Friday, April 19, 2013

பெருகும் விவாகரத்துகள் - காரணம் என்ன?

IT கம்பெனிகளில் பணி புரிபவர்களிடம் மணமுறிவு  அதிகரித்து உள்ளதாக செய்திகள் வந்து கொண்டுள்ளன. அடிப்படையில் விவாகரத்துகளுக்கு  அதிகரித்துள்ள  கல்வி அறிவும், மாறிவரும் சமூக சூழலுமே  காரணங்கள் . திருமணங்கள் மட்டும் இல்லை; காதல்களும்  அதிக அளவில் முறிகின்றன. முறிகின்றன என்பதை விட முறித்து கொள்கின்றனர் எனலாம்.

முந்தைய தலைமுறை ஜோடிகளிடம் கருத்து வேறுபாடுகள் இல்லையா? இருந்தது. ஆனால் அவர்கள்  சமூகத்துக்கு பயந்தும் , பிள்ளைகளின் எதிர்காலம் கருதியும் கோர்ட் படி ஏற தயங்கினர். ஒரே வீட்டில் இருந்தாலும் தங்களுக்குள்  பேசிக் கொள்ளாமல் வாழ்கையை வாழ்ந்து முடித்தவர்களும் உண்டு. ஆனால் இப்போதைய தலைமுறை இவற்றை பற்றியெல்லாம் நினைக்க தயாராக இல்லை. பிடிக்காவிட்டால் பிரிந்து விடுவோம் என்பதுதான் இப்போதைய ட்ரெண்ட்.பிள்ளை பெற்றாலும் ஒன்றிற்கு மேல் பெற்று கொள்வது இல்லை என்பதால் பிள்ளைகளின் எதிர்காலம் பற்றியும் இவர்கள் அதிகம் யோசிப்பது இல்லை.
 
திருமணமோ ,  காதலோ   ஆரம்பம் அமர்க்களமாகவே உள்ளது. ஆனால் பின்னர் ஏற்படும் சில பிரச்சனைகள் ஜோடிகளை பிரிவுவரை கூட கொண்டு செல்கிறது. குறிப்பாக இன்றைய தேதியில் மணமுறிவுகள் மிக சாதாரணம். எனக்கு தெரிந்த வரையில் ஆண் -பெண் இடையே ஏற்படும் பிரச்சினைகளின் அடிப்படை மிக சிலவே. அவற்றில் சில கீழே.

ஈகோ: மிக அதிகமான பிரச்சினைகள் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையேயான ஈகோவினாலேயே தோன்றுகின்றன. குறிப்பாக ஆணுக்கு இணையாக பெண் சம்பாதித்து, கல்வி அறிவும் பெற்றிருக்கும் இந்த காலத்தில் ஈகோ பிரச்சினைகள் மிக எளிதில் வர வாய்ப்பு உள்ளது. ஈகோ அதிகரிக்கும் இடத்தில் அன்பும்,  விட்டு கொடுக்கும் தன்மையும் முற்றிலும் இல்லாமல் போய் விடுகிறது.

பெண்களுக்கு  இப்போது கிடைத்து இருக்கும் பொருளாதார சுதந்திரம், அவர்களுக்கு ஆண்களை சார்ந்து இருக்க வேண்டிய நிலையை போக்கி விட்டது . எனவே பெண்கள் தங்களை  ஆண்களுக்கு இணையாக பாவித்து கொள்கின்றனர். ஆனால் இத்தகைய எண்ணத்தை ஆண்கள் ஏற்று கொள்வதில்லை. பெண் ஆணை விட அதிகம் சம்பாதித்தால் ஆணுக்கும் ஏற்படும் தாழ்வு மனப்பான்மையும் இந்த வகைதான். எதிர்பாலினத்தவருடன் அதிகம் பழகுவதால் தங்கள் துணையை அவர்களுடன் ஒப்பிட்டு தாழ்வாக நினைப்பவர்களும் உண்டு.

"நீ என்ன சொல்வது? நான் என்ன கேட்பது?", உனக்கு என்ன தெரியும்" போன்ற  எண்ணங்கள் ஆண்-பெண் இருவரில் ஒருவர்   மனதில்  தோன்றி விட்டாலும்  உறவு விரிசல் அடைய தொடங்குகிறது . யாராவது ஒருவர் இறங்கி வராவிட்டால் முடிந்தது.


நம்பிக்கையின்மை:  இன்றைய சூழ்நிலையில் பணி செய்யும் இடத்தில்   ஒரு ஆண் காதலி, மனைவி தவிர பல பெண்களுடன் பழக வேண்டிய சூழல். இதே நிலைதான் பெண்ணுக்கும். ஆனால் நம்  ஒரு நாட்டில் இதை எளிதாக எடுத்து கொள்ளும் பக்குவம் அனைவருக்கும் இல்லை.

குறிப்பாக கிராமப்புறத்தில் வளர்ந்தவர்களுக்கு தங்கள் துணை  எதிர் பாலினத்தவர்களுடன் நெருங்கி பழகுவதை எளிதாக எடுத்து கொள்ள முடியவில்லை. இது அவர்கள் மனதில் ஒரு நம்பிக்கையின்மையை ஏற்படுத்தி உறவு உடைய வழி வகை செய்கிறது.

திருமணத்துக்கு பின் கணவன் தன் வீட்டாருடன் உள்ள தொடர்பை முறித்து கொள்ள வேண்டும் என மனைவி  நினைப்பதும் இதில் ஒரு வகை. கணவன் எங்கே தனக்கு முக்கியத்துவம் தராமல் போய்விடுவானோ என்ற அச்சமே இதற்கு  காரணம்.

அதீத காதல்: ஆணோ, பெண்ணோ .தங்கள் துணை மேல் கொள்ளும் அதீத காதலும் உறவு உடைய காரணம். பெரும்பாலும் காதலர்களே இந்த காரணத்தால் பிரிகின்றனர். தங்கள் காதலனோ, காதலியோ மற்ற நண்பர்களுடன் இயல்பாக பழகுவதை கூட எளிதாக எடுத்து கொள்ள முடியாமல் அவர்கள் தங்களுக்கு முக்கியத்துவம் தரவில்லை என எண்ணுவது, தங்கள் துணை தாங்கள் விரும்பும்படி மட்டுமே நடக்க வேண்டும் என எதிர்பார்ப்பது போன்ற எண்ணங்கள்  அதீத அன்பால் உருவாகின்றன . இந்த அன்பே கடைசியில் ஒரு வகை ஏமாற்றமும் எரிச்சலும் ஏற்படுத்தி உறவுக்கு முற்றுபுள்ளி வைக்கும் நிலை வரை கொண்டு விடுகிறது.

காதலின்மை: மனதில் துளியும் காதல் இன்றி சூழ்நிலையால் இணைந்தவர்கள் சந்திக்கும் பிரச்சினை இது. உடல்கள் அருகில் இருந்தும் மனங்கள் ஒட்ட முடியாததால் ஏற்படும் பிரிவு இது. 

மேலே கூறி இருப்பவை அனைத்தும் பிரச்சனைகளின் அடிப்படைகளே. இது போன்ற காரணங்களால் ஒருவரை ஒருவர் பிடிக்காமல் போகும்போது மனித  மனம் மேலும் ஆயிரம் காரணங்களை கூறி பிரிந்தே தீர வேண்டும் என்ற எண்ணத்தை உறுதி செய்கிறது.

பெரியவர்கள் இது போன்ற பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து தீர்த்து விட்டால் மணமுறிவுகளை குறைக்கலாம் என்று எனக்கு தோன்றுகிறது. உங்களுக்கு?

2 comments:

  1. Very nice! you are very good in writing in a short and clear blogs.

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...