Saturday, June 15, 2013

ஹிந்தியர்களின் மன நிலையும், ஹிந்தி எதிர்ப்பு போராட்டமும்

"வேற்றுமையில் ஒற்றுமை  காணும் நாடு பாரதம்" என்று பள்ளியில் நமக்கு  கொடுத்து இருப்பார்கள். நானும் பல ஆண்டுகள் வரை நம்பி கொண்டிருந்தேன். ஆனால் சமீப காலங்களில் சில வட இந்தியர்களுடன் பழகும் வாய்ப்பு கிடைத்ததும் என் நம்பிக்கை தகர்ந்து விட்டது. இந்த  கட்டுரையில் நான் வட இந்தியர்கள் என்று குறிப்பிடுவது பெரும்பாலும் டெல்லி, உபி மற்றும் அதன் சுற்று வட்டார மக்கள்.

வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாட்டில் பல வட இந்தியர்கள் தங்கள் பணி  நிமித்தம் வந்து தங்கியுள்ளனர். என்னை சலனப்படுத்துவது அவர்களின் மன நிலை. அவர்களின் கருத்து என்னவென்றால் இந்தியாவில் வாழும் அனைவருக்கும் ஹிந்தி தெரிந்து இருக்க வேண்டியது கட்டாயமாம். தமிழர்கள் ஹிந்தி தெரியாமல் இருப்பது பெரிய பிழையாம். வந்து வாழும் இடத்தின் மொழியை அவர்கள் தெரிந்து கொள்ள முயற்சி கூட செய்ய மாட்டார்களாம். ஆனால் தன் வாழ்நாளில் தமிழ்நாட்டை தாண்டி எங்கேயும் செல்ல வாய்ப்பில்லாத நம் தமிழ் மக்களும் ஹிந்தி படித்து அவர்களுடன் ஹிந்தியிலேயே போலோ செய்ய வேண்டுமாம்.

தமிழ்நாட்டில் ஹிந்தி தெரிந்தவர்களும் உள்ளனர்; உங்கள் மொழியை தேவைப்படும்போது நாங்கள்  கற்று கொள்கிறோம். அனைத்து தமிழர்களும் ஹிந்தி தெரிந்து வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றாலும் கேட்பதில்லை. ஹிந்தி கற்று கொள்ளாமல் நாம் தேசிய நீரோட்டத்தில் இருந்து விலகி உள்ளோமாம். இது ஒரு சிலரின் கருத்தாக இருந்தால் கூட விட்டு விடலாம். ஆனால் நான் சந்திக்கும் பெரும்பாலான ஹிந்தியர்கள் இதே எண்ணத்தை  கொண்டவர்களாகவே இருக்கின்றனர். 


இவ்வளவுக்கும்  வட இந்தியர் ஒருவர் தமிழ் நாட்டில் மொழி தெரியாமல் தடுமாறினால், தமிழர்கள் அவர்களுக்கு பொறுமையாக உதவவே செய்கின்றனர். இருப்பினும் நம் மேல் வட  இந்தியர்கள்  ஆளுமை செலுத்தவே முயல்கின்றனர். அதுவே அவர்களை நம்மை ஹிந்தி கற்று கொள்ள சொல்ல வைக்கிறது. அவர்கள் வைக்கும் இன்னொரு வாதம் ஹிந்தி தேசிய மொழி. எனவே அனைவரும் ஹிந்தி தெரிந்து வைத்து இருக்க வேண்டும் என்பது.

சுதந்திரம் அடைந்த பின் ஒரு முறை பாராளுமன்றத்தில் ஒரு முறை தேசிய மொழியாக எதை அறிவிப்பது என்று விவாதம் நடந்ததாம். இந்தியாவில் அதிக மக்கள் பேசும் மொழியாததால் ஹிந்தியை தேசிய மொழியாக அறிவிக்க வேண்டும் என்றாராம் ஒரு வட இந்திய பிரமுகர். உடனே எழுந்த ஒரு தமிழர் அப்படியானால் இந்தியாவில் அதிகமாக இருக்கும் காக்கையை தேசிய பறவையாக அறிவிக்கலாமே? ஏன் மயிலை அறிவிக்க வேண்டும்? என கேட்டாராம். அதன் பின் தேசிய மொழியாக ஹிந்தியை அறிவிக்கும் திட்டத்தை அரசு கை விட்டதாம். இந்த சம்பவத்தை வட இந்தியர்கள் ஒருவரும் அறிந்திருக்க மாட்டார்கள் போலும்.

முன்பு ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தின் மேல் எனக்கு பெரிய அபிப்பிராயம் எல்லாம் இல்லை. வற்புறுத்தி ஹிந்தி கற்று கொள்ள செய்வதை எதிர்த்த நியாயமான போராட்டம் என்ற அளவிலேயே அதை புரிந்து வைத்து கொண்டிருந்தேன்.  ஆனால் இப்போது ஹிந்தியர்களின் பேச்சுகளை கேட்கும்போது அந்த போராட்டத்தின் மேல் இருந்த மரியாதை அதிகரிக்கிறது. அந்த போராட்டம் மொழி திணிப்பை  எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டம் என்பதை விட, வட இந்தியர்களின் குணம் கண்டு எரிச்சல் அடைந்து நடந்த போராட்டமாகவே தோணுகிறது. அவர்களின்  வசதிக்காக நாம்  ஹிந்தி  மொழியை கற்று கொள்ள ஆரம்பித்து இருந்தால் அதை விட  அடிமைத்தனமான செயல் எதுவும் இருந்திருக்க முடியாது. 

நல்ல வேளையாக ராஜபக்சே போன்ற தலைவர்கள் அப்போது ஆட்சியில்  இல்லை. போராட்டத்தின் நியாயத்தை புரிந்து கொண்டனர். அது போன்ற மன பக்குவத்தை எல்லா வட இந்தியர்களும் எப்போது பெற போகின்றனர் என தெரியவில்லை. எது எப்படியோ, ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு மிக தாமதமாக ஒரு சல்யூட்.

 குறிப்பு: எப்போதோ படித்த ஒரு சம்பவத்தை இங்கே குறிப்பிட்டுள்ளேன். பாராளுமன்றத்தில் பேசிய அந்த தமிழ் பிரமுகரின் பெயர் நினைவில்லை. யாருக்காவது தெரிந்திருந்தால் சொல்லுங்கள்.

9 comments:

  1. பாராளமன்றத்தில் பேசியது தலைவர் கக்கனா? சரியாகத் தெரியவில்லை. வெளிநாடுகளில் தமிழ் என் மொழி என்றதும் சிறிலங்காவா? என்பார்கள். அட பாவமே என புரிய வைப்பேன். இந்தி பேசுவோர் இந்தி திணிப்புணர்வுடனே பலர் உள்ள போதும், இன்று அவ் எண்ணம் குறைந்து வருகிறது. இந்தியை தமிழர் மட்டுமல்ல வங்காளிகள், மலையாளிகள், வட கிழக்கிந்தியரும் விரும்புவதில்லை. அவசியம் ஏற்படும் பட்சத்தில் தமிழர் நல்ல இந்தி பழகி கதைக்கின்றனர். அவசியமில்லாமல் 7 கோடி தமிழரும், 60 கோடி இந்தி பேசாதோரும் என்ன மண்ணுக்கு இம் மொழியை படிக்கணம். தமிழகத்தில் தமிழறியாதோருக்கு வேலை வழங்குவதை மட்டுப்படுத்தினால் எல்லோரும் வழிக்கு வருவார்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி நண்பரே!

      Delete
  2. Its Anna who gave this example of crow and peacock

    ReplyDelete
  3. தமிழகத்திற்கு வந்து தொழில் செய்யும் வேறு மாநிலத்தவன் எவனும் 'அய்யோ, எனக்கு தமிழ் தெரியலையே!!' என்று புலம்புவதில்லை.

    ஆனால் வேறு மாநிலத்திற்கு சில நாட்கள் பணிக்காக செல்லும் தமிழன் 'ஐயோ!! எனக்கு ஹிந்தி தெரியலையே!' என்று புலம்புகிறான்.

    #தாழ்வு மனப்பான்மை

    ReplyDelete
  4. // உடனே எழுந்த ஒரு தமிழர் அப்படியானால் இந்தியாவில் அதிகமாக இருக்கும் காக்கையை தேசிய பறவையாக அறிவிக்கலாமே? ஏன் மயிலை அறிவிக்க வேண்டும்? என கேட்டாராம்.//

    அவர் பெயர் அண்ணாதுரை. 1949-ல் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் துவங்கி 1967-ல் தமிழ்நாட்டின் ஆட்சியைப் பிடித்து முதல்வரானார்.

    ReplyDelete
  5. //ஹிந்தி கற்று கொள்ளாமல் நாம் தேசிய நீரோட்டத்தில் இருந்து விலகி உள்ளோமாம். இது ஒரு சிலரின் கருத்தாக இருந்தால் கூட விட்டு விடலாம். ஆனால் நான் சந்திக்கும் பெரும்பாலான ஹிந்தியர்கள் இதே எண்ணத்தை கொண்டவர்களாகவே இருக்கின்றனர். //

    இவ்வாறு உளறுபவர்களிடம் கேளுங்கள் தமிழன் இந்தி கற்பது இருக்கட்டும். பஞ்சாபியர் ஏன் காலிஸ்தான் வேண்டினார்கள்? கஷகமீரிகள் ஏன் விடுதலை வேண்டுகிறார்கள்? வடகிழக்கில் ஏன் அசாமியர், நாகாலாந்து, திரிபுராவைச் சேர்ந்தவர்கள் தனி நாடு கேட்கிறார்கள்? அதையெல்லாம் விடுங்கள். BIMARU மாட்டுக் கச்சை அண்மையுள்ள சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், பிகார், ஆந்திரம், வங்காளம் போன்ற இடங்களில் ஏன் நக்சலைட்டுகள் ஹிந்திய தேசிய நீரோட்டத்தை விட்டு விலகியிருக்கிறார்கள்?

    என் அணியிலுள்ள தில்லி நண்பரின் தந்தை 1947ல் பாகிஸ்தான் மாநிலத்தின் பஞ்சாப் மாகாணத்திலிருந்து அகதியாக வந்து தில்லியில் வாழ்வைத் துவங்கியவர். அவருக்கு சரியாக இந்தி படிக்க, எழுத வராதாம். ஏனென்று ஆச்சரியத்துடன் கேட்டால் அக்காலத்தில் தில்லியில் கொடிகட்டிய மொழிகள் பஞ்சாபி மற்றும் உருது. எனவே நண்பரின் தந்தைக்கு இந்தி அவ்வளவாக வராது. இத்தனைக்கும் அவர் ரயில்வேயில் பெரும் பதவி வகித்தவர்.

    இதுதான் தேசிய மொழியின் பவுசு.

    ReplyDelete
    Replies
    1. காஷ்மீர், பஞ்சாப், நாகலாந்து பிரிவினை எண்ணங்கள் மதத்தை அடிப்படையாக கொண்டவை. நச்சல்களின் நோக்கம் வேறானது. அவற்றை பற்றி பேசுவது இந்த கட்டுரைக்கு பொருந்தாதது என்பதே என் தாழ்மையான கருத்து. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி நண்பரே.

      Delete
  6. அதைத்தான் நானும் சொல்ல வருகிறேன். ஒற்றை மொழியைக் கொண்டு எல்லா மக்களையும் தேசிய நீரோட்டத்தில் இணைத்து விடுவோம், இந்தி கத்துக்கங்க அப்படின்னு ஓதுறாங்களே, மேலே சொன்ன மக்கள் இந்திய பேசிட்டு மத்த விடயங்கள மறந்திட்டாங்களா? தமிழன் இளித்தவாயன், உணர்ச்சிவசப்படுபவன் என்பதனாலேயே இந்தி மந்திரம் போடறாங்க.

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...