Sunday, November 1, 2015

ரூம் நம்பர் 125

ந்த அருமையான மாலைப் பொழுதில் திருச்சி காவேரி பாலத்தின் காற்று சுகமாக தாக்கியது. ராஜா கையில்  வைத்திருந்த வங்கி தேர்வுக்கான புத்தகத்தை பையில் வைத்து கொண்டான்.

“இன்னும் எத்தனை தூரம்டா நடக்க விடுவ? இந்த பேங்க் பரிட்சைய மதுரைல வைக்காம திருச்சில வச்சு சாவடிக்கிறான்”

“ஏண்டா நொந்துகுற. திருச்சி எத்தனை அழகு பாரு. இன்னும் கொஞ்ச தூரம் நடந்தா ஸ்ரீரங்கம் போய் ரங்கநாதரை பாக்கலாம்”

 “நீ ஸ்ரீரங்கம் போக காரணம் ரங்கநாதரை பார்க்க இல்லன்னு எனக்கு நல்லா தெரியும்”

“காரணம் எதுவா இருந்தா என்ன?எப்பிடியும் பேங்க் பரீட்சை ஊத்த போகுது. திருச்சியை சுத்தி பாத்துட்டு போகலாம் வா”

“சரி அதுக்காக நடந்தேவா சுத்தி பாக்குறது. அங்க பஸ் வருது வா ஏறிக்கலாம்”

ருவரும் திருவானைக்காலில் இறங்கினோம்.

“என்னடா ஸ்ரீரங்கம் முன்னாடியே இறங்க சொல்லிட்ட. சிவனை முதல்ல கும்பிடலாம்னா”

“அதெல்லாம் இல்ல. இங்க ஒரு ஹோட்டல்ல நெய் தோசை நல்லா இருக்குமாம். பேப்பர்ல எல்லாம் வந்திருக்கு. அந்த ஹோட்டலுக்கு போவோம்னு”

“என்ன ஹோட்டல் அது?”

“ராமனுஜம் ஹோட்டல்”

“எங்க போய் தேடுவ”

“விசாரிக்கலாம்”

ந்த ஹோட்டலை கண்டுபிடிப்பது அத்தனை கடினமான காரியமாக இல்லை. பழைய வீடு ஒன்றில் இயங்கி கொண்டிருந்தது. தமிழ்நாடு முழுக்க பிரபலமான ஹோட்டல் என்பதற்க்கான அடையாளம் சிறிதும் இல்லை. தயங்கி தயங்கி உள்ளே நுழைந்தேன். அங்கிருந்த பழைய கடிகாரமும் ஒளி அமைப்பும் 1970ம் ஆண்டிலேயே அந்த ஹோட்டல் மட்டும் நின்று போனது போல தோற்றத்தை ஏற்படுத்தியது. வெள்ளை வேட்டி,கை பனியனுடன் ஊழியர்கள் பரிமாறிக் கொண்டிருந்தனர்.

“என்னடா. இதான் அந்த பிரபல ஹோட்டலா! நம்ம  ஊரு பரோட்டா கடை மாதிரில இருக்கு”

“எப்ப பாரு பரோட்டா கறி நினைப்புதான்.”

அங்கிருந்த மேஜையில் அமர்ந்தோம்  

“என்னடா இது. பழைய டேபிள். பேசாம அந்த கூண்டுக்குள்ள போய் உக்காரலாம் வா”

அவன் விரல் நீண்ட திசையில் பார்த்தேன். ஒரு இரும்பு  கூண்டு போன்ற அமைப்பு. அதில் சிலர் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தனர்.
“என்னடா இது கூண்டு?”

“மத்த ஹோட்டல்ல ஏசி ரூம் இருக்குமே. அது மாதிரி இங்க இது போல”

“வா அங்கேயே போய் உக்காரலாம்”

இருவரும் எழுந்து கூண்டை நோக்கி நடந்தோம். கூண்டின் உள்ளே நுழையப்போகும் நேரத்தில் ஒரு  ஒரு வெள்ளை பனியன் வந்து மறைத்தார்.

“உள்ள இடம் இல்ல அண்ணா. நீங்க அங்க உக்காந்துக்குறேளா?”

“இல்லங்க அங்க பாருங்க. இன்னும் நாலு பேரு உக்காரலாம்” என்றான் ராஜா.

“அந்த பெஞ்சுக்கு எல்லாம் நாங்க சப்ளை பண்றது கிடையாது”

“வாடா ராஜா. இடம் இல்ல போல” நாங்கள் பின்னால் நடந்த நொடியில் இரண்டு புதியவர்கள் அந்த கூண்டுக்குள் நுழைந்து நாங்கள் அமர சென்ற இடத்தில் அமர்ந்தனர்.

“என்னங்க அந்த டேபிள்க்கு சப்ளை இல்லன்னு சொன்னீங்க. அவங்களை மட்டும் விட்டுடீங்க” என்றேன்.

“அவா எங்க ரெகுலர் கஸ்டமர்.”

“நாங்களும் இன்னைக்கு இருந்து ரெகுலர் ஆகிக்குறோம். எங்களை உள்ளே விடுங்க”

“சொன்ன புரிஞ்சுகோங்க. பிரச்சினை பண்ணாதீங்க”

“என்ன நாங்க பிரச்சினை பண்றோமா. ராஜா புரியுதா. அந்த கூண்டுக்குள்ள அவங்க ஆளுங்க மட்டும்தான் போகணுமாம். என்ன நான் சொல்றது சரிதான?”

“ஆமா அப்பிடிதான். இதெல்லாம் இங்க இருக்குற பழக்கம்”

“நாங்களும் உங்க ஆளுங்கதான். பார்த்தா தெரியல”

“எல்லாரும் இங்க வாங்களேன். இவா தகராறு பண்றா” பனியன் கூப்பிட்டதும் அனைத்து பணியாட்களும் எங்களை சூழ்ந்தனர். எனக்கு சற்று பயம் வந்தது.

“வாடா ராஜா, போய்டலாம்”

“இதெல்லாம் இப்பிடியே விடக் கூடாது. இவங்க பண்றது எவ்ளோ பெரிய தப்பு தெரியுமா. போலீஸ்கிட்ட கம்ப்ளைன்ட் குடுத்தா அவ்ளோதான்”
இப்போது அங்கிருந்தவர்களிலேயே வயதானவர் பேசத் தொடங்கினார். 

“தம்பிகளா. இப்போ உங்களுக்கு உள்ள போகணும் அவ்ளோதானே. போய் நன்னா சாப்பிடுங்கோ”

எங்கள் முகத்தில் பெருமிதம். புரட்சி செய்து எதையோ சாதித்தது போல் உணர்ந்தோம்.

“தாத்தா. மனுசங்க எல்லாரும் சமம்தான். இனிமே இப்பிடி எல்லாம் பிரிச்சு வைக்காத. வாடா போகலாம் என்று ராஜா சாப்பிடாமலே வெளியே நடந்தான்.

“எண்டா சாப்பிடாம வந்த?”

“நாம அந்த கூண்டுக்குள்ள போனா நாம உக்காந்தா இடத்தை கழுவி விடுவானுங்க. எதுக்கு அவங்களுக்கு கஷ்டம். அதான்”

ருவரும் திருச்சி வந்து சேர்ந்தோம். தங்குவதற்கு  இடம் தேடி அங்கிருந்த லாட்ஜ்களை சலிக்கத் தொடங்கினோம். எங்கும் இடம் கிடைக்காமல் அங்கிருந்த சிறிய லாட்ஜ் ஒன்றில் கடைசியாக முயற்சி செய்தோம். அங்கிருந்த மீசைக்காரரின் கை காலை பிடித்தாவது இடம் வாங்கி விட முடிவு செய்து அவரை அணுகினோம்.

“சார். நாளைக்கு பரீட்சை. எப்பிடியாச்சும் அட்ஜஸ்ட் செஞ்சு ஒரு ரூம் குடுத்தா நல்லா இருக்கும்”

“எல்லாம் புல் ஆயிடுச்சே தம்பிகளா”

“கொஞ்சம் பெரிய மனசு பண்ணுங்க சார்”

“சரி ஒன்னு செய்யுங்க. இங்க ஒரு ரூம்ல உங்களை மாதிரியே பரீட்சை எழுத வந்த மூணு பசங்க தங்கி இருக்காங்க. பாவம் ஏழை பசங்க போல. வாடகை அதிகம்னு வருத்தப்பட்டாங்க. உங்களுக்கு ஓகேன்னா  அவங்க கூட தங்கிக்கோங்க. வாடகை ஷேர் செஞ்சுக்கலாம்”

“ரொம்ப சந்தோஷம் சார். நாங்க அவங்க கூடவே தங்கிக்கிறோம்”

“ரூம் நம்பர் 125”

இருவரும் மாடி ஏறி அந்த அறையை அடைந்தோம். கதவை தட்டினோம். எங்கள் வயதை ஒத்த ஒருவன் வந்து கதவை திறந்தான். அறையில் இன்னும் இரண்டு பேர்.

“என்ன சார்” என்றான் அவன்.

“சாரி.ரூம் மாறி வந்துட்டோம்” கூறிவிட்டு ராஜா வேகமாக மீண்டும் கீழே இறங்கத் தொடங்கினான்.

“டேய்! என்னடா ஆச்சு. நமக்கு தங்க இந்த இடம் கிடைச்சதே பெருசு”
ராஜா பதில் சொல்லவில்லை.

“என்னடா பிரச்சினை?”

“அவங்களை பார்த்தயா? கீழ் ஜாதி பசங்க மாதிரி இருக்காங்க. அவங்க கூட எப்பிடி தங்குறது” என்றான். 


1 comment:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...