சமீப காலத்தைய
தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகம்
பிரமிக்க வைக்கிறது. திருபாய் அம்பானியின் கனவு என்று ஆயிரம் ரூபாய்க்கு
நேற்றுதான் செல்போன் கொடுத்தது போல உள்ளது. குறுகிய காலத்தில் அது கிடுகிடுவென வளர்ந்து இன்று வாட்ஸ்அப்பில் வந்து
நிற்கிறது.
பேஸ்புக் கூட சிறிது
நேரத்தில் போர் அடித்து விடும். ஆனால் வாட்ஸ்அப்பில் அந்த பிரச்சினை கிடையாது.
பள்ளி நண்பர்கள், கல்லூரி நண்பர்கள் ஒரு உடன் பணி செய்பவர்கள், சொந்த
பந்தங்கள் என்று அனைவருடனும் ஒரு குரூப் ஆரம்பித்து விட வேண்டியது. நேரம் காலம்
தெரியாமல் என்று வாட்ஸ் அப்ப வேண்டியது. காதலிப்பவர்களுக்கு இன்னும் எளிது.
யாருக்கும் சந்தேகம் வராமல் போர்வைக்குள் இரவு முழுக்க சாட் செய்யலாம்.
வாட்ஸ்அப்பின் இந்த
அதீத வளர்ச்சி அனைத்து பொழுதுபோக்கு ஊடகங்களுக்கும் ஒரு பெரும் சவாலாக இருக்கப்
போகிறது. தியேட்டர்களிலும், டிவி முன்னரும் அமர்ந்து சாட் செய்யும் இந்த வசதி. வாசிக்கும்
பழக்கமோ வெகு விரைவில் முற்றிலும் அழிந்து விடும்.
ஏனென்றால் பேசுவதற்கு ஆள் இல்லாத நேரங்களில்தானே மற்ற பொழுதுபோக்குகள் நமக்கு தேவை.
இதெல்லாம் இருக்கட்டும்.
இந்த வாட்ஸ்அப், பேஸ்புக்கிலும் நம் ஆட்கள் செய்யும் தொல்லைதாங்கவில்லை. முன்பு
மஞ்சள் நிறத்தில் ஒரு நோட்டிஸ் அடித்து கொடுப்பார்கள். ஏதாவது கடவுள் பெயரை குறிப்பிட்டு
இதே போல் நீங்கள் நூறு பேருக்கு நோட்டீஸ் அடித்து கொடுத்தால் அந்த கடவுளின்
நல்லாசி கிடைக்கும். தவறினால் பரிட்சையில் தேற மாட்டீர்கள், வேலை போய் விடும்
என்று பகிரங்க மிரட்டல் விடுப்பார்கள். போதாக்குறைக்கு ஏதாவது ஒரு வட இந்திய சேட்டின் பெயரை குறிப்பிட்டு அவரின் கலெக்டர் வேலை இதை அலட்சியப்படுத்தியதால்
பறிபோய்விட்டது என்று வேறு இருக்கும். இன்று மங்கல்யான் காலத்திலும் மஞ்சள் நோட்டீஸ் வாட்ஸ்அப்பில் பரப்பப்படுகிறது. தமிழன் பழசை மறந்துட்டான்னு யாருய்யா
சொன்னது?
இவர்கள் ஒரு வகை
என்றால் இன்னொரு வகையினர் செய்தியை உருவாக்குபவர்கள். தங்கள் மனதுக்கு தோன்றியதை
எல்லாம் டைப்பி அந்த செய்தியை பரப்பிவிட்டு விடுவார்கள். சில நாட்களுக்கும் முன்
இப்படித்தான். மோடி அமெரிக்க பொருட்களை எல்லாம் புறக்கணித்து இந்திய பொருட்களை
வாங்க சொல்கிறார் என்று. அவர்கள் சொல்ல வந்த கருத்து என்னவோ சரிதான். ஆனால் ஏன்
மோடியை துணைக்கு அழைத்து கொள்கிறார்கள்? உண்மையில் மோடி அமெரிக்க பொருட்களை
புறக்கணிக்க சொன்னால் எந்த விதமான பின்விளைவுகள் வரும் என்று கூட சிந்திக்காமல் அந்த
தகவல் பலரால் தொடர்ந்து பரப்பப்பட்டது. இதை கூட விட்டு விடலாம். எதில் எதில் விளையாடுவது
என்றே இல்லாமல் தென் தமிழகத்தின் ஒரு ஊரில் பள்ளி வாகனம் விபத்தில் சிக்கிவிட்டது.
குழந்தைகளுக்காக பிரார்த்தியுங்கள் என்று நடக்காத ஒரு விபத்தை பரப்பிவிட்டார்கள். இதே
தகவல் சில ஆண்டுகளுக்கு முன் குறுஞ்செய்தியிலும் பரப்பப்பட்டதுதான் இதில்
கவனிக்கத்தக்கது. அதே போல் சில ஆண்டுகளாக ஆறு மாதத்திற்கு ஒரு முறை பரப்பப்படும்
ஒரு வதந்தி ஒரு குளிர்பானத்தில் எய்ட்ஸ் நோயாளியின் ரத்தம் கலந்துவிட்டது. எனவே
அதை வாங்காதீர்கள் என்பது. யாராவது அந்த பானத்தை குடித்து கொண்டிருக்கும்போது அந்த
செய்தியை படித்து இருந்தால் பயத்திலேயே உயிர் போயிருக்கும்.
இது போன்ற தகவல்களை வாட்ஸ்அப் மூலமோ அல்லது மற்ற எந்த தகவல்
தொழில்நுட்ப சாதனங்களின் மூலமோ மற்றவர்களுக்கு பார்வர்ட் செய்யும்போது கவனமாக
இருக்க வேண்டும். ஏனெனில் தகவலை உருவாக்கியது நாமில்லை என்றாலும் நாம் அனுப்பிய
தகவலுக்கு நாம்தான் பொறுப்பு.
No comments:
Post a Comment