Sunday, June 2, 2013

ஆ......சுஜாதா

 சில செய்திகள் நம்மை மிகவும் ஆச்சரியமடைய வைக்கும். அவை  விஷயங்கள் செவ்வாய் கிரகத்தில் இருக்கும் உயிரினங்களை பற்றியதாக இருக்கலாம். அல்லது மன்மோகன் சிங் ஒரு பிரச்சினை பற்றி வாய் திறந்து கருத்து  கூறியதாக இருக்கலாம். ஆனால் சில நேரங்களில் சில  சாதாரண செய்திகள் கூட நம்மை மிகவும் அதிசயிக்க வைக்கும். இன்று சுஜாதாவை பற்றி படித்த செய்தி அந்த வகை செய்தியே. தன்  வீட்டு பெண்கள் வெளியே செல்வதை கூட அவர் விரும்ப மாட்டார் என்ற செய்தி ஆச்சரியத்தின் உச்சம்.

அவரின் எழுத்துகள் என்னை வசீகரித்தது ஸ்ரீரங்கத்து  தேவதைகள் படித்த பின். அந்த புத்தகத்தை ஒரே நாளில் இரண்டு முறை படித்தேன். தன் சொந்த வாழ்க்கையில் நடந்த சாதாரண நிகழ்வுகளை இவ்வளவு நகைச்சுவையுடனும், சுவாரசியமாகவும் எழுத முடியுமா என்று தோன்றியது. அதை விட நான் வியந்த விஷயம் ஸ்ரீரங்கத்து அக்ரஹார பின்னணி கொண்ட ஒருவர் சற்றும் தயக்கமின்றி காமத்தை பற்றி எழுதுகிறாரே என்று.

அந்த புத்தகத்தை படித்த பின் அவரின் மற்ற நாவல்களையும் தேடி பிடித்து படிக்க ஆரம்பித்தேன். அவரின் புகழுக்கான காரணம் விளங்கியது. அது, இது என்று பிரிக்காமல் அறிவியல் முதல் ஆன்மிகம் வரும் அனைத்தையும் எழுதுவது அவரின் சிறப்பு. நிச்சயம் ஒரு ஜீனியசால் மட்டுமே இது போல் எழுத முடியும் என்று எண்ணி கொண்டேன். தமிழில் எழுத்தாளாராக முயலும் 75 சதவீதம் பேர் சுஜாதா போலவே ஆக முயல்கின்றனர். இவ்வளவுக்கும் எழுத்து மட்டுமே சுஜாதாவின் தொழில் கிடையாது. 


அவரின் நாவல்களில் சிறப்பு  அவரின் பெண் கதாபாத்திரங்கள். அவர்கள்  எந்த கட்டுப்பாடுகளும் கிடையாது. கணேஷிடம் தன் கொங்கைகளை பற்றி விவாதிப்பார்கள்; வசந்தை கட்டி பிடித்து முத்தம் தருவார்கள்; எதற்கும் தயங்க மாட்டார்கள்.ஒரு சமகால அமெரிக்க பெண்ணுக்கு நிகராக அவரின் நாவல்களில் வரும் தமிழ் பெண்கள் இருப்பார்கள். இவர் ஜீனியஸ் மட்டும் இல்லை. நிச்சயம் ஒரு புரட்சியாளர் என்று எண்ணி கொண்டேன். பின்னே, 60 வயதுக்கு மேலும் தமிழ் சினிமாவுக்கு ஸ்கிரிப்ட் எழுதினாரானால் தன் மனதை அவர்   எவ்வளவு இளமையாக வைத்திருக்க வேண்டும்? தன் மகனை ஒரு வெளிநாட்டு பெண்ணை மணம் செய்ய அனுமதித்தவர் எவ்வளவு பெரிய முற்போக்கு சிந்தனையாளராக இருந்திருக்க வேண்டும்?

இப்படி  சுஜாதாவை பற்றின என் பிரமிப்பு உச்சத்தில் இருந்தபோது அவர் மரணமடைந்தார். அப்போது அவர் மனைவி அளித்த ஒரு பேட்டியில், தன் கணவருக்கு கோபமே வராது என்றும் கோபம் ஒரு மனிதனின் பலவீனம் என்பது அவர் எண்ணம் என்றும் கூறியிருந்தார். திருமணமான புதிதில் அவர்  ஒரு புதிய பல்பை உடைத்து விட்டாராம். தனது கணவர் என்ன கூற போகிறார் என்று அவர் பயந்து கொண்டிருந்த போது சுஜாதா சாதாரணமாக "விடு! வேற வாங்கிக்கலாம்" என்று கூறி விட்டாராம். தன் கணவரை பற்றி சிலாகித்து கூறியிருந்தார் அந்த பேட்டியில். சுஜாதா சிறந்த எழுத்தாளர் மட்டும் இல்லை, சிறந்த மனிதராகவும் வாழ்ந்து இருக்கிறார் என எண்ணி கொண்டேன்.

ஆனால் சுஜாதாவின் மனைவியின் இன்றைய பேட்டி, சுஜாதா பற்றிய என் மன பிம்பங்களை லேசாக அசைத்து பார்த்து இருக்கிறது. மிக பெரிய ஆச்சரியத்தை எனக்கு அளித்திருக்கிறது அந்த பேட்டி. ஒரு படைப்பாளியின் தனிப்பட்ட குணங்களை அவர் படைப்புகளை வைத்து தீர்மானிக்க முடியாது என தோன்றுகிறது. இனி மேல்  படைப்பாளியை அவன் படைப்புகளிலிருந்து பிரித்தே பார்க்க வேண்டும்.

10 comments:

  1. Replies
    1. இது ஒரு செய்தியாக வந்திருந்தால் நாம் இதை எளிதாக புறக்கணித்து விடலாம். ஆனால் இது ஒரு பேட்டியாக பிரசுரமாகி உள்ளது. அந்த பேட்டியில் தான் இது போல் கூறவேயில்லை என சுஜாதாவின் மனைவி கூறினால் அதை பிரசுரித்த இதழின் நம்பகத்தன்மை பாதிக்கப்படும். அது போன்ற ரிஸ்க்கை பரபரப்புக்காக சில புலனாய்வு இதழ்கள் எடுக்கலாம். ஆனால் ஒரு செய்தி நாளிதழ் எடுக்கும் என எனக்கு தோன்றவில்லை.

      Delete
    2. ஒரு வேளை அந்த செய்தி கற்பனையாக இருந்தால் நிச்சயம் சுஜாதாவின் மனைவி குறைந்த பட்சம் மறுப்பாவது தெரிவிப்பார். பொறுத்திருந்து பார்க்கலாம்.

      Delete
  2. //தன் வீட்டு பெண்கள் வெளியே செல்வதை கூட அவர் விரும்ப மாட்டார் என்ற செய்தி ஆச்சரியத்தின் உச்சம்//
    காந்தி கூட அசைவத்தை விரும்பவில்லை.ஆனால் அது எனக்கு ஆச்சரியமளிக்கவில்லை.உங்களுக்கு?

    ReplyDelete
    Replies
    1. என்ன கூற வருகிறீர்கள் என்று ஓரளவு புரிகிறது நண்பரே. அதற்குள் அதிகம் போக விரும்பவில்லை. என் மனதில் அவரை பற்றி இருந்த பிம்பம் எப்படி உருவானது என்றே கூற முயன்றிருக்கிறேன்.

      Delete
    2. உங்கள் தொடர் வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி நண்பரே.

      Delete
  3. ஒரு முறை இந்த பதிவை படியுங்கள் .
    http://www.nisaptham.com/2013/06/blog-post_2.html?utm_source=feedburner&utm_medium=email&utm_campaign=Feed%3A+nisaptham%2Frbes+%28%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%29

    ReplyDelete
    Replies
    1. உண்மையில் இதை படித்த பின்பே நான் இந்த பதிவை எழுதினேன். சுஜாதாவை பற்றி ஒரு ஒரு சாதாரண வாசகனுக்கு இருக்கும் மன பிம்பம் எப்படிப்பட்டது என்று கூற முயன்றிருக்கிறேன். அவ்வளவே.

      Delete
  4. சுஜாதா ஏழுத்தாளர் என்ற வகையில் பிரமிப்பக்குறியவரே...அவர் மனைவிக்குத்தான் அவரை நன்கு தெரியும்...நாம் வாசகராக வெளியில் நின்று கவனிக்கலாம்..ஏப்படிச்சொல்லலாம் என வரிந்துகட்டவோ..சே இந்த மனிதர் இப்படியா என அதிர்ச்சி அடையவோ தேவையில்லை..திருமதி சுஜாதா தன் கணவருக்கும் தனக்குமான நேரங்கள் குறைந்து போனதற்கான ஆதங்கத்திலேயே வாழ்ந்திருக்கிறார்..சுஜாதா அவர்களின் நேசிக்கும் என்னால் அவர் மனைவியின் உணர்வுகளை புரிந்துகொள்ள முடிகிறது.

    ReplyDelete
  5. சுஜாதா ஏழுத்தாளர் என்ற வகையில் பிரமிப்பக்குறியவரே...அவர் மனைவிக்குத்தான் அவரை நன்கு தெரியும்...நாம் வாசகராக வெளியில் நின்று கவனிக்கலாம்..ஏப்படிச்சொல்லலாம் என வரிந்துகட்டவோ..சே இந்த மனிதர் இப்படியா என அதிர்ச்சி அடையவோ தேவையில்லை..திருமதி சுஜாதா தன் கணவருக்கும் தனக்குமான நேரங்கள் குறைந்து போனதற்கான ஆதங்கத்திலேயே வாழ்ந்திருக்கிறார்..சுஜாதா அவர்களின் நேசிக்கும் என்னால் அவர் மனைவியின் உணர்வுகளை புரிந்துகொள்ள முடிகிறது.

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...