய போலீஸ்காரருக்கு தொப்பை இல்லை. தினமும் உடற்பயிற்சி செய்பவர் எண்பது அவரின் உடலை பார்த்ததும் புரிந்தது. அவர் சொல்லிக் கொண்டு இருக்கும்போதே உடன் இருந்த மூன்று போலீஸ்காரர்கள் தடதடவென்று வீட்டுக்குள் நுழைந்தனர். என்னை ஒரு போலீஸ்காரர் வீட்டுக்குள் தள்ளி கதவை மூடினார்.

“சார்! என்ன ஆச்சு?”

“நான் சொல்றேன். முதல்ல நீங்க கேக்குற கேள்விக்கு பதில் சொல்லுங்க.” கொஞ்சமும் சலனம் இல்லாமல் சொன்னார் அந்த போலிஸ்காரர்.

“கேளுங்க சார்” சற்று பயம் வந்தது.

“உங்களை பத்தி சொல்லுங்க” நான் முழித்தேன். அதற்குள் மற்ற போலிஸ்காரர்கள் வீட்டை சோதனையிட தொடங்கி இருந்தனர். ஒருவர் என்னுடைய பெட்டியை எடுத்து உள்ளே இருந்த அனைத்தையும் கீழே கவிழ்த்து கொண்டிருந்தார். இன்னொருவர் என்னுடைய லேப்டாப்பை எடுத்து ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார்.

“சார்!  துவைச்சு தேச்சு வச்ச துணியை கலைக்கிறார் சார். வேண்டாம்னு சொல்லுங்க.” நான் சொல்லி முடிக்கும் முன் கன்னத்தில் ஒரு அறை விழுந்தது.

“கேக்குற கேள்விக்கு பதில் மட்டும் சொல்லுங்க போதும். வேற எதுவும் பேசக் கூடாது. சொல்லுங்க நீங்க எந்த ஊரு. இங்க என்ன பண்றீங்க?”

“மதுரை பக்கம் சார். இங்க ஒரு சாப்ட்வேர் கம்பெனில வேலை பாக்குறேன்.”

“சார்! அவன் கிட்ட லேப்டாப் பாஸ்வேர்ட் கேளுங்க சார். என்ன வச்சு இருக்கான்னு பார்க்கணும்” இன்னொரு போலீஸ்காரர் கத்தினார்.ஒரு வேளை  புது படம் டவுன்லோட் செய்ததுதான் நான் செய்த குற்றமா?

“சொல்லுடா பாஸ்வேர்ட் என்ன?”

“பார்லிமென்ட்”

“பாத்தீங்களா சார். இதுலயே தெரிஞ்சு போச்சு. கொள்கை பிடிப்போட பாஸ்வேர்ட் வச்சு இருக்கான் பாருங்க”

என்ன கொள்கை. என்ன தெரிஞ்சு போச்சு. நான் என்ன தவறு செய்தேன்?

“சார். ப்ளீஸ் சொல்லுங்க. நான் என்ன தப்பு செஞ்சேன். நான் என்னோட லாயர் கூட பேசணும்” பயத்தில் உளற ஆரம்பித்தேன். எனக்கு எந்த  லாயரை தெரியும்!!!

“நடிக்காதடா. பர்வீன் சுல்தானா யாருன்னு சொல்லு.”

“அவ எனக்கு பேஸ்புக்ல பழக்கம். தினமும் சாட் செய்வோம். உங்களுக்கு எப்பிடி அவளை தெரியும்”

“என்ன கதை விடுற. ஒரு பாகிஸ்தான்காரியை பேஸ்புக்ல பிடிச்சு நட்பு ஆகிடீங்களா? நீ பாகிஸ்தான் உளவாளின்னு எங்களுக்கு தெரிஞ்சு போச்சு.”

“சார்! தெரியாம ஒரு பாகிஸ்தான் பொண்ணு கூட சாட் செஞ்சுட்டேன். அதுக்கு போய் உளவாளின்னு.”

“நடிக்காதடா. நீ சாட் செய்யுறது இந்திய உளவுத்துறைக்கு தெரியாதுன்னு நெனச்சயா?”

அதற்குள் உள்ளே இருந்த ஒரு போலீஸ்காரர்கள்  கையில் சில பொருட்களை எடுத்து கொண்டு வெளியே வந்தார். “சார்! நெறைய ஆதாரம் கிடைச்சு இருக்கு சார். பாருங்க சென்னை மேப்”

நான் சென்னையில் ரூட் பார்க்க பத்து ரூபாய்க்கு வாங்கிய மேப் எல்லாம் எனக்கு எதிரான ஆதாரமா?”

“நீங்க தப்பா...”. நான் முடிப்பதற்குள் மீண்டும் ஒரு அறை.

“இங்க பாருங்க சார் கேமரா. அதுல கப்பலை எல்லாம் படம் எடுத்து வச்சு இருக்கான்”

“நான் போன மாசம் திருச்செந்தூர் கோவிலுக்கு  போனப்ப தூத்துக்குடில எடுத்ததுங்க. அதெல்லாம் வச்சு நான் உளவாளின்னு. எனக்கு ஆதார் கார்ட் எல்லாம் இருக்குங்க.”

“சாரி மிஸ்டர்! மத்தெல்லாம் ஸ்டேஷன்ல போய் பேசலாம்”

ர்வீன் சுல்தானா: ஹாய்

நான் சுய நினைவுக்கு திரும்பி பர்வீன் சுல்தானாவை நண்பர்கள் வட்டத்தில் இருந்து முதல் வேலையாக  நீக்கினேன். பின்னே பாகிஸ்தான்காரர்களுடன் பேசினால் என்ன நடக்கும் என்ற கற்பனையே பயங்கரமாக அல்லவா இருக்கிறது. 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...