Wednesday, July 31, 2013

பிரியுமா தமிழகம்?

நீண்ட நெடிய போராட்டத்தின் விளைவாக தெலுங்கானா பிறக்கப் போகிறது. இதை முன்னுதாரணமாக கொண்டு இன்னும் பல மாநில பிரிப்பு கோரிக்கைகள் வலுவடையலாம். தமிழகத்தை பிரிக்க கோரும் கோரிக்கைகள் மீண்டும் ஒலிக்க தொடங்கலாம். அப்படி தமிழகத்தை பிரிப்பது சாத்தியமா? அப்படி தமிழகத்தை பிரித்தால் ஏற்படும் பின் விளைவுகள் என்னென்ன என்று என் சிற்றறிவுக்கு எட்டியவை பற்றி கூற முயல்கிறேன்.

பத்து, பதினைந்து ஆண்டுகளுக்கு முன் 'செந்தமிழ் நாடு' என்னும் சிறிய நூல் ஒன்றை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. எழுதியவர் பெயர் நினைவில் இல்லை. தமிழகத்தை வடக்கு, தெற்கு என்ற அடிப்படையில் பிரித்து 'செந்தமிழ் நாடு' என்னும் பெயரில் ஒரு புது மாநிலம் உருவாக்குவது பற்றி மிக அழகாக விளக்கியிருப்பார்   ஆசிரியர்.மொழிவாரி மாநிலங்கள் பிரித்து 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. அப்போது இருந்ததை விட மக்கள் தொகை மிகவும் பெருகிவிட்ட நிலையில் நிர்வாக வசதிக்காக மதுரையை தலை நகராக கொண்டு ஒரு புதிய மாநிலத்தை பிரிப்பது  தென் தமிழக மக்களுக்கு மிகவும் நலம் தரும் என்பது அந்த நூலாசிரியரின் வாதமாக இருக்கும்.


அந்த புத்தகத்தை படித்த பின் தமிழகத்தை பிரிப்பது சென்னைக்கும் நல்லது; தென் தமிழ்நாட்டுக்கும் நல்லது என்று எண்ணி கொண்டிருந்தேன்.  பாமகவின் மாநில பிரிப்பு கோரிக்கை பற்றி அறிந்த பின்னரே தமிழகத்தை பிரிப்பதில் இருந்த மிகப்  பெரிய . சிக்கல் எனக்கு உரைத்தது. ஒரு வேளை அந்த நூலில் கூறியபடி தமிழ்நாடு இரண்டாகவோ, அல்லது மூன்றாகவோ பிரிக்கப்பட்டால் ஜாதி அரசியல் முக்கியத்துவம் பெறும். வட பகுதி மாநிலத்தில் வன்னியர்களும், தென் பகுதி மாநிலத்தில் தேவர், நாடார்  சமூகத்தவரும் ஆட்சியை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிப்பார்கள். இன்னும் சொல்ல போனால் ஜாதி கட்சிகள் ஆட்சியை பிடிக்கவும் வாய்ப்பு உள்ளது. இது எந்த வகையிலும் நாட்டுக்கு நல்லதல்ல.

ஜாதி அரசியலை தாண்டி கருத்தில் கொள்ள வேண்டிய இன்னொரு விஷயம் தமிழன் சந்திக்கும் பிரச்சினைகள். இன்றைய சூழலில் பல பிரச்சனைகளுக்காக தமிழகம் மத்திய அரசுடனோ, அண்டை மாநிலங்களுடனோ அடிக்கடி போராட வேண்டியது உள்ளது. ஒரு வேளை தமிழகம் பிரிக்கப்பட்டால் அது தமிழனின் குரலை மேலும் பலவீனமாக்கும்.  தமிழ் பேசும் மாநிலங்களே அரசியல் காரணங்களால் தூண்டப்பட்டு தங்களுக்குள்ளேயே  மோதிக்  கொள்ளவும் வாய்ப்புள்ளது. அத்தகைய நிலை ஏற்பட்டால் அது ஒட்டு மொத்த தமிழர்களையும் பாதிக்கும்.

எது எப்படியோ இன்றைய தேதிக்கு தமிழகத்தை பிரிக்க சொல்பவர்களின் எண்ணிக்கை மிக குறைவு. சில ஜாதி கட்சிகள் மட்டுமே இந்த கோரிக்கையை முன் வைத்துள்ளன. குடும்ப பிரச்சனைகளுக்கு தீர்வு காண திமுகவும் இந்த கோரிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கக்  கூடும். இருப்பினும் சாதாரண மக்களின்  ஆதரவு இந்த கோரிக்கைக்கு கிடைப்பது மிக கடினம்.தெலுங்கானா போல ஒரு சாதாரண குடிமகன் இந்த கோரிக்கைக்காக தெருவில் இறங்கி போராட வாய்ப்பே இல்லை. எனவே மத்திய அரசே பிரித்தாலொழிய தமிழகம் பிரிய சாத்தியம் மிக குறைவு. எனவே இதை பற்றி அதிகம் அலட்டி கொள்ள தேவை இல்லை. ஆனாலும் தென் தமிழகத்தை சேர்ந்தவன் என்ற அடிப்படையில் 'வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது' என்ற எண்ணம் என் மனதில் இருந்து கொண்டே இருப்பது உண்மையே.

5 comments:

  1. மிகவும் நல்ல பதிவு. புதிய மாநிலங்கள் ஏன் பிரிக்கப் பட வேண்டும்? கூடாது? என்பதை சீர் தூக்கிப் பார்க்க வேண்டும். தமிழகம் ஏன் பிரிக்கப்பட வேண்டும். பொருளாதாரம்? சாதியம்? வசதி? இது போன்ற காரணம் எனில் அது சரியல்ல. மாநிலம் பிரிவதால் பொருளாதாரம் வளருமா? இல்லை. நிலப்பரப்பும், மக்கள் தொகையும், மக்களின் இயற்கை வளப் பங்கீடும், மொழியும், வாழ்வியலும், நிர்வாக வசதிகள் காரணமாய் மாநிலங்கள் உருவாக்கப்படலாமே ஒழிய, வேறு காரணங்கள் ஏற்பில்லை. தற்சமயம் தமிழகம் பிரிக்கப்பட யாரும் விரும்பவில்லை என்பதே உண்மை, சில சாதி வெறியர்களைத் தவிர.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான்..வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே..

      Delete
  2. chra,chola,paandiya,pllava,nalla irukke. paavam petrorkal. pakali,palli serkkaikku migration vaanga alainthe oynthu povaarakal.
    naadu otrumaikku thalaivarkalaa?naattaip pirikkath thalaivarkalaa?

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா!!

      Delete
  3. தமிழ்நாடு பிரிவது தமிழை புதைப்பதற்க்கு சமம் விரும்பபினாள் துனை நகரங்ககளை விரிவு படுத்தலாம்

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...